ஒரு மகன் தன் அன்னையிடம் இன்னும் 3 மாதத்தில் நீ இறந்து விடுவாய் என்று சொல்வது போல் ஒரு சூழ்நிலை ஒருவருக்கு உருவானால் எப்படி இருக்கும்??? ... எனக்கு அப்படி ஒரு சூழ்நிலை என் வாழ்வில் வந்தது.....
இன்று என் அம்மாவுக்கு தெவஷம்.... என் அம்மா 23.09.1996 அன்று திங்கட்கிழமை காலையில் என் அப்பா,நான் என் வயதுக்கு வந்த 4 தங்கைகளை விட்டு விட்டு எங்களை அம்போவென விட்டு விட்டு இறைவனடி சேர்ந்த நாள் ... நாள் படி நட்சத்திர படி இன்று அவரை31.08.2009 நினைவு கூறும் நாள் ....
ரேஷன் அரிசி சாப்பிட்டு, கூரை வீட்டில் வாழ்க்கை ஓட்டியபோது எங்களுடன் இருந்தவர்... நாங்கள் நல்ல அரிசி சாப்பிடும் இந்த நேரத்தில், அவர் எங்களோடு இல்லை....
காசநோய் எனது பாட்டிக்கு வந்து அவரை கவனித்து கொள்ள போனவருக்கும் அந்த நோய் தொற்றிக்கொண்டது... என் அம்மாவுக்கு அந்த நோய் தாக்கியும் தொற்றியும் இருக்காது.... அவருக்கு சத்து இல்லாததும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போனதும் முக்கிய காரணம்...,பியுசி படித்த என் அம்மாவிக்கு நிச்சயம் தெரியும் இப்படி இருந்தால் நோய் தொற்றிக்கொள்ளும் என்று தெரிந்தும்... என் பாட்டியை அருகில் இருந்து பார்த்துக் கொண்டாள்... காரணம் தன் அப்பா சொந்த சித்தியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் பத்து வயது ஆன என் அம்மாவை அழைத்துக்கொண்டு பண்ரூட்டியில் இருந்து விழுப்புரத்தில் உள்ள மந்தகரையில் தனி வீடு எடுத்து வாசம் செய்தவள் அல்லவா அவள் (என் பாட்டி)....
அதுமட்டும் அல்ல தெரு தெருவாய் ஜாக்கெட் துணி விற்று அதன் மூலம் தன் மகளை பியூசி வரை படிக்க வைத்து, ஒரு நல்ல இடத்தில் வாழ்க்கை கொடுத்தவள் அல்லவா அவள்... தன் பெண்ணுக்காக உடல் சுகத்தை தூக்கி போட்டவள் அல்லவா அவள்.... அந்த நன்றிகடனுக்காக என் பாட்டி முகம் சுளிக்காமல் என் அம்மா நடந்து கொண்டாள்...
வேண்டாம் என்று சொன்னால் என் அம்மா சொன்னால்...“ காசநோயளி என்று என்னை ஒதுக்குகின்றாயா? “என்று என் அம்மாவிடம் எதிர் கேள்வி கேட்டதால்? தன்னை பெற்ற மகள் ஒதுக்குகின்றாள் என்று அந்த நினைப்பு தன் பெற்றவளுக்கு வரக்கூடாது என்பதற்க்காக தன்னை காச நோய் அரக்கனிடம் தெரிந்தே என் அம்மா தன்னை அற்பனித்து கொண்டவள்....
கண்டிப்பு காட்டும் இடத்தில் கண்டிப்பு, பாசம் காட்டும் இடத்தில் பாசம் காட்டும் என் அம்மா ஒரு விசித்திர பிறவி....
எங்க அம்மா என்னை உதைத்தது போல் எந்த பிள்ளையும் அவர்கள் அம்மாவிடம் உதைவாங்கி இருக்க மாட்டார்கள்....அப்போதெல்லாம் வீட்டில் அடுப்பு எறிக்க உதவும் சவுக்கு கட்டை எடுத்து ஓட ஓட உதைப்பாள்.....
தன் பையன் படிக்காவிட்டாலும் புத்திசாலியாக ,ஸமார்ட்டாக இருக்க வேண்டும் என்று என்னை சிறுவயதிலேயே நிர்பந்திக்க வைத்தவள்....
முதல்நாள் வகுப்புக்கு போகும் போது ஒரு புது பென்சில், பலப்பம், ரப்பர், சிலேட்டு என்று வாங்கி ஒரு ஜோல்னா பையில் போட்டு கொடு்த்தாள் அன்று மாலை பள்ளி விட்டு வீடு வரும் போது, சிலேட்டு மட்டும்தான் இருக்கின்றது...பென்சில் ரப்பர், பலப்பம் எதுவும் இல்லை... தொலைத்து விட்டேன்... தன் ஜுட்டிகை இல்லாத, மக்கு மகனை நினைத்து அப்போதே கவலை கொள்ள ஆரம்பித்து விட்டாள்.... மறுநாள்
1431 பயோரிய பல்பொடியில் ஒரு சின்ன பல்பம், சின்ன பென்சில் , ஒரு ரப்பர் எல்லாம் போட்டு கொடுத்தாள் அதவும் அன்று மாலை தொலைத்து விட்டு தலை சொறிய, என் அம்மா வந்த கோபத்துக்கு பக்கத்தில் உள்ள சவுக்கை மிளாரை எடு்த்துக் கொண்டு பத்ரகாளியாக மாறி பல் கடித்து என்னை ஓட விரட்டி என்னை சுளுக்கெடுத்த ராட்சசி அவள்....
இன்று என் வீட்டில் என் சம்பந்த பட்ட ஆவணங்கள் மிக நேர்த்தியாக கோப்புகளில் அடிக்கு வைத்து இருப்பேன் என் மனைவியின் ஆவணங்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் கிடக்கும்... அதற்க்கு காரணம் என் அம்மா கொடுத்த உதைதான்.....
இருமல் மற்றும் சளியோடு போராடிய என் அம்மா...என் அம்மா மருத்துவரை பார்த்த போது என் அம்மாவின் ஒரு பக்க நுரையிரலை காசநோய் கிருமிகள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டன.... அதன் பிறகு ஒரு 5 வருடம் காலம் உயிரோடு இருந்தாள்....
கால் மற்றும் வயிறு உப்பி சிறுநீர் கழிப்பதில் என் அம்மா சிரம பட்ட போது மீண்டும் டாக்டரை பார்த்த போது இன்னும் 3 மாதம் உன் அன்னை உயிரோடு இருப்பார் என்று டாக்டர் சொன்ன போது என் அம்மா என்ன சொன்னார்? என்ன சொன்னா? என்று என்னை நோண்டி நோண்டி கேட்ட போது என்னால் உண்மையை சொல்லாமல் இருக்க முடியவில்லை...
அப்போது மரண பயத்தை என் அம்மாவின் கண்களில் பார்த்தேன்.. அந்த கொடுமை எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது... என் அப்பா துவண்டு போய் விட்டார்....
நான் என் அம்மாவை கடலூரில் இருந்து பாண்டி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரில் உள்ள காசநோய் மரு்துதவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்க அழைத்து செல்ல என்னிடம் கார் வைத்து அழைத்து போக கூட என்னிடம் அப்போது பணம் இல்லை வீங்கிய காலுடன் உள்ள அம்மாவை பேருந்து ஏற வைத்து பாண்டி பேருந்து நிலயத்தில் இறக்கி ஆட்டோ வைக்க காசு இல்லாமல் டெம்போவில் ஏற சொன்னால்... தன் பிள்ளை தன் கூடவே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்... அவளால் டெம்போ ஏற வீக்கிய காலை அவளால் மடக்கி ஏற முடியவில்லை...
நான் வாடகை சைக்கிள் எடுத்து வந்து பின்புறம் கேரியரை அவள் பின்புறம் வைத்து அதில் உட்கார வைத்து அப்படியே சைக்கிளை நிமிர்த்தி...நான் பேலன்ஸ் பண்ணி ஏறி சைக்கிள் மிதித்தேன் மனம் எல்லாம் காயத்துடன் அம்மா படும் உடல்வலி பொறுக்க முடியாமல்....
ஜிப்மர் மருத்துவமனை பாண்டி பேருந்து நிலயத்தில் இருந்து மேடான பகுதியில் இருக்கும்.... என் அம்மாவை சைக்கிளில் வைத்து மிதிக்க முடியவில்லை ஒரு இரண்டு கிலோமீட்டர் அவளை வைத்து நான் சைக்கிள் மிதித்து சென்றதை என்னால் எப்போதும் மறக்க முடியாது....நாக்கு தள்ளிவிட்டது.... நான் படும் அவஸ்த்தை பார்த்து “ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த... அம்மா கப் சிப்....
அதன் பிறகு டாக்டர் குறித்து கொடுத்த மூன்று மாதத்தில் இருந்து , நான் எடுத்து மேல்கட்ட நடவடிக்கையால் அந்த பாண்டிகாசநோய் மருத்துவமனையில் மேலும் மூன்று மாதங்கள் கடவுள் என் அம்மாவுக்கு உயிர் பிச்சை அருளினார்...
என் அம்மா வயிறு வீங்கி கஷ்டப்பட்ட போது என்னிடம் அப்போது மட்டும் என்னிடம், பணம் இருந்து இருந்தால் இன்னும் கூட ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்து இருக்க முடியும்....5 பிள்ளைகள் உயிர் வாழ ரேஷன் அரிசி உதவி செய்த காலம் அது... என்ன செய்ய...? எல்லாம் விதி...
இறக்கும் முன் மூன்று நாளைக்கு முன்பு என் அம்மா மஞ்சள் பூசி கேசத்துக்கு சிக் ஷேம்பூ போட்டு சி்க்கென்று இருந்தால்....
என் அம்மா என்னிடம் கேட்டாள்???
நான் செத்துட்டா நீ என்ன செய்வாய்? என்று நான் சொன்னேன்... அந்த மரம் ஒருநாள் சாக போகின்றது... இந்ததாத்தா ஒருநாள் சேத்து போவார்.. அந்த புது கார் ஒருநாள் பழசா ஆகும் எல்லாரும் ஒருநாள் சாகப்போறோம்... என்ன நீ கொஞ்சம் சீக்கிரம் என்றேன்...
தன் பிள்ளை புத்திசாலிதனமாய் பேசுவதை நினைத்து வியந்து போனாள்... அந்த கோலத்தில் அவளை போட்டோ எடுக்க சொன்னாள்.... இன்னும் இரண்டுநாளில் நான் கேமரா வாங்கி வந்து எடுக்கின்றேன் என்று சொல்லி இருந்தேன் அதற்க்குள் கடவுளுக்கு அவசரம் என்ன செய்ய ?என் அம்மாவின் கடைசி ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை....
இதுவரை ஒரு லட்சத்துக்கு அதிகமான காட்சிகளை நான் கேமராவில் சிறைபடுத்தி இருப்பேன்....இன்னும் சிறைபடுத்துவேன்..ஆனால் என் அம்மாவை சிக் ஷேம்பூ போட்டு குளி்த்து சிக்கென இருந்த என் அம்மாவை கேமரா சட்டத்தில் என்னால் சிறைபடுத்த முடியாமல் போய் விட்டது....
இன்றும் என் அம்மா உயிர் விட்டபாண்டி ஜிப்மர் எதிரே உள்ள காசநோய் மருத்துவமனையை கடக்கும் போது, நான் பேருந்தில் சென்றாலும், பைக்கில் சென்றாலும் அந்த மருத்துவமனையை பார்த்து சேவித்து கொள்வேன்....
பேருந்தில் போகும் போது நான் அப்படி சேவிக்கையில் எல்லோரும் எசூதா கோவில் இருக்கின்றது என்று பேருந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்க அங்கே மருத்துவமனைதான் இருக்கும்.... குழம்பி போன மனநிலையில் என்னை வித்யாசமாக பார்க்கும், சக பயணியிடம் சொல்ல முடியுமா? என் அன்னையோடு கடைசியாக உறவாடிய இடம் இந்த இடம் என்று.....
என் அம்மாவை பற்றி சில நினைவுகள் இன்னும் பல பதிவுகளில் அவள் நினைவு வரும் போது எல்லாம்....
எனக்கு எல்லாம் கத்து கொடுத்த குரு என் அம்மாவுக்கு இந்த பதிவு சமர்பணம்...மனதில் இருந்த பாராம் குறைந்தது போல் உள்ளது...
நன்றி
அன்புடன்
ஜாக்கிசேகர்...