Blog காலத்திலும் சரி இந்த youtube காலத்திலும் சரி....
நிறைய வலி மிகுந்த பெண்களையும் அவர்களின் ரணங்களையும் நான் அறிவேன்...
அந்த வலிகளை சொல்ல.... புரிந்து கொள்ள.... என்னால் முடியும் என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள்...
கூடுமானவரை இத்தகைய பெண்கள்... பத்து பொருத்தம் பார்த்து பெற்றோர் நடத்தி வைத்த அரேஞ்ச் மேரேஜ் திருமணங்களில் அகப்பட்டவர்கள் தான்....
இரண்டு மாதங்களுக்கு முன் சென்னை அடையாறில் ஒரு வலி மிகுந்த பெண்ணை நான் சந்தித்தபோது...
நிறைய பேசிக் கொண்டிருந்தோம் கலகலப்பாகத்தான் அன்றைய சூழல் இருந்தது
ஆனால் கிளம்பும் நேரத்தில் ஏதோ ஒரு விஷயத்தை இருவரும் பேச ஆரம்பிக்க....
நான் இருந்த ஏதோ ஒரு மனநிலையில் அந்தப் பெண்ணின் இயலாமையை லாஜிக்காக பேசுகிறேன் என்ற நினைப்பில் குத்திக்காட்டி அவளை எரிச்சல் அடைய செய்து விட்டேன்...
நம்மை நாமே ஒரு செயலுக்காக அதிகமாக திட்டிக்கொண்டு நம்மை நாமே மனதுக்குள் அசிங்கப்படுத்திக் கொள்வோம் அல்லவா... அப்படியான நிலையை அன்று நடந்த அந்த செயலுக்காக சூழலுக்காக இன்று வரை என்னை நானே திட்டிக் கொள்கிறேன்.
என்னை அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்...
காயத்துக்கு களிம்பு தடவுவேன் என்று என்னை நம்பி வந்தவளை...
அவளின் புரையோடி போன காயத்தை மேலும் கிளரி... ஆழப்படுத்தி என் மேட்டிமையை வெளிப்படுத்தும் விதமாக பேசி...
அவளை எரிச்சல் அடைய செய்து நிறைய நிறைய காயப்படுத்தி விட்டேன் 😔
அடுத்த நாளே அவள் வழக்கம் போல இயல்பாக வெளிவந்து விட்டாள்....
நான் தான் எப்போதும் போல அந்த சூழ்நிலையை.... லாஜிக்காக பேசுவதை சரி என்று நினைத்து காயப்படுத்தியதை நினைத்து நினைத்து வருந்துகிறேன்...
காயத்ரியின் இந்த கட்டுரை இந்த பதிவை எழுதத் தூண்டியது... ஒருவேளை வலித்தவள்... இந்த பதிவை படிக்க நேர்ந்தால்... அன்றைய தினத்திற்கும்... அன்றைய சூழலுக்கும்..
அன்றைய எனது பேச்சுக்கும்
என் வருத்தங்கள்🙏
எப்போதும் பிரியங்களுடன் ஜாக்கிசேகர் 🥰
நன்றி காயத்ரி
Gayathri Mahathi
-----------------------------
வலி மிகுந்த பெண்கள் தனக்கு பிடித்த ஆணைப் பார்த்தவுடன், என்னைப் எப்படியாவது காப்பாற்றி விடு, எனக்கு இத்தனை துரோகங்கள் நடந்து இருக்கு, அதை எல்லாம் கடந்து, உன் பார்வையில் நல்லபடியா வாழணும் என்று சொல்வதுண்டு.
அப்படி சொல்லும் நேரம் எல்லாம் விதம் விதமா ஒவ்வொரு பெண்ணுக்கும் நடக்கும்.
இங்கு உள்ள ஒரு பெண் தன் அனுபவத்தை சொல்லி எழுதச் சொன்னாங்க.
அவளுக்கு பிடிக்காத திருமணம், அவள் வாழ்வில் பெற்றோருக்காக மட்டுமே நடந்து முடிந்தது. ஆணுக்கு பெண் தொட விட்டதும் அவள் மனதுக்குப் பிடித்த காதலன் ஆகி விட்டோம் என்று பலரும் நினைத்து விடுகிறார்கள்.
உண்மையில் பெண்ணின் கிளிட்டோரிஸ் தொட்டதும் பெண்ணின் உடல் ஒத்துழைப்பு தர ஆரம்பித்து விடும். ஆனால் மனதுக்கு பிடித்து விட்டதா என்றால் கண்டிப்பாக இல்லை என்பார்கள். இவளுக்கும் அது போல் தான் திருமண வாழ்க்கையில் இருக்க நேர்ந்தது. இது புரியாமல் கணவனும், குடும்பமும் அவள் சந்தோசமாக இருக்கிறாள் என்று முழுதாக நம்பவும் ஆரம்பித்து விட்டார்கள். இப்ப வரை அப்படித் தான் நம்புகிறார்கள்.
இது எல்லாம் கடந்து ஒரு நாள் அவளும் கர்ப்பமாகி விடுகிறாள். அப்ப டெலிவரி அன்று ஹாஸ்பிடலில் அவளுக்கு டெலிவரி பார்க்க வந்த டாக்டர் ஒரு ஆண்.
இவள் வலியில் துடிக்கும் போது, அவர் ஆறுதலா பேசுகிறார். இதோ இன்னும் ரெண்டு மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என்கிறார்.
அப்ப நர்ஸ், டாக்டர் இருக்க, டாக்டரை அருகில் வரச் சொல்லி, அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, தனக்கு பிடிக்காமல் இந்த திருமணத்தை நடத்தி வைத்து விட்டார்கள் என்றும், தன் வாழ்வில் தனக்கு பிடித்த விசயங்கள் எதுவும் செய்தது இல்லை என்றும், அப்படி நடந்த மாதிரி எதுவும் வாய்ப்பு கூட அமைக்க முடியாத சூழலில் இருப்பதாகவும் சொல்லி அழுது, அவரது கைகளை இறுக்க பிடித்தபடி இருக்கிறாள்.
அவருக்கோ என்ன சொல்வது என்று தெரியாமல், பரவாயில்லை இனி உன் கனவுகள், ஆசைப்பட்ட அனைத்தையும் உன் குழந்தை மூலம் நிறைவேற்ற முடியும் என்று சொல்லி இருக்கிறார்.
இப்படியாக அந்த லேபர் வார்டில் அவளுக்கான நியாத்தையும், அவள் பட்ட கஷ்டங்களையும் சொல்லவும், மரண வாக்குமூலம் மாதிரி, அவள் குடும்ப நபர்களை பற்றியும் அந்த ஆண் டாக்டர் கிட்ட சொல்லி இருக்கிறாள்.
அதன் பின் குழந்தை பிறந்து, தற்போது அவனுக்கு 20 வயது ஆகி விட்டது என்றும் சொல்லி விட்டார். குடும்ப வாழ்க்கை முதலில் இருந்தது போல் தான், எதுவும் மாறவில்லை, தன் வாழ்க்கையை எப்படி மாற்ற முடியும் என்று யோசிக்கிறார்.
ஆனால் அந்த லேபர் வார்டில் அவர்கிட்ட மனசு விட்டு வலியிலும், அழுதும் பேசிய முதல் ஆணாக தன் வாழ்வில் இருக்கிறார் என்று சொல்லும் போது,
தன் வாழ்வில் நடந்த விசயங்களுக்கு நியாயங்களை தட்டிக் கேட்க அவளுக்கு பிடித்த உருவத்தில் எந்த நேரத்தில் ஹீரோ வந்தாலும் காப்பாற்ற சொல்லித் தான் கேட்டு இருக்கேன். அப்படி பேசிய பின் ஒரு வலிமையான வாழ்வை வாழவும், மனதுக்கு பிடித்த மாதிரி இருக்கவும் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் ஹீரோ வந்தால் போதும் என்கிறார்.
இந்தச் சம்பவமே அவருக்கு பிடித்த மாதிரி சாப்பிட, பெற்றோர் வீட்டுக்கு வரவும், பிடித்த ட்ரஸ் போடவும் முடிந்தது என்கிறார். இதுவே மிகப் பெரிய விஷயமாக அவர் வாழ்க்கையில் இருக்கிறது.
இப்படியாக ஹீரோ, ஹீரோயின் எல்லாம் எந்த நேரத்தில் வந்தாலும் அது அவரவர் மனதுக்கு பிடித்து இருக்கும் போது, அந்த நிகழ்வில் ஒரு நொடியைக் கூட மனிதர்கள் தவற விடுவதில்லை.
காயத்ரி மனநல ஆலோசகர்... மதுரை
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...