பாட்டியின் சுருக்கு பைகள். (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்…)


எனக்கு இரண்டு பாட்டிகள். ஒருவர் அம்மாவை பெற்றவள், அடுத்தவர் அப்பாவை வளர்த்தவள். அப்பாவை பெற்று கொஞ்ச நாளில் பாட்டி இறந்து போய்விட்டதாகவும், பாட்டியின் உடன்பிறந்த தங்கை சின்னபாட்டி அப்பாவை வளர்த்ததாக சொல்லுவார்கள்.



இரண்டு பேருமே வியாபாரிகள்… ஒருவள் ஜக்கெட் பிட்களை 20 வருடங்களுக்கு முன்பு வெயிலில்  விழுப்பரம் தெருக்களில் ஜாக்கெட்பிட்டே என்று கூவி விற்றவள்.

அப்பாவின் சித்தி கடலூர் லாரன்ஸ் ரோட்டில் 20 வருடத்துக்கு முன் இலைவியாபாரம் செய்து வந்தவள். இருவருமே வியாபாரிகள் என்பதால் அவர்கள் இடுப்பில் வைத்து இருக்கும் சுருக்கு பையில் எப்போதும் சில்லரைகள்  வியாபித்து இருக்கும்.
சில்லரைகள் எப்படியாவது ஐஸ் வைத்து  பாட்டியிடம் இருந்து வாங்கி அதில் உண்டை வாங்கி தின்பதுதான்  அப்போதைய எங்களது முக்கிய பொழுது போக்கு.

பாட்டி இரவு தூங்கும் போது அதில் இருக்கும் சில்லரைகள் எடுத்து காலையில் மஜாவாக சோன்பப்படி கேக் வாங்கி சாப்பிடுவதும், தேன் முட்டாய் வாங்கி, தேன் குறைவாய் இருப்பதற்க்கு வருத்தபட்டு அழுது புலம்புவதும் ரொம்ப பிடித்தமான ஒன்று.

அப்போது எல்லாம் பத்துபைசா இருபது பைசாவைவிட  எனக்கு நாலனா எட்டான மீதுதான் எனக்கு ஆர்வம்..அப்போது எல்லாம் ஒரு ரூபாய் என்பது எனக்கு 100 ரூபாய் கிடைத்த பேரானந்தம். இப்போதும் நகர்புற,கிராமபுற ஏழைகளுக்கு ஒரு ரூபாயில் ஒரு கிலோ அரிசி ஆசிர்வாதம்தான்.
பாட்டியிடம் எப்படியாவது ஆட்டைய போட்டு, ஐஸ் வைத்து சுருக்கு பையை, சுருக்கிய வயிற்று பகுதியில் இருந்து எடுத்து அதில் கீழ் பக்கம் விரல்களால் முட்டு கொடுத்து சுருக்கு பையில் வெற்றிலைக்கு சுண்ணாம்பு போட்ட விரல்களுடன் சில்லரைகளை தேடும் போதும், விரைவாக தேடும் போது சுருக்குபையின் உள்ளே பொங்குவது போலவும் இருக்கும்.


அது பொங்கி கொண்டு இருக்கும் போது அதில் வெற்றிலைகாம்பு, கொட்டை பாக்கு, இரண்டுரூபாய். ஒரு ரூபாய்,ஐந்துரூபாய் என  நான்காய் மடித்து வைக்கபட்ட தாள்கள், சாமி பிரசாத விபூதி குங்கும பொட்டலங்கள், சின்ன பாலிதீன் பைகளில் மடித்து வைக்கபட்ட நகைகடை அடகு சீட்டு என வந்து போகும்… அவ்வப்போது சில சில்லரைகளும் வந்து போகும்…
கிழவிகள் ரிலாக்சாக உட்கார்ந்து இருக்கும் போது காசு கேட்டால் நன்றாக புதையல்  தேடுவது போல் தேடி,சுருக்குபையில் இருந்து பத்து பைசா தூக்க முடியாமல் தூக்கி  கொடுப்பார்கள். இதுவே அவசரமாக கிளம்பும் போது காசு கேட்டால், சட்டென சுருக்கு பையை தூழாவும் போது கையில் கிடப்பதை கொடுத்து விட்டு போவார்கள்.. அதிஷ்டம் இருந்தால் நமக்கு அந்த நேரத்தில் ஒரு ரூபாய் கூட கிடைக்கும்.

சுருக்குபைகள் பல கலர்களில் இருக்கும்.  அந்த கயிறு முனைகளில் முக்கோண டிசைன்கள் வேறு கொடுத்து தைத்து  இருப்பார்கள்.. அதே பையில் ஒர கயிற்றின் நுனியில் பல்குத்தும் குச்சிகள் இரும்பில் இருக்கும், அதில் ஒன்றை பல்குத்தி பல்லிடுக்கில் இருக்கும் வெற்றிலைபாக்கு எடுக்கவும், எல் போல் ஷேப்பில் இருப்பதை காது குடையவும் பாட்டிகள் வைத்து இருப்பார்கள். கால் கவுலி வெற்றிலை,இரண்டு ரூபாய்க்கு மண்பாக்கு  வாங்கி சுருக்குபையை கர்பவதி போல் அக்கிக்கொண்டே இருப்பது என் பாட்டியின் பொழுது போக்கு.

கிராமபுற கோவில் திருவிழாக்களில் இரண்டு சுருக்கு பை  வாங்கி வைத்துக்கொண்டு ஆறு மாதத்துக்கு ஒன்று என்று மாற்றிக்கொள்வார்கள். வாழை வியாபாரம் செய்யும் பாட்டியின் சுருக்குபை வாழைகறைகள் ஏறிக்கிடக்கும். விபரம் தெரியாத போது அது அழுக்கு பை, கப்பு நாத்தபை என்று ஏளனம் செய்து இருக்கின்றேன். உழைப்பின் அருமை இப்போது தெரியும் போது அந்த வாழைகறை ஏறிய சுருக்குபையின் வாசம்   பிடிக்க இப்போது  மனது ஏங்குகின்றது. அதே போல் ஒரு மண் பாக்கு ஸ்மல் அடித்துகொண்டே இருக்கும்.

சமீபத்தில் சைதாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே பெரிய கறுப்பு நிற  இடுப்பில் அழுக்கு பாவாடையில் ஒரு நரிக்குறவ பெண் ஒருத்தி சுருக்குபை  மாட்டி இருந்ததை பார்த்தேன்.


சுருக்குபை வைத்து இருந்த பாட்டிகள் ரொம்பவும் வெள்ளந்தியாக இருந்தார்கள். எல்லாக்குழந்தைகளும் அவர்களுக்கு ஒன்றுதான். பக்கத்து வீட்டு குழந்தையாக இருந்தாலும் தாங்கள் வாங்கி வந்த தின்பண்டத்தில் பாதியை பகிர்ந்து அளிப்பார்கள். ஆனால் இப்போது உள்ள பாட்டிகள்   அப்படி இல்லை , பக்கத்து விட்டு பையனை விடுங்கள் குடும்பத்தித்தினுள்ளே மகள் குழந்தை மகளின் நாத்தனார் குழந்தை என பேதம் பார்க்கபடுகின்றது. இவைகளுக்கு சிரியலும் ஒரு காரணம்.

எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் எந்த பாட்டியும்  இப்போது சுருக்குபை வைத்துக்கொள்வது இல்லை. பைக்கு பதில் மார்டன் பாட்டிகள், ஜாக்கெட்டினுள் தொங்கிய மார்பு  இடைவெளிகளில் பர்ஸ் வைப்பது வழக்கமாகிவிட்டது.  பேருந்தில் பர்ஸ் எடுக்கும் முன் கண்டக்டருக்கு முதுகு காட்டி பர்ஸ் எடுத்து பிரித்து, சில்லரை எடுத்து கொடுக்கின்றார்கள்.  நாம்  கவனிப்பதை பார்த்து விட்டால் பாட்டிகளின் உதட்டில் சிறு புன்னகை பூக்கின்றது.  தாத்தாக்களின் காம பார்வையில் தாங்கள்  சிக்கிய அந்த காலத்து ஞாபகங்கள் போல அந்த புன்னகை தெரிவிக்கினிறது.

இப்போதும் சுருக்குபை பற்றி நினைக்கும் போது, அந்த ஆள்காட்டி சுண்ணாம்பு விரல்கள் சுருக்குபையினுள் சில்லரை தேடும் காட்சி நினைக்கும் போது அந்த உழைப்பாளி பாட்டிகளுக்கும் எப்போதும் சுடு மூஞ்சியை காட்டாத அந்த பாட்டிகளுக்கு எனது ராயல் சல்யுட்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

20 comments:

  1. நல்ல பதிவு,. எனக்கு என் அப்பாயின் (தந்தையின் தாய்) நினைவு வந்து விட்டது.
    பல வரிகள் அவருடன் ஒத்துபோவது இன்னும் மிக ஆச்சர்யம்,.

    ReplyDelete
  2. It's nice to read your 'Kaal ottathil kaanamal ponavaigal', since I am also in the same AGE group. The current generation may not know these things.

    ReplyDelete
  3. சுருக்குப்பை நினைவுகள் அழகு!!

    ReplyDelete
  4. அந்த நாட்களில், என் பாட்டி, கண்களால் பார்க்காமலே, தேவையான நாணயங்களை சுருக்குப்பையில் இருந்து எடுப்பதுக் கண்டு வியந்துப்போய் இருக்கிறேன்! உருண்டாலும், புரண்டாலும் திரும்பவும் வராத அந்த இனிய நாட்களை நினைவுப்படுத்தி கண்ணீர் மல்கவைத்துவிட்டீர்கள் ஜாக்கி! நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  5. என் தந்தை வழிப் பாட்டா நான் அறிந்தவரை காவியுடுப்பில் தான் கண்டேன். அவர் ஒரு காவிச் சுருக்குப்பை வைத்திருந்தார். அதனுள் வீபூதி; சில்லறைக் காசு தான் இருக்கும்.
    தாய் வழிப்பாட்டி வெற்றிலை போடுவார். அவற்றை வைத்திருக்க பனை ஓலையில் அவரே இழைத்த ஒரு கையடக்க மணி பேர்ஸ் போல் சுமார் 3 உள் அடுக்கு அறையுடன், மூடியும் உடைய ஒன்று
    வைத்திருந்தார், அதனுள் ஒரு அறை தாள் சில்லறைக் காசுகள் இருக்கும்.அவர் காலத்தவர்கள் பலர் அதை ஈழத்தில் வைத்திருந்ததைப் பார்த்துள்ளேன். வண்ண ஓலைகளால் இழைத்து அவர் அவர் கலா
    ரசனையுடன் திகழும்.
    அதற்கு ஒரு பெயர் உண்டு. முற்றாக மறந்து விட்டேன்.அதைக் கேட்கக் கூடியவர்கள் இப்போ யார்?
    உள்ளார்கள் எனச் சிந்திக்கிறேன்.

    ReplyDelete
  6. அழகான நினைவுகள்

    ReplyDelete
  7. சுருக்குப்பை போல டிசைனில் பெரிய பேக் ஒன்று என்னிடம் இருக்கிறது. அதில் உள்பக்கம் ரெக்சின் இருப்பதால் ..சின்னப்பையன் ஸ்விமிங்க் க்ளாஸ் எடுத்துப்போவான்..

    எங்கம்மா கொஞ்ச நாள் முன்பு சின்ன அழகான சுருக்குப்பை ஒன்றை என் மகளுக்கு பரிசாகக் கொடுத்தார்கள்..

    ReplyDelete
  8. உங்கள் பாட்டியின் நினைவுகளை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  9. அருமையான பதிவு

    ReplyDelete
  10. என் பாட்டியின் ஞாபகம் வந்து விட்டது... நம்ம தாத்தா அனுபவிச்சதை நம்ம அப்பா அனுபவிக்கலை. நம்ம அப்பா அனுபவிச்சதை நாம அனுபவிக்கலை. நாம அனுபவச்சதை நம்ம புள்ள அனுபவிக்க போரதுல்லை.
    ஆனா எல்லாத்துலையும் இருக்குற ஒரு உண்மை என்னன்னா.. எல்லாருக்குமே அவங்க அவங்க childhood is special and pleasant.

    ReplyDelete
  11. கடந்து போன காலத்தை மீட்டுப் பார்ப்பது மிகவும் ஆனந்தம்

    ReplyDelete
  12. Nice flashback... a few months back I saw them @ pothys. I don't know they are for sale or free .

    ReplyDelete
  13. வணக்கம்...

    நல்ல அனுபவ கட்டுரை....

    ஆழ்ந்து வாசித்தேன்.... ரொம்ப நல்லா இருக்கு...

    அப்புறம் மூன்றாம் நபருக்கே அவரு, அவங்க என்று உபயோகிக்கும் போது, நம்ம பாட்டி அவங்களை அவள், இவள் என்று சொல்ல வேண்டுமா? இலக்கண நடை அவர்களுக்கு வேண்டாமே...

    அருண் பிரசங்கி

    ReplyDelete
  14. Dear Jacky , i lile u r blog. but intha cover story la unga mela enaku kovam. nama patty lam vasula mutha vainga, avaingala aval , eval nu poitu erukinga , avainga nu soili eruinthiga na nalla eruinthu erukum. nan unga kita eruinthu ippadi onu nan ethirpakkala. pl thappa soili eruintha sorry.

    ReplyDelete
  15. நல்ல பதிவு ஜாக்கி!
    யாழ்பாணத்தில் பனை ஓலையில் செய்த பெட்டியும், மூடியும் வைத்திருப்பார்கள் பாட்டிகள். ஒரு மணிபர்ஸ் மாதிரி...'கொட்டப்பெட்டி' ன்னு பெயர் சொன்னதாக ஞாபகம்.
    அதைத்தான் 'யோகன் பாரிஸ்' சொல்கிறாரோ என்னவோ..
    நன்றி ஜாக்கி!

    ReplyDelete
  16. நல்ல பதிவு ஜாக்கி!
    யாழ்பாணத்தில் பனை ஓலையில் செய்த பெட்டியும், மூடியும் வைத்திருப்பார்கள் பாட்டிகள். ஒரு மணிபர்ஸ் மாதிரி...'கொட்டப்பெட்டி' ன்னு பெயர் சொன்னதாக ஞாபகம்.
    அதைத்தான் 'யோகன் பாரிஸ்' சொல்கிறாரோ என்னவோ..
    நன்றி ஜாக்கி!

    ReplyDelete
  17. ஏதாவது பான்சி ஸ்டோர்ல கேட்டு பாருங்க... இப்போல்லாம் நிறைய டிசைன் வைத்த சுருக்கு பைகள் வந்தாச்சு... ராஜஸ்தானி ஸ்டைல்ல நிறைய கண்ணாடி வேலை செய்த சுருக்கு பைகள் பொண்ணுங்க மத்தியில இன்னிக்கு பேமஸ்... என்ன அந்த காலத்துல வெத்தலை பாக்கு, சில்லறை வைக்கப் பயன்பட்டது இன்னிக்கு மொபைல் போன் வைக்க பயன்படுது... அவ்வளவு தான் வித்தியாசம்... (அன்னிக்கு சுருக்கு பையை மாட்ட பாடிமார்களுக்கு இடுப்பும், சேலையும் இருந்துச்சு... இன்னிக்கு பொண்ணுங்க மத்தியில இதுவும் மிஸ்ஸிங்)...

    ReplyDelete
  18. நல்ல பதிவு ..... எனது பாட்டியின் நினைவுகள் என் முன்னே விரிகிறது ...
    இன்றைய அளவும் கிராமத்தில் வசிக்கும் அவள் பயன்படுத்துவது சுருக்கு பை தான்.... இவைகள் அனைத்தும் இனிய நினைவுகள் என்று இன்று தான் உணர்ந்தேன்...

    ReplyDelete
  19. "ஜீ... said... .'கொட்டப்பெட்டி' ன்னு பெயர் ".

    ஆமாம்.சரி. எங்கள் அம்மம்மா வைத்திருந்தார்.

    இப்பொழுது வர்ணத்துணிகளால் தைக்கப்பட்ட நாகரீக சுருக்குப்பைகள் வந்திருக்கிறது.என்னிடமும் உண்டு :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner