காதலும்.. கழுத்தும்...காதல்  எந்த அளவுக்கு தெய்வீகமானது என்று சொல்லுகின்றார்களோ..?? அந்த அளவுக்கு பைத்தியக்காரதனங்களை அதிகம் உள்ளடக்கியது எனலாம்...

கைய  புடிச்சி இழுத்துட்டியா ?வடிவேலு ஜோக்ல சங்கிலி முருகன் சொல்லுவாரே..

ஏம்பா நான் சரியாத்தான் பேசறேனா? என்று ஒரு சந்தேக கேள்வி அடிக்கடி எழுப்புவாரே?

அது போல காதல் வயப்பட்ட காலங்களில் நாம் சரியாகத்தான் நடந்து கொள்கின்றோமா? என்ற கேள்விகள் அதிகம் எழும்பும்....துரை மற்றும் மூர்த்தி இரண்டு பேரும் நண்பர்கள்.. அவர்கள் எனக்கும்  நண்பர்கள்..ஹார்மோன் தொல்லை காரணமாக காதல் வயப்பட்டு தொலைத்தார்கள்.. அதன் பிறகு அவர்கள்  தொல்லை நிஜமாலுமே தாங்க முடியவில்லை..

காதலில் சோகப்பாடல்களாக கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.. முக்கியமாக டி ராஜேந்தரின்... தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்... போன்ற கருத்தாழமிக்க பாடல்களை கேட்டுக்கொண்டே இருப்பார்கள்..மாரியாத்தா கோவில் மாந்தோப்பில்தான் நாங்கள் சந்திப்போம்... எனக்கு நிறைய இன்பிரியாரிட்டி காம்ளக்ஸ் அதனால் எனக்கு காதல் என்பது என் வாழ்நாளில் வரவே வராது என்று எனக்கு நானே நினைத்துக்கொண்ட காலம் அது...அதனால் என்ன?? காதலித்தவர்கள் கதைகளை கேட்டு புளகாங்கிதம் அடைந்து கொள்வோமே என்று  அவர்கள் காதல் கதைகளை கேட்டுக்கொண்டு இருப்பேன்...

இரண்டு பேருமே சிகரேட்டை அனுபவித்து  இழுப்பார்கள்..காரணம் அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு இருக்கின்றார்களாமாம்..அவர்கள்  அக்கா தங்கைகளை காதலித்தார்கள்...எங்கள் ஊரில் முதன் முதலில் டாப்சும் ஸ்கார்ட்டும் அணிந்து கைனட்டிக் ஹோண்டா ஓட்டியவர்கள் அந்த பெண்கள்தான்.....அவர்கள் கைனட்டிக் ஹோண்டாவில் வேகமாக போக, மூர்த்தியும் துரையும் சைக்கிளில் நாக்கில் நுரைதள்ளும் அளவுக்கு கைனட்டிக் ஹோண்டாவை துரத்துவார்கள்.சில நேரங்களில் கைனட்டிக் ஹோண்டாவை பிடிக்க சைக்கிளுக்கு வேகம் தேவைப்படும் அல்லவா? அப்போது துரை சைக்கிளின் பின்பக்க கேரியரில் இரண்டு பக்கம் கால் போட்டு, முர்த்தி சைக்கிள்  மிதிக்க இவனும் கால் போட்டு எக்ஸ்ட்ரா குதிரை சக்தியை கொடுப்பான்.

அந்த பெண்களுக்கு இவர்கள் செய்யும் அழிச்சாட்டியங்கள் நன்றாக தெரியும், இருந்தாலும் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து இவர்களை மென்டல் ஆக்கிகொண்டு இருந்தார்கள்.

ஜாக்கி என்னை பார்த்து அவ சிரிச்சாடா? என்று மூர்த்தி எத்தனை முறை என்னிடம் சொல்லி இருப்பான் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்...

பத்து முறை..

ம்ஹும்

இருபது முறை....

ம்ஹும்

நாற்பது முறை

ம்ஹும்

மூர்த்தியின் காதலின் ஆழத்தை நீங்கள் அறியவில்லை..100முறைக்கு மேல் சொல்லி இருப்பான்...இதில் கொடுமை என்னவென்றால் அவர் எப்போதுமே மாமரத்தில் கை வைத்துக்கொண்டு எனக்கு முதுகு காட்டி தம் அடித்துக்கொண்டு இருப்பான்..அவ்வப்போது ஒரு இழுப்பு இழுத்து விட்டு, திரும்பி என்னிடம் அந்த பெண்ணை பற்றி பேசுவான்..எந்த படத்துல பார்த்து தொலைச்சானோ? அதுபோலவே அடிக்கடி பேசுவான்.. பிலிங்காம்..

ஒரு நாள் காலை காட்சி படத்துக்கு போய் விட்டு மதியம் சாப்பிட ஹோட்டலுக்கு போனோம்.. எவ்வளவு வற்புறுத்தியும் மூர்த்தி சாப்பிடவேயில்லை..துரையிடம் கேட்டேன் அவன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்..மூர்த்தி மூஞ்சை உம் என்று வைத்து இருந்தான்.அந்த பெண்கள் காலேஜிக்கு போகும் போது காலையில் கைனட்டிக்கை தன் சைக்கிளால்  மூர்த்தி இடித்து விட்டானாம்.. மதிய சாப்பாடு டப்பா கிழே விழுந்து ரொட்டில் அவர்களின் சாப்பாடு கொட்டி விட்டதாம்.. மதியம் சாப்பாடு இல்லாமல் அவன் ஆள் தவிப்பாள் என்றும் அதுக்கான தண்டனையாக, தான் சாப்பிடாமல் இருக்கின்றேன் என்றும் மூர்த்தி பிலிங்காக சொன்னான்..

இந்த கருமம் புடிச்சவனுங்க எந்த மேட்டரையும் சொல்லவே மாட்டானுங்க மூஞ்சை தூக்கி உம்னு வச்சிக்குவானுங்க..நாம வௌக்கெண்ணை போட்டு உருவி உருவிதான் மேட்டரை வாங்க வேண்டும்..அப்படி திரும்ப திரும்ப கேட்கவேண்டும் என்பதைதான் அவர்கள் விரும்புவர்ர்கள்..ஒரு முறை சொன்னா சொல்லு சொல்லாட்டி போ என்று நான் கிளம்ப... என்னை காலில் விழாத குறையாக உட்காரவைத்து  அன்றைய காதல் அட்வென்ச்சர் கதைகளை என்னிடம் சொல்லுவார்கள்..

ஒரு வாரம் கழித்து மாரியாத்தா கோவில் மாந்தோப்பில் சந்தித்தோம்..துரை தன் கன்னத்தை தடவிக்கொண்டு இருந்தான்..தூக்கம் இல்லாதது கண்களில் தெரிந்தது..நான் பார்க்கும் போது எல்லாம் வேண்டும் என்றே அவன் கன்னத்தை தடவி தடவி உச் கொட்டிக்கொண்டு இருந்தான்.. அதுக்கு காரணம் என்ன நடந்தது மச்சி என்று நான் கேட்கவேண்டும் என்பதே... நான் இன்னும் ஒரு பத்து உச் போகட்டும் என்று விட்டு வைத்தேன்.. நான் கேட்க நேரம் ஆனதால் மூர்த்தியும் கன்னத்தை தடவி உச் கொட்டினான்..

நான் என்னடா இரண்டு பேரும் கன்னத்தை தடவியபடி இருக்கிங்க? என்று கேட்டு வைத்தேன்.

மச்சி நேத்து எங்க  ஆளுங்க இரண்டு பேரும் முருகாலாயாவுல குணா படத்துக்கு போனாளுங்க...நாங்களும் போனோம்...

பஸ்ட் ஷோவா ?

இல்லை செகன்ட் ஷோ..

ஓ...

நாங்க அவளுங்களுக்கு பின்னாடி சீட்ல உட்கார்ந்துகிட்டோம்.. படம் ஆரம்பிச்சி ஒரு அரைமணிநேரம் கழிச்சி கரண்ட் போயிடுச்சி...ஜனரேட்டர் வேற ஒர்க் ஆகலை..


அப்புறம் என்னாச்சி..

தியேட்டர்ல ஒரே சவுண்ட்....ஒரு இருபது இருபத்த அஞ்சு நிமிஷம் கழிச்சி கரண்ட வந்துடுச்சி...

சரிடா..கரண்ட் போனதுக்கும் நீங்க ரெண்டு பேரும் வாயை தடவிகிட்டு இருக்கறதுக்கும் என்ன அர்த்தம் என்றேன்..

மச்சி கரண்ட போய் இரண்டு நிமிஷம் கழிச்சி எங்க பக்கத்து சீட்காரன் வத்திபெட்டி எடுத்து கிழச்சி கீழ விழுந்து போன பீடி கட்டை எடுத்தான்.. அப்ப எங்க இரண்டு ஆளுங்களோட கழுத்தை பார்த்தோம்..லைட்டா வேர்த்து இருந்துச்சி..அதனால..??

மச்சி நம்ம லவ்ஸ் ரெண்டு பேருக்கும் வேர்த்து போய் இருக்கு சும்மா இருக்க முடியுமா?? பேப்பர் எடுத்து விசிறி விட முடியாது..ஊர்காரபயபுள்ளைங்க எதாவது பார்த்து தொலைக்கும் அதனால ரெண்டு பேரும் பின் சீட்ல இருந்து சீட்டோட முன் பக்கம் வந்து உட்கார்ந்துகிட்டு  வாயால பலமா அவுங்க கழுத்துக்கு  ஊதிகிட்டு இருந்தோம் என்றான்..அதான் வாயெல்லாம் செமை வலி என்று சொல்லிவிட்டு ரெண்டு பேரும் பிலிங்காக என் முகத்தை பார்த்தார்கள்..என் ரியாக்ஷனுக்காக காத்து இருந்தார்கள்..

(அவாகள் நிஜமாலுமே ஊதி இருப்பார்களா என்ற சந்தேகம் உங்களுக்கு வந்து இருக்கலாம்.. சந்தேகமே வேண்டாம்.. அவர்கள் அப்படி பட்டவர்கள்தான்..காதலிக்காக டெடிக்கேஷனுக்கா டவுன் டூ எர்த் போகும் நபர்கள்..)

நான் அவர்களிடம் கை கொடுத்து கிரேட் என்றேன்.சான்சே இல்லை மச்சான்.. அந்த பொண்ணுங்க உங்களுக்குதான் என்றேன்..
இரண்டு பேரின் முகத்திலும் பெருமையும் ,சந்தோஷமும் பூத்து குலுங்கியது

காதலில் இவ்வளவு பைத்தியக்காரதனம் இருந்தால் காதல் மீது வெறுப்பு வந்து விடும் என்பதால் அதன் பிறகு அவர்களிடம் அவர்கள் காதல் எக்ஸ்பிரியன்ஸ் பற்றி நான் கேட்கவே இல்லை..மாரியாத்தா கோவில் மாந்தோப்புக்கும் போவதையும் தவிர்த்தேன்.

சில வருடங்கள் கழித்து.........

அக்கா தங்கை இரண்டு பேரையும் அவரின் அப்பா படித்த என்ஜீனியர்களுக்கு கட்டிக்கொடுத்தார்..

மூர்த்தி ஆசாரி வேலை செய்தான்.. திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்று மகிழ்வாக இருக்கின்றான்..அம்மா தெவஷத்துக்கு ஊருக்கு போன போது அந்த ரெண்டு பெண்களை வெள்ளிக்கிழமை மரியாத்தா கோவிலில் பார்த்தேன்..

இரண்டு பேருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள்..ஆட்டம் தாங்க முடியவில்லை...

டோண்ட் டூ தட் அகெய்ன்.. ஐ வில் பனிஷ் யூ..ஆர் ஐ வில் டெல் யூவர் பாபா என்று  அக்காகாரி கத்திக்கொண்டு பிள்ளைகளை மிரட்டிகொண்டு இருந்தாள்..

பூசாரி கொடுத்த விபூதியை தன் பிள்ளைக்கு வைக்க மூர்த்தி மற்றும் துரையின் முன்னால் லவ்ஸ்சுங்க இரண்டு பேரும் குனிந்தார்கள்... மூர்த்தியும் துரையும் வியர்வை போக்க வாயால் ஊதிய அவர்கள் இருவரின் கொடுத்து வைத்த கழுத்தை பார்த்தேன்... முன்னைக்கு கொஞ்சம் சதை போட்டு இருந்தது...பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

==========

குறிப்பு...

 துரை பற்றி எதுவும் சொல்லவில்லை என்று நீங்கள்  கேட்பது புரிகின்றது.. துரை இப்போது உயிரோடு இல்லை... துரை பற்றி மேலும்வாசிக்க இங்கே கிளிக்கவும்...


நினைப்பது அல்ல நீ...
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

2 comments:

  1. காதல் பற்றி எனக்கு அனுபவம் கிடையாது பாஸ்! அந்த விஷயத்தில் நான் கொடுத்து வைக்காதவன். ஒரு அழகான சிறுகதையைக் கொடுத்திருக்கிறீர்கள். நன்று!

    ReplyDelete
  2. எனக்கும் ஒரு நண்பன் இருந்தான்...இப்போதும் இருக்கிறான்... தன் காதலி நடந்து போன ரோடு என்று அதற்கு நேரடி முத்தம் கொடுத்தான். அவளுக்காக ஸ்கூல் விடும் நேரம் தலையில் செருப்புடன் நடந்தான். ஆனால் கைபிடித்ததோ கல்லூரியில் படித்த வேறு காதலியுடன். காதல் மனிதனை பையித்தியமாக்கும்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner