கிராம போன்..(பாகம்/11) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்


அந்த சாதனம் ஒரு திருமணவிழாவில் அறிமுகம் ஆயிற்று....அதன் பேர் கூட எனக்கு தெரியாது.... வட்டமாக சுற்றும் ஒரு கறுப்பு தட்டில் இருந்து பாடல்கள் கேட்கின்றன... அது எப்படி? என்று மண்டை குழம்பிய நாட்கள் அவை...

முதன் முதலில் அதனை பார்த்த போது அது எனக்கு ஒரு கதை சொல்லியாகத்தான் அது எனக்கு அறிமுகமாயிற்று...மூன்றாம் பிறை படத்தில் வரும்... முன்ன ஒரு காலத்துல... முருங்கை மர காட்டுக்குள்ள.. என்ற கதையைதான் நான் முதன் முதலில் அதில் கேட்டேன்.. இன்னும் கூட எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது... எங்கள் ஊரில் சீத்தாபதி என்ற உறவினரின் திருமணத்துக்கு மைக் செட் வைத்து பாட்டு போட்டார்கள்.. அப்போதுதான்... அது எனக்கு பரிட்சியம்..

அது வட்டமாக ஒரே வேகத்தில் சுற்றுவதை இமை கொட்டாமல் ரசித்த பார்த்து கொண்டே இருந்து இருக்கின்றேன்... அப்படி கூட்டமாக அதனை சூழ்ந்து கொண்டு பார்க்கும் பிள்ளைகளை விரட்டுவதே முழு நேர தொழிலாக மைக் செட் போடுபவர் வைத்துக்கொண்டு இருப்பார்... வடாம் காய வைத்து விட்டு காக்காய் விரட்டுவது போல் இருக்கும் அந்த காட்சி...

பார்க்கும் பசங்களும் சும்மா இருக்க மாட்டார்கள்... ஓடுவதை நிறுத்தினால் என்னாகும் என்பதை சோதிக்க சட்டென ஓடும் பிளேயரை கை வைத்து மைக் செட் போடுபவரின் வயிற்றில் கிலி ஏற்படுத்துவார்கள்..

அதன் பிறகு அது எல்லார் வீட்டு விசேஷத்துக்கும் தாய் மாமன் முறை செய்ய வருகின்றாரோ இல்லையோ???.. மைக் செட் முதன் முதலில் விசேஷ வீட்டில் தன்னை முன்னிறுத்தி கொள்ளும்...

எங்கள் ஊரில் ஆனந்தன் சவுன்ட் சர்விஸ் என்று ஒரு மைக்செட் கடை இருந்தது... அவர்களுக்கு வேலை இல்லாத போதும் அல்லது புதிய ரெக்கார்டு வாங்கி வந்த போதும் அதனை டெஸ்ட் செய்ய ரோட்டில் இரண்டு பெரிய புனலை கட்டி ஊருக்கே பாட்டு போடுவார்கள்....

திருவிளையாடல் ,சரஸ்வதி சபதம் இந்த இரண்டு படத்தின் உரையாடல் தொகுப்பை மார்கழி மாதத்தில் விநாயகருக்கும்,முருகனுக்கும், அம்மனுக்கும் சலிக்க சலிக்க புனலை வைத்து விடியலில் 4,30மணிக்கு தினமும் போட்டு விடுவார்கள்....

அதன் பிறகு தேய்ந்த ரிக்கார்டாக இருந்தால் ஒரு வரியை திரும்ப திரும்ப கத்திக்கொண்டு இருக்கும்... எங்கள் ஊரில் திருவிளையாடல் டயலாக்கில் விறகு வாங்கலையோ விறகு... இந்த வரி வந்தால் அது சண்டித்தனம் செய்யும் அதே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லும்.. அந்த இடத்தில் மைக் செட்காரர் அருகில் இருந்தால் அந்த முள்ளை சட்டென அந்த இடம் விட்டு எடுத்து பக்கத்து கோட்டில் வைப்பார்... இல்லையென்றால் அதே வரியில் கடைசிவரை ஓடிக்கொண்டே இருக்கும்....

அதே போல் எந்த இடத்தில் ஸ்டக் ஆகும் என்பது மைக்செட்காரருக்கு அத்துபடி.. அந்த வரி வரும் போது ரெடியாக இருப்பார்.... அது அவமானமான விஷயமாக எங்கள் ஊரில் பார்க்கபட்டது...

ஒரு சாக்கு பையில் பாட்டு ரிக்கார்டுகள் வைத்து இருப்பார்கள்.. அதை மாற்றுவதை பார்க்க இருக்கும் பிள்ளைகள் எதிரில் பயங்கர ஷோ காட்டியபடி அடுத்த பாடல் ரிக்கார்ட் மாற்றியதை இப்போது நினைக்கும் போது செம காமெடியாக இருக்கின்றது...

சென்னை வானொலியில் இதே போல் ரெக்கார்ட் பிரச்சனை வரும் போது நிலையத்தில் எற்பட்ட சிறுதடங்கல் காரணமாக பாடலில் ஏற்பட்ட தடைக்கு வருத்தம் தெரிவிப்பார்கள்.....

இப்போது எல்லாம் அப்படி வருத்தம் தெரிவிக்க வாய்ப்பே இல்லாதது போல்
விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றுவிட்டது... 7மணிக்கு மருதமலை மாமணியே முருகைய்யா...போட்டு கீற்றுக்கொட்டகையில் படம் ஆரம்பிக்க போகின்றது என்று அறிவித்த சாதனம் இன்று சுவடு இல்லாமல்.....

குறிப்பு... இது பற்றிய உங்கள் அனுபவங்கள் பின்னுட்டம் மூலமாக....


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

8 comments:

 1. நானும் அப்படி அந்த ரெக்காடு போடுவதை பார்த்திருக்கிறேன்...
  டான்சை அல்ல, டான்சை அல்ல டான்சை அல்ல என்று கூவி கூவி மறுத்து... இதை பற்றி மேலும் சொல்ல.. அந்த ரெக்காடு, டான்சு ஆடியாதை சொல்ல எனது அண்ணன்கள் கே_____ மற்றும் த__________ அவர்களை எதிர்பார்த்து இருக்கிறேன்...

  ReplyDelete
 2. //வடாம் காய வைத்து விட்டு காக்காய் விரட்டுவது

  அருமையான உவமை.

  சின்ன வயதில், குண்டூசியை வைத்து, கருப்புத் தட்டில் வேகமாக சுற்றினால், பதிவு செய்யப்பட்ட எதோ பாடல் வரும். ஒரு 10 செகண்ட் பாடல் மட்டுமே வரும் அதில். விளையாண்ட அனுபவம் இருக்கிறது.

  ReplyDelete
 3. //எங்கள் ஊரில் ஆனந்தன் சவுன்ட் சர்விஸ் என்று ஒரு மைக்செட் கடை இருந்தது... அவர்களுக்கு வேலை இல்லாத போதும் அல்லது புதிய ரெக்கார்டு வாங்கி வந்த போதும் அதனை டெஸ்ட் செய்ய ரோட்டில் இரண்டு பெரிய புனலை கட்டி ஊருக்கே பாட்டு போடுவார்கள்....

  எனது உறவினரின் கிராமத்தில் இருந்த டூரிங் டாக்கீசில் படம் ஆரம்பிப்பதற்கு முன் மாலை 6 மணிக்கு "விநாயகனே வினை தீர்ப்பவனே" என்ற பாடலை தான் இரண்டு பெரிய புனலை கட்டி கிராமத்துக்கே ஒலிபரப்புவார்கள். இப்பொழுது கிராம போனும் இல்லை, டூரிங் டாக்கீசும் இல்லை :(


  பாடல்: விநாயகனே வினை தீர்ப்பவனே
  பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

  விநாயகனே வினை தீர்ப்பவனே
  வேழ முகத்தோனே ஞால முதல்வனே
  விநாயகனே வினை தீர்ப்பவனே

  குணாநிதியே குருவே சரணம்
  குணாநிதியே குருவே சரணம்
  குறைகள் களைய இதுவே தருணம்

  விநாயகனே வினை தீர்ப்பவனே
  வேழ முகத்தோனே ஞால முதல்வனே
  விநாயகனே வினை தீர்ப்பவனே

  உமாபதியே உலகம் என்றாய்
  ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
  கணநாதனே மாங்கனியை உண்டாய்
  கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

  விநாயகனே வினை தீர்ப்பவனே
  வேழ முகத்தோனே ஞால முதல்வனே

  ReplyDelete
 4. நான் இதை பார்த்தது
  கூட இல்லைணே....
  பகிர்வுக்கு
  நன்றி

  ReplyDelete
 5. அண்ணே,
  எங்க வீட்டுல ஒரு ரெகார்ட் ப்லேயர் இருந்தது,அதுவும் வழக்கொழிந்து விட்டது,க்ராமபோன் அனுபவங்கள் மிக அருமை

  ReplyDelete
 6. First time posting comment. When I am reading this article, it takes me my olden golden memory days.Nice post.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner