சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் .புதன்.(24/07/2013)

 ஆல்பம்.

 2014 ஆம் ஆண்டு
ஆதாவது  அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயிலை கோயம்பேட்டில் இருந்து கிண்டி வரை ஓட வைத்து விடுவோம் என்று  சொல்லி கங்கனம் கட்டிக்கொண்டு மும்முரமாக வேலைகள் நடந்து கொண்டு  இருக்கின்றது.. 

இந்த மெட்ரோ ரயிலின் முக்கிய சந்திப்பாக கிண்டி ரயில் நிலையம் அதாவது ஜோதி தியேட்டர் எதிரில் இருக்கும் ரயில் நிலையம் எதிர்காலத்தில்   பரபரப்பாய் செயல்படும் என்பதை கணிக்க முடிகின்றது.....  கோயம் பேட்டில் இருந்து வரும் ரயிலும், பாரிசில்  இருந்து வரும் ரயிலும் இந்த ஸ்டேஷனின் முதல் தளம் இரண்டாம் தளத்தில் பயணிக்க இருக்கின்றன... அதனால்தான்  ஜோதி  தியேட்டர் எதிரே பிரமாண்ட ஸ்டேஷன் கட்டிடம் தயாராகிக்கொண்டு வருகின்றது.  கச கச வென முக்கிய சந்திப்பாக இந்த இடம் மாறப்போகின்றது என்பது மட்டும் நன்கு புரிகின்றது.
====

பீகாரில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் 23 பேர் மரணமடைந்து இருக்கின்றார்கள்.. புழு பூத்த அரிசியில் சாப்பாடு செய்து போட்டார்கள்..  சாம்பாரில்  புழு மிதந்து செத்து  போய் மிதந்துக்கொண்டு இருக்கும் புழுவை மட்டும் வழித்து எடுத்து  போட்டு விட்டு சாப்பாடு போடுவதை என் கண்ணால் பார்த்து இருக்கின்றேன்... ஆனால் இன்று பூச்சிக்கொல்லி கேனில் எண்ணெய் ஊற்றி சமைத்து இருக்கின்றார்கள் என்று  செய்திகள் வருகின்றது.. அவ்வளவு அலட்சியம்... மத்தவன் வீட்டு புள்ளைங்க அதுவும் தலைகாஞ்சவன் புள்ளைங்கன்னா உங்களுக்கு கிள்ளுக்கீரையா?  இப்போது எதிர்கட்சிகளின் சதி என்று ஒரு குண்டை  தூக்கி போட்டு விட்டார்கள்...இப்போது அந்த  மரணத்தை  வைத்து அரசியல் ஆதாயம் தேட அரசியல்வாதிகள் புறப்பட்டு விட்டார்கள்... நம்ம நாடு விளங்கிடும்.

================
மெட்ரோ ரயில் பாலங்கள் கோயம் பேட்டில் இருந்து  கிண்டி வரை  அனகோன்டா அல்லது சைனாவின் டிராகன் பாம்பு போல வளைந்து  நெளிந்து மிக அழகாக  செல்கின்றது..  சாலைக்கு நடுவில் செல்லும்  மெட்ரோ ரயில் பாலத்துக்கு கீழே இருச்க்கர வாகனத்தில் பயணித்த வாகன ஒட்டிகள்.. மே மாத வெயில் காலத்தில்   இதன் நிழலில் பயணித்தார்கள்..
 தற்போது மழை பெய்யும் போதும் இதன் அடியில்  மழைக்கு நனையாமல்  ஒதுங்கிதப்பித்து  வருகின்றார்கள்.
===============
மிக்சர்.

முல்லை பெரியாறு பிரச்சனை  இறுதி விசாரனை சுப்ரீம்  கோர்ட்டில் தற்போது நடந்து கொண்டு இருக்கின்றது. ஆனந் கமிட்டி அளித்த தரவுகளை  அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கின்றது கோர்ட்..... திரும்ப ஒரு பெரிய  பிரச்சனை உருவாகாமல் இருந்தால் சரி.

=========
ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்காத தமிழக அரசுக்கும் மெத்தனத்துக்கும்  பத்தாயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம்  உத்தரவு போட்டு இருக்கின்றது...  மக்களின் வாழ்வாதார பிரச்சனையை சரி  செய்வதை காட்டிலும் அப்படி என்ன வேலை  அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இருக்கின்றது என்று புரியவில்லை...கொடநாட்டில் பத்து அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரம் விவாதித்தாலே பிரச்சனைக்கு தீர்வு  எட்டி இருக்க முடியுமே? ஓ .... முதல்வர் ஓய்வில் இருக்கின்றார் அல்லவா?...இதுக்கு கடந்த ஆட்சியில் முதல்வர்   சென்னையில்  பாராட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டதால் காடு கழினி எல்லாம் கெட்டு விட்டதாக ஊடகங்கள் அலறின... ஆனால்  இப்போது வாய் மூடி மவுனிக்கின்றார்கள்....உண்மைதான் இது மக்களுக்கான அரசுதான்.யாம்பா யாராவது பத்தாயிரம் அபராதம் விதித்ததை  அம்மாவிடம் சொன்னீர்களா? அல்லது..  இது ஒரு தொகையா என்று பணத்தை கட்டி விட்டீர்களா?...

=================
புகைப்பட போட்டியில் கலந்து கொண்ட எனக்கு தொடர்ந்து  எனக்காக நேரம் ஒதுக்கி ஓட்டு அளிக்கும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.. ஓட்டு போடாதவர்கள்.. ஒரு முறை இந்த பதிவை படித்து பார்த்து விட்டு ஓட்டு போடவும். பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்.


===============
பேஸ்புக்கில்  நான்  பகிர்ந்தவை.
==============
இறந்து போனவன் கெட்டவனாகவே இருந்தாலும்அவன் செய்த நல்ல விஷயங்களை மட்டுமே அன்று முழுவதும் பேசிகாடுவரை அவனை அழைத்து சென்று எரியூட்டி விட்டு வருவது நம் தமிழர் மரபு.

வாலி பொறுப்புள்ள சமூக கவிஞனாக திகழவில்லை – என்று அவர் இறந்த வேளையில் ஜல்லி அடிப்பதெல்லாம் சமுகத்தின் மீதான காதல் அல்ல...

வாலி ஒரு பாட்டுக்கு 50 ஆயிரம் வாங்குகின்றாரே... அப்படி நம்மால் இன்றுவரை சம்பாதிக்க முடியவில்லையே என்று வன்மம் மட்டும் தான் காரணமாக இருக்க முடியும்.

==================

ரொம்ப நாள் கழித்து குமுதம் வாங்கினேன். பத்து ருபாய் கொடுத்தேன் 12 ரூபாய் என்றார் கடைக்காரர். எப்போது 12 ஆனது என்று தெரியவில்லை.. அப்படியே பிளாஷ் பேக்கினேன்.

வெள்ளிக்கிழமையான அப்பா தவறாம குமுதம் வாங்கிட்டு வருவார்... நைட்டு பத்து மணிக்கு வேலையை விட்டு வீட்டுக்கு வந்துட்டுபோட்டு இருந்த சட்டையை அவிழ்த்துட்டு கை வச்ச முன்டா பனியன் உள்ளே மார்பு பக்கத்தில் இருந்து அப்பாவிள் வியர்வையில் குளித்து முடித்த புத்தம் புதிய குமுதம் புத்தகத்தை எடுத்து போடுவார்.. அப்பா வியர்வை வாசத்தோடு நைட்டு ஆறு வித்தியாசங்கள் பார்த்து கண்டு பிடிச்சிட்டுதான் தூங்குவேன்...

ஒரு பக்க கதை,லைட்ஸ் ஆன் சுனில் போன்றவை சின்ன வயசுல அதிகம் நான் விரும்பியவை... ஒரு ரூபாய் குமுதம் ஒரு ருபாய் பத்து காசு ஆயிற்று ...அப்பா வாங்கி வந்தார்...

ஒன்னேகால் ரூபாய் ஆனாது அப்பா குமுதம் வாங்குவதை நிறுத்தி விட்டார்.... அம்மாதான் பொழுது போக்கிற்கு அதை வாசிப்பார்.. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்... ஏம்மா அப்பா குமுதம் வாங்கி வரலைன்னு கேட்டாஅந்த காசு இருந்தா ஏதாவது மளிகை செலவுக்கு உதவும் என்றார் அம்மா....

சமீபத்தில் 120 ரூபாய் டிக்கெட் எடுத்து 3டி கண்ணாடிக்கு 20 ரூபாய் கொடுத்து,20 ரூபாய் பைக் பார்க் பண்ணி விட்டு 160ரூபாய் செலவு பண்ணி மேன் ஆன் ஸ்டீல் திரைப்படம் பார்க்க சத்தியம் தியேட்டர் சென்றேன்....

தியேட்டர் உள்ளே போகையில் லாபியில் ஒருவர் குமுதம் புத்தகம் வைத்து படித்துக்கொண்டு இருந்தார். ஒன்னேகால் ரூபாய் இருந்தா மளிகை செலவுக்கு உதவும் என்று என்னை தலை கோதி சமாதானப்படுத்திய அம்மாவின் குரல் என் காது அருகே சன்னமாக கேட்டது...120 ரூபாய் டிக்கெட்டை எடுத்து அனிச்சையாக பார்த்துக்கொண்டேன்.

எக்மோருக்கு என் மனைவிக்கும் ஏழாம் பொருத்தம்... அலுவலகம் வேறு  கிண்டியில் இருந்து எக்மோருக்கு இடம் பெயர்ந்து விட்டது. எக்மோரில் சில மாதங்களுக்கு முன் ஆட்டோவில் சர்ட்டிபிகேட்டை தவறவிட்டு விட்டேன் என்று சொல்லி எனக்கு கிலி ஏற்படுத்தினார்...  கடைசியில் அடித்து பிடித்து கண்டு பிடித்து விட்டோம்..

நேற்று ஆட்டோவில் சாப்பாட்டு பேகை விட்டு விட்டு அலுவலகம் சென்று விட்டார்.. எல்லோரும் கிடைக்காது இந்த நகரத்தில் எங்கே போய்  தேடுவது என்று அட்வைஸ் செய்து இருக்கின்றார்கள்... ஒரு முயற்சியை செய்து வைப்போம்  என்று ஆட்டோ ஸ்டான்டில் காலையில் போய் கேட்டு இருக்கின்றார்..   அங்கே இருந்த ஆட்டோ டிரைவர்கள்  இல்லை என்று சொல்லி விட்டார்கள்.. 

இருந்தாலும் மாலையில் போய் கேட்கும் போது... ஒரு ஆட்டோ டிரைவர்...  மேடம் உங்க பேக் நாளைக்கு காலையில் பத்து மணிக்கு கிடைச்சிடும்.. ஆனா அதில் இருந்த சாப்பாடு  டிபன், லஞ்சு ரெண்டையும் சாப்பிட்டுவிட்டோம்...என் பிரண்டு வண்டியில தான்  உங்க லஞ்சு  பேகை மிஸ் பண்ணி இருக்கிங்க.... இப்ப அவன் சவாரி போய் இருக்கான்... நாளைக்கு காலையில் பத்து மணிக்கு  உங்க ஆபிஸ்ல எடுத்து வந்து கொடுத்திடறோம் என்று நேற்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்...

லஞ்சு பேக் மற்றும் டப்பர்வேர்கள் மதிப்பு  எல்லாம் சேர்த்து ஆயிரம் ரூபாய் மொய் வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.. திரும்ப கிடைத்துவிடும் என்பதில்  எனக்கு மகிழ்ச்சி..

இன்று காலை பத்து மணிக்கு  எனக்கு போன்  வந்தது..  

என்னங்க சொன்னா மாதிரி அந்த  ஆட்டோ டிரைவர் பேக் திரும்ப எடுத்து வந்து கொடுத்துட்டார்...

இப்ப  சந்தோஷமா?

ரொம்ப சந்தோஷமா இருக்கேங்க... அந்த ஆட்டோ டிரைவர் சொன்னார்... மேடம் உங்க சமையல் பிரமாதம்ன்னு சொல்லிட்டு போனாருங்க 

24 மணி நேரத்தில் செஞ்சோற்று கடன் தீர்த்த அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு நன்றி.


================


 உங்கள் பிள்ளைகளை உங்கள் வீட்டு வேலைக்காரியிடம் கொடுத்து பார்த்துக்கொள்ள சொல்லி இருக்கின்றீர்களா? குழந்தையின் தாயான நீங்கள் வேலைக்காரியிடம் இருந்து குழந்தையை வாங்கும் போது, தொடர்ந்து குழந்தை உங்களிடம் வருவதற்கு அழுதால், அந்த வேலைக்கார பெண் குழந்தையை அழுத்தமாக கிள்ளி அழ வைக்க வாய்ப்பு இருக்கின்றது...

என்னிடம் இருந்து குழந்தை உங்களிடம் வரவில்லை அவ்வளவு பாசம் என் மீது என்று உங்களை மகிழ்விக்க , நம்பவைக்க ,இப்படி குழந்தையை கிள்ளி விடுவார்களாம்... நேற்று இங்கிலாந்து திரைப்படம் The King's Speech பார்த்தேன். இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ் அரசரை பார்த்துக்கொண்ட தாதி இப்படித்தான் கிள்ளி விட்டு விடுவாளாம்....

இதை கண்டு பிடிக்க மூன்று வருடம் ஐந்தாம் ஜார்ஜ் அரசருக்கு ஆனாதாம்... எல்லா வேலைக்காரிகளும், தாதிகளும் அப்படி இல்லை... இருந்தாலும் இந்த செய்தியை நீங்கள் காதில் வாங்கி கொள்வது நல்லது என்று படுகின்றது.


================



நடுத்தரமான தொப்பையோடு பாக்சர் ஷார்ட்ஸ் போட்டு பக்கத்துவீட்டு அக்கத்து வீட்டு வாசிகளை பீதி கிளப்ப வைத்தாகி விட்டது... சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனை கைலியில் பார்த்ததில் இருந்து எனக்கு திரும்பவம் கைலி கட்ட  வேண்டும் என்று எண்ணம் மேலோங்கி வருகின்றது...அதே வேளையில்,  தொலைகாட்சியில் நண்டு மார்க் கைலி விளம்பரங்களில், கைலி கட்டி நடந்து வரும் பெண்களை பார்த்ததில் இருந்து கைலி கட்ட வேண்டுமா -? என்று  யோசனையாக இருக்கின்றது..


=============

வெயில்காலம் முழுக்க சும்மா இருந்துவிட்டு, மழைகாலத்தில் பாதாளசாக்கடைக்கு பள்ளம் தோண்டுவதும்,டெலிகம்யூனிகேஷன் கேபிள் பதிக்க ரோட்டு ஓரம் முழுவதும் வெட்டி போடுவதும் என மந்தகதியில் பணிகள் நடந்தால், நீங்கள் சென்னையில் வசிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

=================

மணப்புரம் கோல்டு பைனான்ஸ் ஆபிஸ் எங்கெல்லாம் இருக்கோ... அதுக்கு மிக அருகிலேயே காலனி மக்களின் குடியிருப்பு இருக்கின்றது என்று அர்த்தம்...ஜாக்கிசேகர் அவதானிப்பு.
============
சில வருஷத்துக்கு முன்னகூட ஒழுங்கா பெய்த மழைதான்... எப்ப..பேஸ்புக்குல லேசா தூறினா கூட ,மழை பத்திய கவிதைகள் அதிகமாச்சோ அன்னையிலருந்து மழை பீதியடைஞ்சி அடை மழைன்னு ஒன்னு பெய்யறதே இல்லை... பிளிஸ் மக்கா அது பாவம்.. விட்டுங்க.
================
கச்சதீவை மீட்க அப்போதே வழக்கு தொடுக்காதது ஏன்? கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி...# செய்தி...ஈழத்தாய் அவதாரத்தை அன்றைக்கே எடுக்காதது ஏன் கருணாநிதி எதிர்கேள்வி.

===========================

எங்கெல்லாம் பழமுதிர்சோலை பழக்கடைகள் இருக்கின்றனவோ....?அங்கெல்லாம் கிலோ ஆப்பிள் 500 ரூபாய் என்று சொன்னாலும் ,கேள்வி கேட்காமல் வாங்கும் திரணிஉள்ள மக்களின் வசிப்பிடம் அங்கே அதிகம் ,இருக்கின்றது என்று அர்த்தம். # ஜாக்கிசேகர் அவதானிப்பு

=============================
கவர்ச்சி பாடல்களில் நடிகை முகமைத்கான் உதடு சுழிக்கையில் காமத்துக்கு பதில் எனக்கு பயம்தான் அதிகம் ஏற்படுகின்றது.
=============
இரண்டு வாரம இந்த பாட்டுதான் மைன்ட்ல சுத்திக்கிட்டு இருக்கு...


என்ன ஒரு லைவ்லிநஸ்...???? சான்சே இல்லை.இந்த படத்தோட இன்ர்வல் பிளாக் வரை பார்த்தா... காதலிக்கவே வேண்டாம்ன்னு நினைக்கற ஆம்பளை பொம்பளை எல்லாருக்கும் காதலிச்சே ஆகனும்ன்னு தோணும்....

இன்டர்வெலுக்கு அப்புறம் பார்த்தா காதலிச்சது ரொம்ப தப்போன்னு தோனும்...

பட் பஹத்தும் ஆன்ட்டிரியாவும் அசத்தி இருக்காங்க.... பாட்டை கேளுங்க.. அப்படியே ரெண்டு பேரோட பாடிலாங்வேஜை பாருங்க...




=============================

நம்ம மூஞ்சி யோக்கியத என்னன்னு 35 வருஷத்துக்கு மேல கண்ணாடி பார்க்கறோமே நமக்கு தெரியாதா? நம்ம பவுசு என்னான்னு?? நேற்று அவசரமா ஒய்ப்பை கிண்டி ரயில்வே ஸ்டேஷன்ல டிராப் பண்ண முகத்தை மட்டும் கழுவிக்கிட்டு , குளிக்காம பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு , இருக்கற நாலு முடியை ஒதுக்கி விட்டுக்கிட்டு...

ஏன்டி குளிச்சது போல இருக்கான்னு கேட்டேன்.. ??

இது போல கேள்வியை அக்கம் பக்கத்துலயா கேட்பாங்க.. கூடவே சுத்தற செவ்வாழைகளான தங்கமணிக்கிட்டதான் இந்த கேள்வியை கேட்கமுடியும்...

அவ சொன்னா... சொல்லறேன்னு தப்பா நினைச்சிக்காதிங்க...

நீங்க குளிச்சாலும் இப்படித்தான் இருப்பிங்கன்னு சொல்லறா?”

நேத்து சொன்ன அந்த வார்த்தையை இன்னைக்கு காலையில வரைக்கு மறக்க முடியலை...
சொல்லால் அடித்த சுந்தரின்னு ராசா சின்ன கவுண்டர் படத்துல பாடிய பாட்டுதான் சட்டுன்னு எனக்கு பிளாஷ் கட்டுல வந்து போச்சி.....

சூனா பானா...... நாமலே தேடிக்கிட்ட ஆப்பு வலியை ஏத்துக்கிட்டுதான் ஆகனும். மைன்ட் வாய்ஸ்.
========================

திங்கள் கிழமைக்கும் நீலத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்கின்றது போலும்....

 திங்கட்கிழமை என்றால் நீல டவுசரும் வெள்ளை சட்டையுமாக பள்ளி செல்ல வேண்டும்...

மற்ற நாட்களில் அந்த உடைக்கு பெரிய மரியாதை இல்லை என்றாலும் சுதந்திர தினம், குடியரசு தினம், பள்ளி ஆண்டு விழாக்களில் வெள்ளை சட்டையும், நீல டிரவுசரும் முக்கிய பங்கு வகிக்கும்...எனது சீருடைகள் எல்லாம் வெள்ளை சட்டை நீல டிரவுர் என எட்டு வருடங்கள் ராமகிருஷ்ணா பள்ளியில் எட்டம் வகுப்பு வரை மானம் காத்து இருக்கின்றன...

தரையில் அரக்கி அரக்கி நகர்ந்து டவுசரின் பின் பக்கம் பெரிய ஓட்டையாகி ,குண்டி தெரிய டவுசர் போட்டு சென்றவனில் பின்பக்கம் தபால் பெட்டியாக பாவித்து லட்டர் போஸ்ட் செய்து இருக்கின்றோம்...

கம்பியம் பேட்டை புனித வளனார் பள்ளியில் எல்லா நாளும் சீருடையுடன் போக வேண்டும். பச்சை பேன்ட் வெள்ளை சட்டை...அனால் சென்னை வந்த பிறகு வித விதமாக சீருடைகள் பார்க்க நேரிட்டது... எனக்கு புடிக்காத சீருடை... காக்கி பேண்டும் வெள்ளை சட்டையும்... அது என்னவோ ஒர்க்ஷாப்பில் வேலை செய்ய செல்வது போலவே இருக்கும்.. கடலுரில் அரசு மேல்நிலைபள்ளி மற்றும் ஐடிஐகளில் வெள்ளை சட்டையும் காக்கி பேன்டும்தான்...எது எப்படி இருந்தாலும், சனி ஞாயிறு சீருடையை துவைத்து காய வைத்து பள்ளிக்கு போட்டுக்கொண்டு செல்ல வேண்டும்..

எனக்கு இரண்டு செட் உடைகள்தான் அதனால் இரண்டு தினமும் துவைத்து ஒரு செட்டை ரெடியாக வைத்தக்கொள்ளுவேன்.... எனக்கு தெரிந்து நான் மேல்நிலை பள்ளிவரை சட்டையை அயர்ன் செய்து போட்டுக்கொண்டு சென்றதில்லை.........மழைகாலங்களில் ஈரமான சீருடைகளை உடல் சூட்டில் காய வைத்து பள்ளி சென்ற நாட்கள் ஏராளம்...

திரும்பவும் யாழினி மூலம் திங்கட்கிழமை சீருடைகள் கவனம் பெற இருக்கின்றன. இன்று திங்கட்கிழமை அவளும் நீல வெள்ளை கலந்த சீருடை அணிந்து டே கேர் சென்றாள்...அவள் முகம் முழுக்க சந்தோஷம். அதை பார்த்த அவ அப்பாங்காரன் எனக்கும் தான்.


16 வருடங்கள் சீருடையோடு விடுமுறை நாட்கள் தவிர பகலில் எட்டுமணிநேரங்கள் பள்ளிகளில் சுற்றுகின்றோம்..

திங்கள்கிழமைக்கும் நீல வண்ணத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்பது பள்ளி சென்றவனுக்கு சொல்லி உணர்த்தாமல் அது நன்கு புரியும்.
 =====================

பொண்டாட்டிக்கு பொண்ணுக்கும் மதிய சாப்பாடு கட்டிக்கொண்டு இருந்தேன்... டப்பா நிரம்பினாலும் ஒரு வேளை மதியம் பசியில் சோறு பத்தவில்லை என்றால் ??என்று எண்ணம் மேலோங்க... இன்னும் ஒரு கைப்பிடி சாப்பாட்டினை டாப்பாவில் வைத்து அழுத்தினேன்... சிறுவயதில் எனக்கு அம்மா மதிய சாப்பாடு கட்டும் போதும்கட்டி முடிக்கும் போதும்மூடும் முன் இன்னும் ஒரு கைப்பிடி சாப்பாடு வைத்து அழுத்திதான் டப்பாவை முடுவாள்.... என்னை போல அவளும் நினைத்து இருக்கலாம் பிள்ளைக்கு மதியம் சாப்பாடு பசியில் பத்தவில்லை என்றால்....என்ன செய்யவான் என்று??

ஐ மிஸ் யூ லாட் ...மா.

================
கடைசியில் என்னையும் கத்தி தூக்க வச்சிட்டிங்களேடான்னு தேவர்மகன் கிளைமாக்ஸ்ல கமல் சொல்லறது போல நானும் படங்களை டவுன்லோட் பண்ணி பார்க்க ஆரம்பிச்சிட்டேன்....இதுவரை டவுன்லோட் பண்ணாம இருந்ததுக்கு முக்கியகாரணம் ஒரு நண்பர் லேப்டாப்ல ரொம்ப மோசமான பிரின்ட்ல ஒரு படத்தை டவுன்லோட் பண்ணி பார்த்தேன் சொன்னார்...

 எல்லா படமும் அப்படித்தான் இருக்கும்ன்னு ஒரு நினைப்பு. அதனால எந்த படத்தையும் இதுவரை டவுன்லோட் பண்ணறதில்லை... சமீபத்துல டவுன்லோட் பண்ணி நண்பர் எச்டி குவாலிட்டியில சப் டைட்டிலோட படங்கள் பார்த்த உடன் அசந்து விட்டேன்... அதனால் டவுன்லோட் பண்ணி படம் பார்ப்பதில்லை என்ற சபதத்தில் இருந்து தவம் கலைந்து விட்டேன்.

நான் முதன் முதலில் டவுன்லோட் செய்து பார்த்த படம் அன்னாவும் ரசூலும்... அதே போல எல்லாருக்கும் டவுன் லிங்க் கொடுக்கவும் முடியாது... படம் அறிமுகப்படுத்துவது மட்டுமே எனது நோக்கம்... தேடி பார்ப்பது உங்கள் சமத்து... நன்றி.

=======================

நம்பிக்கட்டினோம் நன்றாக இருக்கின்றோம்...கம்பி விளம்பரத்துக்கு ஓகே...கல்யாணமான புருசன்காரன்களை இப்படி கோரசா சிரிச்சபடி சொல்ல சொல்லேன் பார்ப்போம்.?ஒரு பய சொல்ல மாட்டான் மென்னு முழுங்குவான். # ஜாக்கிசேகர் அவதானிப்பு
===========

லஷ்மிராயின் தொடையில் இருந்து ரவி தேஜாவின் பலுப்பு தெலுங்கு படம் தொடங்குவதாலேயே, பாக்ஸ் ஆபிசில் கண்ணா பின்னா வென ஹிட் அடித்து இருக்கின்றது என்று அவதானிக்கின்றேன்.

=============
எனக்காக அவன் நடையா நடக்கறான்டி, என்ற பரிதாபத்திலேயே முக்கால் வாசி காதல்கள் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.# ஜாக்கிசேகர் அவதானிப்பு.

===============
படித்ததில் பிடித்தது.

நக்கீரன்  இணைய செய்தியாளர் பகுதியில்...

மகளை பெற்ற அப்பாவுக்கே தெரியும் முத்தம் காமத்தில் சேர்த்தி இல்லை என்று.../ இந்த வரிகளை சினிமாவில் எழுதினது யாருயா?  உன் பேச்சை கேட்டு அவ அப்பன் முன்னாடி முத்தம் கொடுத்துட்டேன் அவன் அருவாளோட இப்ப என்னை தேடிக்கிட்டு இருக்கான்.

பூபதி முருகேஷ்..
=======
உனக்கு கருணாநிதியை  பிடிக்குமா?

பிடிக்கும் சார்...

அப்படின்னா  உன்னால பேஸ்புக்குல பிரபலம் ஆக முடியாது.

கோகுல கிருஷ்ணன்.

=====================

நான்வெஜ் 18+


உங்க  நினைப்புல தீயை வைக்க....




================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

11 comments:

  1. ஓட்டு போட்டு விட்டேன்.
    உங்கள் புகைப்படங்கள்தான் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறது.
    வெற்றி பெற்றதும் ‘நாகராஜசோழன் எம்.ஏ.’ ஆகி விட மாட்டீர்களே!

    ReplyDelete
  2. //நான்வெஜ் 18+
    உங்க நினைப்புல தீயை வைக்க....//

    ஆமா அது பல்புதானே .. அதுல வேற என்ன தெரியுது..?

    ReplyDelete
  3. ஓட்டு போட்டு விட்டேன்.

    ReplyDelete
  4. Anna...
    Innakku post nallairukku....

    4 mail id irukku...
    4 vote pottachu...

    ReplyDelete
  5. மிக நீண்ட பதிவு! ஆனால் சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. எல்லாமே சூப்பர்.... கடைசி விளக்கு உள்பட.....

    ReplyDelete
  7. ஒட்டு போட்டு விட்டேன் . போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. ஒட்டு போட்டு விட்டேன் . போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. பாஸ்கர் சார்.. என் படம் முன்னனியில் இல்லை.. 350 ஓட்டுகள் எல்லாம் பெற்ற படங்களை பார்த்து இருக்கின்றேன்.... திரும்ப ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள். போட்டியில் வெற்றியோ தொல்வியோ.. நிறைய பேரை இவைகள் சென்று அடைய வேண்டும்.

    ReplyDelete
  10. ஓட்டு போட்ட அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner