பாரிதாப முத்துக்குமரன்....


இலங்கை பிரச்சனைக்காக உயிர் விட்டமுத்துக்குமாரின் உயிரும்,உண்ணாவிரத போராட்டம் , மனித சங்கிலி, மாணவர் உண்ணாவிரதங்கள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான்,

இந்திய இலங்கை உறவுகளின் சூட்சமத்தையும், தாய் தமிழகத்தின்ஒற்றுமை இல்லாத அரசியல் சண்டைகளையும் உனராமல் தீக்கு தன் உடலை தின்ன கொடுத்து விட்ட அவரின் தைரியத்துக்கும் உணர்ச்சி போராட்டத்துக்கும், என் அஞ்சலிகள்

தமிழர்களை பொறுத்தவரை இதுவும் கடந்து போகும்....





அன்புடன்/ஜாக்கிசேகர்

உண்மையை போட்டு உடைத்தார் செல்வி ஜெயலலிதா....


நேற்று செல்வி ஜெயலலிதா பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு உண்மையை பகிங்கரமாக போட்டு உடைத்தார்.

அவர் பின் வருமாறு பத்திரிக்கையாளர்களிடம் சொன்னார்...

இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும்.
போர் நிறுத்தப்பட வேண்டும் என்றால் விடுதலைபுலிகள் ஆயுதத்தை கீழே போட்டு சரணடைய வேண்டுமாம்

புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் போர் நின்று மக்கள் நிம்மதியாக வாழ்வார்களாம்

எவ்வளவு பெரிய உண்மையை மக்கள் மன்றத்தில் வைத்துள்ளார். அவர்கள் ஆயுதத்தை கீழே போட்டால் போர் நின்று விடுமாம்.

அதுதான் சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே.... அதை சொல்வதற்க்கு எதற்க்கு நீங்கள் எதிர்கட்சி தலைவி...

அந்த கருத்துக்களை நாங்களே சொல்லிவிடுவோமே....

அவர்கள் தனி அரசாங்கம் நடத்தியவர்கள், கட்டு கோப்புக்கு பெயர் போனவர்கள்.
அவர்கள் மட்டுமே தமிழர்கள் உதை பட்டார்கள் என்றால் உடன் எதிர்த்து கேள்வி கேட்பவர்கள்.

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற சட்டதிட்டத்தோடு வாழ்பவர்கள்.

அவர்கள் இதுவரை சொகுசு வாழ்க்கை வாழாதவர்கள். இலங்கை பிரச்சனையை இதுவரை பார்த்வர்கள் சிங்கள தமிழர் இனைந்து வாழ்வது என்றுமே சாத்தியமில்லை என்பதை அறிவார்கள். சில பல தவறுகள் அவர்கள் பக்கம் இருக்கலாம் னால் ஈழத்தமிழர்கள் புலிகள் இல்லாமல் அவர்கள் இல்லை.



புலிகள் ஆயுதம் தூக்கியது பொழுது போக்குக்கு அல்ல.. தன் இனத்து மக்களுக்காக போராட...அதே போல் ஆயுதப்போராட்டத்தையும் அவர்கள் அயுதத்தை தூக்க வைத்ததும் சிங்கள பெரிணவாத அரசுதான் என்பதை உலக மக்கள் எல்லோருக்கும் தெரியும்

செல்வி சொல்வது போல் ஆயுதங்களை அவர்கள் தீழே போட்டு விட்டார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்,அடுத்து அங்கு நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் செல்வி பொறுப்பு ஏற்றுக்கொள்வாரா? இல்லை அடுத்தக்கட்ட அரசியல் தீர்வு ஏதாகினும் கைவசம் வைத்து இருக்கிறாரா?



போரில் மக்கள் இறப்பது சகஜம் என்றவர், இப்போது நான் கூறிய கருத்தை மாற்றிக்கூறிவிட்டார்கள் என்றார்.


ராமேஸ்வரத்துக்கு பக்கத்தி்ல் கூப்பிடும் தூரத்தில் இருக்கும்இலங்கையில் நடக்கும் படுகொலையை கண்டிப்பதை விட்டு விட்டு காசாவில் போர் நிறுத்தம் வேண்டும் என்றவர்


டான்சி கேசில் கையெழுத்து என்னுடயதில்லை என்று பல்ட்டி அடிக்க நீதி மன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்.

நானும் மனுஷிதானே தவறு செய்வது இயல்பு என்றவர்...


இலங்கை பிரச்சனையை அவர் முழுதாக அறிந்து இருந்தால் அப்படி சொல்லி இருக்கமாட்டார்.

200 நாட்கள் கொடநாட்டில் தங்கி மக்கள் பிரச்சனைக்காக அறிக்கை போர் நடத்தியவர்.


சென்னைக்கு பக்கத்தில்50 கிலோ மீட்டரில் இருக்கும் திருவள்ளுரு ஊருக்கே ஹெலிகாப்படரில் சென்று அரசு பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்.


ஆமாம் அவருக்கு எப்படித்தெரியும்?
இழப்பின் வலியையும் இடப்பெயர்தலின் வேதனையும்.....



அன்புடன்/ஜாக்கிசேகர்

( பாகம் / 2)கால ஓட்டத்தில் காணாமல்போனவைகள்.. (கோலங்கள்)





போன பதிவில் ஹரிக்கேன் விளக்கு பற்றி எழுதி இருந்தேன். நான் நினைத்துகூட பார்க்காத அளவில் அந்த மறு பதிவுக்கு பதிவர்கள் படித்து பின்னுட்டம் இட்டும் தமிலிஷ்ல் ஓட்டு போட்டும் என்னை திக்கு முக்காட வைத்து விட்டீர்கள்.அதை விட முக்கியம் இரண்டு முன்று பேர் தெளிந்த நிரோடை போன்றஎழுத்து என்று வேறு பாராட்டிவிட்டார்கள். இன்னும் தெளிந்ததாய் எழுத முயற்ச்சிக்கிறேன்.

இந்த இரண்டாம் பாகத்தி்ல் நாம் பார்க்க போவது கோலங்கள் கோலங்கள அழகான கோலங்கள் என்று சன்டிவியில் 5 வருடமாக ஒளிபரப்பாகி வரும் கோலங்கள் தொடரின் தலைப்பு பற்றியது இது.

கோலங்கள்

கோலம் பொதுவாக தமிழகத்தில் மார்கழி மாதம் மட்டும் ரொம்பவும் பர பரப்பபாக தமிழக பெண்கள் கோலம் போடுவார்கள். கார்த்திகை மாதமே மார்க்கெட்டில் கோலப்புத்தகம் , கோலக்கட்டியும் கன ஜோராக வியாபாரம் கலை கட்ட தொடங்கும்.கோலப்புத்தகம் வாங்கி கோலகட்டியால் முதலில் தரையில் சிக்கு கோலங்கள் மற்றும் ஊடு புள்ளி வரிசை கோலங்கள் போட்டு பழகுவார்கள்.

கோலப்புத்தகத்தை நம்பி சானி தெளித்து தெருவில் உட்கார்ந்தால் அலங்கோலம்தான். ஏனென்றால் நிறைய டிசைன் கோலங்கள் பிரின்ட் மிஸ்ட்டேக்கால் சரியாக வராது. அதே போல் சிக்கு கோலத்தை பொறுத்த வரை ஒரு முறை பேப்பரில் அல்லது தரையில் ஒரு முறை போட்டு பார்த்த பிறகே வாசலுக்கு வர வேண்டும். அப்போதுதான் தெருவில் மானம் கப்பல் ஏறாமல் தப்பிக்கும்.

பொதுவாக இந்த கோலம் என்பது மார்கழி குளிரில் பெண்கள் படுத்து ரெஸ்ட் எடுத்துவிடக்கூடாது என்பதற்க்காகவே உருவாக்கப்பட்ட ஒரு கஸ்டம் இது என்பேன். இது தெரியாத தமிழக பெண்டிர் யாரோ ஒருவர் உசுப்பி் விட்டதற்க்கு இன்றுவரை ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

பெண்களை பொறுத்தவரை அழகாக இருக்கிறது என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு எந்தளவுக்கு வேண்டுமானாலும் காரியத்தை சாதித்து கொள்ளலாம். வெளியே போய் விட்டு வீட்டுக்குள் போகும் போது வீட்டு ஆண் இந்த தெருவிலேயே உன் கோலம்தான் சூப்பரா இருக்கு, பக்கத்து விட்டு இந்துமதி போட்ட கோலம் உவ்வே....

கலரா அடிச்சு இருக்கா? அவ மூஞ்சி மாதிரியே இருக்கு என்று சொல்லும் போது நம் வீட்டு பெண்களுக்கு பக்கத்து வீட்டு இந்து மூஞ்சி அசிங்க படுத்தபட்டதில் அவ்வளவு ஒரு சந்தோஷம் இருக்கும்.

மறுநாள் நேற்றை விட இன்று கோலத்தில் கலர் அழகாக சிறிதும் பிசிர் தட்டாமல் இருக்கும். பக்கத்து வீட்டு இந்து மூஞ்சி நல்லா இல்லை என்று சொன்னவன் நம்ப மூஞ்சி நல்லா இல்லை சொல்லறதுக்கு ஒரு நொடி போதாது.. என்ற பயமே காரணமாக இருக்கும். கோலம் அற்புதமாக இருக்கும்.

எங்கள் தெருவில் என் அம்மாவுக்கு போட்டியே இல்லை, என் அம்மா மிக அழகாக கோலம் இடுவாள். நான் மெயின் ரோட்டில் இருக்கும் என் அத்தை வீட்டுக்கதான் செல்வேன் எங்கள் வீட்டு வாசல் ரொம்பவும் சின்னதாக என் அம்மாவின் கலை ஆர்வத்தை ஒருஅளவுக்கு மேல் வளர விடாமல் எதிர் வீட்டு சுவர் தடுத்தது.

என் அத்தை வீட்டில் கோலம் போட்டு கலர் கொடுத்து அப்புறம் சின்ன அத்தை வீட்டுக்கும் போய் கலர் கொடுத்து கோலத்தை நிறைவு செய்வோம்.சில நாட்களில் விடியல் 5 மணிக்கு ஆரம்பிக்கும் கோல புராஜக்ட் சில நாட்களில் காலை ஏழுமணிவரை இழுத்து செல்லும்.

கோலத்தை பொதுவாக விடியலில் போட்டு முடித்து விடுவது நலம் இல்லையென்றால் உங்கள் கோலக்கலையை பக்கத்து வீட்டு ஆட்கள் ஊத்த பல்லுடன் வந்து கலர் கொடுப்பதில் அட்வைஸ் செய்கிறேன் என்று உட்கார்ந்து, அந்த கோலத்தை அலங்கோலமாக்கி, இலங்கை பிரச்சனை போல இடியாப்ப சிக்கலாக்கி விடுவார்கள்.

கோல ஜீரம் போதுவாக மார்கழி மாதம் தொடங்கி தை மாதம் 3 நாட்கள் வரை தொடரும். அப்போது தமிழக பேண்கள் பொங்கலை வர வேற்க்க தங்கள் விட்டு வாசலில் கோலமிடுவர் அப்போது யாரும் போகி நல்வாழ்த்து பொங்கல் நல்வாழ்த்து என்று எழுதாமல் ஹேப்பி பொங்கல், ஹேப்பி மாட்டு பொங்கல் என்று எழுதுவார்கள் என்னவோ ஜார்ஜ் புஷ் கோலத்தை வந்து பார்க்கறப்ப புரியாம போயிடறாமாதிரி....

கோலத்துக்காக என் அம்மா முதல் நாள் சாயிந்திரமே தண்ணி தளும்ப தெளித்து தரையை வணக்கத்துக்கு எடுத்து வந்து மறுநாள் காலை பசு மாட்டுசானியை தண்ணீரில் கரைத்து வாசலில் தெளித்து ஒரு ஐந்து நிமிடம் கழித்து தென்னை துடப்பத்தால் பெருக்கி விட்டு அந்த தரையில் கோலமாவால் கோலம் போட்டால் அதன் அழகே தனிதான்.

அதே போல் போட்ட கோலத்துக்கு பார்டர் கட்டுவது என்பது ரொம்பவும் அழகான விஷயம் மட்டும் அல்ல கவர்ச்சியான விஷயமும் கூட....
எல்லார் வீட்டு கோலங்களையும் அலசி ஆராய்வோம் எந்த வீட்டு கோலம் ஆழகாக இருக்கிறது என்று... அதே போல் அட்டு பிகரா இருக்கும் அது போடற கோலத்தை யாராலயும் அடிச்சுக்க முடியாத படி ரொம்ப டாப்பா இருக்கும்

இப்போதெல்லாம் கிராமங்களில் கூட கோலம் போடும் பழக்கம் அரிதாகி வருகிறது. சென்னையில் பெண்கள் இரவு பத்து மணிக்கே வாசலில் கோலம் போட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி விட்டு உள்ளே அடுத்ததாக தன் கணவருக்கு சில திறமைகளை காட்ட எத்தனிக்கும் போதே டூ வீலர், கார்காரர்கள் கோலத்தின் மேல் ஏற்றி நாசப்படுத்தி விடுகிறார்கள்.

அதே போல் கோலம் போடும் போது எதிர் வீட்டு பசங்களை டாவு கட்டுவதும் நிறைய நடக்கும், போய் பால் வாங்கி வருவது போலவும், தண்ணி தூக்கி வருவது போலவும் இளவட்டங்கள் ஷோ காட்டுவார்கள். ஓ இவன் இந்தளவுக்கு குடும்ப பொறுப்பு உள்ளவனா? என்பது போல் நடந்து கொள்வார்கள்.


இப்போதெல்லாம் பெண்கள் மார்கழியில் எழுந்து கோலம் போடும் விகிதாச்சாரத்தின் அளவு குறைந்து கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் எழு மணியில் இருந்து எட்டு மணிக்கே துங்கப்போய்விடுவார்கள். இப்போது பத்து மணிக்கு டைட் போலிஸ் டிரஸ்சில் ராதிகா சரத் குமார் வந்து மிரட்டினாலும் தூங்க போக மாட்டேன் என்கிறார்கள்.

முன்பெல்லாம் மார்கழி மாசம் என்றால் விடியலில் குளிருக்கு இதமாக போர்வையில் சுருன்டு வெது வெதுப்பான சூட்டில் படுத்து இருக்கும் போது 4 மணிக்கு பறையடித்து செல்வார்கள், அடுத்தது மாரியம்மன் கோவிலில் எல் ஆர் ஈஸ்வரி கணீர் குரலில் செல்லாத்தா எங்க மாரியாத்தா என்று பாட அதே நேரத்தில் முருகன் கோவிலில், பார் வேந்தே என்னை பார் வேந்தே பாட்டுடன் வந்து இருக்கும் தருமியின் வணக்கம் என்ற திருவிளையாடல் ஒலிச்சி்த்திரம் ஓடத்தொடங்க, என் அம்மா மெல்ல எழுந்து புடவை சரி செய்து தலை முடியை வாரி கொண்டை இட்டு சானி தெளிக்க ஆரம்பிப்பாள்

பனி பெய்வதால் தலையில் ஒரு மங்கி குள்ளாய் போட்டுக்கொண்டு ,நேற்று இரவே தரையில் பயிற்ச்சி பெற்ற கோலம், ஹரி ஓம் என்று ஒரு புள்ளியில் ஆரம்பித்து மிக பெரிதாய் மிக அழகாய் விரியும்,
கலர் கொடுக்கிறேன் பேர்வழி என்று முழங்கை வரை கலர் அப்பிக்கொண்டு உதட்டருகே ஊறல் எடுக்க அந்த கையாலேயே சொரிந்து கொள்ள அது திடிர் மீசையாக காட்சி அளிக்க நக்கலும் நையான்டியாக அந்நாளைய மார்கழி பொழுதுகள் விடியும்.

கோலம் கூட பெண் வாழ்கை போன்றதுதான் மிக அழகாக போட்டவுடன் காட்சி அளிக்கும் கோலங்கள் கொஞ்ச நேரத்தில் அல்லது போகப் போக அதன் பொலிவுகளை இழந்து விடுகின்றன.

எங்காவது பணக்கார வீட்டின் போர்ட்டிக்கோவில் போட்ட கோலங்கள் மட்டுமே அன்று சயாந்திரம் வரை அதிகாரத்தால் தாக்கு பிடிக்கின்றன

இப்போதுள்ள வயது பெண்கள் அந்த சந்தோஷத்தை இழந்து விட்டார்கள். என் மனைவி கோலம் போடும் அழகே அழகு.....

ஒரு டம்ளரில் இருக்கும் தண்ணியை
படிக்கட்டுதான்டி தெளித்து அதில் கோலக்கட்டியை எடுத்து நாலே நாளு புள்ளியை வைத்து ஒரு இழுப்பு இழுத்து குளித்து வேளைக்கு கிளம்பிவிடுகிறாள்.

என் அம்மா வேலைக்கு போகாதவள் சந்து புள்ளி சிக்கு கோலம் மாண் கோலம் மயில் கோலம் எல்லாம் போடுவாள்,ஆனால் என் மனைவி?


அன்புடன் / ஜாக்கிசேகர்

மீண்டும் தினமலரின் நக்கல்....

ஒரு இனம் அடிபட்டு செத்து சுண்ணாம்பாக வீழ்ந்து கொண்டு இருப்பதை பார்த்து ரசித்து ருசித்து அந்த இனத்து மொழியிலே செய்தி வெளியிட மிகவும் தைரியம் வேண்டும்.

அந்த தைரியம் தினமலர் பத்திரிக்கைக்கு உண்டு என்பேன்.


எம் மக்களை பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விடுங்கள் என்று சொல்லி நிராயுதபாணியாக வந்த மக்களை குண்டு விசி கொன்று குவித்து வருகிறது சிங்கள ராணுவம். அது பற்றி எந்த கேள்வியும் எழுப்பவில்லை. எழுப்பவும் மாட்டார்கள். ஏனென்றால் தமிழர்களுக்கு உள்ளே ஒற்றுமை இல்லை.

முல்லை தீவு பற்றிய உண்மையான நிலை இதுவரை தெரியவில்லை ஆனால் அதற்க்குள் முல்லை தீவு வீழ்ந்தது என்று தலைப்பு போட்டு விட்டார்கள்

இன்றைய எல்லாதமிழ் பத்திரிக்கைகளின் தலைப்பு செய்திகளையும் உலக தமிழ் மக்கள் முன் வைக்கிறேன்.
நீங்களே ஒரு நியாயம் சொல்லுங்கள்.





நான் முன்பே சொன்னது போல் தினமலர் பத்திரிக்கை சாய்பாபா, காசி ,ராமேஸ்வரம் செய்திகளை வெளியிட்டு நங்கநல்லூர், மாம்பலம்,மயிலாப்பூர் வாசிகளின் மனதில் இடம் பிடியங்கள். எம் தமிழ் மக்களுக்கு வேண்டாம்.

ஒரு வேண்டுகோள் அப்படியே முல்லைதீவு வீழ்ந்தாலும் அது பற்றி ஒரு இலவசஇனைப்பு போட்டுவிடாதீர்கள்....


அன்புடன்/ஜாக்கிசேகர்

வில்லு விஜய் எஸ் எம் எஸ் ஜோக்.....






சின்ன தம்பி படத்துல வர்ர குயில புடிச்சி பாட்டை வடிவேல் அழுதுக்கிட்டே படறா போல பாடனும் என் புரிஞ்சுதா.....


குயில புடிச்சு கூண்டுல அடிச்ச கூவ சொல்லுகற உலகம்,

விஜய புடிச்சு காசு கொடுத்து நடிக்க சொல்லுகற உலகம்......


அது எப்படி நடிக்குமையா? அது எப்படி ஓடுமைய்யா?


ஓ ஓ ஓ ஓ.....









 இதுவும் பாட்டுதான் அதே போல பாடி பாருங்க....


 ஹேய் ராமா ராமா ராமாகிட்ட வில்ல கேட்டேன்


ஹேய்பீமா பீமா பீமாகிட்ட கதைய கேட்டேன்......

ஆடியன்ஸ் அதெல்லாம் சரி டைரக்டர் கிட்ட கதைய கேட்டயா?










இன்றைய தத்துவம்....


டைம் என்பது ரஜினி படம் மாதிரி அது பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும்

ஆன வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி அத நாமதான் வலுக்கட்டாயமா 


 கஷ்டபட்டு ஓட்டி ஆகனும் 



அன்புடன்/ ஜாக்கிசேகர்






ஆனந்த விகடனுக்கும் குமுதத்துக்கும் அட்டை படத்துக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா என்ன?

இரண்டும் இந்தவாரத்து விகடன் குமுதம்.

ரீமா சென் படத்தை மட்டும் வைத்து இரண்டுக்கும் உள்ள ஆறு வித்யாசங்களைசொல்லுங்கள் பார்ப்போம்.



முதல் வித்யாசத்தை நானே சொல்லிவிடுகிறேன்.
முடி மறைக்க முயற்ச்சித்தாலும் அதையும் மீறி வெளிப்பட்ட அந்த அழகான மிகவும் அழகான...........அந்த இரண்டு கண்கள்...

நான் மெய்யாலுமே நெத்தியல இருக்கற முடியத்தான் சொன்னேன்.



அன்புடன் /ஜாக்கிசேகர்

நல்ல வேளை பாரதி இப்போது உயிரோடு இல்லை...




( பாகம்/1)கால ஓட்டத்தில் காணாமல் போனவை

இந்த பதிவு ஒரு பழைய பதிவுதான் இருந்தாலும் இதனை இப்போது வெளியிடுவதின் காரணம் இது போல் கால ஓட்டத்தில் காணமல் போன மற்ற விஷயங்களையும் இந்த தொடரில் எழுத போகிறேன். அதே போல் கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவைகள் என்ற தலைப்பிலும் எழுத போகிறேன். தொடர்ந்து கால ஓட்டத்தில் தொலைந்து போன விஷயங்களையும் கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவைகளையும் , இவைகளில் என்னை பாதித்த விஷயங்களை எழுத போகிறேன் தொடந்து என் எழுத்தை வாசிக்கும் என் சக பதிவர்கள் மற்றும்வாசகர்களுக்கு என் நன்றிகள்.தோடந்து பின்னுட்டம் மற்றம் ஓட்டுகள் அளித்து என்னை உற்சாக படுத்துவீர் என்ற நம்பிக்கையுடன்....


அன்புடன் ஜாக்கிசேகர்

ஹரிக்கேன் விளக்கு...




தமிழகம் முழுவதும் மின் வெட்டால் பொதுமக்கள் தினறி, கழுத்து வியற்வை,அக்குள் வியற்வை பிசு பிசுப்புடன், கலைஞர் கவர்மெண்ட்டை திட்டிக்கொண்டு இருக்கும், இந்த வேளையில் இது பற்றி எழுதுவது நல்லது என்பேன்.

பொதுவாய் இந்த மாதிரி விளக்குகளைஎல்லா கிராமங்களிலும் பயண்படுத்துவர்.
பொதுவாய் விவசாயிகள் இரவில் தண்ணீர் பாய்ச்சவும், இரவில் வரப்பு பார்த்த நடக்கவும் இந்த விளக்குகள் பயன்படும்.

இதற்க்கு ஹரிக்கேன் விளக்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? புயல் காற்றுகளின் போது அல்லது எந்த பயங்கர காற்றுகளுக்கும் ஈடு கொடுத்து அனைந்து போகாமல் வெளிச்சத்தை கொடுக்க வல்லது.
ஹரிக்கேன் என்றாலே புயல்தானே...


இதற்க்கு கடலுர் மற்றும் சற்று வட்டாரங்களில் இதற்க்கு லாந்தர் என்று பெயரிட்டும் அழைப்பர்.

இந்த விளக்குகளை மீனவர்களின் உற்ற தோழன் என்று சொன்னால் அது மிகையில்லை...

மின்சாரம் எட்டி பார்க்காத அந்த கால கட்டத்தில் எங்கள் அம்மா அந்த லாந்தர் விளக்கை சாயிந்திரம் 5 மணிக்கெல்லாம் எடுதது முந்தின நாள் இரவில் அந்த விளக்கு உழைத்து கலைத்ததால் அதன் கண்ணாடியில் கருப்பு சுவாலைகள் படிந்து இருக்கும். அந்த கரும் ஜுவாலைகளை துடைத்தால்தான் பளிச்சென ஒளி கிடைக்கும்.

கண்ணாடி தொடைக்கவும் கக்கூஸ் கழுவவும் ஸ்பிரே வராத அந்த காலத்தில் மதியம் சமையல் செய்து நீர்த்து போன வரட்டி
( மாட்டு சாணத்தில் செய்த எரி பொருள்) சாம்பலை எடுத்து அந்த குடுவை போன்ற கண்ணாடி குடுவை உள்ளே, சர்ம்பலை உள்ளே போட்டு துணியால் துடைத்ததும் அந்த குடுவை பளிச்சிடும் பாருங்கள் அடா அடா....

அப்போது என்ன சுட்டி டிவி குட்டி டிவி போன்ற போழுது போக்குகளா இருந்தது?. கவனம் சிதற, அதனால் எங்க அம்மா செய்யும் இந்த வேளையை இமை பிசக்காமல் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்து கொண்டு இருப்பேன்.

நம்ம எல்லோருக்கும் நாம் செய்யும் வேலையை பிறர் கவனித்தால் ஒரு தடிப்பு நம்மில் வந்து ஒட்டி கொள்ளுமே அது போல் கண்ணாடியை சாம்பலால் துடைக்கும் அந்த வேளையை, என் அம்மா ஏதோ அனு சக்தி ஓப்பந்தத்துக்கு கோப்பு ரெடி செய்வது போல் அந்த துடைக்கும் வேலையை செய்து கொண்டு இருப்பாள்.

இப்போதெல்லாம் லாந்தர் என்ற ஹரிக்கேன் விளக்குகளை ரஜினி,கமல் போல் அடிக்கடி பார்க்க முடிவதில்லை நடிகர் கார்த்திக்கை போல் எப்போதாவதுதான் கண்ணில் படுகின்றது.

ஆனால் அந்த விளக்கு வெளிச்சத்தில்தான் 50 பைசா அட்டை புத்தகத்தில்
அனா ஆவன்னா படித்தேன், தப்பாக எழுத்துக்களை படித்து, என் அம்மா மூஞ்சி ராட்சசியாக மாறி தலையிலும் தொடையிலும் கொலை வெறி தாக்குதல் நடத்தி தடுக்க முடியாமல் அழுது வீங்கிய கண்ணங்களுடன் வீட்டின் மூலையில் உட்கார்ந்து இருந்தது, இன்றும் என் நினைவின் ஈர அடுக்குகளில்.....


மழைகாலங்களில் அந்த லாந்தர் விளக்கு என் கூரை வீட்டின் நடு மையத்தில் உள்ள கொக்கியில் மாட்டி இருக்கும். அது காற்றில் அசையும் போதெல்லாம் எல்லா பொருட்களின் நிழல்களும் மாறுபாடு அடைந்து பக்கத்து சுவர்களில் தெரியும்.

அதுதெரியும் போது நீட்டி விழும் அந்த நிழல்களுக்கு எதாவது உருவங்களை உருவகப்படுத்தி நடு சாமம் வரை ரசிப்பேன்.

ஹரிக்கேன் விளக்கை தொட்டு பல வருடங்கள் ஓடி விட்டன இருப்பினும், அந்த மண்ணெண்னை வாசமும் அது சில நேரங்களில் பக் என்று பற்றிகொண்டதும் அலறி அடித்து அம்மாவின் தொடைகளை கட்டி கொண்டு பாதுகாப்பு தேடியதும்,விளக்கை சரி செய்து பயத்தை போக்க தலை முடி கோதி தூங்க வைத்ததை எப்படி மறப்பது.

ஹரிக்கேன் விளக்குக்கும் என் அம்மாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது இருவருமே பணி செய்துவிட்டு பலன் எதிர்பார்க்ககாதவர்கள்.

என் அம்மா மட்டும் அல்ல, இன்னும் நிறைய குடும்பங்களின் அம்மாக்கள் ஹரிக்கேன் விளக்குகளாய் வீழ்ந்தும்,
இன்னும் வாழ்ந்தும் வருகிறார்கள்.

தன் மேல் தினமும் படியும் கரும்புகை ஜுவாலைகளை மறைத்தபடி....


என் பழைய பதியப்பாடாத வாழ்கையை பதிவில் பதிய வைக்க உரிமையோடு தொடர் ஓட்டத்தில் சேர்த்த மங்களூர் சிவா என் நன்றிக்கு உரியவர்.

அதே போல் என் அம்மாவின் கோபத்தையும், என் அம்மாவின் பாலு ஜுவல்லர்ஸ் புன்னகையும், ரொம்ப நாட்களுக்கு பிறகு லாந்தர் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தை மனதில் உருவகப்படுத்தி, அதில் என் இறந்து போன என் இளைமைக்கால அம்மாமுகத்தை பொருத்தி யோசிக்க வைத்ததிற்க்கு என் கோடன கோடி நன்றிகள்.

நன்றி மங்களூர்சிவா..

அன்புடன் /ஜாக்கிசேகர்.

(பாகம்/14) அந்த தமிழ் படம் AGNINATCHATRAM

வாழ்வில் எவ்வளவோ படங்கள் பார்த்து இருக்கிறோம். ஆனால் எல்லா படங்களும் மனதில் நிற்பதில்லை. சின்ன வயதில் எனக்கு சிவாஜி படங்களை சுத்தமாக பிடிக்காது ஏனென்றால் அவர் எப்போதும் கண்ணீரும் கம்பலையுமாக இருப்பார், என் அம்மாவுக்கு சிவாஜி படங்கள்தான் பிடிக்கும். என் அம்மாவுக்கு சிவாஜி படம் பார்த்து புடவை தலைப்பில் மூக்கை சிந்த வில்லை என்றால் அன்றிரவு  அவருக்கு  தூக்கம் வராது.

என் பாட்டிக்கு கை தட்டி விசில் அடித்து குஜாலாக ஒரு படத்தை பார்க்க வேண்டும்... எம்ழிஆரிடம் நம்பியார் நாலு அடி வாங்கினால்தான் அன்னைக்கி ராத்திரிக்கு எங்க பாட்டிக்கு தூக்கம் வரும்.காரணம், என் பாட்டி நம்பியார் உதை வாங்கினால் என் தாத்தா உதை வாங்கியது போல் எண்ணி மகிழ்வாள். அவள் வாழ்க்கை அப்படி...



என் பாட்டிக்கு பரலோகத்தில் இடம் கிடைத்த உடன்.... படம் பார்க்க நானும் என் அம்மாவும் செல்லுவோம். ஒரு வகையில், நல்ல சினிமா பார்க்க கற்றுக்கொடுத்தது என் தாய் என்றால் அது மிகையில்லை.

முதல் மரியாதை படம் வந்த போது அந்த படத்தை என் அம்மாவும் என்சித்தியும் சிலாகித்து பேசி இருக்கிறார்கள்.அது எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும். அப்போது என் தானை தலைவன் நடிகர் ரஜினிதான். யாராவது ரஜினி பற்றி, அவர் படத்தை பற்றி, அவதூறாக பேசினால் அவ்வளவுதான் எதிராளி மூக்கு வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும். அந்த அளவுக்கு ரஜினி வெறி.... முதலில் எம்ஜியார் வெறி அப்புறம் ரஜினி.


1987ல் நாயகன் படம் வந்தது அந்த படம் என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த படம் கற்றது தமிழ் போல் ரொம்ப சோக மாக இருந்தது. அந்த வயதில் அந்த சோகத்தை தாங்கும் பக்குவம் என்னிடத்தில் இல்லை எனலாம்.

இன்று அந்த படத்தை கொண்டாடும் அளவுக்கு ,அந்த வயதில் அந்த படத்தை நான் கொண்டாட வில்லை. வாழ்க்கை அப்போது வறுமையை எனக்கு அறிமுகப்படுத்த வில்லை.

அடுத்த வருடம் அதாவது 1988ல் அந்த படம் ரிலிஸ் ஆகியது. அந்த படம் என்னை என் னுடைய 16ஆம் வயதில் வசீகரித்தது. அந்த படம் ஒருவெள்ளிக்கிழமை ரிலிஸ் ஆகியது . அந்த படம் கடலூரில் அப்போது ரமேஷ் இப்போது பாலாஜி என்றழைக்கபடும் தியேட்டரில் திரையிடப்பட்டது.

படத்தின் முதல் நாளே காலை காட்சியை என் அந்தை பையன் தாமோதரனும் சம்ட்டி என்பவரும் அந்த படத்தை பார்த்து விட்டு படம் ரொம்ப நல்ல இருக்கு அதுவும் சினிமா போட்டோகிராபி ரொம்ப நல்லா இருந்ததாக சொல்ல , கடலூர் கூத்தப்பாக்க கிராமத்தில் போட்டோகிராப்பி் நல்லா இருக்கு என்று முதல் டெக்னிக்கள் வார்த்தையை உபயோகப்படுத்தியது என் அத்தை மகன் தாமோதரன்தான் என்பேன்.

பொதுவான விஷயங்கள் அதிகம் கற்றுக்கொண்டது. என் அத்தைபையன் தாமோதரனிடம்தான். அவன் பார்த்து விட்டு போட்டோகிராப்பி படத்துல நல்லா இருக்கு என்று சொல்லிய பிறகு, நான் அந்த படத்தை பார்க்க வில்லை என்றால் என் பரம்பரைக்கே அவமானம் என்பதாலும், அந்த படத்தை நான் அடுத்த காட்சியான மதிய காட்சி பார்க்க தீர்மானித்தேன் . பையில் பரம்பைசா கிடையாது கடவுள் மனது வைக்க வேண்டும். கடவுள் மனது வைத்தார். கடவுள் என் அம்மா உருவில் என் பணத்தேவையை நிறைவேற்றினார்.

என் அம்மா அழைத்தார் அதுவும் எப்படி தனுசு ராஜா என்று , போய் கருப்பன் கடையில பத்துக்கிலோ அரிசி வாங்கி வாப்பா.. எங்கம்மாவுக்கு வேலை நடக்க வேண்டும் என்றால் ராஜா கூஜா என்றெல்லாம் என் பெயருடன் சேர்த்து என்னை வசியம் செய்வது உங்கள் எல்லோருக்கும் முன்பே தெரிந்து இருக்கும்.


ஒரு கிலோ அரிசி 5 ருபாய் பத்துக்கிலோ அரிசி 50 ரூபாய் அதற்க்கு மேல் என் அம்மாஒரு நையா பைசா கூட கொடுக்கமாட்டாள். பாவி மக 25 பைசா கொடுத்து தேன்மிட்டாய் வாங்கி சாப்பிட கூட கொடுக்கமாட்டாள். எனென்றால் ஒரே பையன் கெட்டுவிடுவேன் என்ற பயம்தான் காரணம்.

எனக்கு அப்போதுதான் சத்தியம் கம்ப்யூட்டர் ராஜூவை போல் என் மனம் வேலை செய்ய தொடங்கியது, நான் பத்துக்கிலோ அரிசிக்கு 9 கிலோ அரிசி வாங்கினேன் எனக்கு 5 ருபாய் கிடைத்தது. உலகில் எந்த அம்மாவாவது வாங்கிய அரிசியை அளந்து பார்க்க முடியுமா? கிராமத்து அம்மாக்கள் அந்த அளவுக்கு டேலன்ட் இல்லை. அதை விட பிள்ளை மேல் அவ்வளவு நம்பிக்கை.

நான் பரபரப்புட்ன் வேர்த்து விறு விறுக்க சைக்கிளில் தியேட்டர் சென்றேன் 2,50 டிக்கெட்வாங்கினேன். தியேட்டரில் படம் போடாததால் விசில் பறந்தது. அது நல்ல வெயில்காலம் சித்திரைமாதம்... . படத்தை போட்டார்கள் ஒரு சன்ரைஸ் காட்சி மேகத்தில் மறைந்து இருக்கும் சூரியன் மெல்ல மெல்ல வெயியே வந்து சுட்டு எரிக்கும் சூரியனாக மாறும் காட்சி. அதில்தான் படத்தின் டைட்டில் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர்கள் போடப்பட்டது.

சூரியன் மேகத்தில் மறைந்து இருக்கும் போது எந்த ஆடியோவும் இருக்காது.மெல்ல மெல்ல கதிர் பெரிதாக மாறும் போது நகரம் மெல்ல உறக்கம் கலைந்து எழுந்து பரபரப்பாக மாறுவதை மிக அற்புதமாக ஆடியோவில் வெயிப்படுததி இருப்பார்கள். முதலில் குருவி காக்கா போன்ற பறவைகள் சவுண்டும் பிறகு சைக்கிள் கார்ஹாரன் சவுண்டும் அதன் பிறகு டிராபிக்கில் ஏற்படும் வாகனத்தின் இரைச்சலும் அதன் பிறகு ரயில் விமானம் போன்ற சத்தங்கள் பெரிதாகும் பொது சூரியன் தன் உக்கிரத்தை நகர் முழுவதும் காட்டிக்கொண்டு இருப்பான்.


அந்த படம் ஆரம்பித்து 15 நிமிடத்தில் அந்த படத்தின் வித்யாசத்தை நான் உள்வாங்க ஆரம்பத்தேன். அந்த படம் வழக்கமான படங்க்ளில் வரும் கேரக்டர் போல் பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை. எல்லாம் இயல்பாக இருந்தது.

இன்டர் வீயுவில் தகராறு பண்ணிய மகனை அழைத்து ஆறுதல் சொல்கிறார் அடுத்த இன்டர்வியு நடக்கும் இடத்தை சொல்கிறார் அங்கு போய் ஒருவரை பார்க்க சொல்கிறார் அந்த இடத்தில்

நேற்று கிருஷ்ணனை பார்த்தேன், பிரேக்ஸ் இன்டியா பர்சனல் மேனஜர், அவங்க கம்பேனியில டிரெய்னிஸ் ரெக்ருமன்ட் எடுக்கறாங்களாம் உன்னை பத்தி அவுரு கிட்ட சொல்லி இருக்கேன் கம்பெனி பாடியில இருக்கு, உன்னை இன்னைக்கு 3 மணிக்கு வந்து பார்க்க சொன்னாரு, என்று சொல்ல வரேன் என்று கிளம்பும் மகனை அசோக் என அழைத்து அங்க கிருஷ்ணன்கிட்ட என் புள்ளன்னு சொல்லாத... அவுரு சுசீலா ரிலேஷனாம் அவுரு எங்கயாவது சொல்லி அது இங்க வந்து அன்னெசசரி காம்ளிகேஷன் பிராப்ளம் பாரு.... என்று ஒரு அப்பன் சொன்னால் எப்படி இருக்கும் ???

பெத்த தகப்பன் என்னை அப்பா என்று அடுத்தவனிடம் சொல்லாதே என்று சொல்லும் போது ஒரு பையனுக்கு எப்படி இருக்கும்.???

அதே போல் அப்பா சின்ன வீடு வைத்து இருப்பதால் தான் எல்லா இடத்திலும் அவமானப்படுவதால் பொருமும் பெரிய சம்சாரத்தின் மகன்.என்னை அப்பா என்று சொல்லாதே என்று அவமானப்படுததும் சின்ன சம்சாரத்தின் மகன் என்று இரு துருவங்களில் இருக்கும் வயதுக்கு வந்த மகன்களின் உணர்ச்சி போராட்டம்தான் அக்னி நட்சத்திரம் படத்தின் கதை.

ஒருவர் இரண்டு பொண்டாட்டி வைத்து இருப்பதால் ஏற்படும உறவு சிக்கல்களையும் உணர்ச்சி பிறவாகத்தையும் மிக அற்புதமாக அதன் அழகியல் மாறாமல் சொல்லி இருப்பார் இயக்குநர் மணி.

எழுத்தாளர் பலகுமாரனை போல் இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்துக் கொள்வது என்பது சாத்தியம் இல்லாத விஷயம். அது யாருக்காவது ஒருவருக்கும் கிடைக்கும் பாக்கியம். ரோட்டில் போகும் பெண்ணை பைக் ஓட்டும் போது திரும்பி பார்த்தாலே, போ அவ கூடவே போய் குடும்பம் நடத்து என்று முகம் திருப்பிக்கொள்வாள்.

அக்னி நட்சத்திரம் படத்தின் கதை இதுதான்.

இரண்டு பெண்டாட்டி வைத்து இருக்கும் விஸ்வநாதனுக்கு மூன்று பிள்ளைகள் முதல் தாரத்து மனைவிக்கு ஒரு பையனும் இரண்டாம் தாரத்து மனைவிக்கு ஒரு பையனும் ஒரு பெண் குழந்தையும் இருக்க... இரண்டு மனைவிகளின் ஆண் பிள்ளைகளும் அடித்துக்கொண்டு மங்கம்மாய்வதும்,விஸ்வநாதனுக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது அந்த இரண்டு பிள்ளைகளின் நிலைப்பாடு என்ன, அவர்கள் இருவருக்கும் ஏற்படும் காதல் என்று படத்தை படு சுவாரஸ்யமாக எடுத்து இருப்பார் இயக்குநர் மணிரத்னம்.

படத்தின் கேப்டன் மணி என்றாலும் அவரை தான்டி இரண்டு பேர் அப்போது கொண்டாட பட்டார்கள் அந்த இருவர் ஒன்று இசைஞானி இளையராஜா, மற்றவர் ஒளிப்பதிவாளர் பீசி ஸ்ரீராம்.



இந்த படம்தானா என்று கேட்கும் அத்தனை பதிவர்களுக்கும் ஒரு செய்தி. இந்த படம் வந்து 21 வருடங்கள் ஆகின்றன.அந்த படத்தை நீங்கள் ரசித்தவற்றிர்க்கும் நான் ரசித்த முறைக்கும் உள்ள வேறுபாடுங்கள், இந்த படம் அப்போது ஏற்படுத்திய தாக்கம் ரசனை போன்றவைகளை அலசுவதும் அதனால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை பார்த்தவர்களே அடுத்த முறை பார்க்க வைப்பதும் இதுவரை பார்க்காதவர்கள் இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும் என்பதே என் நோக்கம்

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

நான் முதன் முதலாக அப்பா சரக்கு சாப்பிடும் போது பக்கத்தில் பெண் உட்காந்து கொண்டு அப்பா இதுதான் கடைசி ரவுண்டு என்றுசொல்லி அப்பாவை தடுக்கும் காட்சியை நான் மிகவும் ரசித்தேன். இது தமிழ் சினிமாவுக்கு புதியது.

அதே போல் இருபது வருடங்களுக்கு முன்பு மேல்தட்டு வர்கத்தில் பெண்கள் சிகரெட் பிடிப்பதை காட்டி அக்கால கல்லூரி மாணவிகளின் குறும்புகளை காட்டி இருப்பார். ஆனால்  இப்போது நிரோஷா மாருதி காரில் ஐலவ்யூன்னு உதடு குவிச்சி  சொல்லிட்டு போன பாத்தியன் சாலையில் நம்ம எதிரேயே ஜீன்ஸ் டி சர்ட் போட்ட பொண்ணுங்க..... நல்லா நிதானிச்சு தம்கட்டுது. அது கட்டற கட்டுக்கு.... நமக்கு இருமல் வந்து தொலைக்குது.



அஞ்சலி என்ற பெயரை ஒரு எலி ரெண்டு எலி என்று சொல்லி அஞ்சலி என்று அழகாக சொல்லியது இந்த படத்தில்தான்.

பொதுவாக கேமராவுக்கு வெளிச்சம் வந்தால் அதனை கிளார் என்று சொல்லி அதனை பிளாக் கிளாத் அல்லது கட்டர் போட்டு கட் செய்து படம் காலம் காலமாக எடுத்தார்கள். அந்த கட்டுப்பாட்டை இந்த படத்தில் உடைத்து இருப்பார் பிசி.

இந்த படம் தமிழ் திரை உலகில் ஒளிப்திவில் பிரேக்த ரூல்ஸ் மூவி என்றால் அது நூத்துக்கு நூறு உண்மையே.

படத்துக்க பெயர் அக்னி நட்சத்திரம் என்பதால் படம் முழுவதும் ஒரு அனல் வீசுவது போலவே காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். மிக முக்கியமாக கார்த்திக் முதல் அறிமுக காட்சி, கார்த்திக் மைதானத்தில் விளையாடும் போதுஅவர் தங்கை வந்து அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்பதை சொல்லும் காட்சிகளில் கானல் நீர் பறக்கும்.

இந்த படத்தின்இளமை துள்ளல்தான் இந்த படத்தின் பெரும் வெற்றிக்கு அடிப்படை .


வசனங்களும் பக்கம் பக்கமாக இல்லாமல் ரத்தின சுருக்கமாக இருக்கும், உதாரனத்துக்கு உடம்பு சரியில்லாத கார்த்தி்கின் அம்மா ஜெயசுதா படுத்து இருக்க கணவர் விஜயகுமார் பணிவிடை செய்து கொண்டு இருப்பார் அப்போது வரும் கார்த்திக் விஜயகுமாரிடம் நன்றி சொல்லுவார்...

தேக்ஸ்

எதுக்கு?

அம்மாவை பார்த்துகிட்டதுக்கு...

உனக்கு அவ அம்மாவா இருக்கிறதுக்கு முன்னாடி அவ எனக்கு பொண்டாட்டி, நான் நல்ல அப்பாவா இல்லாம இருக்கலாம்... ஆனா நல்ல புருசன என்னால இருக்க முடியும் என்பார்.

மியுஸியம் எதிரே நண்பர்களோடு உட்கார்ந்து இருக்கும் கார்த்திக்கிடம் உதடு குவித்து நிரோஷா லவ்யு சொல்லி காரில் வேகம் எடுக்கும் போது கார்த்திக்கும் நண்பர்களும் பைக் எடுத்து பறக்கும் போது அந்த உணர்ச்சி நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

பிரபு உடற்பயிற்ச்சி செய்யும் போது உங்க அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டியாமே? என்று கேள்வி கேட்டு வாங்கி கொள்ளும் அமலாவிடம் காதலை சொல்லி அதற்க்கு அமலா எல்லா இடத்திலும் தானே முத்தம் கேட்கும் இடம் இளமை குறும்பு.


நிரோஷாவீட்டை கண்டுபிடித்து கார்த்திக் உள்ளே செல்ல பகவான் இளையராஜா பின்னனி இசையுடன் மஞ்சள் துணி போர்த்தியபடி வந்து அந்த ஒப்புக்கு உடலை சுற்றிய மஞ்சள் துணியையும் எடுத்து தூர கடாசி விட்டு பொலக் என்று தண்ணீரில் குதித்தபோது தளும்பியது தண்ணி மட்டும் இல்ல அந்த காலத்து ஜாக்கியோட அந்த சின்ன , பச்ச மனசும்தான்.

பூங்காவனம் பாடலில் நிச்சல் குளத்தில் இருந்து வெயியே வந்து அந்த குளத்தை சுற்றி வந்து டைவிங்போர்டில் நின்று ரெண்டு குதி குதித்து பொலக் என்று தண்ணிரில் குதிக்கும் போது அப்போதும் இந்த ஜாக்கியோட மனசு பிலாயிடுச்சுபா....


பைக்கில் வந்து ஹெல்மட் கழட்டி பத்து ரூபாய்க்குதான் இந்த அளட்டளா? என்று கேட்க ???அந்த பணணத்தை விசிறி போல் விரிக்க அதன் பிறகு வரும் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடல் வரும் போது அப்போது தியேட்டரில் நடந்த கொண்டட்த்துக்கு அளவே இல்லை. தீயேட்டரே சாமியாட்டம் போட்டது.


மைதானத்தில் கார்த்திக்வெயிலில் படுத்து இருக்கும் போது மூச்சு இரைக்க ஓடி வந்து புது ஏசி வந்து இருக்கிறார் பேரு கெளதம் விஸ்வநாத் என்ற சொல்ல புது ஏசிக்கு விஷ் பண்ணிட்டு வரலாம் என்று கார்த்திக்கும் நண்பர்களும் ஓடும் போது ராஜா போட்ட பின்னனி இசை இன்னும் உற்சாக துள்ளல்தான்.

வாரன்ட் இல்லாமல் அரஸ்ட் பண்ண முடியாது என்று கார்த்திக் பேச பிரபு காக்கி சட்டையில் விறைப்புடன் நடந்து வந்து கார்த்திக்கை அரஸ்ட் செய்யும் காட்சியில் ராஜா ராஜாதான்.

கார்த்திக் பிரபு இருவரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். பிரபு போலிஸ் விரைப்பை படம் முழுவதும் வெளிபடுத்தி இருப்பார்.

அதே போல் பிசி ராஜா ராஜாதி ராஜன் இந்த பாடலின் போது தண்டவாளத்தில் கார்த்திக் டான்ஸர் வரிசையாக நிற்க்க டாப் லைட் கொடுத்து ரிம் லைட் ஏபெக்ட் கொடுத்து இருப்பார். அதே போல் அந்த பாடலில் லோவ் ஆங்கிளில் ரயில் பெட்டியில் தாவும்காட்சியில் கடலூரில் உள்ள பாலாஜி தியேட்டரில்  விசில் பறந்தது என்றால் யோசித்து பாருங்கள்.

படம் முழுவதும் இரவில் வாகனங்கள் வரும் போகும் காட்சிகளை ஸ்டார் பில்லடர் போட்டு ஏடுத்து இருப்பார். படத்தில் அந்த கிளைமாக்ஸ் ஆஸ்பிட்டல் கரண்ட் சார்ட் சர்க்கியுட் ஆன சீன் மாத்திரம் படத்தின் திருஷ்ட்டி எனலாம்.


படத்தின் நெகிழ வைத்த காட்சிகளாக, ஜெயசுதாஸ்டேஷனில் ஜாமினில் கையெழுத்து போடும் இடம், ரயில் கார்த்திக் தங்கையை என் தங்கை எனறு பிரபு சொல்வதும்,சிரியசாக இருக்கும் அப்பாவுக்கு பிரசாதம் எடுத்து ஓடி வரும் பெண்ணை தடுக்கும் போலிசை அவள் எங்க பொண்ணுதான் என்றும் சொல்லும் காட்சிகளில் என் கண்களில் நீர்த்திவலைகள்.

முதலும் கடைசியாக இந்த படத்தில் வில்லனாக நடித்த ஆனந் தியேட்டர் ஓனர் உமாபதி தோபார் ராஜா எற்றுஆரம்பித்து வசனம் பேசும் அழகே அழகு. விஜயகுமார் காப்பற்றுவிட்டார் என்று தெரிந்து ஏப்படிடா என்று கர்ஜனையாக உறுமுவதில் ஆகட்டும், தீக்குச்சி கிழித்து கிட்டே வரும் கார்த்திக்கை உப் பென்று ஊதி கை சுட்ற போவுது கண்ணா போய் உங்கப்பன காப்பாத்து என்ற காட்சிகளில் அவருக்கு அப்போது பறந்த விசில் இன்னும் என் செவிகளில்.

என்ன ஒரு சோகம் கால மாற்றத்தில் நடந்தது என்றால் அனந்தியேட்டரும் அதன் நிர்வாகிஉமாபதியும் மண்னோடு மண்ணாகி போனார்கள் ஆனால் அவர்களின் நினைவுகள் என்றும் நம்மிடம்.

விகே ராமசாமியும் ஜனகராஜும் காமெடி பண்ணாலும் அது தனி டிராக் அதிலும் அந்த பி்எப் படம் பார்க்கும் போது ஏற்படும் குறிக்கீடுகள் காமெடி என்றாலும் அது எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த நிகழ்வுகள்தான்.

ரோஜா பூ வாடி வந்தது, நிண்ஷக்கோரி வரனும் ராஜாதி ராஜா போன்ற பாடல்கள் அந்த காலத்து பென்டசி வகை என்றாலும் வாவா அன்னே அன்பே, தூங்காத விழிகள் ரெண்டு பாடல்களுக்கு ரசிக கண்மணிகள் எல்லோரும் தியேட்டர் விட்டு வெளியே போய் ஒரு தம் போட்டு வந்து உட்கார்ந்தார்கள்


இன்றைய பிரபுதேவா அன்று முதன் முதலாக பாடலில் தலைகாட்டிய இந்த படத்தில்தான்.

நான் சினிமாவை வெறித்தனமாக காதலிக்க ஆரம்பித்தது இந்த படத்தில் இருந்துதான் அதே போல் படத்தை படமாக பார்க்காமல் டெக்னிக்கலாக படம் பார்க்க கற்று கொண்டதும் இந்த படத்தில்தான்.

ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், போன்றவர்கள் தமிழ்சினிமாவை வெறுதளத்துக்க எடுத்து சென்றார்கள் என்றால் கதை சொல்லும் விதத்திலும் வசன உச்சரிப்பி்லும், தொழில் நுட்பத்திலும்
மணிரத்னம் தமிழ் சினிமாவை உலகலாவிய அளவுக்கு எடுத்து சென்றார் என்பதால் மணி எப்போதும் என் நன்றிக்கு உரியவர்.


இந்த படம் தமிழக அரசின் சிறந்த படம் விருதை பெற்றது.

எனக்கு தெரிந்து நான் எழுதியதில் பெரிய பதிவும் இதுதான்.


அன்புடன் /ஜாக்கிசேகர்

தினகரன் செய்திதாளில் வந்தது போல்....

அவர் நேற்று எல்லா மனிதர்கள் போலவே அவருக்கும் தூக்கம் கலைந்து எழுந்தார். எழுந்தவுடன் நேராக யாருடைய உதவியும் இல்லாமல் நடந்து சென்றார், கண்ணாடியில் முகம் பார்த்தார் லேசாக கண்ணகள் சற்று வீங்கி இருந்தன.

தமிழ்நாட்டில் இருந்து இலங்கை பிரச்சனை, போர் நிறுத்தம் என்று ஏதாவது பிராது வந்தால் அதனை எப்படி எதிர் கொண்டு மசப்பலாம் என்று அவர் இரவு முழுக்க யோசித்தால்தான் அந்த கண்களில் வீக்கம்.


கண்களில் ஊலை கூட கொஞ்சம் தள்ளி இருந்தது. யாருடைய உதவியும் இல்லாமல் அவராகவே துடைத்து கொண்டார். தலையில் கட்டிய டர்பன் லேசாக கலைந்து இருந்தது.

பிறகு மனைவி கொடுத்த காபியை அவராகவே குடித்து விட்டு , காலை செய்திகனை எவர் துணையும் இன்றி அவராகவே படித்தார்,
நெஞ்சில் தீரம் உள்ள அவர் சற்றும் எதிர்பாராமல் பாத்ரூம் போய் எல்லாம் முடித்து அவராகவே கால் கழுவி கொண்டார்.
அவராகவே யோசித்தார் அன்று அவர் செய்ய வேண்டிய வேலைகளை நினைத்து பார்த்தார் ,

அப்புறம் யோசித்தார் யாரோ ஒரு அமெரிக்க நண்பர் ஓபாமா ரயிலில் போன விஷயத்தை போட்டுக்கொடுக்க இன்று தான் என்ன செய்வது என்று யோசித்தார்


பிறகு

தினகரன் நாளிதழில் வந்தது போல்அவர் ஆர்டிஓ அலுவலகத்துக்க நேரில் சென்றார்...


ங்கொய்யால நேர்ல ஆர்டிஓ ஆபிஸ் போனார்னா,இந்தனை வருஷம் மத்த வேலைகளை எல்லாம் எந்த கொய்யா பார்த்தது.

இபி பில் யார் கட்டியது,
பேங்கில பணம் யார் கட்டறது,
பாஸ்போர்ட் எடுக்க யார் போனது ,
அரிசி மளிகை காய்கறி எவன் வாங்கி வந்தது,
அவரென்ன தேவதூதரா?

இதையும் செய்தியாக்கும் இந்திய மீடியாக்கக்கு என் கண்டனம்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

இயக்குநர் சீமான் என்ற பரிதாப மனிதர்....


சில மாதங்களுக்கு முன்பு எல்லோருமே இலங்கை பிரச்சனைக்காக குரல் கொடுத்தார்கள். அதில் கொஞ்சம் ஓங்கி குரல் கொடுததவர் இயக்குநர் சீமான் என்பது அனைவரும் அறிந்ததே.

முதலில் அவர் இயக்குநர் அமீ்ரோடு கைது செய்யப்பட்டு விடுவிக்கபட்டார் அவர் விடுவிக்கப்பட்டதும் எல்லா இயக்குநர்களும் சிறைசாலை வாசல் சென்றுஅவர்களை வரவேற்று வேட்டு போட்டு கொண்டாடினர்.

திரும்பவும் இலங்கையில் பக்சே பிரதர்ஸ் அவர்கள் புத்தியை காட்டவும், சீமான் வெகுண்டு எழுந்து பேசினார் அவ்வளவுதான் உடனே இங்கு உண்மை தமிழச்சிகளுக்கு பிறந்த காங்கிரஸ்காரர்கள் கோபத்தின் உச்சிக்கு சென்றனர் விளைவு கலைஞரை போய் பார்த்து கண்ணை கசக்கினர் அவ்வளவுதான். படப்பிடிப்பில் இருந்த இயக்குநர் சீமான் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டார். அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது.


அது பற்றி எந்த அமைப்பும் கவலை கொண்டதாக தெரியவில்லை, அவர் அங்கதத்தினராக இருக்கும் இயக்குநர் சங்கம் வாய் மூடி மௌனம் காக்கிறது. பத்து மைக்குகளுக்கு முன் பேட்டி கொடுத்த பாரதிராஜா இப்போதுவரை ஏதும் பேசவில்லை. சீமான் அப்போதும் இப்போதும் ஒரே மாதிரிதான் பேசினார், ஆனால் அவர் மேல் உன்ன ஆதரவு நிலைப்பாடு மட்டும் மாறி விட்டது.

சீமான் பேசினார் அதுவும் உணர்ச்சி வசப்பட்டு, அனால் அதை விட வேகமாகவும் வீரியமாகவும் தொல் திருமா பேசினார். அவரை இதுவரை கைது செய்யவில்லை. இப்போது கைது செய்து விடுவோம் என எச்சரித்து இருக்கிறது தமிழக அரசு அதுகூட தடையை மீறி உண்ணாவிரதம் இருந்தார் என்பதே காரணமாக இருக்கும்.


இருவருமே ஈழத்தமிழர் ஆதரவாளர்கள்தான். ஏன் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணையும் என்றுதான் கேட்கிறேன்.

திருமாவை கைது செய்தால் 20 கடைகள் உடைக்கபடும் , 4அரசுபேருந்து தீக்கிரையாக்கப்படும்.

இயக்குநர் சீமானை கைது செய்தால் யார் கேட்பார்கள்.??

சட்டம் தன் கடமையை செய்யும் என்பது இதுதானோ???


அன்புடன்/ஜாக்கிசேகர்

இலங்கையில் (களை) பிடுங்க போகும் சிவசங்கர மேனனுக்கு வாழ்த்துக்கள்

எல்லாம் ஓய்ந்து போய் அனைத்து மக்களும் புலம் பெயர்ந்து முல்லை தீவுக்கு சென்று விட்ட நிலையில் இப்போது இலங்கையில் (களை) பிடுங்க போகும் செயலர் சிவசங்கர மேனனுக்கு வாழ்த்துக்கள்.

அவர் நேரே இலங்கை செல்லாமல் முதலில் டெல்லியில் இருந்து விமாம் முலம் சென்னை வந்து இங்கு, சென்னை டிராபிக் போலிஸிடம் அதுவும் ஸ்பொன்சர் அருகே டிராபிக் ஒழுங்கு படுத்தும் போலிஸிடம் கெஞ்சி கூத்தாடி ஸ்டாப் போர்டை வாங்கி கொண்டு அப்புறம்தான் இலங்கை செல்வதாக வெளியுறவுத்துறையின் நம்பதகுந்த வட்டாரங்கள் முலம் செய்திகள் கிடைத்த வண்ணம் உள்ளன.


இலங்கையில் போர் நிறுத்தம் என்று இந்தியா சொன்னால் இலங்கை மதிக்காது என்றும் அதனால் டிராபிக் போலிஸ் ஸ்டாப் போர்டு வாங்கி செல்வதாகவும் திரு மேனன் அறிவித்து இருக்கிறார்.


தமிழர் துயர் துடைப்பதற்க்காகதான் அவர் தன் பயணத்தல் மாறுதல் ஏற்படுத்தி சென்னையில் இறங்கி சென்னை டிராபிக் போலிஸிடம் ரவுண்டு தகரத்தில் சிவப்பு கலரில்ஸ்டாப் என்று எழுதி இருக்குமே அந்த போர்டை வாங்கி கொண்டு செல்கிறார் என்று நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் இந்த ஐடியா கொடுத்ததே உண்மை தமிழர்களான தமிழக காங்கிரஸ்காரர்கள்தானாம்...

வாழ்த்துக்கள் மேனன் உங்கள் பயனமும் உங்கள் சீரிய முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்


இனி இலங்கை தமிழர்கள் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம்.





நம் தமிழர்களை நினைத்து நொந்தபடியே....




அன்புடன்/ ஜாக்கிசேகர்

(ஏஆர் ரகுமான்) சென்னை வடபழனி சுப்புராய நகரும் கோல்டன் குளோப் விருதும்....





வடபழனியில் உள்ள சப்பராய நகரில் உள்ள ரகுமான் வீட்டில் வட இநதிய டைரக்டர்கள் தமிழகத்தில் வந்து தவம் கிடந்த நிலை மாறி வெகு சீக்கரத்தில் ஹாலிவுட் டைரக்டர்கள் படையெடுத்து ரகுமான் வீட்டை முற்றுக்கையிடும் வாய்ப்பு வெகு சீக்கிரத்தில் நடக்க இருக்கிறது.

இந்தி பாடல்களை கேட்டு பகுத் அச்சா சொல்லிய தமிழர்களையும் டிசம்பரில் ஒரு சாரர் மட்டும் இசை ஆலாபனையில் முழ்கி கிடந்த போது தமிழ் பாடல்கள் பக்கம் கவனத்தை கவர்ந்தவர் கவர வைத்தவர் இளையராஜா.

அதே போல் வட இந்தியர்கனை தன் இசை புலமையால் தன் வசப்டுத்தியவர் ஏஆர் ரகுமான் அது மட்டும் இல்லாமல் இந்திய அளவில் எண்ணற்ற தேசிய விருதுகள் மற்றும் பிலிம் பேர் விருதுகள் பெற்றலும் கடல் கடந்து கொடுக்கப்படும் கோல்டன் குளோப் பெற்ற முதல் இந்தியர்,முதல் தமிழர் ஏஆர் ரகுமான்தான்.


கடந்த 29/12/2008 (ஒரு வாரத்துக்கு முன்பு) பதிவில் ஏஆர் ரகுமானுக்கு உலக அளவில் புகழ் கிடைக்க போகிறது என்று பிளாக்கில் எழுதி இருந்தேன் அது இவ்வளவு சீக்கரம் நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இறைவனுக்கு நன்றி.


ஏஆர் ரகுமான் தலைகனம் இல்லாமல் கடுமையாக உழைத்தால் பலன்கள் பக்கத்தில் வந்து சேரும் என்பதற்க்கு ஏஆர் ரகுமான் வாழும் உதாரணம். படத்தின் கதை மற்றும் சிறப்பு அம்சங்கள் தெரிய கீழே படித்து பார்க்கவும்

பாய் வாழ்த்துக்கள்


அந்த பதிவை கிழே கொடுத்து இருக்கிறேன் படித்து பார்க்கவும்

...................................................................................................................................................................................

(slum dog millionaire)மீண்டும உலக அளவில் இசைபுயல் ஏ.ஆர் ரகுமானுக்கு புகழ் சேரப்போகறது..(பாகம் /12.)





விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வின் சுக துக்கங்களை என் அளவுக்கு யாருக்கும் தெரியவாய்பில்லை. எனென்றில் அந்த வாழ்க்கை முறை எனக்கு அத்துப்படி.

மெரினா பீச்சில் காந்தி சிலை பின்புறத்தில் உள்ள ஹோட்டலில் நான் வேலை செய்யும் போது எனக்கு வார சம்பளம் பதினைந்து ரூபாய் அந்த சம்பளம் 1994 ஆண்டுகளில் தகிடித்தத்தம் போட்டுக்கொண்டு இப்போதைய கலைஞர் ஆட்சி போல் இழுபறி வாழ்க்கை வாழ்ந்த கால கட்டம் அது...

நல்ல சாப்பாடு சாப்பிட காசு இருக்காது, திருடவும் பொய் சொல்லவும் என் அம்மா எனக்கு கத்து தரவில்லை,

சின்ன வயதிலேயே நல்லொழுக்க புத்தகங்கள் என் பள்ளி அருகில் இருந்த லைப்ரரியில் படித்ததால் எனக்கு பொய் சொல்லவும், திருடவும் எனக்கு கை வரவில்லை என்பதே நிதர்சன உண்மையும் கூட....


முதன் முதலில் ஆம்னி வேனில் வந்த குடிகார இளைஞர்களுக்கு கோக் பாட்டில் ஓப்பன் பண்ணி கொடுத்த போது எனக்கு டிப்சாக 50 பைசா கிடைத்தது. இப்போது கூட 50 பைசா நாணயம் பார்க்கும் போது அந்த இளைஞர்களின் முகம் இன்றும் என்நினைவு அடுக்குகளில்...

மெரினா பீச்சில் காந்தி சிலை அருகே மூன்று மாதங்கள் பாராசக்தி சிவாஜி போல் எம்டி பாக்கெட்டில் சுற்றி இருக்கிறேன். மெரினா பீச்சின் கட்டண கழிவரையும் அவசரத்துக்கு அண்ணா சமாதி பின்புறமாக எத்தனையோ பொழுதுகள் என் காலை கடன்களை கழித்து இருக்கிறேன்.

மெரினாவில் விடியற்காலையில், நேற்று செத்து போன அப்பா, அம்மா,பிள்ளை, தகப்பன், தாத்தா என்று பலதரப்பட்ட வயதினரின் சாம்பல் அஸ்த்தியாக ஒரு சிறு பானையில் துணி மூடியபடி இருக்கும்..

இறுதியாத்திரையாக அந்த சாம்பல் நடுக்கடலில் கலக்க வேண்டும். நொச்சிக்குப்ப சிறுவர்கள் அந்த சாம்பலை கடலில் கரைத்து விட்டு ரூபாய் 100ம்50ம் துக்கப்பட்டு கண்ணீர் விட்டு கதறும் உறவுகளிடம் வாங்கி கொண்டு ஓடுவார்கள்.

என்னால் அப்படி வாங்க இயலாமல் இலவசமாக கரைத்து இருக்கிறேன் வற்புறித்தி கொடுத்த பணத்தை வாங்க மறுத்த போது என்னை வித்யாசமாக பார்த்து சென்றவர்கள் ஏராளம்.

அதே போல் காலையில் ஒரு சாக்கு எடுத்து கிளம்பினால்,
லஞ்சம் வாங்கியும்,பிறரை ஏமாற்றியும் சொத்து சேர்த்த பணம் எல்லாம் அவர்கள் பிள்ளைகள் மூலமாக கடற்கரை பூங்கா புதர்களில் பீர் பாட்டில்களாக கிடக்கும்.

எப்படியும் காலை ஏழுமணிக்குள் 30 பீர் பாட்டில்களை அந்த மூன்று கிலோ மீட்டர் கடற்க்கரையில் எடுத்து விடலாம். ஒரு பீர் பாட்டில் விலை 1.50 பைசா 30 பீர்பாட்டில் விலை 45ரூபாய்.
மதியத்துக்கு நல்ல லெக் பீஸ் பிரியானி 20 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கு குஸ்க்காவும் சாப்பிட்டு ஒரு ஏப்பம் அடிவயத்ததுல இருந்து வரும் போது ஒரு நிறைவு இருக்கும் பாருங்க அது மிகப்பெரிய சொகம்.


அப்பன்காசுல சாப்பிட்டு பீர் குடிக்கறவனால இதை உணர முடியாது... அடுத்த வேலை சோத்துக்க என்ன வழி , அடுத்த வேளைக்கு ஒரு கவளம் சோறு எங்க கிடைக்கும்னு புத்தி நாயாய் அலைஞ்சு அந்த சோத்துக்கு வழி கிடைக்கறப்ப நான் சொன்ன அந்த சொகம் உங்களுக்கு புரியும்.

எனக்கு இந்த சம்பவங்கள் எல்லாம் என் இருபதாம் வயதில் நடந்த நிகழ்வுகள் எனக்கு சற்றே யோசிக்கும் பக்குவம் இருந்தது அதனால் அயோத்திக்குப்ப தாதாக்ள் என்னை கஞ்சா விற்க்க என் வறுமையை அடகு கேட்ட போது நான் மறுத்து விட்டேன் .

அதனால் இப்போது உங்கள் முன் பிளாக் எழுதிக்கொண்டு இருக்கிறேன் , அந்த சுய புத்தி மட்டும் அப்போது இல்லை என்றால் இந்தநேரம் ஏதாவது என்கவுன்டரிலேயோ அல்லது பாளையங்கோட்டை சிறையில் பாம்பு பல்லிகளுக்கு நடுவில் சொந்தங்களை மனு போட்டு பார்த்ததக்கொண்டு இருப்பேன்.


ஆனால் அப்பா அம்மா இல்லாத அனாதை சிறுவர்களின் நிலையை சற்றே யோசித்து பாருங்கள். கையில் குழந்தையுடன் சிக்னல் அருகே கையேந்தி இருக்கும் அந்த சிறுமியின் பின்புலம் என்ன?

அவள் எங்கு துங்குவாள் என்ன சாப்பிடுவாள்? போன்ற வற்றை பற்றி நாம் என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறோமா?

சிக்னலில் பைக்கில் நிற்க்கும் போது“ திருப்பதி மலை வாழும் வெங்கடேசா” என்று கட்டை குரலில் பாடல் பாடி இரண்டு கண்ணும் இல்லாத பிச்சை எடுக்கும் பையனின் கண் இழந்த கதை உங்களில் யாருக்காவது தெரியுமா?


அப்படி அந்த விளிம்பு நிலை சிறுவர்களின் வாழ்க்கை பற்றி அறிய கீழே நான் சொல்ல போகும் படத்தினை பாருங்கள். மும்பையின் இருட்டு பக்கத்தை செருப்பால் அடித்து சொல்லி இருக்கிறார்கள்.

நாம் சந்திரனுக்கு விண்வெளி அனுப்பவதால் மட்டுமே நம் இந்தியா வளரவில்லை , அதே போல் இந்திய ஜனாதிபதியாக ஒரு பெண் இருப்பதால் மட்டுமே நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பான வாழ்வை வாழ்கிறார்கள் என்பதில் அர்த்தம் இல்லை என்பதை மிக அற்புதமாக எந்த வித காம்பரமைசும் பண்ணாமல் படம் எடுத்து இருக்கிறார்கள்.




அண்ணண் தம்பி இருவர், கல்விஅறிவு இல்லாதஅவர்களை எப்படி மும்பை நிழல் உலகமும் சேரி வாழ்க்கையும் அவர்கள் இருவருக்கும் என்ன கொடுக்கிறது.

அவர்கள் இருவரும் வளர்ந்த பிறகு இந்த நாகரீக சமுக சூழலில் அவர்களாக எந்த வழியை தேர்ந்து எடுத்தார்கள் என்பதே(slumdog millionaire) படத்தின் கதை.

இன்னும் இந்தியாவில் வெளிவராத இந்த படம் உலகம் எங்கும் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது , இந்த படத்துக்கு இசை ஏஆர் ரகுமான். இந்த படம் சர்வதேச அளவில் பல அவார்டுகளை அள்ளி குவித்து வருகிறது.



slum dog millionaire படத்தின் கதை இதுதான்.....

சலீம் ஜமால் இருவரும் மும்பை குடிசை பகுதியில் வசித்து வரும் சிறுவர்கள் அப்பா இல்லாத இவர்களை அம்மா வளர்த்து வருகிறாள் இந்துகளுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்த கலவரத்தில் இந்துக்களால் அவள் அம்மா அநியாயமாக சாகடிக்கப்படுகிறாள். இருசிறுவர்களும் அனாதை ஆக்கப்டுகிறார்கள்.


அவர்களுக்க லத்திகா என்ற சிறுமியின் நட்பு கிடைக்கிறது. மூவரும் தன் பருவ வயதுவரை அவர்கள் எப்படி அலைகழிக்க படுகிறார்கள். அவர்கள் பருவயதை கடந்ததும் அவர்கள் என்ன ஆகிறார்கள்.

ஜாமல் லத்திகாவை காதலிக்கிறான் அந்த காதல் நிறைவேறுகிறதா?ஜமால் இரண்டு கோடிக்கு அதிபதி ஆக போட்டி போடுகிறான் , அது எப்படி நிகழ்கிறது அவன் அந்த போட்டியில் எப்படி கலந்து கொள்கிறான். அவன் அந்த போட்டியில் கலந்து ஜெயிக்கிறானா? என்பதை வலியுடனும் வேதனையுடனும் சொல்லி இருக்கிறார்கள்...


படத்தி்னை அறிமுகப்டுத்தவது மட்டுமே எனது நோக்கம். விம்ர்சனம் என்ற போர்வையில் முழு படத்தின் கதையையும் ஆகா ஓகோ என்று புகழ நான் கேனை இல்லை...


ஐஸ்வர்யா ராய் அழகு என்றால் நான் என்னதான் அந்த பெண் ஆகா ஓஹோ அழகு என்றாலும் உங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை. அந்த பெண்ணுடன் படுத்து எழுந்தால் ஒழிய அந்த அழகை எவ்வளவு விளக்கினாலும் புரிய போவதில்லை...
அதனால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


படத்தை பற்றிய சுவாரஸ்சிய தகவல்கள்....

சலாம் பாம்பே படத்துக்க பிறகு இந்த படம் விளிம்பு நிலை சிறுவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் அவர்கள் இருண்ட பக்கங்களையும் இந்த படம் மிக அழகாக பதிவு செய்கிறது.


இதன் இயக்குநர் டென்னி பாயில் டைட்டானிக் ஹீரோ நடித்த த பீச் படத்தை எடுத்தவர் சமீபத்தில் இவர் எடுத்த படம் “28 வீகஸ் லேட்டர்”


இந்த படம் இந்திய எழுத்தாளரின் கதையை மையப்படுத்தி எடுத்து இருக்கிறார்கள். கேள்வி பதில் என்ற புத்தகத்தின் திரை வடிவம்தான் இந்த படம்

அமிதாப்பச்சன் வருகிறார் என்றதும் மாலிக் மலக்குழிக்குள் விழுந்து அமிதாப்பச்சனை பார்க்க ஒடுவதும், அவர் ஆட்டோகிராப் போட்ட படத்தை அவன் அண்ணன் சலீம் வேறு ஒருவனுக்கு விற்று காசு பார்பதிலேயே அந்த கேரக்டர் பற்றி தெள்ள தெளிவாக இயக்குநர் விளக்கி இருப்பது சுகம்.

இந்த படத்துக்கு அரசு விதிவிலக்கு அளித்தால் நலம்.



இந்த இயக்குநரின் இந்திய தேடல் ஒவ்வோரு காட்சியிலும் காண முடிகிறது

தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு வரி விலக்கு கிடைக்காது. ஏனெனில் இந்த படத்திற்க்கு தமிழில் பெயர் வைக்க வில்லை.
இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் அனில்கப்பூர் நடித்து இருக்கிறார்



இந்த படம் ஒரு அற்புதமான காதல் கதை வரையரையிலும் இடம் பெறும்

படத்தின் பலம் ஒளி மற்றும் ஒலி பதிவுகள்தான்
மிரட்டி இருக்கிறார்கள் அதிலும் நம்ம பாய் ஏ ஆர் ரகுமான் பின்னனி இசையில் மிரட்டி எடுத்து இருக்கிறார்.

அதிலும் அந்த சிறுவர்களை அறிமுகப்படுத்தும் காட்சியில் அவர்கள் ஓடும் போது பின் புலத்தில் ரகுமான் குரல் வரும் இடத்தில் ஓ போடவைக்கும் இடம்

படத்தின் முடிவில்தான் படத்தின் பங்கேற்றவர் விவரம் உங்களுக்கு தெரிய வரும் அதுவரை படத்தின் பெயர் கூட உங்களுக்கு தெரியாது.


படத்தின் முடிவில் எழுத்து போடும போது மட்டும ஒரு பாடலை இனைத்து இருக்கிறார்கள்..


மும்பை சிறுவர்களின் இருண்ட பக்கங்களை எந்த செட்டும் இல்லாது அதன் நேர்பகுதிகளில் படபிடிப்பை எடுத்து இருப்பது.படத்துக்கு பெரிய பலம்.

படத்தை சாலாம் பாம்பே போல் எடுத்து இருந்து இருந்தால், இந்த படத்திற்க்கு வர்த்தக அளவில் இத்தனை பெரிய வெற்றி கிடைத்து இருக்காது.


எல்லா இந்தியர்களும் அதுவும் மேட்டுக்குடி இந்தியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அடுத்த முறை சிக்னலில் பிச்சை எடுக்கும் பிள்ளைகளை எளனமாக பார்க்காமல் இருக்க இந்த படம் வழி வகுக்கும் என்பேன்...


ரகுமான் பாய்க்கு இந்த படம் மேலும் ஒரு மணிமகுடம். இந்த படம் அவரிடம் இருக்கும் எண்ணற்ற மயில் இறகுகளில் ஒரு அற்புதமான சிறகு கிரீடம் ஆகும்

ஓளிப்பதிவாளர், ரகுமான் பாய், இயக்குநர்,மற்றும் அந்த படத்தில் நடித்த சிறுவர்களுக்கு எனது ராயல் சல்யுட்...

இந்திய இயக்குநர்களிடமும் இந்த மாதிரி படங்களை எதிர்பார்க்கிறேன்



14 வருடங்களுக்கு பிறகு இன்று என் கடந்த காலமெரினா பீச்சின் நினைவுகளை அசை போட வைத்தது இந்த படம்
Genres: Art/Foreign, Comedy, Drama, Adaptation and Teen
Running Time: 2 hrs.
Release Date: November 12th, 2008 (limited)
MPAA Rating: R for some violence, disturbing images and language.
Distributors:
Fox Searchlight Pictures
U.S. Box Office: $12,037,510



அன்புடன்/ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner