தானே புயல்.. கதி கலங்கிய கடலூர்.




25 வருடங்கள் என் இன்பதுன்பங்களில் இரண்டற கலந்து போன நகரம்...கடலூர் நகரின் அனைத்து சாலைகளும் எனக்கு பரிச்சயம்..


சேப்ட்டி பின்னில் இருந்து பிலாஸ்மா டிவி வரை எங்கே கிடைக்கும் என்று  சகலமும் எனக்கு அத்துப்படி...


மனது கவலையாக இருந்தால்,எங்கள் ஊர் சில்வர் பீச்சுக்கு செல்வது வழக்கம்...தமிழகத்தின் இரண்டாவது பெரிய கடற்கரை எங்கள் கடலூர் சில்வர் பீச்தான்..

சில்வர் பீச்சுக்கு  சென்றால் மனது லேசாகும்... இன்னும் கடலில் ஒரு குளியல் போட்டால் மனது இன்னும் லேசாகும்.. ஆனால் சில சமீபத்திய சரித்திர நிகழ்வுகள் அதே சில்வர் பீச்சை மையபடுத்தி நடந்தது.. ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகள் நடக்கும் போது, நான் எனது ஊரில் இல்லை சென்னையில் இருந்தேன்...



சில்வர் பீச்சை மையபடுத்தி நடந்த இரண்டு நிகழ்வுகள்... ஒன்று சுனாமி மற்றது இரண்டு நாளைக்கு முன் கடலூரில் கரையேறிய தானே புயல்...

சுனாமி  சீரமைப்பு பணிகளை,செய்ய கடலூருக்கு பாலிவுட் பிரபலம் விவேக் ஒபராய் வந்த தங்கி ஒரு வாரத்துக்கு மேல் பொதுமக்களுக்கு உதவிகள் செய்தார்... அதே போல சுனாமி பாதித்த பகுதிகளை சில வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபர்  பில்கிளின்டன்  பார்வையிட்டு சென்றார்.. அது என்னவோ கடலூருக்கு அப்படி ஒரு வசீகரம்..

வானிலை செய்திகள் டிவியில் பார்க்கும் போது எங்கள் ஊரில் மிக அதிகமாக நக்கலுக்கு உள்ளானவர்.. வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன்தான்.. காரணம் அவர் வானிலை அறிவிப்பை  உச்சரிக்கும் தொனி....
 

எங்கள் ஊர் அம்மாவாசை தமுக்கு போடும் போது, கத்தி பேசுவது போல அவர்  சொல்லும் அறிவிப்பு இருக்கும்....

நாளைக்கு சாயங்காலம்...... கூத்தப்பாக்கம் களத்தூர் கோவில்ல...... ஊர் கூட்டம் நடக்கபோவுது....ஆறுமணிக்கு எல்லாரும் கலந்துக்கனும் சாமியோவ்... என்று சொல்லி தமுக்கு போடுவது போல  அவர் சொல்லும் வானிலை அறிவிப்பு இருக்கும் என்று என் அத்தை வீட்டில் சொல்லி  சொல்லி சிரித்தது உண்டு..

ஆனால் தானே புயலுக்கு பிறகு  வானிலை ஆய்வு மைய அதிகாரி ரமணன்தான் இனி கண் கண்ட  தெய்வமாக கடலூர் மக்களுக்கு மாறிவிட போகின்றார்..... காரணம் புயல் ஏற்படுத்திய பயம்....

என் அப்பாவுக்கு 63 வயது அவர் வாழ்க்கையில் இப்படி ஒரு புயலை பார்த்தது இல்லை என்று வியக்கின்றார்....1972ல் இது போல ஒரு புயல் கடலூரை போட்டு  வாட்டியது என்றாலும் அது இந்தளவுக்கு சேதத்தை  ஏற்படுத்தவில்லை...ஆனால் இந்த புயல் ஏற்படுத்தி இருக்கும் சேதம் சொல்லி மாளாதது...

வழக்கமாக புயல் அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுக்கும்....  நாகப்பட்டினம் நெல்லூர்  இடையில் கரையை கடக்கும் என்று சொல்லுவார்கள்...மழை பெய்து கொண்டு இருக்கும். எல்லோரும் இரவில் படுத்து தூங்குவார்கள்.. காற்று வீசும் போது கொஞ்ச நேரத்துக்கு மின்தடை இருக்கும்.. காலையில் எழுந்து செய்தி பார்க்கும் போது, ஒன்று புயல் வலுவிழந்து இருக்கும், அல்லது நெல்லூர் அருகே புயல் கரையை கடந்து இருக்கும்  என்ற தகவலை  சொல்லுவார்கள்.. ஆனால் இந்த முறை அப்படியே மாறித்தொலைத்தது காலம் செய்த கோலம்.....

கண் எதிரில் சின்டெக்ஸ் டேங் பறந்து இருக்கின்றது...  எங்கிருந்தோ வாழை மரம் குலையுடன்  வேரோடு பறந்து வந்து  வீட்டு வாசலில் விழுந்து இருக்கின்றது.. ஆஸ்பிட்டாஸ் ஷீட் போட்ட வீடுகளின் கூரைகள் பல கிலோமீட்டருக்கு பறந்து போய் விழுந்து இருக்கின்றன..
 
கூரை விடுகள் அனைத்தும் முள்ளம் பன்றி போல சிலிர்த்து சின்ன பின்னாமாகி இருக்கின்றது...

ரயில்வேஓடு போட்டவீடுகளில் ஓடுகள் பறந்து போய் இருக்கின்றன..


ஹாலிவுட் படமான டுவிஸ்டரில் மாடுகள் பறப்பது போல தென்னை மரத்து தென்னங்குலைகள் ,முறிந்து பறந்து வந்து பலர் வீட்டு வாசலில் விழுந்து இருக்கின்றன....

ஜெ சசி நட்பு படக்கென்று முறிந்தது போல, இரண்டு மாடிகளுக்கு மேல் கம்பீரமாக தகவல்களை பரப்பிக்கொண்டு இருந்த செல்போன் டவர்கள் முறிந்து விழுந்து கிடக்கின்றன...

ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் மின் சப்ளை சரி செய்யப்படும் என்று சொன்னாலும் ஆறு  மணி நேரத்துக்கு மேல் மழையில்லாத காலத்தில் மின்தடை எங்கள் ஊர் கடலூரில் இருந்தது... இரவு நேரத்தில் வரும் மின்சாரத்தை பயண்படுத்தி மக்கள் வாழ்ந்து வந்தார்கள்..ஆனால் இப்போது அதுவும் இல்லை....

புயல் முடிந்து இன்னும் ஒரு வாரம் கழித்து தான் மின்சாரம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கின்றார்கள்..

பாட்டாளி மக்கள் கட்சி  போராட்டத்தின் போது மரங்களை ரோட்டில் வெட்டி போட்டு ஸ்டிரைக் செய்ததுக்கு பிறகு, கடலூரில் இயற்கை தானேவை துணைக்கு அழைத்து அசோகர் காலத்து மரங்கள்  என்று நாங்கள் சிறு வயதில் நினைத்த பெரிய மரங்கள் எல்லாம் அடியோடு புரட்டி போட்டு இருக்கின்றது..

மின் கம்பங்கள் எல்லாம் பாதியில் ஒடிந்து தொங்குகின்றன..

புதுவையில் பாதிப்புகள் ஏராளம்.. நேரான வீதிகள் கொண்டதால் தானே வெகு இலகுவாக சாலைகளில்  தடையில்லாமல் பயணித்து இருக்கின்றது..

புதுவையின் குட்டி பாண்டி பஜார் என்று அழைக்கபடும் நேரு வீதியில் லஞ்சம் வாங்கி கொண்டு புதுவை நகராட்சி அனுமதித்த கடைகளில் உள்ள பெயர்பலகைகள் எல்லாம் துவம்சம் செய்து இருக்கின்றன...

பாரதி பூங்கா மற்றும் புதுவை தோட்டக்கலை பூங்காவில் எல்லா மரங்களும் வேரோடு  சாய்ந்து இருக்கின்றன..
 
மின்சாரம் இல்லாமல் மோட்டர் இயங்காத காரணத்தால் கக்கா போனால் கூட கழுவ தண்ணி இல்லாமல் தவித்து போய் இருக்கின்றார்கள் கடலூர் புதுவை  பொதுமக்கள்...

ஏர்டெல் செல்போன்  கோபுரங்கள் சரிந்த காரணத்தால் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியவில்லை.,..

மின்சாரம் இல்லை...  டிவி இல்லாத காரணத்தால் வெளிஉலக தொடர்பே இல்லாமல் இருக்கின்றார்கள்,...கடலூர் மக்கள்...

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து போய் இருக்கின்றது...  கார் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போட்டும் கொண்டு இருக்கின்றார்கள்.. புதுவையில் ஒரு சில இடங்களில் மின்சாரம் இருக்கின்றது... செல்போனுக்கு சார்ஜ் போட கடலூரில் இருந்து பாண்டிக்கு போய் வருகின்றார்கள்..

 ரோடு எங்கும் சாலை ஓரம் இருந்த  எல்லா மரங்களும் ஈழப்போரில் வீழ்ந்த தமிழர்கள் போல விழுந்து நாதி அற்று கிடக்கின்றன....

மரவாடி உள்ளே போனால் மரம் அறுத்து  போட்ட வாசமும் மரத்தூளும் தரை எங்கும் சிதறி இருக்குமே அது போல சாலை எங்கும் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி போட்டதால் மரவாடி உள்ளே நடந்து போன உணர்வை பிரதான சாலைகள் தருகின்றன என்று நண்பர்கள் சொல்லுகின்றார்கள்...


எல்லா தென்னை மரங்களும் சாமி வந்த பெண்களின் தலையில் இருக்கும் கூந்தல் போல அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன.

ஆறு ஐஏஎஸ் மாவட்டத்தின் மத்தியில் உட்கார்நது கொண்டு தங்கள் பணியை திறம்பட செய்து வருகின்றார்கள்.. முதல் தேவை மின்சாரம் என்பதால் ஐந்து மாவட்டத்தை சேர்ந்த மின்சார ஊழியர்கள் ஆயிரத்துக்கு மேல்  இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்..

திருப்பாபுலியூரில் இருக்கும் எங்கள் செயின்ட் ஜோசப் பள்ளியில்  இருக்கும் சர்ச்சில் பலகாலமாக கம்பீரமாக காட்சி  அளித்த  கான்கிரீட் சிலுவை தலைக்குப்புற கவிழ்ந்து தரையில் கிடக்கின்றதாம்...

புயல் விடியல் காலையில் கரையை கடந்த காரணத்தால் பெருமளவு உயிர்  சேதம் தவிர்க்க பட்டு இருக்கின்றது...

காற்று ஊவ் ஊவ் என்ற சத்தத்தடன் பேய் காற்று வீசி இருக்கின்றது...

திருமணம் முடிந்து மணமக்கள் பெரியவர்கள் காலில் நெடுஞ்சான் கிடையாக விழுந்துஆசிர்வாதம் வாங்குவது போல, தரையில் சலனமற்று விழுந்து கிடக்கின்றன வாழைத்தோப்பு வாழை மரங்கள்

மின்சாரம் இல்லாத காரணத்தால் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமல் தவித்து போய் இருக்கின்றார்கள், பணம் இருப்பவர்கள் கூட கைமாத்தாக பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். பெட்ரோலுக்கு மக்கள் அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

கடலூரில்  அரை லிட்டர் பால் 60 ரூபாய்க்கு விற்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.. ஆனால் இன்று காலை ஆவின் பூத்துகளில் அமைச்சர் சம்பத் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரண்டு பேரும் திடிர் ரெய்டு நடத்தி இருக்கின்றார்கள்... நன்றி...


அயர்ன் பண்ணாத உடையுடன் வேலைக்கு போவதை நினைத்து நண்பர் ஒருவர் மிகவும் புலம்புகின்றார்..

நாதஸ்வரம் மற்றும் அத்திபூக்கள் பற்றி எந்த தகவலும் அறியாமல் பெண்கள் கலக்கத்தில் இருக்கின்றார்கள்..

டிவி இல்லை என்பதால் புயல் கொடுத்த தாக்கத்தில் பயத்தில் இருக்கும் கடலூர் வாசிகளை நேற்று இரவு பரவிய வதந்தி தூக்கத்தை கெடுத்து திகிலில் ஆழ்த்தி விட்டது...

நிலநடுக்கம் வந்து விட்டது என்று இரவில் பரவிய வதந்தி காரணமாக குடும்பத்துடன் ரோட்டுக்கு  வந்த பயத்துடன் இரவை கழித்து இருக்கின்றார்கள்..

இன்று  காலை இரண்டு மணியில் இருந்து போன்  செய்து டிவியில் நிலநடுக்கம் பற்றி என்ன செய்தி  தொலைகாட்சியில் சொல்லுகின்றார்கள்.. என்று கேட்டபடி இருபதுக்கு மேற்ப்பட்ட அழைப்புகள் கடலுரில் இருந்து எனக்கு வந்தன....

வதந்தி கிளப்பிய பொறம்போக்கு பயபுள்ளை விபரமாக புயல்,மழை,சுனாமி  போன்றவற்றை கண்டுபிடித்து அறிவிக்கலாம்.. ஆனால் பூகம்பத்தை எந்த விஞ்ஞானத்தாலும் கண்டு பிடிக்க முடியாது என்று சொல்லி வைக்க....

படித்தவர்களை கூட இந்த லாஜிக் யோசிக்க வைத்த காரணத்தால் அவர்களும் குடும்பத்துடன் வீட்டுக்கு வெளியே வந்து எனக்கு போன் செய்து தகவல் உண்மையா என்று கேட்கின்றார்கள்...

இங்கே எழுதிய அனைத்து தகவல்களையும் எனது நண்பர்களிடம் கேட்டு  நான் எழுதியவை..


வதந்தி தகவலை உடனே சொன்னது சன் செய்திகள்..

பட்.. எங்க ஊர் மக்களின் துயர் துடைக்க உடனே களமிறங்கியது புதிய தலைமுறை தொலைகாட்சிதான்..

எஸ் ஆர் எம் பேருந்துகளில் நிறைய வாலின்டியருடன் களம் இறங்கி இருக்கின்றார்கள்..பிரட் பெட்ஷீட் போன்றவற்றை பாதிக்கபட்ட மக்களுக்கு கொடுத்து இருக்கின்றார்கள்..

செய்தியை டிஆர்பி ரேட்டிங்க மட்டும் கவனித்தில் கொள்ளாமல் பாதிக்கப்டட மக்களும் தண்ணீர் தேவையை உணர்ந்து சென்னையில் இருந்து  தண்ணி லாரிகள் கடலூரை நோக்கி  செல்ல வைத்த புண்ணியம் புதியதலைமுறை தொலைகாட்சிக்கே சாரும்....

புதியதலைமுறை தொலைக்காட்சிக்கும் உதவ வேண்டும் என்ற அந்த நல்ல எண்ணத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

இன்னும் நான் கடலூருக்கு போகவில்லை... சில விடியோ காட்சிகள் மற்றும் புகைபடங்களை பார்த்த போது எனது நண்பன் சுபாஷ் சொன்ன வாங்கியங்கள்  நினைவுக்கு வந்தது..

புயல் கடந்த மூன்று மணி  நேரம் கழித்து எனது நண்பர் சுபாஷை தொடர்புகொண்டேன்.

மச்சி நம்ம ஊர் எப்படி இருக்கு??

மச்சி  கடலூரையும் பாண்டியையும், பெரிய மிக்சியில் போட்டு ஆடிச்சா மாதிரி இருக்கு என்றான்... சேத புகைபடங்களையும் வீடியோக்களையும் பார்க்கும் போது அந்த வாக்கியங்கள்தான்  எவ்வளவு உண்மையானவை...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


குறிப்பு.. நிவாரணபொருட்கள் எல்லாம் தேவனாம் பட்டினம் புதுப்பாளையம், மஞ்சக்குப்பம்,தாழக்குடா போன்ற பகுதிகளில் மட்டுமே வினியோகிக்கபடுகின்றதாம்..ஆனால் திருப்பாபூலியூர், கூத்தப்பாகம், பாதிரிக்குப்பம், கேஎன் பட்டை, திருவந்திபுரம்,வெள்ளைக்கரை, போன்ற மலைகிராமங்களும் பலத்த சேதத்துக்கு உள்ளாகி இருக்கின்றன அந்த பகுதி மக்களுக்கும் நிவாரண பொருட்கள் கிடைத்தால் மகிழ்வேன்..




=========


நீங்களும் உதவலாம்:
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு - தொடர்புக்கு
98404 83160,
98404 83120,
044-45969500.

நன்றி புதியதலைமுறை....



புகைபடங்கள்... ஹிந்து மற்றும் நெல்சன். நன்றி..
 ============

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

14 comments:

  1. இயற்கையின் சீற்றத்தில் இருந்து யார் தான் தப்புவது அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  2. ஒவ்வொரு வருடமும் பயங்காட்டி கிட்டு இருந்தது நடந்தே விட்டது :-(

    ReplyDelete
  3. very sorry to hear the news jackie i hope it will be alright soon

    ReplyDelete
  4. மிகமிக வருந்துகிறேன். புயல் புதுச்சேரியை குலுக்கிப் போட்டு விட்டது என என் நண்பர் சொன்னார். கடலூரிலும் இவ்வளவு பாதிப்பு நிகழ்ந்திருப்பது மனவேதனையை அளிக்கிறது. பாவம் கடலூர்வாசிகள்.

    ReplyDelete
  5. நெய்வேலி போயிருக்கீங்களா ஜாக்கி!நிலக்கரி நகரம் தொழில் மாடல் நகரம் என்பேன்.பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த மரங்களனைத்தும் வேர் பிடிங்கப்பட்டு விட்டன என செய்தியறிந்தேன்.

    ReplyDelete
  6. இந்த சூழ்நிலையில் கடவுள்தான் மக்களைக் காப்பாற்றமுடியும், நிலைமை சீக்கிரம் சரியாக இறைவனை வேண்டுவோம்.

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு.
    வேதனையாக இருக்கிறது. நல்ல நிலை வர பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  8. நம்ப ஊரு இந்த கதியாச்சே

    ReplyDelete
  9. Very sorry to hear. But i am surprising, you use lot of "uvamai" in this post na.

    ReplyDelete
  10. Jacki - Today also I went to Cuddalore to drop my parents. They are not willing to stay @ chennai from the moment they heard from my sister about the earthquake @ 4AM.

    ReplyDelete
  11. நீங்கள் இன்னும் கடலூருக்கு செல்லாமல் இருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை தருகிறது

    ReplyDelete
  12. Informative post. I hope the affected people receive timely help.

    ReplyDelete
  13. Thane was vanished not only cuddalore, my town Parangipettai also. this time its realy worst. We will pray to God

    ReplyDelete
  14. கடலுர் அடுத்து இருக்கும் எங்கள் ஊரிலும் (நெல்லிக்குப்பம்) புயல் சேதங்கள் மிகவும் அதிகம்... இது நாள் வரையிலும் சில கிராமங்களில் மின்சாரம் வரவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்... உங்களால் முடிந்த நிதி உதவிகளை கொடுத்து அவர்களின் துயர் துடையுங்கள்...
    http://www.noornpm.blogspot.com

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner