
தமிழ் நாட்டில் ஒரு சமுகம் இருக்கின்றது, அவர்கள் கல்யாணங்களில் காபிக்கு அடுத்த படியாக அவர்கள் உறவினர்களிடம் கேட்கும் விஷயம், எங்க உங்க புள்ள ஸ்டேட்ஸ்ல எங்க இருக்கான் என்பதுதான்... அப்படி இல்லை என்றால் அது கவுரவ குறைச்சலாகி விடும்...
அதனால் அவர்கள் பிள்ளைகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஐஐடி சென்னையில் படிக்கும் போதே ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள அமெரிக்கன் எம்பஸி வாசலில் கொஞ்சம் கூட வெட்கம் பார்க்காமல் விடியற்கலையிலேயே இடம் பிடித்து, கடனை உடனை வாங்கி படிக்க வைத்து அவனை அமேரிக்காவுக்கு அனுப்பினால்...

அதன் பிறகு மேட்ரி மோனியலில் பெண் தேடி பெத்தக்கடனுக்கு கற்புள்ள பெண்ணை கட்டிக்கொடுத்து அவனை திரும்பவும் அமெரிக்காவுக்கு அனுப்பினால்அதன் பிறகு பெற்றோரை திரும்பிக்கூட பார்க்க மாட்டான்...
அதன் பிறகு பிள்ளை பாசத்தில்58 வயதில் கம்யுட்டர் கத்துக்கொண்டு வெப்கேம் வழியாக பிள்ளையையும் அவன் மனைவியையும் அசைவுகளாக பார்த்து, கொஞ்சம் நாள் கழித்து பேரப்பிள்ளையையும் அதே போல் பார்த்து ஆசையாக தூக்கி கொஞ்சக்கூட முடியாத அபாக்கிய சாலிகளாக இருந்து, விக்கி கொண்டால் கூட அல்லது நெஞ்சு வலித்தால் கூட அமிர்த்தாஞ்சன் போட்டு மார்பு நீவி விடாத படி தொலை தூரத்தில் இருக்கும் பிள்ளைகள்...
கொஞ்சம் நாளில் மண்டையை போடும் போது கூட எட்டிப்பார்க்காமல் பிளைட் சார்ஜ் கணக்கு போட்டு மொத்தமாக பெற்றோர் மண்டையை போடும் போது வந்து கண்ணம்மா பேட்டையில் மீசை எடுத்து , மினரல் வாட்டர் குடித்து,
“ எப்படித்தான் இந்த சென்னையில இருக்கறீங்களோ, ரொம்ப ஹாட்டா இருக்கு”
இதுவே ஸ்டேட்டா இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா?
என்று அலட்டி சாவுக்கு வந்த வளரும் ஒரு தலைமுறையை உசுப்பி அவனுக்கும் யூ எஸ் கனவை ஊட்டி திரும்பவும் ஒரு தகப்பன் கடன் வாங்கி வட்டி கட்டி படிக்க வைத்து ஸ்டேட்ஸ்க்கு பிள்ளையை அனுப்புவதை கவுரவமாக நினைத்து அனுப்பி வைத்து பிறகு புறக்கனிக்கப்பட்டு நெஞ்சு நீவி விட ஆளில்லாமல் அனாதையாக சாவது தொடர்கதையாகவே இருக்கின்றது, திரும்பவும் வீடு வந்து அலட்டி மீசை எடுத்து மினரல் வாட்டர் குடித்து...
நன்றாக யோசித்து பாருங்கள் நம் வரிபணத்தில் கட்டிய அண்ணா பல்கலைக்கழகம்,ஐஐடி, அரசு மருத்தவ கல்லூரி போன்றவற்றில் படித்து அதுவும் மானியத்துடன் படித்து, மேற்படிப்புக்கு காசும் வாங்கி கொண்டு அங்கு சென்று அங்கேயே தங்கி நம் நாட்டையே பழிக்கும் பலரை நான் பார்த்து இருக்கிறேன்.
அண்ணா பல்கலைக்கழகம்,ஐஐடி, அரசு மருத்தவ கல்லூரி போண்றவைகள் என்னை பொறுத்தவரை வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் செய்யும் நிறுவனங்கள் என்பேன்...
சமீபத்தில் கூட அமேரிக்காவில் பேராசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனால் சுட்டுக்கொள்ள பட்டார், அதுபற்றி ஆகோ ஓகோ என்று கூட நம் சட்டசபையில் பேசினார்கள் அவர் உசிலம்பட்டி கிராமத்து பள்ளி்யில் வகுப்பு எடுத்த போது இறந்து போய் இருந்தால் ஒரு நாய் கூட சீன்டி இருக்காது.. அவர் அமேரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்...

இதில் கொடுமை அவரின் பெற்றோருக்கு தமிழக அரசுதான் பாஸ்போர்ட் எடுத்து பிளைட் டிக்கெட் எடுத்துக்கொடுத்து அனுப்பியது...
ஒரு பேராசிரியர் அப்பா அம்மாவை அமெரிக்கா அழைத்த சென்று கூட காட்டவில்லை....
அப்படி தாய் நாட்டில் படித்து தன் நாட்டு மக்களுக்கு ஏதும் செய்யாமல் சுக வாசியாக இருக்கும் அல்லது அப்படி போய் நம் நாட்டை கேவலமாக நினைக்கும் சில மேல்தட்டுவர்கத்தை பிடரியில் அடித்து யோசிக்க வைத்து இருக்கும் படம்தான் ஸ்வதேஷ்...
ஸ்வதேஷ் என்றால் தேசம் என்று பெயர்.
இந்த படத்தை லகான் எடுத்த டைரக்டர் அஸ்வகோஷ் கவுரிக்கர் இயக்கி இருக்கிறார்.
படத்தின் கதை இதுதான்.....
மோகன் அமேரிக்காவில் நாசாவில் வேலை செய்யும் இந்தியன்... அவனுக்கு பெண் சகவாசம் புட்டி சகவாசம் ஏதும் இல்லாதவன், வாகன விபத்தில் தன் பெற்றோரை இழந்தவன்...நாசவில் ராக்கெட் ஏவுதளத்தில் தலமை பொறியாளன்.
தன் பெற்றோர் நினைவு நாளின் போது தன் வளர்ப்புதாய் காவேரி அம்மாவை நினைத்து பார்த் போது அவரை தொடர்பு கொண்டு பல நாட்கள் ஆகின்றதை உணர்கிறான்...காவேரி அம்மாவை தேடி அவன் இந்தியா வருகிறான்...

வந்த இடத்தில் காவேரி அம்மாவின் தூரத்து சொந்தம் உள்ள ஒரு பெண்ணும் ஒரு பையனும் அவர் பாதுகாப்பில் வாழ்கிறார்கள், காவேரி அம்மாவை அமேரிக்கா அழைத்து போய்விடலாம் என்று கணவு கண்ட மோகனுக்கு அது பெரிய சிக்கலாக இருக்கிறது...
அவன் இந்தியாவில் மிக முக்கியமாக காவேரி அம்மா இருக்கும் சரன்பூர் கிராமத்தில் அந்த மினரல் வாட்டர் குடிக்கும் என்.ஆர்.ஐ என்ன செய்கிறான், அவன் சந்திக்கும் கிராமத்து பிரச்சனைகள் என்ன, அந்த வெள்ளந்தி மனிதர்கள் அவனோடு சினேகம் கொண்டார்களா?
காவேரி அம்மாவின் வளர்ப்பு பெண்ணாக இருக்கும் பெண்ணுக்கு மோகனை பிடிக்கவில்லை அவன் மனதில் அவள் இடம் பெற்றாளா? நாசாவில் இருந்து 28 நாள் லீவில் வரும் மோகன் காவேரி அம்மாவை அழைத்து சென்றான என்பதை வெள்ளித்திரையில் காண்க....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
இந்தியாவின் எல்லா பிரச்சனைகளையும் ஒரு படத்தில் கொண்டு வர முடியுமா முடியும் என்று தனது திரைக்கதையால் நிருபித்து இருக்கிறார் இயக்குநர்.
இந்தியாவின் அடிப்படை பிரச்சனைகள் எல்லாவற்றையும் சுவாரஸ்யமான தனது திரைக்கதை அமைப்பில் கொண்டு வந்து இருப்பார்இயக்குநர் கொளரிக்கர்...
என்.ஆர்.ஐ என்றால் நான் ரிட்டர்னிங் இந்தியன் என்று போகிற போக்கில் நக்கல் வேறு...
படம் முழுக்க இந்தியாவின் வறுமையையும் கல்வி அறிவு பெறாத நமது கிராமத்து வெள்ளத்தி மனிதர்களை பற்றிய விஷயங்களை அலசிஆராய்ந்து இருப்பார்...
ஷாருக்கானுக்கு இந்த படம் அவர் கெரியரில் ஒரு மயிலறகு என்றால் அது நூத்துக்கு நூறு உண்மை...
பள்ளி சிறுவர்களின் பள்ளி கட்டிட பிரச்சனை அதில் திண்டாமை, படிப்பறிவில்லாத கிராமத்து மனிதர்கள், அவர்களிடம் நம்மிடம் இப்போதும் வாழும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் என கதை சொன்ன விதம் அற்புதம்...

காயத்திரி ஜோஷி என்ற புதுமுக பெண்தான் ஷாருக்கின் ஜோடி. அந்த பெண்ணுக்கு பெரிய கவர்ச்சி விஷயங்கள் இல்லை என்றாலும் அவரின் எடுப்பான கண்கள் சிறப்பான நடிப்பை பெற்றுத்தந்தன....

ஷாருக் மற்றும் காயத்ரிக்கு ஏற்படும் காதல்காட்சிகளில் இருக்கும் ரிச்நெஸ் நீங்கள் எந்த படத்திலும் பார்த்து இருக்க முடியாது என்பேன்.
முதன் முதலில் ஷாருக் இந்தியாவுக்கு வருவதை காண்பிக்கும் போது மேலிருந்து பார்க்கும் போது ஒரு செம்மண்நிற இந்தியமண் தெரியும் அதை பார்க்கும் போது நமக்கு உடம்பு மனதும் சிலிர்க்கும்
முதியோர் இல்லத்தில் காவேரி அம்மாவை தேடி வருகையில் ஒரு கிழவி காவேரி அம்மா கொடுத்து வச்சவ அவளை தேடியாராவது வராங்களே என்று சொல்லி விட்டு துடைக்கும் போது முதியோர் தனியே படும துயரங்களை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது....
தன் குத்தகை நிலத்தில் வரும் பணத்தை வாங்க ஷாருக்கை காவேரி அம்மா அனுப்பும் போது,ஷாருக் டிராவல் செய்யும் இடங்களையும் அதன் இடர்பாடுகளையும் தனது இசையாலும் ஒளிப்பதிவாலும் அழகாக எடுக்க வைத்து இருப்பார் இயக்குநர்

ஷாருக் முதன் முதலில் அந்த பெண்ணை புத்தக கடையில் பார்த்து கல்குலேட்டர் இல்லாமல் கணக்கு போடும் அவளின் புத்திசாதுர்யத்தில் மயங்குவது...
வீட்டில் அவளை பெண்பார்க்க வரும் போது முதலில் அவளுக்கு கல்யாணம் என்பதை நம்பாமல் பிறகு அவள் சீவி சிங்காரித்து இமைக்கொடாமல் பார்த்து அந்த கல்யாணம் நடக்ககூடாது என்று மனதில் நினைத்து வெளியே போய் தம் போடும் போது நம்ம ரஹ்மான் ஒரு பிட் போடுவார் பாருங்கள் பரம சுகம்...
திரும்பவும் உள்ளே வந்து அந்த கல்யாணம் கை கூட வில்லை என்றதும் ஷாருக் மிகிழ்வார் பாருங்கள் அது 100 சிவாஜிக்க சமம்...
குத்தகை பணம் வாங்க இந்திய ரயிலிலும் பஸ்ஸிலும் அடிபட்டு மிதி பட்டு போகும் போது, அவன் இந்தியாவின் மக்கள் வாழ் முறையை புரிந்து கொள்வதாக காட்சி அமைத்தது ரொம்பவும் அழகு
பணம் வாங்காமல் அந்த ஏழை விவசாயிக்கு பணம் கொடுத்து விட்டு அவர் வீட்டில் இரவு உணவு உண்டு கண்கலங்குவார் பாருங்கள் அதுதான் ஷாருக்...
திரும்ப ரயி்லில் வரும் போது ஒரு கிராமத்து ரயில் ஸ்டேஷனில் ரயில் நிற்க்க ஒரு சிறுவன் கையில் தண்ணி்25 பைசா எனக்கூவி கூவி விற்க்கும் போது எவர் கண்ணும் கலங்கும் இடம் அது... அப்போது ரயில் மேல் காமிரா வைத்து ஜிம்மி ஜிப் கிரேன் மூலம் மிக அழகாக படம் பிடித்து இருப்பார்கள்...
ஷாருக்கும் அவளுக்குமான காதலை மிக மிக அழகாக கவித்துவம்தோடு சொல்லி இருப்பார்கள்...
என்னை பொறுத்தவரை மேக்கிங்கில் இந்த படம் ஒரு அற்புதமான படம் என்பேன்..
இந்த படத்தின் ஒளிப்பதிவு, மகேஷ்அனாய் செய்து இருக்கிறார் .
மிக சிறப்பான நேர்த்தியான ஒளிப்பதிவு....
இந்த படத்தில் வரும் போஸ்ட் மேன் கேரக்டர் ஆகட்டு்ம், அமெரிக்காவில் தபா வைக்க ஷாருக்கொடு சுத்தும் அந்த கேரக்டர் மற்றும் காவேரி பாட்டி போண்றவர்கள் எப்போதும் நம் மனதில் இருப்பார்கள்....
இந்திய ரசிகர்கள் இந்த படத்தை வெற்றி பெற செய்யவில்லை, அதே போல் கதை அமைப்பு படி இது பொறுமையாக நகரும் திரைக்கதை,மற்றும் கடைசி வரை கதாநாயகி தொப்புளை கூட காட்டாததாலும், ஷாருக் ஒரு பொறுப்பான இந்திய குடிமகனாக நடித்ததை அவர் ரசிகர்கள் விரும்பவில்லை...
ரஹ்மான் ஜி இந்த படத்துல பின்னனி இசையில மிரட்டி இருப்பார் பாடல்கள் எல்லாம் சூப்பர்
இயக்குநர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்....
அஷ்வக் கோஷ் கவுரி்க்கர் சிறந்த இயக்குநர் நாட்டு பற்று உள்ள, பொறுப்புள்ள இயக்குநர் என்பதில் ஐயம் இல்லை...
இந்தபடம் நல்ல அறிவு இருந்தும் வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் கொடுக்க காத்து இருந்தும் இன்னும் கல்பாக்கத்திலும், ஸ்ரீஹரிக்கோட்டாவிலும்,இன்ன பிற ஆராய்சி நிறுவணங்களில் பணியாற்றும் என்னற்ற விஞ்ஞானிகளுக்கு என் நன்றிகள் முக்கியமாக நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு...
அன்புடன்/ஜாக்கிசேகர்