
நான் நேசித்து இருக்கிறேன், நீங்கள் இதுவரை எந்த வேலையெல்லாம் செய்து இருக்கின்றீர்கள். சிலருக்கு படித்து முடித்து குடும்ப நண்பர் சிபாரிசில் ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போய் அந்த வேலையில் காலம் முழுவதும் உழல்வது ஒரு வகை...இன்னொன்று அரசாங்க வேலைக்கு போய் காலம் முழுவதும் உழல்வது ஒரு வகை. அல்லது அப்பா வாங்கி கொடுத்த அல்லது வைத்துக்கொடுத்த கடையில் மூளையை உபயோகித்து முன்னேறுவது ஒரு வகை.
அல்லது அப்பா வைத்து இருந்த தொழிலில் அளுங்காமல் குலுங்காமல் வந்து சீட்டில் உட்கார்ந்து முகேஷ் அம்பானி டைரக்டர் என்று போர்டு போட்டுக்கொள்வது ஒரு வகை.
படிப்பும் இல்லை, சொந்த பந்தங்கள் உதவ ஆள் இல்லை, கோபம் மூக்குமேல் வரும்,அப்பாவுடன் உள்ள பாசம் என்பது அக்னி நட்சத்திரம் கார்த்திக்,பிரபு போல் என்றால் எப்படி முன்னேறுவது...
ஒரு காலத்தில் நான் எப்படி முன்னேற போகிறேன் என்று யோசித்து மண்டை காய்ந்து இருக்கின்றேன். ஆனால் இந்த உலகில் தனிதன்மையாய் வாழ வேண்டும் பத்து பேர் இருக்கும் கூட்டத்தில் அதோ ஜாக்கி என்ற அடையாளப்பட வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது

நான் இதுவரை வேலை செய்த இடங்கள்...
1.நகை கடையில் கவுண்டர் சேல்ஸ்..
2.நகை டிசைன் வெட்ட வைர ஊசி செய்யும் வேலை.
3.வெல்டிங் கடையில் வெல்டர் வேலை
4. சித்தாள் வேலை
5.செருப்புக்கடையில் வேலை.
6.வீடியோ லைப்பேரரியில் வேலை
7.கடலூர் கமலம் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை.
8.ஒரு வருடம் கடலூரில் ஆட்டோ ஓட்டுநர்.
9.பறக்கும் ரயில் பாதையில் கம்பி பிட்டிங்வேலை
10. பறக்கும் ரயில் பைலிங் ஒர்க்.
11.சென்னை கடற்கரை காந்தி சிலை பின் உள்ள சாகர் ஓட்டலில் சர்வர் வேலை
12.எல்ஐசி எதிரில் செக்யூரிட்டி வேலை.
13.மவுன்ட் ரோடு நிர்மலாதக்ஷன் ஓட்டல் அருகில் பீடா கடையில் வேலை.
14,தேவி, அலங்கார் தீயேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட் விற்க்கும் வேலை.
15.லூனா டிரைவராக ஒரு வருடம்.
16.மாருதி காருக்கு டிரைவராக...சைடில் வால் பேப்பர் ஒட்டுவது..
17. பாண்டி, கடலூர் பகுதிகளில் ஐந்து வீடியோக்கடையில் கேமரா மேனாக 4 வருடங்கள்..
18.சென்னை வடபழனி கிரீன் லேண்ட் வாட்டர் சர் வீஸ் கடையில் சில நாட்கள்.
19. சென்ளை சரவண வீடடியோ சென்டர் இரண்டு வருடங்கள்
20கேமராமேன் டீஎஸ் விநாயகம் கேமாராவில் கேமரா அசிஸ்டென்டாக ஒன்றரை வருடம்
21,சென்னை எஸ்எஸ் மீடியாவில் ஒரு வருடம்.
22.கேமராமேன் பால முரளியிடம் அசிஸ்டென்ட் கேமராமேனாக இரண்டு வருடங்கள்...
23.எப்டிடிவி எனும் நிறுவனத்தில் கேமரா மேனாக வேலை.
24. சைடில் திருமணத்துக்கு போட்டோ எடுப்பது ,
25பூக்கடையில் வேலை
25.நான் ஒரு குறும்பட இயக்குநர் முதல்படம் துளிர் மாநில அளவில் நடந்த போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. என்று இப்படியாக நம் கதை ஓடியது விடுபட்டவை நிறைய......
இப்படியாகத்தான் என் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது, எந்த இடத்திலும் மிக நீண்ட நாட்கள் நீடித்தது இல்லை.
காரணம் நான் செய்யும் வேலையை ரசித்து செய்வேன்,நான் வேலை செய்யும் நிறுவனத்தை நேசிக்க மாட்டேன் அது நம் வளர்ச்சியை தடை படுத்தும் என்ற எங்கோ படித்தஞாபகம். அப்படி இருந்த நான் நான்கு வருடம் ஒரு கல்லூரியை நேசித்த கதை இங்கே...
நான் ஜீசஸ் கால்சில் பிரிலான்சராக கேமரமேன் வேலை செய்த போது சென்னை இந்துஸ்தான் கல்லூரியில் (கேளம்பாக்கம்) எலக்ட்ரானிக் மீடியா வீஷுவல் கம்யுனி்கேஷன் பசங்களுக்கு கேமரா பற்றி பிராக்டிக்கல் வகுப்பு எடுக்க ரெகுலராக வர வேண்டும், வர முடியுமா என்றார்கள்? நான் வேலையில் சேர்ந்தேன்,
நான் கேமரா மேனாக இருந்ததால் நேற்று ஐதராபாத்தி்ல் இருந்தால் இன்று மதுரையில் இருப்பேன். அதற்க்கு அடுத்த நாள் பெங்களுர் என்ற ஊர் சுற்றி வாழ்க்கை வாழ்ந்தவனை காலை 9 மணி மாலை4 மணி என்ற வேலையில் முதலில் செட்டாக மிகவும் சிரமப்பட்டேன்.
பத்தாவது படித்து விட்டு,காலேஜ் வாழ்க்கையை பற்றி சினிமாவில் மட்டுமே ரசித்த எனக்கு காலேஜ் வாழ்க்கை மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது. எனக்கு அப்போதே எட்டாயிரம் சம்பளம் தந்தார்கள். இதற்க்கு முன் நான் செய்த வேலைகக்கும் கல்லூரி வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடு இருந்தது.
இதுவரை கோத்தா கொம்மா என்று பேசி பழகிவிட்டு கல்லூரியில் சார் போட்டு ஆரம்பத்தில் பேச ரொம்ப சிரமமாக இருந்தது. என் இயற்பெயர் தனசேகரன்.
நான் இருப்பது தெரியாமல் தனசேகரன் சார் எங்கே என்று கேட்க, தனசேகரன் சார் மீடியா டிப்பார்ட்மென்டில் இருப்பதாக சொல்ல எனக்கு மயக்கமே வந்து விட்டது. என்னை சார் என்று அழைத்த போது காலடியில் பூமி நழுவவது போல் ஒரு பிரமை.
நான் வாத்தியாராக போய் கிளாஸ் எடுத்தது, மாணவர்கள் என் மேல் கொண்ட பாசம் , மாணவிகள் என்மேல்காட்டிய தனிப்பட்ட பாசங்கள், மதிக்கத்தக்க நபராகவும் கலகலகப்பான மனிதராக அந்த கல்லூரி வளாகத்தில அறியப்பட்டது, கம்யூட்டர் பற்றிய சிறிய அறிவு, கொஞ்சம் ஆங்கில அறிவு, என்னோடு பழகிய லெக்சரர்கள் என்று, நான் இந்துஸ்தான் கல்லூரியில் நிறைய கற்றக்கொண்டு இருக்கின்றேன்.நிறைய சோகங்கள், நிறைய மகிழ்ச்சிகள், நிறைய மாணவ மாணவர்களின் வெற்றி தோல்விக்ள், காதலில் விழுந்து எழுந்தவர்கள் என்ற அதை பற்றி எழுத ஒரு ஜென்மம் போதாது..
பத்தாவது படித்து விட்டு இந்த கல்லூரிக்கு வேலைக்கு போனேன். எல்லோரும் படித்தவர்கள் என்பதால் நான் மட்டும் பத்தாவது . அதாவது பத்தாவது படித்து விட்டு எப்படி பத்தாயிரம் சம்பளம் வாங்கலாம் என்ற மனக்கேள்வி என்னை சுற்றி சிலரிடம் இருக்க செய்தது.

அதனால் நான் அஞ்சல் வழியில் பிஏ சோசியாலஜீ படித்தேன்,அதன் பிறகு இப்போது எம்ஏ மாஸ்கம்யுனிக்கேஷன் ஜெர்னலிசம் முதல் வருடம் பாஸ் செய்து இரண்டாம் வருட தேர்வு எழுத காத்து இருக்கின்றேன், நான் செகன்ட் இயர் பசங்களுக்கு டியுட்டராக வேறு இருந்தேன்.
கல்லூரி காலங்கள் வசந்தமானவை,பசங்களோடு பழகி என்னை இளமையானவனாக உற்சாகப்படுத்தியது. நான் பல விஷயங்களை என் மாணவ செல்வங்களிடம் இருந்து கற்றுக்கொண்டு இருக்கின்றேன், எனக்கு தெரிந்ததை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து இருக்கி்றேன். ஆட்டோ ஓட்டும் போது காதலித்த பெண்ணை பத்துவருடங்களுக்கு பிறகு வாத்தியாராக மாறி இந்த கல்லூரியில் வேலை செய்த போது தான் மணந்தேன். திருமணம் முடிந்து ஆறுமாதங்கள் ஆகின்றது.
என் மேல் பாசம் கொண்ட மனிதர்கள் எத்தனை எத்தனை பேர். ஒருவர் பேர் எழுதினாலும் மற்றவர் வருத்தப்டுவர் அதனால் தவிர்க்கின்றேன். எவ்வளவோ இடத்தில் வேலை செய்தாலும் இந்த கல்லூரி வேலையை என்னால் மறக்க முடியாது...
லாஸ்ட் பன்ச்.

இன்றிலிருந்து மிகச்ரியாக 23 நாளுக்கு முன் கல்லூரிக்கும் எனக்கும் உள்ள தொடர்பை துண்டித்துக்கொண்டேன். என் வேலையை ராஜீனாமா செய்து விட்டேன் .காரணம் ரொம்ப தூரம். பஸ் பயணத்தில் பாதி நேரம் போய்விடுகின்றது. இப்போது எதாவது சேனலில் கேமரா மேன் வேலை தேடிக்கொண்டு இருக்கன்றேன்.
எல்லோரும் சொன்னார்கள் எப்போதும் எதாவது வேலை தேடிக்கொண்டுதான் அந்த வேலையை விட வேண்டும் என்று நான் மேலே எவ்வளவு வேலை செய்து இருக்கின்றேன் என்று உங்களுக்கு தெரியும். நான் எப்போதும் ஒரு வேலை தேடி அது கிடைத்ததும் செய்த வேலைவிட்டது இல்லை.
ஏன் என்றால் நான் செய்யும் வேலையை நேசிக்கின்றேன் நிறுவனத்தை அல்ல..
அன்புடன்/ஜாக்கிசேகர்
குறிப்பு)
உங்களுக்கு நான் எழுதியது பிடித்து இருந்தால் தமிழ்மணத்திலும் தமிளிஷ்லிம் ஓட்டு போடவும் பின்னுட்டம் இடவும் மறவாதீர்