வஞ்சரம் (சிறுகதை)

சொக்கலிங்கத்தின் இரண்டு மாத தாடி அவர் முகத்துக்கு சற்றும் பொறுத்தம் இல்லாமல் இருந்தது...
அவரை தாடியில் இதுவரை நான் பார்த்ததே இல்லை..சொக்கலிங்கத்தை இரண்டு குழந்தைக்கு தகப்பன் என்றோ அல்லது ஐம்பதுவயதை கடந்தவர் என்றோ நேரில் அவரை பார்ப்பவர்கள் யாரும் சொல்லடாட்டார்கள்.. 

அப்படித்தான் அவரின் துணைவியாரும்....அவரும் பார்க்க சின்ன பெண் போலவே இருப்பார்...இவ்வளவு ஏன் சொக்கலிங்கம் தம்பதிகளுக்கு இருபத்தி இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கின்றான் என்று சொன்னால் யாரும் நம்பவேமாட்டார்கள்...

எங்கள் ஏரியாவில் இருக்கும் ஒரே கிராமத்து வெள்ளாந்தி முகம் சொக்கலிங்கம் அவர்களின் முகம்தான்.ஒரு சாராசரி தமிழ்நாட்டு கிராமத்து வாசியை நினைவுபடுத்தும் அவது முகம். சொக்கலிங்கம் புறநககரில் நான் இப்போது வாங்கிய புது வீட்டுக்கு கொல்லைபுறத்துக்காரர்..


முகலிவாக்கத்துக்கு பக்கத்தில் விவசாயம் செய்வது ஒரு அவமரியாதையாக நினைத்து நன்கு விளைந்த நிலத்தை ஆறிய மைசூர் பாகுவில் கோடு கிழித்து துண்டு துண்டாக ஆக்கி விற்பது போல விளைநிலத்தை அவரது விவசாய தோழர்கள் விற்ற போது தனது இரண்டு ஏக்கர்  நிலத்தை இன்னும் விற்காமல் விவசாயம் செய்பவர் அந்த எரியாவில் சொக்கலிங்கம் மட்டும்தான்..அதனால்தான் எங்கள் ஏரியாவில் சுற்றிலும் கான்கிரிட் காடுகளுக்கு மத்தியில் நெல்லும் கத்திரியும் சில நேரங்களில் வெண்டையும் விளைத்து அந்த ஏரியாவை பசுமையாக ஆக்குகின்றது.....


சட்டை இல்லாமல் நாங்கள் வசிக்கும் தெருக்களில் ஒரு துண்டை தோளுக்கு கொடுத்தபடி நடப்பவர் அவர்மட்டும்தான்.... எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர்.. நான் எனது பிளாட்டில் குடி போகும் போது எனக்கு பல வகையில் உடல் உழைப்பாக உதவி செய்தவர். அவரின் இரண்டு ஏக்கர் நிலத்தின்  இன்றைய மதிப்பு 50 கோடிக்கு மேல்...ஆனால் ஒரு போதும் அந்த பணக்கார புத்தியும் அலட்சியமும் அவரிடத்தில நான் பார்த்ததே இல்லை.


சொக்கலிங்கத்தின் மனைவியும் அவரை போலவே... என் விட்டில் எந்த விசேஷம் என்றாலும் எங்கள் வீட்டு பெண்மணி போல எடுத்துகட்டி வேலைசெய்வார்...அவர் சொந்தமோ பந்தமோ இல்லை...என் வீட்டு விசேஷத்தில் நடந்த விருந்தின் போது எச்சில் இலைகளை கூச்சம் எல்லாம் பார்க்காமல் எடுத்து போட்டவர்..

 நான் அசைவ உணவை விரும்பி சாப்பிடுவேன்... ஆனால் என்மனைவி சைவப்பிராணி என்பதை தெரிந்து கொண்ட சொக்கலிங்கத்தின் மனைவி, எப்போது மீன் குழம்பு வைத்தாலும் ஐந்து துண்டு குழம்பு மீனோடு, இரண்டு வறுத்த மீனையும் அவரின் இரண்டாவது பையனிடம் கொடுத்து அனுப்புவார்..எப்போது சிக்கன் வறுத்தாலும் கால்கிலோ அளவுக்கு என் ஒருவனுக்கு கொடுத்து அனுப்புவார்கள்..

ஊரில்  உள்ள குழந்தைகள் எல்லாம் சொக்கலித்தின் மனைவிகாட்டும் அன்பில் நெகிழ்ந்து அவர் வீட்டில் விளையாடிக்கொண்டு இருக்கும்.. அவரின் பக்கத்து வீட்டுக்கார பெண்மணி குழந்தை பெற்று மூன்று மாதத்துக்கு பிறகு சொக்கலிங்கம் மனைவியிடம் ஒப்படைத்து விட்டு  வேலைக்கு போகின்றார்... அந்த அளவுக்கு அவர்களுக்கு குழந்தைகள் மேல் பிரியம்...


என் வீட்டு கொல்லைபுறத்தையும் அவர் வீட்டு கொல்லைபுறத்தையும் பிரிப்பது ஒரு சின்ன மதில் சுவர்தான்...சொக்கலிங்கம் வீட்டில் கேஸ் அடுப்பு போன்ற இன்றைய நவீன சாதனங்கள் இருந்தாலும் இன்னமும் சொக்கலிங்கத்தின் மனைவி, அடுப்பில் சுள்ளி விறகு எரியவைத்துதான் சமையல் செய்வார்... வாணிலியில் மல்லாட்டை வறுத்தலோ அல்லது வற்றல் வறுத்தாலும் எதுவாக இருந்தாலும் வாஞ்சையோடு வேண்டாம் என்றாலும் வற்புறுத்தி கொடுப்பார்கள்..ஏங்க. வெளிய போய்கிட்டு இருக்கேன்..எனக்கு இப்ப வேண்டாம் என்றாலும் இதை ரெண்டை வாயில போட்டுகிட்டு போங்க என்பார்கள்...


காலையில் கொல்லைபுறத்தில் வாயில் பிரஷ்ஷோடு நிற்கும் போது நானும் அவரும் பல அரசியல் காமெடிகளை பேசி சிரித்து இருக்கின்றோம்..தினமும் எதாவது பேசிக்கொண்டு இருப்போம்... ஆனால் நான் இரண்டு மாதமாக  சொக்கலிங்கத்தையும் அவர் மனைவியையும் சந்திப்பதை தவிர்த்து வந்தேன் காரணம்  அந்த இரண்டு மாத தாடி சோகம்தான்...

இரண்டு மாதத்துக்கு முன் அந்த திடும் என்ற செய்தி என்னை தாக்கியது... சென்னையில் கடற்கரையில் நண்பர்களோடு கடலில் குளிக்க போன சொக்கலிங்கத்தின் பெரிய மகன், கடல் சுழலில் சிக்கி இறந்து விட்டான் என்று.... உடல் இரண்டு நாட்களுக்கு கரை ஒதுங்கவே இல்லை...மூன்றாவது நாள் முட்டுக்காடு அருகில் கரை ஒதுங்கியது.... சொக்கலிங்கம் தம்பதிக்கு ஊரே ஆறுதல் சொல்லியது... நான் அவர் மகனின் இறுதி சடங்கு முழுவதும் உடன் இருந்து சொக்கலிங்கம் தம்பதிக்கு நான் அறுதல் கூறினேன்...

நான் ஒரு வாரத்துக்கு மூட் அப்செட்..அவர் பையனிடம்  இந்த ஒரு வருடத்தில் இரண்டு ஒரு வார்த்தை மட்டுமே பேசி இருப்பேன்... இரண்டு வாரத்துக்கு கொல்லைபுறத்துப்க்கம் போகவேயில்லை.ஒரே அழுகையும் கேவலுமாக இருந்தது...இருபத்தி இரண்டு வயதில் ஒரு மகனை இழப்பது சாதாரண விஷயமா? சொக்கலிங்கத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாதது..புத்தரசோகம் உலகத்தில் இருக்கும் சோகத்திலேயே பெரிய சோகம் அல்லவா?? அதனால் சொக்கலிங்கம் தம்பதியர் அவரின் இறந்து போன மகனை பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்கள்...

யப்பா என் புள்ளை சிங்கம் போல இருப்பானே??
இன்னைக்கு எல்ல அவன் நடையையும், அவன் பைக் ஓட்டறதையும் பார்த்துகிட்டு இருக்கலாமே.....அந்த அளவுக்கு அவன் ஸ்டைலா இருப்பானே என்று மார்பில் அடித்துக்கொண்டு திடிர் திடிர் என்று அழுதார்கள்... அதனால்  கொல்லைபுறத்துபக்கம் நான் செல்வதற்கு அதிகம் யோசித்தேன்... என் வீட்டில் டிவியை கூட சத்தமாக வைக்காமல் சப்தம் குறைத்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தேன்..


ஒரு மாதத்துக்கு பிறகு அவர்கள்  இயல்பு நிலைக்கு வந்தார்கள்.. சொக்கலிங்கமாவது ஓரளவுக்கு இயல்புக்கு வந்தாலும்.. கொல்லைபுறத்தில் உட்கார்ந்த படி விறகு அடுப்பில் சமையல் செய்யும் போதோ அல்லது கைவேலையாக புளி ஆய்ந்தாலோ, அல்லதுதென்னை ஓலையில்  தென்னந்துடப்பம் பிரித்தாலோ
இறந்து போன மகனை பற்றி பேசாத நாளே இல்லை..அதனால் இரண்டு வார்த்தை பேசி விட்டு அந்த இடத்தை நான் காலி செய்து விடுவேன்....

இன்று வேலை முடிந்து  வீட்டின் கொல்லைபுறம் வந்தேன் சொக்கலிங்கம் தம்பதியினர் மற்றும் இரண்டு மூன்று அவரது உறவினர்கள் உட்கார்ந்து இருந்தார்கள்...  சொக்கலிங்கத்திடம் நம்ம ஏரியாவில் ஈபியில் இருந்து வந்து மீட்டர் ரீடிங் எடுத்து சென்று விட்ர்களா? என்று கேட்டேன்..இன்னும் இல்லை என்றார்... நான் உடனே போக எத்தனித்தேன்...ஒரு தட்டில் ஐந்து பெரிய துண்டு வஞ்சரம் மீன் வைத்து என்னை தின்னக்கொடுத்தார்கள்..

நானும் ரொம்ப நாள் கழித்து அசைவ உணவை பார்த்த மகிழ்ச்சியில் எதை பற்றியும் யோசிக்காமல் தட்டை வாங்கி இரண்டு சின்ன பிஸ்களை சாப்பிட்டு இருப்பேன்..

பெரியவனுக்கு சங்கரா மீனுன்னா உசுரு.. வறுத்து வறுத்து போட போட தின்னுகிட்டே இருப்பான்..15 துண்டுக்கு மேல அவன் ஒருத்தனே சாப்புடுவான்.... என்று சொல்ல...

நான் வஞ்சரம் மீனில் இருந்து கையை சட்டென எடுத்து விட்டேன்.. எனக்கு தர்மசங்கடமாக போய்விட்டது...ஆனாலும் மீன் ரூசி எனக்கு சாப்பிடும் ஆவலை அதிகபடுத்தினாலும் அந்த பையனின் முகமும் நினைவுக்கு வந்தகாரணத்தால் நான் சாப்பிடுவதில் தேக்கம் வந்து விட்டது... எனக்கு மீன் ருசித்து சாப்பிடும் ஆசையே போய்விட்டது.....

நேத்து டெத் சார்ட்டிபிகேட் வாங்க போனேன்..இருபத்திஇரண்டு வயசுல இறப்பா?ன்னு சர்ட்டிபிகேட் கொடுக்கற கவர்மென்ட்ஆபிசரு வருத்தபடறான்....இந்த காசு பணத்தை கொட்டிக்கொடுத்த ஆணடவன் என்புள்ளையை இப்படி அல்பாயுசுல எடுத்துக்கிட்டானே என்று ஓங்கி குரல் கொடுத்து அழுதார் சொக்கலிங்கம்..... சட்டென அழுகையை நிறுத்தினார்.. இயல்பாய் இறந்து போன பிள்ளையை பற்றி பேசினார்...

என்னால் என்ன செய்வதென்று தெரியவில்லை இன்னும் தட்டில் மூன்று வஞ்சரம் துண்டுகள்.. ம்... இன்னும் ஏன் தயக்கம் சீக்கரம் தின்னு தொலைத்து இருக்கவேண்டியதுதானேன்னு என் மனசாட்சியோடு மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தன.. சரி அப்படியே வச்சிட்டு போயிடலாமா? என்னசெய்வதென்று எனக்கு தெரியவில்லை...

சொக்கலிங்கம் நிறுத்துவார் என்று எதிர்பார்த்தேன்... அவர் தொடர்ந்தார்..

எப்ப நிலத்துல களை எடுக்க போனாலும், படிச்சவன் கொழா போட்டவன்னு எந்த டீசன்டும் பார்க்காம லுங்கி கட்டிகிட்டு என்புள்ளை என் கூட களை எடுக்கவருவானே??? இனிமே யாரு எங்களுக்குன்னு இருக்காங்க....???

அவன் போனப்பவே எங்களுக்கு எல்லாம் விட்டு போச்சு... இப்ப கூட உயிர்வாழனுமேன்னுதான் நான் வாழறேன், சாப்பிடறேன் என்றார்.... அவர் சொன்ன கடைசி வாக்கியத்தை நான் பலமாய் ஆமோதித்தேன்...

அவரிடம் மீன் வைத்து கொடுத்த தட்டை மதில் சுவரை தாண்டி நீட்டினேன்..
அதில் சொக்கலிங்கம் வைத்து கொடுத்த ஐந்து வஞ்சரம் மீன் துண்டின் சற்றே தடிமனான முட்கள் மட்டும் இருந்தன.. 


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...




=========================

8 comments:

  1. எப்படி சொல்வது என்று தெரியவில்லை..
    புகழ்ச்சிக்காக அல்ல..
    அருமையான சிறுகதை...
    மனதில் நிற்கிறது...

    ReplyDelete
  2. அருமையான சிறுகதை. உண்மை சம்பவமா?

    ReplyDelete
  3. மீன் முற்கள் என் தொண்டையை அடைக்கிறது.

    ReplyDelete
  4. அடுத்த முறை பொறித்த மீன் சாப்பிடும் போது தாடி வைத்த முகம் ஞாபகத்திற்கு வரும்....

    ReplyDelete
  5. // அடுத்த முறை பொறித்த மீன் சாப்பிடும் போது தாடி வைத்த முகம் ஞாபகத்திற்கு வரும்

    //

    இந்த கதைக்கு இந்த ஒரு கமெண்ட் போதும்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner