டேப்ரிக்கார்டர் கேசட் என்கின்ற ஆடியோ கேசட்… கா..ஓ..கா.. போனவைகள்…


என்  வீட்டில் பாடல் கேட்க வேண்டும் என்றால்  ஒரு பிலிப்ஸ் ரேடியோ அப்போது என் வீட்டில் இருந்தது… அதில்தான் 80களில் பாடல் கேட்போம்… இப்போது போல் எந்த புது படத்தின் பாடல்களும் அப்போது உடனே ரேடியோவில் ஒளிபரப்பமாட்டார்கள்… 3 வருடத்துக்கு பிறகுதான் அந்த பாடல்  ஒளிபரப்பபடும்… இதுதான் அப்போதைய தலைஎழுத்து…..எனக்கு இப்போதும் நன்றாக நினைவு இருக்கின்றது…எனக்கு பிடித்த முதல் பாடல் கிராமபோனில் போட்டு ஸ்பீக்கர் வழியாக, காது கிழிய வைத்த பாடல் என்றால், அது கமலின் மூன்றாம் பிறை படத்தில் வரும்  முன்ன ஒரு காலத்துல என வரும் நரிக்கதை பாடல்தான்…. அப்போது சீத்தாபதி என்ற உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு அப்படி   சத்தமாக போட்டு எங்கள் கிராமத்து காதை கிழித்து தொங்கவிட்டனர்…..

அதன்பிறகு நான் ரசித்த பாடல் டாலிங் டார்லிங் ஐலவ்யூ என்னை விட்டு போகாதே.. என்ற பிரியா படத்தின் பாடல்கள்தான்...   எங்கள் ஊரில் எந்த வீட்டில விசேஷம் என்றாலும் அங்கு சவுண்ட் செட் போடும் இடத்தில் போய் நிற்போம்… அப்படி ஒரு ஆர்வம்….
ஒருமுறை முழு ஆண்டு பள்ளி விடுமுறைக்கு, நான் என் ஆயா வசித்த விழுப்புரத்துக்கு போனேன்… அங்கு மந்தகரையில் உள்ள அமைச்சார் கோவில் நிர்வாகி பழனிபிள்ளை என்பவர் வீட்டில் முதல் முதலாக டேப்ரிக்கார்டரை பார்க்கின்றேன்…

அவர்கள் வீட்டில் எப்போதும் தாய்வீடு படத்தில் வரும் ஜாஹோ.. ஜாஹோ உன்னை அழைத்தது கண்... உறவை நினைத்தது பெண் என்ற பாடலை திரும்ப திரும்ப கேட்பார்கள்..  அதே பாடலை நனும் திரும்ப திரும்ப கேட்க அந்த டேப்ரிக்கார்டர் மேல் எனக்கு மெல்ல காதல் பிறந்தது… பிற்காலத்தில் எனக்கு மென்மையான பாடல்கள் பிடிக்காமல் வெஸ்டர்ன் இசை அதிகம் பிடிக்க இதுதான் முதல்  காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றறேன்….


அதன் பிறகு என் அத்தை வீட்டில் தக்காய் கம்பெனியின் பெட் செட்  ஒன்று இருந்தது.. அதில் அன்பேவா படத்தில் வரும் ஒரு டயலாக்…. என்னது கஷாயமே தான் என்று நாகேஷ் சொல்ல சரோஜாதேவி  யாருக்கு என்று கேட்க??? நகேஷ் பாலுவுக்கு என்று சொல்லும் அந்த இரண்டு வார்த்தையை மட்டும், ஒரு ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டு இருப்போம்…

யாருக்கு பாலுவுக்கு.. யாருக்கு பாலுவுக்கு என்று விடாமல் கேட்டு கேட்டு சிரித்துக்கொண்டு இருப்போம்….ஒரு கட்டத்தில் அந்த பிளே பட்டன் மற்றும் ரிவைன்டிங் பட்டன் எல்லாம் எங்கள் மீது காரி துப்ப தொடங்கிவிட்டது… 

குணா படம் அதில் கடிதம் பாடலில்  கமல் ஒரு முக்கு முக்கு விட்டு ம்ஹும் இது மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதக்காதல் அல்ல  என்று சொல்லும் அந்த இடத்தில் முக்கும் இடத்தை மட்டும் தனியாக கேட்டு பாருங்கள்…. காலையில் ஆய் வரவில்லை என்றால் முக்குவது போல் அந்த சவுண்ட் இருக்கும்… அதையும் சலிக்க சலிக்க ரிவைண்ட் செய்து கேட்டு கேட்டு சிரிபோம்... அது ஒரு அழகிய காலம்...

நான் தனியாக அது போலான ஒரு தக்காய்  பெட் செட் வாங்கி சொந்தமாக 30 ரூபாய்க்கு ஒரு ஆடியோ கேசட் வாங்கி நான் கேட்ட முதல் பாடல் தளபதி படத்தில் வரும் ராக்கம்மா கையதட்டுதான்…ஏ பக்கத்தில் தளபதி பி பக்கத்தில் சேரன்பாண்டியன்… அதில்  கண்கள் ஒன்றாக கலந்ததோ.. என்ற பாடல் அதிகம் கேட்டு இருப்பேன்…
அதன் பிறகு லோக்கல் ஆடியோ கேசட்டில் இரண்டு படங்கள் காமினேஷனில் வாங்கி கேட்பேன்…

நான் தனியாக டிடிகே கேசட் வாங்கி அதில் எனக்கு பிடித்த பாடல்களை நான் எழுதிக்கொடுத்து கேசட் கடையில்  அவைகளை ரெக்கார்ட் செய்தேன்…

பிரம்மாபடத்தில்…. குஷ்பு பாடும்  இவளொரு  இளங்குருவி,அமரன் படத்தில் ஸ்ரீ வித்யா பாடும் பாம்பாயி பாலா என்ற குத்து பாட்டு என அது போல் மாற்றி மாற்றி பல பாடல்கள் ரெக்கார்ட்செய்து வைத்து இருந்தேன்… இதில் என்ன கொடுமை என்றால் அவ்வப்போது சிக்கி எல்லா நல்ல பாடல்களும் வீணாகிவிடும்.. கேசட்டை இரவல் வாங்கி செல்பவர்களும் அதனை ஒழுங்காக திரும்ப தரமாட்டார்கள்..


கடலூர் டூ பாண்டி செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் நிச்சயம் இளையராஜா பாட்டு ஓடிக்கொண்டு இருக்கும்…  காரணம் நல்ல பேஸ் வைத்து பேருந்து கடக்கும் போது கும் கும் என்று சத்தம் வெளியில் கேட்கும்…

மிக முக்கியமாக…தெய்வவாக்கு படத்தில் வரும், வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் என்ற இளையராஜா பாடலை கேட்டால் அவ்வளவு சுகமாக இருக்கும்… பேருந்தை ஒட்டிக்கொண்டே ஒரு கையால் கேசட் முடிந்ததும் திருப்பி போட டிரைவர் முயற்ச்சி செய்யும் போது எல்லாம் அல் இல்லாமல் பயணிப்போம்… இருந்தாலும் பாடல் முக்கியம் அல்லவா???

அதன் பிறகு சிடி வந்தது…. அவ்வளவுதான் ஆடியோ கேசட்டுக்கு பெருத்த அடி… கொஞ்சநாளில் எம்பி3 வந்தது… ஒரு பக்கத்துக்கு 6 மறுபக்கத்துக்கு 6 என பார்த்து பார்த்து தேர்ந்து எடுத்து பயணம் செய்த, ஆடியோ உலகம் ஒரேநாளில் 20 ஆடி பாய்சலில் ஒரு சிடியில்150 பாடல்கள் வரை கேட்கும் தொழில்நுட்பம் வந்ததும்…அடிக்கடி சிக்கிக்கொள்ளும் தொல்லையில் இருந்து தப்பித்தோம் என்று நான் உட்பட எல்லோரும் நினைத்தோம்….

சமகால வாழ்க்கையில் செம போடு போட்ட டேப்ரிக்கார்டர் என்ற ஆடியோ கேசட்டை இப்போது யாரும் சீண்டுவது இல்லை… நம்மோடு இருந்து கால ஓட்டத்தில் காணமல் போனைவைகளில் இதுவும்  ஒன்று....அதன் பிறகு டேப் கேசட்டை  நான் உபயோகபடுத்தவே இல்லை….

மூன்பு எல்லாம் ரோடுகளில் குப்பைகளில் ஆடியோ டேப்பின் ரீல்கள் எல்லா இடத்திலும் சிக்கலாக சிக்கி காற்றில் படபடத்துக்கொண்டு இருக்கும் இப்போது அப்படி இல்லை…. அது போலான காட்சி இப்போது காணகிடைப்பதில்லை…..

வெகு நாட்களுக்கு பிறகு என் கல்லூரியில் ஸ்டாப்புகளுக்கு மட்டும் ஒரு பங்ஷன் நடைபெற்றது.. அதில் எதாவது ஒரு திறமையை வௌபடுத்த வேண்டும் என்ற அன்பு கட்டளையை பிரின்சிபல் போட… எல்லோருக்கும் அதனை வழி மொழிவதை தவிர வேறு வழியில்லை….

நான் பாடல் பாடுகின்றேன் என்று சொல்லி விட்டேன்…. எனக்கு முன்பு பாடிய அட்மினில் இருக்கும் அக்கவுண்ட் பெண்மணி, அழகிய அசுர அழகிய அசுரா என்று ஓப்புவித்து விட்டு போனார்… நான் போனேன்..காதலனும் காதலியும் தனிமையில் இருக்கும் போது பேச நிறைய விஷயங்கள் இருக்கும் போது சமுகத்தினை பற்றி யோசிக்கும் இந்தபாடல் என்னை மிக கவர்ந்த பாடல் என்று இன்ட்ரோ சொல்லி விட்டு…. அழகன் படத்தில் வரும் ஜாதிமல்லி பூச்சரமே என்ற பாடலை பாடினேன்….

ஜென்ஸ் ஸ்டாப்களில் நான் சிறந்து பாடியதாகவும்… அந்த அழகான இன்ட்ரோவுக்காகவும் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார்கள்….எனக்கு ஆர்வத்தோடு கலர் கவரை  பிரித்து பார்த்து விட்டு, வெறுத்து போய்விட்டேன்…. அதை தூக்கி போடவும் எனக்கு விருப்பம் இல்லை… காரணம் எனது 32 வருட வாழ்க்கையில் பலர் முன்னிலையில் கைதட்டலோடு நான்  வாங்கிய முதல் பரிசு அது…..

அந்த பரிசு… சிவாஜி படத்தின் ஆடியோ கேசட் அதனை டேப்ரெக்கார்டரில் மட்டுமே போட முடியும்… இன்னமும் தூக்கி போட மனமில்லாமல் சீல் உடைக்கபடாமல் சிவாஜிதபாஸ் என்ற வாசகத்தோடு ரஜினி நின்று கொண்டு இருக்கும்,அந்த ஆடியோ கேசட் என் வீட்டில் இன்னும் பத்திரமாக இருக்கின்றது….

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

16 comments:

 1. என்னிடம் இருந்த 200 கேசட்டுகளையும் இரண்டு டேப் ரெகார்டர்களையும் எனக்கு மிகவும் பிடித்த 50 கேசட்டுகளை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை என் வீட்டு வேலைக்காரிகளுக்கு கொடுத்து விட்டேன். என்னுடைய காரில் இருந்த கேசட் பிளேயரைக் கழட்டி அதற்கு தனியாக ஒரு பாக்ஸ்+ஸ்பீக்கர் செட் செய்து மாட்டி வைத்து, அதில் கேசட்டுகளை அவ்வப்போது கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

  கம்ப்யூட்டர் மூலம் அவைகளை CD ஆக கன்வெர்ட் செய்தும் வைத்திருக்கிறேன். MKT, பி.யு. சின்னப்பா பாடல்களை விட முடியுமா?

  ReplyDelete
 2. ணா..ரொம்ப அருமையான பதிவு. நா ரேடியோ குறித்து எழுதனும்னு நெனச்சிருந்தேன். உங்களது இந்தப் பதிவு அதை மேலும் தூண்டியுள்ளது. எக்கோ கம்பெனி காஸெட் தான் எங்க வீட்டில அதிகமா இருந்தது காஸெட்டுக்னு ஒரு கலர் இருக்கும். (இப்பவும் எங்க வீட்டில் காஸெட் உபயோகித்து வருகிறோம்). மாறுபட்ட ஒரு பதிவை படித்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது.

  ReplyDelete
 3. நினைவுகளை கிளறி விட்டதற்கு நன்றி. அனைத்தும் வீட்டில் பத்திரமாக பெட்டியில் உள்ளன. பதிவு செய்ய கொடுத்த பேப்பருடன். எப்போதாவது எடுத்துப் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கும். எப்போதுமே சந்தோஷம் என்பது அனுபவிக்கும்போது தெரிவதில்லை. இப்போது எல்லாப் பாடல்களும், ஒரே கிளிக்கில் வந்தாலும், ம்ம்ம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஏண்டா, பாடம் எடுத்து படுத்தினது போதாதுன்னு பசங்கள பாட்டு பாடி வேற படுத்தி இருக்கியா நீயி??

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 5. 10 நிமிடங்கள் பழைய நினைவுகளில். அருமை

  ReplyDelete
 6. நானும் இத பத்தி சொல்லிருக்கேன். paarunkalen

  http://sirippupolice.blogspot.com/2010/05/blog-post_13.html

  ReplyDelete
 7. "குத்து பாட்டு என அது போல் மாற்றி மாற்றி பல பாடல்கள் ரெக்கார்ட்செய்து வைத்து இருந்தேன்…"

  இந்த முறையில் பதிவு செய்யப் பட்ட கஸ்ஸெட்ட்-கள் இன்றும் என்னுடைய அப்பா பத்திரமாக வைத்துள்ளார். அந்த நேரத்தில் இந்த மாதிரியான பாடல்களை பதிவு செய்ய என்னுடைய அப்பா, என் அம்மாவிடமும் என் பாட்டியிடமும் நிறைய திட்டு வாங்கி இருக்கிறார்.

  அப்பொழுது அவர்கள் கேட்டதற்க்கு என் மகன் இந்த பாடல்களை எதிர் காலத்தில் என் பெயர் சொல்லி கேட்டு மகிழ்வான் என்று கூறி இருக்கிறார்.

  ஆனால் தொழில்நுட்பம் 120 பாடல்களை ஒரே தட்டில் அடக்கும் வரை வளரும் என்று அவரு கனவில் கூட நினைத்ததில்லை என்று இந்த முறை ஊருக்கு சென்றிருந்த பொது மிகுந்த கவலையுடன் தெரிவித்தார்.

  இதற்க்காகவே அவருக்கேன்றே நான் ஒரு பிலிப்ஸ் செட் ஒன்று வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். கண்டிப்பாக அவருக்கு நான் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

  பழைய நினைவுகளை நினைவூட்டியதற்க்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 8. ஹூம் அது ஒரு கணா காலம், ரஹ்மான் பட பாடல் கேசட்களை ரிலீஸ் அன்றே கடைகளில் வரிசையில் நின்று வாங்கியது நினைவுக்கு வருகிறது. ஜீன்ஸ் படம் என நினைக்கிறேம் கேசட்டுக்கு முன் பதிவெல்லம் செய்தார்கள்.

  ReplyDelete
 9. கேஸட் கவருக்கு தகுந்த மாதிரி படங்களை வாரப் பத்திரிகைகளிலிருந்து கட் பண்ணி அழகு பார்ப்பேன். நான் வச்சிருந்தது வாக்மென் அதிலிருந்து நானே செய்த ஆம்பிளிபையர் மற்றும் மண் பானையில் ஸ்பீக்கர் செட் செய்து அலற விடுவேன்....இப்போ 160 ஜிபி 3000 பாட்டுகள் 20..30 படங்கள் என Apple ipod இருந்தும் எப்பவாவதுதான் ரஸிச்சு பாட்டு கேட்க முடிகிறது

  ReplyDelete
 10. நீங்கள் படத்தில் போட்டிருக்கும் அந்த ட்ரான்ஸ்பரண்டான டி.டி.கே கேசட் மீது எனக்கு தீராத காதல் 90 களில். அப்போதே ஒரு கேசட்டுக்கு பதிவு செலவு உட்பட ரூ 100 செலவு செய்து ஏராளமான கேசட்டுகள் சேர்த்து வைத்திருந்தேன். இன்று கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டன. நினைவு படுத்தியதற்கு நன்றி ஜாக்கி.

  ReplyDelete
 11. அருமை ஜாக்கி அண்ணே,
  ஒருகாலத்தில் எனக்கு சோறு போட்டதே இந்த கேசட்தாண்ணே...
  நான் எனது ஊரிலேயே சொந்தமாக ”ரதிமீனா மியுசிக்கல்ஸ்” கேசட் ரெக்கார்டிங் செண்டர் வைத்திருந்தேன் குறுகிய காலத்தில் நல்ல பிரபலமானது கொஞ்ச நாளிலேயே எங்கள் சுற்று கிராமங்களிலேயே ரதிமீனா மியுசிக்கல்ஸ் என்றால் தெரியாதவர்களே இல்லை என்ற நிலைக்கு வளர்ந்தது அதற்கு முக்கிய காரணம் பாடல் பதிவின் தரமும் வாடிக்கையாளர்கள் கேட்ட நேரத்தில் தாமதமில்லாமல் பாடல் பதிந்து கொடுப்பதுதான்...
  மியுசிக்கின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக எட்டாவது படிக்கும்போதே கேசட்டில் பாடல் பதிவது பற்றி சித்தாப்பாவின் நண்பர் மூலம் கற்றுகொண்டேன்
  கடை திறந்து நன்றாக போய்கொண்டிருந்தது CDMP3 PLAYER வரும்வரை இதன் வரவிற்கு பிறகு சுத்தாமாகவே வியாபாரம் நின்றுவிட்டது பிறகென்ன பாடல் பதிவதற்கு வாங்கிய ரெக்காடிங் கருவிகள் ஸ்பீக்கர்கள் அனைத்தயும் விற்றாச்சு ஒன்றைத்தவிர அது நான் பயன்படுத்திய AHUJA ரெக்கார்டிங் player
  இதை மட்டும் ஞாபமாக வைத்துகொண்டேன்...
  இப்போதும் எனது கடை உள்ளது ஆனால் வேறு வடிவில் ”ரதிமீனா டிஜிட்டல் பிளக்ஸ் & வீடியோ கவரேஜ்” என்ன செய்வது கால ஓட்டத்திற்கு ஏற்ற மாதிரி நாமும் மாறித்தானே ஆக வேண்டும் இதுதானே காலத்தின் கட்டாயமும் கூட எது எப்படியோ நீங்கள் எழுதிய பதிவின் மூலம் எனது பழைய நினைவுகள் மனதில் பசுமையாய் அசைபோட்டன... இதுவும் ஒரு சுகம்தான்
  ரொம்ம்ம்ம்ப நன்றிண்ணே....
  உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.....
  வாழ்த்துகளுடன்...
  மாணவன்

  ReplyDelete
 12. ஜாக்கி...

  கொசுவர்த்தி அழகாக சுத்தியது....

  எனக்கும் இது போன்ற பல நிகழ்வுகள் உண்டு... 80களில் இளையராஜா இசையமைத்த பாடல் கேசட் வாங்க மியூஸிக் கடைகளில் காத்திருந்தது நினைவுக்கு வந்தது... பிடித்த, பிடிக்காத நடிகர்களின் படங்களின் பாடல் கேசட்டும் இசைஞானி இளையராஜாவிற்காக வாங்குவோம்...

  ReplyDelete
 13. அண்ணே கொசுவத்தி அருமை
  நான் காசு திருடியாவது கேசட் வாங்கிவிடுவேன்,காலப்போக்கில் எல்லாம் குப்பையில்,ஆனால் அமெரிக்கர்கள் எதையும் இப்படி ஒழித்துவிடுவதில்லையாம்,இன்னும் டேப்ரிகாரடர்,எல்பி ரெகார்டு, 8எமெம் யூஸ் பண்ணுகிறார்கள்.

  ReplyDelete
 14. ஒலிப்பேழைகள் (கேசட்டுகள்) விரும்புவோருக்கு இப்போது இணையதளங்கள் உருதுணையாக வந்துள்ளன. Ebay.com, MusicStack.com, Ebid.net போன்ற பன்னாட்டு இணையதளங்களில் கேசட்டுகளுக்கென தனி பிரிவு ஏற்படுத்தியுள்ளனர். இப்போது தனிநபர் ஒலிப்பேசை கருவி (Walkman) Ebay, Indiatimes/20North இணையதளங்களில் கணிசமாக விற்கப்பட்டு வருகின்றன. இங்கு விலையுயர்ந்த "Tape Deck" என்கிற பதிவிகள் கூட விற்கப்பட்டு வருகின்றன. கேசட் இணையதளங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. என்கேயும் கிடைக்காதது இப்போது இணையதளங்களில் கொட்டியுள்ளது மகிழ்ச்சிக்குரியது. MP3 வடிவத்தில் கோப்புகள் கொட்டியுள்ளதை Philips நிறுவனம் இப்போது AZ1856 என்கிற மாடல் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு இதில் MP3ஐ நேரடியாக ஒரு கேசட்டில் பதிவு செய்யலாம். இதுவும் Ebayஇல் உள்ளது!!! 120 நிமிடங்கள் கொண்ட ஆடியோ கேசட்டுகள் என்கும் கிடைப்பதில்லை. இந்தியாவில் ஒரு கடையிலும் பார்க்க வாய்ப்பு இல்லை. இது Rakuten என்கிற ஜப்பான் நாட்டு இணையதளம் மூலம் உலமெங்கும் விற்கின்றனர். இந்த செய்தி அனைத்திலும் வியக்கத்தக்கது. TDK மற்றும் Maxell ஆகிய இரண்டு கேசட் முன்னணி நிறுவனங்களின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது!

  ReplyDelete
 15. Philips AZ1852 போன்ற‌ புதிய‌ MP3 <-> ஒலிப்பேழை இசை ப‌திவுக் க‌ருவிகள் SUNSTECH என்கிற‌ புதிய‌ ஜப்பான் நாட்டு நிறுவ‌ன‌ம் செய்து வ‌ருகிற‌து. "CX-UM551" என்கிற‌ க‌ருவியிலும் கோப்புகளை ஒலிப்பேழைக‌ளில் ப‌திவு செய்ய‌லாம்.

  http://sunstech.ae/details.asp?id=JPHQRPP8&tit=Portable%20CD%20RADIO%20system&model=CX-UM551

  இது "EBAY.IN" என்கிற‌ இணைய‌த‌ள‌த்தில் விற்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.


  SUNSTECH நிறுவ‌ன‌த்தின் இத‌ர‌ சாத‌ன‌ங்க‌ள் கீழுள்ள‌ இணைய‌த‌ள‌த்தில் ப‌ட்டியிலிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

  http://www.suns-corp.com/products/catalogue.cgi?in_kate=102

  http://www.suns-corp.com/products/catalogue.cgi?in_kate=103

  http://www.suns-corp.com/products/catalogue.cgi?in_kate=101

  ReplyDelete
 16. ஐயா தங்களிடம் தமிழில் "மீரா பஜன்" இருக்கிறதா? யார் பாடியது என்றும் எந்த கம்பேனி கேசட் என்றும் தெரியவிலை. மஞ்ச கலரில் கவர் இருக்கும் பாடல் மனசில் ஓடுகிறது (மெட்) கேட்க்க ஆசையாக இருக்கிறது. 1988 வாக்கில் வெளியானது, இருப்பின் கூறுங்கள் நன்றி.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner