எங்கள் கிராம கிரிக்கெட்+ஆயில்பேட் + மின்னல் அணி.. உலக கோப்பை நடக்கும் இந்த நேரத்தில் இந்த பதிவு எழுதுவது சிறப்பாக இருக்கும்.. கடலூர் கூத்தப்பாக்கம் கிராமத்தில் ஒரு காலத்தில் கோலி குண்டு,  கோட்டிபுல், மாணவர்களிடம் ரொம்ப பேமஸ்... முக்கியமாக கோட்டிபுல் ரொம்ப பேமஸ்... துளுக்கன் சமாதி அருகே காலையில் இருந்து மாலை வரை கோட்டி விளையாடியது நினைவுக்கு வருகின்றது...நாங்கள் 5 ஆம் வகுப்பு படிக்க ஆரம்பிக்கும் போது  கிரிக்கெட் விளையாட்டு எங்கள் ஊரில் மெல்ல தலைதூக்கியது...


சென்னையில்  இருந்து லீவுக்கு வரும் பசங்கள்,மிட்ஆன், லெக்ஸ்பின், ஸ்கொயர் டிரைவ் என்று ஏதேதோ  ஆங்கில வார்த்தைகள் சொல்லி எங்களை தாழ்வுமணப்பான்மையில் உழல செய்தார்கள்...இதனால் அந்த விளையாட்டை இன்னும் நன்றாக கற்றுக்கொள்ளும் வெறி எங்கள் அனைவருக்கும் கனன்று கொண்டு இருந்தது.


கூத்தபாக்கம் மாரியாத்தா கோவில் மாந்தோப்பில் புடிக்கற ஆட்டம் விளையாடுவோம்.. ஒரு பெரிய ரவுன்ட் தரையில் குச்சியால் வரைந்து, அதுக்கு நடுவில் ஜா பூ திரி போட்டு,  அதில் தோற்றவனை வட்டத்துக்கு நடுவில் நிறுத்தி ஒரு பையன் கையில் ஒரு குச்சியை கொடுத்து ,அந்த குச்சியை வெகு தூரம் வீசி எறிந்தால் வீசிய குச்சியை எடுத்து வந்து ,அந்த வட்டத்தில் போட்டு விட்டு எங்களை பிடிக்க வேண்டும்.. அவன் அந்த குச்சியை ஓடி வந்து எடுக்கும் முன் நாங்கள் வானர படைகளாக மாறி மாமரங்களில் ஏறிவிடுவோம்... அவன் மாமரத்தில்  வேர் பக்கம் ஏறுவதற்குள் பக்கத்து  மா மரத்துக்கு அல்லது  தாழ்ந்த கிளை வழியாக கீழே இறங்கி, ஓடி வந்து  அந்த வட்டத்துக்கு வந்து விடுவோம். இப்படி வானர படையாக விளையாடியவர்களுக்கு கிரிக்கெட் பெரிய விஷயம் அல்லவா??? 

அந்த கிளவுஸ், அம்பயர், என்று அந்த விளையாட்டின் மீது ஒரு இது எங்களுக்கு வர ஆரம்பித்த நேரம் அது.

அப்போது இருந்த பெரிய அண்ணன்கள் எல்லோரும் காசு போட்டு பேட் வாங்க முடிவு செய்தார்கள். நாங்களும் அதில் சேர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தார்கள்... எல்லாரும் பேட் பிடித்தால் பால் பொறுக்கி போட ஆள் வேண்டும் அல்லவா? அதனால் எங்களையும் சேர்த்துக்கொண்டார்கள். கோட்டி போல் ஒரு திசையில் கிரிக்கெட் பந்தை கணிக்க முடியாது.. சகல திசைகளிலும் பறக்கும் அதனால் எங்களை  சேர்த்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை... சரி அதுக்கு முன் எங்கள் அணிக்கு பேர் வைக்க முடிவு செய்தோம்...


பேர் கண்டிப்பாக வைக்க வேண்டுமா? என்று கேட்க்கும் போது பெட் மேச் விளையாட பேர் அவசியம் என்றார்கள்... பெரிய கோவில் தெஐ பசங்க..பேட்டை பசங்க எல்லாரும் பேரோடு விளையாடுறாங்க... அதனால் பேர் முக்கியம் என்றார்கள்....மின்னல் அணி என்று  பெயர் வைத்தால் என்ன என்று கேட்க??தீவிர பரிசீலனைக்கு பிறகு அந்த பெயரை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்..

மரவாடி சுவற்றில் மின்னல் அணிவீரர்கள் என்று எல்லோருடைய பெயரையும் எழுதி வைத்தார்கள்...

எல்லோரும் காசு போட்டு பேட், ஸ்டெம்ப் வாங்க முடிவு செய்தோம் முக்கி முனறி 150 ரூபாய் சேர்பதற்குள்  நாக்கு தள்ளிவிட்டது...பத்து, எட்டு ,நான்கு என்று யாரிடம் எவ்வளவு இருந்தாலும் அதனை பேட்வாங்கும் நிதியில் சேர்த்தோம்...மைனர் வீட்டு பாலமுருகனிடம் எப்போதும் காசு விளையாடும்... பேட் நிதி சேர்க்கும் நாளில் அவனிடம் காசு விளையாடவில்லை.. அதனால் 4வது படிக்கும் பாலமுருகன் இரண்டு ரூபாய் கொடுத்தான்.

கிரிக்கெட் பற்றி ஒரு எழவும் எங்களுக்கு தெரியாது.. ஆனால் எங்களை கபில்,கவாஸ்கர்,ரவிசாஸ்திரியாக நினைத்துக்கொண்டோம்...
பாண்டிக்கு போய் பேட் வாங்கி வந்தோம்.... அந்த பேட் ரொம்ப அழகாக  இருந்தது.. நல்ல வழ வழப்பு....

ஸ்டெம்ப் நட்டோம் விளையாட ஆரம்பிக்கும் போது எல்லாம் தெரிந்த ஒரு ஏகாம்பரம் வந்தது.. ஆயில் பேட் என்றால் அதில் ஆயில் நன்றாக ஊறினால்தான் நெடுநாள் உழைக்கும் என்று  சொல்ல அவன் சொல்லுக்கு ஆட்டுமந்தை போல தலையாட்டினோம்....

பக்கத்து கடை வண்டி மெக்கானிக்கிடம்  பைக்கில் யூஸ் செய்த கருப்பு ஆயிலை ஒரு பாட்டிலில் ஊற்றி எடுத்து வந்து புது பேட்டின் மீது ஊற்றினோம்...

ஒரு படத்தில் சீட்டு விளையாடும் இடத்தில் வடிவேலு எல்லாம் தெரிஞ்சது போல சொல்ல, மறு பேச்சு பேசாமல் கார்டுகளை இறக்கி தோற்ப்பார்களே.. அது போல அந்த  எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அடுத்த ஐடியாவை சொல்லியது அதுதான் எல்லவற்றையும் விட உச்சம்.

இப்படி புது பேட் மேல ஆயில்  ஊற்றினால் எப்படி ஆயில் அதனுள் இறங்கும்... அதனால் ஆணியால் பேட் முழுவதும் குத்தி அதன் பிறகு ஆயில் ஊற்றினால் அந்த பேட் ஆயில் பேட் என்று  சொல்லியது....

ஓத்தா இதான் ஆயில் பேட்டா என்று மின்னல் அணி உற்சாகமாக மாறி பம்பரத்தில் இருந்த ஆணி மற்றும் வீட்டில் இருந்து ஆணி எடுத்து வந்து  பேட்டை மாந்தோப்பில் வைத்து புது பேட்டில் உக்கு மாண்டாவில் மாட்டிய பம்பரம் போல அந்த புது பேட்டை ஆள் ஆளுக்கு நொங்கு எடுத்து மரியாத்தா உக்கிரமாக அம்மை போட்டது போல மாற்றினோம்...


அந்த புது பேட்டை  அணி குத்தி பொத்தலாக பார்க்கும் போதுதான் மின்னல் அணியில் இருந்த உறுப்பினர்கள் அத்தனை பேருக்கு ஒரு விஷயம் உறுத்தியது.. இது போல பேட்டை நாம் எந்த போட்டியிலும் ,டிவியிலும் பார்த்தது இல்லையே என்ற போது அதுக்கு அந்த ஏகாம்பரம், பிளாக் அண்டு ஒயிட் டிவியில் எப்படி கிளினா  தெரியும் என்று பதில் சொல்லியது....

சரி விளையாடலாம் என்று முடிவு எடுத்து டீம் பிரித்தோம்.. ஆணியில் குத்தி சொறிப்பிடிக்க வைத்த ஆயில் பேட்டை வைத்தக்கொண்டு நெய்வேலி காட்டாமணி கழி ஸ்டெம்புக்கு முன் ஸ்டைலாக கொளுத்து ரவி ஸ்டைலாக கைலி கட்டி நின்றதை பார்த்ததும் எல்லோருக்கும் உடனே பவுலிங் மற்றும் பீல்டிங் செய்வதை விட பேட் பிடிக்க ஆசையாக இருந்தது...


ஹரி ஓம் என்று ஒரு ஓவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்தது...இரண்டாம் ஓவர் ஆரம்பிக்கும் போது நாலாம் வகுப்பு படிக்கும் பாலமுருகன் தான் பேட் பிடிக்க வேண்டும் என்று அடம் பிடித்தான்... அது சாத்தியம் இல்லை என்று மின்னல் அணி உறுப்பினர்கள் சொன்னோம்...

அப்பிடின்னா நான் பேட் வாங்க கொடுத்த இரண்டு ரூபாயை கொடு என்று பாலமுருகன் நச்சரிக்க....புது பேட்டில் அடுத்த ஓவரை ஆவலாய் எதிர்பார்த்த கொளுத்து ரவி... 

“ங்கோத்தா நான் அப்பவே நினைச்சேன்.. இது மாதிரி நடக்கும்னு இதுக்குதான் இந்த பிளகா பசங்களை எல்லாம்  டீம்ல சேர்க்ககூடாதுன்னு“  

என்று பேட்டை எடுத்து தரையில் கோபமாக அடித்து விட்டு பந்தை சமாளிக்க மடித்து இருந்த கைலியை கோபமாக இறக்கிவிட்டு நடக்க ஆரம்பித்தான்....

மின்னல் அணியில் கொளுத்து ரவி கோச்சிகிட்டு போனதும்.. சலசலப்பு அடங்கவே இல்லை....


ஒரு ஓவருக்கு மேல் விளையாடதா அந்த பேட் ஆணியால் குத்து வாங்கியதோடு நிறுத்திக்கொண்டது.

மின்னல் அணி அப்படியே  மின்னல் போல காணாமல் போனது..

மரவாடி சுவற்றில் எழுதி வைத்த மின்னல் அணி வீரர்கள் பெயர்கள் மட்டும் பல வருடங்களுக்கு பல  நிஜ மின்னல்களை பார்த்தது....

இப்போது எனக்கு இருக்கும்  ஒரே ஆசை.. அந்த ஆணியால் குத்து வாங்கி ஆயில் பேட்டை பார்க்க வேண்டும்...

இந்த பதிவு மின்னல் அணியில் ஒரு செயல் வீரர்ஆக இருந்த எனது பால்ய கால நண்பர் திரு லட்சுமிநாரயணன் அவர்களுக்கு சமர்பணம்..


(அன்பின் லட்சுமி நாரயணன் இந்த பதிவு நமது பால்யத்தை உனக்கு நினைவு படுத்தி உனக்கு சிரிப்பை வரவைக்கும் என்று நம்புகின்றேன்...தொடர்ந்து இந்த பகுதிக்கு நம் நண்பர்கள் ரசிகர்களாய் இருப்பது மகிழ்ச்சி.....)

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS...

==================

3 comments:

 1. விட்டில் விளையாட தளிர் விட்டதும் நீங்கள் விளையாடிய தருனங்கள் ஞாபகம் வருகிறதா
  மலரும் நினைவுகள் தொடரட்டும்

  ReplyDelete
 2. கூத்தப்பாக்கத்தில அப்போது ஃபிளாட் ஆரம்பித்த நேரம்..( ஃபிரண்டு வீடு இருந்துச்சி )எங்குமே முள் காடா இருக்கும் . 90க்கு பிறகு இப்போது போனால் அடையாளமே தெரியல அந்தளவுக்கு வளர்ச்சி ..!!

  என் பழைய நினைவுகளையும் கிளப்பிட்டீங்க பாஸ் :-))

  ReplyDelete
 3. Super Sir..Oil Bat incidents brought back my memories too

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner