சைக்கிள் டயர் வண்டி.(கால ஓட்டத்தில் காணமல் போனவை…)




கால ஓட்டத்தில் இன்று நிறைய வாகனங்களை ஓட்டி விட்டேன்.. ஆனால் சின்ன வயதில் எல்லா பிள்ளைகளுக்கும் வாகனம் என்பது கனவுதான்..
எனக்கு வாகனம் என்பது பெரிய கனவு.. சிறு வயதில்   நெய்வேலி காட்டாமணி செடியில் இருக்கும் ஒரு பெரிய கோலை ஒடித்து அதனை தரையில்  தீய்த்து கொண்டே ஓடுவோம்...

நிறைய முறை என் அம்மாவும், அப்பாவும் என்னை திட்டிதீர்ப்பார்கள்... காரணம் தரையில் தேய்த்துகொண்டு ஓடும் அந்த கோல்,தரையில் இருக்கும் கல்லில் தட்டி வயிற்றில் குத்தி விடும் என்ற பயம் காரணம்தான்..ஆனால் அந்த கோலை தரையில்  தேய்த்துக்கொண்டு ஓடுவதில் ஒரு அலதி பிரிய எனக்கு உண்டு.

அதன் பிறகு  சைக்கிள் டயரை ஒரு கோலை வைத்து, அடித்து அடித்து ஓடிக்கொண்டு அதனை ஓட்டுவது என்பது   ரொம்ப சதோஷமான விஷயம்..இன்று அடுத்த தெருவுக்கு  நடந்து போய் கால் கிலோ கத்திரிக்காய் வாங்கி வருவதற்க்கு  நிறைய யோசித்து செயல்பட வேண்டியதாகிவிட்டது...

 அந்த சைக்கிள் டயரை வைத்துக்கொண்டு நான் சுற்றாத இடம் இல்லை. அதில் மட்டும் ஒரு ஸ்பிடா மீட்டர் மட்டும் இருந்து இருந்தால்,ஒரு நாளைக்கு  பதினைந்தில் இருந்து இருபது கிலோ மீட்டர் அளவுக்கு சைக்கிள் டயரை வைத்துக்கொண்டு கோலால் அடித்து ஓடி இருப்பதை காட்டும்....

இந்த அப்பன்காரனுங்க அந்த காலத்துல வளர்ர பிள்ளை என்று பெரியதாக கால் சட்டை தைத்து கொடுத்து விடுவார்கள்..ஏதோ ஒரே நாளில் ஒன்றரை அடி வளர்ந்து விடுவது போல...அந்த கால்  சட்டையை வேறு ஒரு கையால் நழுவி விடாமல் பிடித்த படி ஓடுவோம். அதை இன்று நினைத்து பார்த்தாலும்  சிரிப்பாய் வருகின்றது..

எதுக்கு அப்படி வெறித்தனமாய் சைக்கிள் டயரை வைத்துக்கொண்டு ஓடினோம் என்று நினைத்து பார்க்கையில் வாகனம் மீதான காதல் என்பது மட்டும்தான் அடிப்படை உண்மை...

 சில டயர்கள் ரொம்ப வள வள தன்மையோடு இருக்கும் அதனால்ஒரு டயரை அதனுள் போட்டு இரண்டு டயராக மாற்றி விடுவோம் அப்படி இரண்டு டயர் போட்டு  ஓடும் போது கோலால் அடிக்கும் போது சைக்கிள் டயர் ஸ்டிப்பாக இருக்கும்...

வளைவுகளில் சைக்கிள் டயரை வளைக்க, டயர் ஓரத்தில் லைட்டாக சானை பிடிப்பது போல கோலை சாய்த்து  பிடித்தாலே டயர் வளையும்.. உடனே திரும்ப அழுத்தியும் மெதுவாக திரும்ப லைட்டாகவும் பிடிக்க வேண்டும்..அப்படி அந்த சைக்கிள் டயரை வளைத்து நெளித்து ஓட்டுவதில் பெரும் சந்தோஷம் இருக்கும்...

ஏங்கேயாவது தெரு பெண்களை  கண்களில் பட்டு விட்டால் இன்னும் அந்த வளைத்து நெளித்து ஓட்டும் அந்த ஸ்டைல் இன்னும் அதிகபடும்...

சரி... சைக்கிள் டயரை தள்ளிக்கொண்டு ஓட்டுகின்றோம்... அதுக்கு நிறுத்த ஒரு கார்ஷெட் போல் ஒரு இடம் வேண்டும் அல்லவா??
டயரை வைத்து விளையாடி முடிந்த உடன் அதனை எடுத்து வேப்பமரக்கனுவில் மாட்டி வைத்து விடுவோம்.. இந்த கழியை சைக்கிள் டயருக்கு நடுவில் இருக்கும் இடைவெளியில் வைத்து விட்டு சென்று மறுநாள் திரும்ப எடுத்து பறக்க வேண்டியதுதான்..

அந்த சைக்கிள் டயர்களுக்கு மட்டும் உயிர் இருந்தால் ஏற்கனவே உழைத்து களைத்து வேண்டாம் என்று குப்பையில் போட்ட என்னை இந்த பசங்க என்னை கோலால் வச்சி டெய்லி இந்த வாக்கு வாங்கறானுங்களே...பகவானே  நேக்கு விமோச்சனமே இல்லையா ? என்று கடவுளிடம் அந்த சைக்கிள் டயர்கள் வேண்டிக்கொள்ளும்.

இதை விட  சைக்கிள் ரிக்ஷா டயர்கள் தள்ளி ஓட்ட மிக சிறப்பானவை...அவை சைக்கிள் டயர் போன்று வளவள என்று இருக்காது.. ரொம்ப ஸ்டிப்பாக இருக்கும்..முக்கியமாக ராலே கம்பெனி டயர்கள் மிக சிறப்பானவை.

சைக்கிள் டயர் வைத்துக்கொண்டு பெரிய பந்தயம் எல்லாம் வைப்போம்.. இரண்டு தெரு சுற்றி முதலில் வருபவரே ஜெயித்தவர்.. கல் தடுக்கி விழுந்து, டவுசர் அவுந்த போனது கூட தெரியாமல் வெற்றிக்கோட்டை பிடிக்க தீவிரம் காட்டுவோம்.

கடுகு உளுத்தம் பருப்பு வாங்கி வரவேண்டுமா? கறிவேப்பிலை கொத்தமல்லி, வாங்கி வரவேண்டுமோ சைக்கிள் டயரை தள்ளிக்கொண்டு கடைக்கு போவோம்.. சலிக்கவே மாட்டோம்.. ஆனால் இன்று பைக்கில் போய் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வாங்கி வர  ரொம்பவே யோசிக்க வேண்டியதாகிவிட்டது.

இப்போது அப்படி ஒரு விளையாட்டையே பசங்க மறந்து போய் விட்டார்கள்.. சில வருடங்களுக்கு முன் வந்த வெயில் திரைப் படத்தில் ,வெயிலோடு விளையாடி பாடலில் அந்த சைக்கிள் டயர் விளையாட்டை செல்லுலாய்டில் பதிவு செய்து இருப்பார்கள்..இதோ அந்த பாடல் உங்களுக்காக..



எருமை மாடு போல வளர்ந்த பிறகு இப்போதும் சைக்கிள் டயரை பார்க்கும் போது எல்லாம் அதை தள்ளிக்கொண்டு ஓடியதும் அதை ஒரு  வாகனம் போல பாவித்ததும் நினைவுக்கு வரும் போது சிரிப்பு வராமல் இல்லை.. 

பாருங்க உங்க கிட்ட பேசிக்கிட்டே என் பைக்கை கழுவி, பட்டை போட்டு, பொட்டு வைக்க மறந்து  விட்டேன்.. உங்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல் வாழ்த்துகள்.

 =========
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

13 comments:

  1. அன்பின் ஜாக்.கி..

    "வளைவுகளில் சைக்கிள் டயரை வளைக்க, டயர் ஓரத்தில் லைட்டாக சானை பிடிப்பது போல கோலை சாய்த்து பிடித்தாலே டயர் வளையும்.. உடனே திரும்ப அழுத்தியும் மெதுவாக திரும்ப லைட்டாகவும் பிடிக்க வேண்டும்.. "

    ----> கண்டிப்பாக இதை வாசிக்கும் அனைவருக்கும் சந்தோஷமான (அனுபவ) வார்த்தைகள்.. - மீண்டும் நீர் நிருபித்து விட்டீர்..அன்பவங்களை எழுதுவதில் நீர் ஒரு மன்னன்.. என்று..
    *-----------------------------*
    கடுகு உளுத்தம் பருப்பு வாங்கி வரவேண்டுமா? கறிவேப்பிலை கொத்தமல்லி, வாங்கி வரவேண்டுமோ சைக்கிள் டயரை தள்ளிக்கொண்டு கடைக்கு போவோம்.. சலிக்கவே மாட்டோம்.. ஆனால் இன்று பைக்கில் போய் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வாங்கி வர ரொம்பவே யோசிக்க வேண்டியதாகிவிட்டது.

    ---------> உண்மை தான் வயதும், சோம்பலும் தான் காரணம் போல..
    *-----------------------------*

    பாருங்க உங்க கிட்ட பேசிக்கிட்டே என் பைக்கை கழுவி, பட்டை போட்டு, பொட்டு வைக்க மறந்து விட்டேன்.. உங்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல் வாழ்த்துகள்.
    ---> பட்டை பைக்குக்கு மட்டும் தானா...? (பய புள்ளக தப்பாவே...)
    *--------*
    உங்களுக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல் வாழ்த்துகள். (தல)

    என்றும் நட்புடன்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.

    Situation song 1:
    ஓரம் போ ஓரம் போ ஜாக்கியார் வண்டி வருது

    Situation song 2:
    வாங்கடா வாங்க என் வண்டிக்கு பின்னால
    வாங்க தான் போறேன் வெற்றி மாலையை கைமேலே

    ReplyDelete
  3. "பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்கையில்" உங்களுடய இந்த "கால ஓட்டத்தில் காணமல் போனவை பதிவின்" மூலம் சில /பல பொருட்களை நினைவுகுறும் போது மனதுக்கு இனிமையாக இருக்கிறது ..

    நன்றிகள் ..

    ReplyDelete
  4. //எதுக்கு அப்படி வெறித்தனமாய் சைக்கிள் டயரை வைத்துக்கொண்டு ஓடினோம் என்று நினைத்து பார்க்கையில் வாகனம் மீதான காதல் என்பது மட்டும்தான் அடிப்படை உண்மை...
    //

    தவறு மனோனத்துவ முறையில் பார்க்கும்போது.

    ஆண்வர்க்கம் – அது குழந்தையாயிருக்கும்போதேயிருந்து – பவரை நாடி, பிரயோகித்து மகிழ்கிறது. பவர் அல்லது ஆதிக்கம் – எந்தவழியினாலும் அடைந்து, அல்லது, தேடித்தேடி அடைந்து, அனுபவிக்கும் ஆண்வர்க்கம்

    இத்தேடல், அனுபவித்தல், பலனேரங்களில் பிறரை இம்சித்தாலொழிய நடக்காது. இதன்படியே ஆண் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்த பலவழிகளைக்கண்டு அவள் மீது செயல்படுத்துகிறான் எல்லாத்துறைகளிலும், மதத்தைக்கூட அவன் விட்டுவைக்கவில்லை. மதங்கள் முழுக்கமுழுக்க ஆணாதிக்கத்தால் வடிக்கப்பட்டவை.

    ஆண் ஆதிக்கத்தையே தேடுகிறான் எங்கேயும் எப்போதும் எக்காலத்தும். அங்கே அவனடிமைப் படுத்துவது எப்பாலாருமாகவும் இருக்கலாம் அவர்கள் தன்னை விட நலிந்தோராக இருக்க வேண்டும். சிலனேரங்களில் விலங்குகள் மேல் காட்டலாம். ஆதிக்கம் செலுத்தப்படுவோர் .

    உலகத்தில் தொன்று தொட்டும் நடந்து வரும் விடயங்கள் மனிதரை மனிதர் இம்சித்தலைக்கொள்ளும் விடயங்கள் ஆண்களால், அல்லது ஆண்களைக் காப்பியடிக்கும் பெண்களால் – இந்த ஆதிக்கத்தைத் தேடு அனுபவிக்கும் செயல்களால் நிரம்பியவையே. சண்டைகள், ச்சசரவுகள், போர்கள், போன்று. அவ்வாதிக்கத்தை சமாளிக்கமுடியாமல் அடங்கினால் அங்கே எல்லாம் சுபம். முரண்டுபிடித்தால் போர்க்களம்தான். பரமக்குடி ஒரு சமீபத்திய எ.கா.

    சிலவேளைகளில் அவை நல்ல விடயங்களாகவும் இருக்கலாம். விஞ்ஞானக் கண்டிபிடிப்புக்கள். இங்கே இயற்கையை வளைத்து தனக்கு அடிமையாக்க முயல்கிறான். ஆதிக்கம் செய்ய பயன்படுத்தும் கருவிகளும், இடங்களும் நபர்களும் மட்டுமே மாறுபடுவர். மற்றபடி அடைப்படை ஒன்றே. The killer instinct is necessary. That s why there r not many women scientists.

    “Power corrupts. Absolute power absolutely.” Today, a group of American psychologists came up with the view that the above quote from Lord Acton is not mere quotation. It s a great psychological insight into human behavior. (U can read today newspapers to read that!)

    குழந்தையாக இருக்கும்போது விலங்குகள், அல்லது, அஃறிணைப்பொருட்களின் மீது. அப்படியொன்றுதால் இந்த வண்டியோட்டல். இதில் ஆண்குழந்தை பெறும் திருப்தி வெறும் ஓட்டல் மட்டுமன்று. தான் விரும்பியவண்ணம் அந்த வாகனத்தை அடிமைப்படுத்த முடியும் என்ற ஆதிக்க மனப்பான்மை அதன் வழியாக அஃதடையும் பேருவகை இங்கே கவனிக்கத்தக்கது.

    பெண் குழந்தை இந்த விடயங்களில் மாறுபடுகிறது. அஃது ஆதிக்கம் செய்யவேண்டிய கட்டாயம் வரும் தருணங்களில் கூட விட்டுக் கொடுக்கும். அல்லது தப்பாகச் செய்யும். அல்லது விருப்பமில்லாமல் செய்யும்.

    ஆண்-பெண் வேறுபாட்டை குழந்தைப்பருவத்து செயல்களிலிருந்தே ஆரம்பிக்கின்றனர் மனத்தத்துவ அறிஞர்கள்.

    ReplyDelete
  5. //சில டயர்கள் ரொம்ப வள வள தன்மையோடு இருக்கும் அதனால்ஒரு டயரை அதனுள் போட்டு இரண்டு டயராக மாற்றி விடுவோம் அப்படி இரண்டு டயர் போட்டு ஓடும் போது கோலால் அடிக்கும் போது சைக்கிள் டயர் ஸ்டிப்பாக இருக்கும்...//

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே...

    ReplyDelete
  6. நான் எழுதியதன் பெயர் எவ்லூசனரி சைக்காலஜி. குழந்தைகளின் செயல்கள் பல அதை நமக்குக்காட்டும். ஒரு வாகனத்தைத் தன் கன்டரோலுக்குக் கொண்டுவந்து களிக்கும் குழந்தை ஆதிமனிதனைக் காட்டுகிறதென்பர் எவ்லூசனரி சைக்கலாஜிஸ்டுகள்.

    (Evolutionary Psychology. Many of the children's actitivities show certain conducts of early man. The control and power over a vehicle, although as trivial as a cycle tyre, shows that. There is a proverb in English that belongs to such psychology:

    Child is the father of man.

    ReplyDelete
  7. U taken to our childhood life Tnks Jackie

    ReplyDelete
  8. இனிமையான ஒரு ஞாபகமீட்டல்.

    ReplyDelete
  9. இன்றைய இயந்திர உலகில் எத்தனை விடயங்களத் தொலைத்துவிட்டோம்.

    ReplyDelete
  10. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே...

    ReplyDelete
  11. அந்த டயர் வண்டியில இத்துப் போன ”ரிம்” போட்டு ஓட்டுவோம். அப்படி “ரிம்” போட்ட டயர் பணக்கார வண்டியாகும்... அடிக்குற ”கோல்”-ஐ பளபளப்பாக்கி ஹாண்டில் பார் கைப்பிடியைப் போட்டு அழகு பார்ப்போம். பால்ய காலத்திற்கே போய்ட்டு வந்திட்டேன்

    ReplyDelete
  12. நல்ல பதிவு. நானும் சைக்கிள் டயர் வண்டி ஓட்டியிருக்கிறேன். அப்போதைய சூழ்நிலையில் அது கேவலமாகத் தோன்றவில்லை. ஆனால் இன்றைய சூழலில் அதை மிகக் கேவலமாக நினைப்பார்கள். சைக்கிளையே கேவலமாகப் பார்க்கும் காலம் இது.

    ReplyDelete
  13. இதை படித்தவுடன் என் கண்கள் பழைய நினைவில் கலங்கிவிட்டன.யதார்த்தமான பதிவு.பதிவு பழைய காலத்திற்கு சென்றால் எவ்வளவு மகிழ்ச்சியளிக்கும் என்ர ஏக்கத்தை ஏற்படுத்தியது.ஆயிரத்தில் ஒரு பதிவு.மனதை பாதித்த பதிவு. நன்றி சகோதரா!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner