![](http://4.bp.blogspot.com/_FDULgrSOClk/S7Ohw0n76YI/AAAAAAAAFQ4/PDhx3ZuclTQ/s320/angadi1.jpg)
அவர்கள் முதலில் செய்தது வேலைக்கு வரும் இளைஞர்களின் சர்டிபிகேட்டை முதலில் வாங்கி வைத்துக்கொள்வார்கள்.... அதன் பிறகு அடிமைதான்... அது ஒரு பெரிய கதை அந்த வலி வேறு ஒரு சந்தர்பத்தில் பதிவிகின்றேன்.....ஒரே அறையில் 25 பேருக்கு மேல் படுத்து உறங்கும் கொடுமை...ஒரே டாய்லட்டில் 150 பேர் மேல் போய்விட்டு வருவதும்... அப்படி போய் போய் அடைத்துக்கொண்டு எல்லாம் மிதக்கும் போது, அதிலேயே 2க்கு சகித்துகொண்டு போய் விட்டு வரும் இளைஞர்கள்... பலரது குடும்ப சூழல் மற்றும் சென்னைக்கு வேலைக்கு போகின்றேன் என்று ஊரில் சொல்லி விட்டு வரும் பில்டப், அனைத்தையும் சகித்துக்கொள்ள வைத்துவிடும்..
எப்படி டாயலட் இருந்தாலும் டயத்துக்கு செக்யூரிட்டி வேலைக்கு போக எல்லாவற்றையும் சகித்துகொள்ளும் அவர்கள் சகிப்புதன்மையை என்னவென்று சொல்வது.... உள்ளே எட்டி பார்த்து விட்டு மெரினா கட்டண கழிவறைக்கு போனவன் நான்....
![](http://1.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OhvOCryiI/AAAAAAAAFQY/mhT0sihri_g/s320/0.jpg)
முதலில் சென்னைக்கு வேலை என்றவுடன் எனை வசீகரித்த விஷயம்.. சென்னையின் பரபரப்பும், அழகு பெண்களும்தான்.... சென்னை எல்ஐசி எதிரில் உள்ள தாஸ்பிரகாஷ் (இப்போதுஅந்த ஓட்டல் இல்லை) ஓட்டலின் வாசலில் இறுக்கமான டீ சர்ட் ஜீன்ஸ்அணிந்து ஸ்டைலாக சிகரெட் பிடித்த பெண்களை பார்த்து மயங்கி போனேன்...எந்த இலக்கும் இல்லாமல், எதாவது வேலை செய்து, தங்க நல்ல இடமும், மூன்று வேலை சாப்பாடுமே அப்போது எனக்கு பிரதான இலக்காக இருந்தது....சென்னைக்கு போகும் முன் எப்படி பட்ட கனவுகளோடு மஞ்சள் பை தூக்கினேனோ அப்படி பட்ட கனவுகளை அங்காடி தெரு படத்தில் பாண்டி கேரக்டர் மூலம் கண்முன் நிறுத்திவிட்டார்....வசந்த பாலன்...
![](http://2.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OhwLGIFII/AAAAAAAAFQo/Adte1cGaWLI/s320/2359918_f520.jpg)
![](http://1.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OhwrdtklI/AAAAAAAAFQw/aVF9NizdOmY/s320/1241431630.jpg)
கூட்ஸ் ரயிலின் பெட்டிகள் கடக்கும் போது இப்போது முடிந்து விடும், இப்போது முடிந்து விடும், என்று நினைத்துக்கொண்டு ஆளில்லாத லெவல் கிராசிங்கில் நிற்க்கும் போது கூட்ஸ் பெட்டிகள் நம்மை வெறிப்பேற்றிய படி நம்மை கடந்து போய் கொண்டே இருக்கும் போது, ஒரு வெறுப்பு வருமே அது போல், அந்த பெண்கள் நடைவரிசை முடியாத ஒரு கூட்ஸ் ரயில் பெட்டிகள் போல் முடியாமல் போய்கொண்டே இருந்தது....
அந்த பெண்கள் நடக்கும் போது நடை சத்தம் கேட்டதே தவிர அவர்கள் பேச்சு குரலும் சிரிப்பும் சத்தமும் இல்லவே இல்லை...அப்படி ஒரு டிசிப்ளின் நடை...எனக்கு ஆச்சர்யம் இவர்கள் எல்லோரும் எந்த இடத்தில் படுத்து குளித்து, சாப்பிட்டு,கழிவறைக்கு போய்... ஏனெனில் இதே அனுபவம் எனக்கும் உண்டு என்ற காரணத்தால் அந்த பெண் பிள்ளைகளை பற்றி யோசித்து கொண்டே இருந்தேன்.... அப்படி யோசித்து கொண்டு இருந்த இரண்டு வாரத்தில், அவர்களின் மறு பக்கத்தை நார் நாராக கிழத்து தொங்க விட்ட படி ஒரு படம் வந்து இருக்கின்றது... அந்த படத்தின் பெயர் அங்காடி தெரு....
![](http://2.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OiF6BxXeI/AAAAAAAAFRQ/ynQNOZC3J7g/s320/angadi-theru-movie-wallpapers.jpg)
இயக்குனர் சேரன் எழுதிய டூரிங் டாக்கிஸ் புத்தகத்தில் துணிக்கடையில் வேலை செய்வது என்பது உலக விஷயமே தெரியாமல் கிணற்றுதவளையாக காலை பத்து மணிக்கு உள்ளே போய் இரவு பத்து மணிக்கு வெளியே வரும் அடிமை வாழ்க்கை என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பார்.... அதை படித்ததில் இருந்து துணிக்கடையில் வேலை செய்யும் இளைஞர்களின் அலட்சிய பேச்சுகளையும், சிறு சோம்பேறிதனத்தையும் மன்னிப்பது என்பது என் வழக்கமாகிவிட்டது...
![](http://1.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OiGXHmizI/AAAAAAAAFRY/lVRLrSU2CBg/s320/Angadi-Theru-Stills-4.jpg)
![](http://1.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OiyRmeD-I/AAAAAAAAFRo/cgE8_855anI/s320/Angadi-Theru-Stills-14+copy.jpg)
ஜோதிலிங்கம்(மகேஷ் அறிமுகம்) கனி(கற்றது தமிழ் அஞ்சலி) இருவரும் ரங்கநாதன் தெருவில் உள்ள செந்தில் முருகன் துணிக்கடையில் வேலை செய்கின்றார்கள்...இருவர் குடும்பமும் மிகவும் ஏழ்மையானது... இருவர் சம்பளமும் மிக முக்கியமானது...ஆனால் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவில் இருவருக்கும் காதல் பூ பூக்கின்றது...கடையின் அண்ணாச்சிக்கு லாபம் மட்டுமே குறிக்கோள்..அவருக்கு அல்லக்கையாக வரும் கருங்காலி(இயக்குனர் வெங்கடேஷ்) அங்கு வேலை செய்யும் பெண்களையும் ஆண்களையும் மனதாபிமானம் இன்றி அடிமைகள் போல் நடத்துகின்றான்...கருங்கலி பார்வையில் இருவரும் சிக்க அவர்கள் இருவரும் என்னவானார்கள் என்பதை வரிவிலக்கு அளித்தும் கொள்ளை விலைக்கு டிக்கெட் விற்க்கும், தியேட்டரில் பார்க்கவும்.. அல்லதுபார்மாபஜார் குட்டி திரையில் இரண்டு மாதம் கழித்து தேடவும்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
![](http://1.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OiFPAzsXI/AAAAAAAAFRA/SSZTowEcvC8/s320/angadi_theru_11_218200892544123.jpg)
விண்ணைதாண்டி வருவாய் படத்தை விட இதில் நிறைய கட் ஷாட்டுகள்... ஒரு விடியலில் இருந்து ரங்கநாதன் தெரு எப்படி பரபரப்பாக மாறுகின்றது என்பதை நிறைய கட் ஷாட்டுகள் மூலம் செல்லுலாய்டில் பதிந்து இருக்கின்றார்கள்...
ரங்கநாதன் தெரு கடையில் வேலை செய்யும் பிரச்சனைகளை அதே போல் ஒரு கடையில் பெயர் மாற்றி எடுத்து இருப்பதற்க்கு துணிச்சல் வேண்டும்.. துணிக்கடை செட் எதாவது போட்டு இருந்து இருந்தால், இந்த படம் நம் மனதில் இந்தளவுக்கு ஒட்டி இருக்காது..... இந்த படத்தின் பலமே அந்த துணிக்கடையின் ரியாலிட்டிதான்....ஆனால் சினேகா சிரிக்கும் அந்த ஹோர்டிங்குகள் ஒரு குறியீடாக வேறு ஒரு கடையை நினைவு படுத்தி தொலைக்கின்றன....
![](http://4.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OiyiVk8_I/AAAAAAAAFRw/dkIyNj8JbHk/s320/Angadi-Theru-Stills-26.jpg)
![](http://4.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OiGt4IGiI/AAAAAAAAFRg/cLev0XvBATA/s320/Angadi-Theru-Stills-6.jpg)
படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அந்த முகங்களும் கொஞ்சமும் சினிமாதனம் இல்லாதவை...
![](http://1.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OizQDOAuI/AAAAAAAAFSA/sknXvkvt8aM/s320/thumbs20091108184111.png)
ஒரு தொப்பை போலிஸ்காரர் ரங்கநாதன் தெருவில் காலையில் வந்து நிற்க்கும் போது பின்புலத்தில் சரவணாஸ்டோர் அண்ணாச்சி போட்டோ தலைக்கு பதில் இவர் தலை நிற்பது போல் அமைத்து, உண்மை உழைப்பு உயர்வு என்ற வாசகங்கள் அவர் தலை சுற்றி வருவது போல் காண்பித்து விட்டு அடுத்த காட்சியில் அவர் எல்லா கடைகளிலும் மாமுல் வாங்குவது போல் காட்டி இருப்பது செம நக்கல்....
![](http://2.bp.blogspot.com/_FDULgrSOClk/S7Oiy0P19EI/AAAAAAAAFR4/TR1LUUYSnDw/s320/ce46c_Angadi-Theru-Stills-18.jpg)
விளிம்புநிலை மனிதனின் காமமும் காதலும் படும் பாட்டை நினைக்கும் போது நம் கண்கள் கலங்குவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை...
ஒரு துணிக்கடையில் நாம் இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும் பின்னனி இசை மற்றும் சிறப்பு சப்தம் பராட்டுக்குறியது....
சினேகா ஆடும் போது அண்ணாச்சி இப்படி இழுத்து போத்தி நடிச்சா எவ்னயா பார்ப்பான் என்று சொல்ல.... அடுத்த காட்சியில் முந்தி பறக்க வயிறும் தொப்புளும் தெரிய சினேகா நடப்பது இன்றைய விளம்பர உலக எதார்த்தம் காட்சிகளாய் நம் கண்முன்...நீங்களே அடுத்த படம் எடுக்கலாம் அண்ணாச்சி என்று சொல்லும் அந்த காட்சியும்,அதற்க்கு விளம்பர டைரக்டர் பதறுவதும் ஏ ஒன்.....
வசனங்கள் ஜெயமோகன்... இதுவரை ஜெயமோகனையும் சாருவையும் நான் வாசித்ததே இல்லை...ஆனால் ஜெயமோகன் வசனங்கள் படத்தின் பெரிய பலம்...
ஒரு பெரியவர், 30 வருஷங்களுக்கு முன்னே இதே ரங்கநாதன் தெருவில் மனுஷங்களை நம்பி கடை போட்டேன் எனக்கு எந்த கொறையும் இதுவரை இல்லை...
“விற்க்க தெரிஞ்சவனாலதான் வாழ்க்கை வாழ முடியும்...”
என் தங்கிச்சிதான் உன்னைய யாருன்னு கேட்டுச்சி?
நீ என்ன சொன்னே???
நான் சிரிச்சேன்.....
பாரு போட்டு பத்திரிக்கையில் கிழி கிழின்னு கிழிச்சி தொங்கவிட்டுட்டான்... இந்த இடத்துல கால் ஊன எனக்கு 25 வருஷம் ஆச்சி....
“உலகத்திலேயே குசுவுக்காக ஒரு காதல் தோத்திச்சின்னா அது உன்னோடுதுதான்”
இந்த இடத்துல பிச்சைகாரியை கூட விட்டு வைக்கமாட்டனுங்க... என்று மனிதர் பின்னி எடுத்து விட்டார்...
அஞ்சலி சூப்ரவைசரிடம் மாட்டிக்கொண்டு தலை கலைந்து வெளியே வரும் போது, லிங்கம் எப்படி தப்பினே? என்று திரும்ப திரும்ப கேட்க,
“ மாரை புடிச்சி கசக்கினான் நான் அமைதியா நின்னேன்” போதுமா என்ற கேட்டபடி விழியில் வழியும் நீரை துடைத்தபடி கஸ்டமர்களுக்கு துணி எடுத்து போட்டு காட்டும் அந்த இடத்துக்காக அஞ்லிக்காக தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யலாம்...
![](http://1.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OiFlQ5boI/AAAAAAAAFRI/s1QRfANCeFA/s320/angadi-theru-01.jpg)
ரங்கநாதன் தெருவில் வெவ்வேறு கேரக்டர்கள் அறிமுகம் ஆவது கிளைக்கதை என்றாலும், ரசிக்கும் படியாகவே இருக்கின்றது... அதிலும் அந்த கட்டணகழிப்பிட ஸ்டைல் பார்ட்டி....வேலை கேட்கும் போது, ஒரு பழக்கார பெண்மணி ஆப்பிள் பழம் தர அந்த பழ பிச்சை வேண்டாம் என்று தட்டிவிடும் அந்த காட்சி அற்புதம்...
புதுமுகம் மகேஷ் ஊரில் கிரிகெட் விளையாடும் காட்சியிலும்...கிராமத்து காதல் காட்சியிலும் நன்றாகவே நடித்து இருக்கின்றார்....
ஆல்பம் படம் இயக்கிய இயக்குனரா? என்று ஆச்சர்யபட்டு அதை வெயிலில் உடைத்த வசந்தபாலன், இப்போது அங்காடிதெரு படம் மூலம் பேர் சொல்லும் இயக்குனர் வரிசையில் இவரும்...
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை சாங் இசையருவி,சன்மியூசிக் போன்றவற்றில் போட்டு இனி தேயவிட போகின்றார்கள்...
விளம்பர ஷுட்டிங் முடிந்து கடையில் மாட்டிக்கொள்ளும் இருவரும் பாடலின் போது, குளோஸ் சர்க்கியூட் கேமரா இயங்குவதும்,சோத்துக்ககே வழியில்லாத கேரக்டர் சடங்கு செய்ய ஆசைப்படுவதுமாக சில சறுக்கல்கள் படத்தில் உண்டு....
அயங்கரன் நிறுவனத்துக்கு இந்த படம் நல்ல பெயர்.... பெரிய பட்ஜெட் இல்லாமல் இது போல் சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய எடுக்கலாம்...
அடுத்து நந்தலாலா....எதிர்பார்ப்போம்...
என்னதான் ரியாலிட்டி என்றாலும் கடைசிகாட்சிவரை சோகத்தை பிழிந்து இருக்க வேண்டாம். என்பது என் எண்ணம்...
இன்னும் நிறைய எழுதிக்கொண்டே போகலாம்.... உண்மை தமிழனோடு போட்டி போடும் எண்ணம் எனக்கு இல்லை என்பதால் இத்தோடு நிப்பாட்டிக்கிறேன்...
![](http://2.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OhvhHexsI/AAAAAAAAFQg/nzdck6wgn_A/s320/524f5_Angadi_Theru_Audio_001.jpg)
படக்குழுவினர் விபரம்...
Banner: Ayangaran International
Cast: Magesh, Anjali
Direction: Vasantha Balan
Music: G V Prakash Kumar, Vijay Antony
தியேட்டர் டிஸ்க்கி...
சென்னை கமலா தியேட்டர்லதான் இந்த படத்தை பாத்தேன் ...பச்சைகிளி முத்துச்சரம் படத்துக்கு அப்புறம் தியேட்டர் புதுப்பிச்ச பின்னாடி இப்பதான் முத முறையா போறேன்....
![](http://3.bp.blogspot.com/_FDULgrSOClk/S7OjJRPo5UI/AAAAAAAAFSQ/1LS4FWeEeiM/s320/Photo0317.jpg)
![](http://2.bp.blogspot.com/_FDULgrSOClk/S7Oiz7PFZLI/AAAAAAAAFSI/Ohvx1lsNTNU/s320/Photo0316.jpg)
படம் நல்லா இருக்கு என்று மக்கள் வாய் வழியாக சொல்லி தியேட்டருக்கு மக்கள் வருவது பெரிய விஷயம்... மல்டிபிளக்ஸ் என்று சொல்லி ஒரு டிக்கெட் 100 என்றால் எப்படி தியேட்டருக்கு கூட்டம் வரும்...
100ரூபாய் என்பது ஒரு மாதத்துக்கான கேபிள்கட்டணம்... அதை தமிழக தியேட்டர் நிர்வாகத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்....
பழைய வீட்டு நினைப்பிலேயே லேட்டாக கிளம்ப புது வீடு 6 கிலோ மீட்டர் தள்ளி இருப்பது மறந்து போனதால் டைட்டில் கோவிந்தா கோவிந்தா.....
அன்புடன்
ஜாக்கிசேகர்
(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....