ஆல்பம்.
நண்பர்கள் தினம் இன்று ...
என்னோடு தோள்கொடுத்து தோழமையாய் பழகும் அத்தனை நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
==========
தனி தெலுங்கான வேண்டும் என்று பல
போராட்டங்கள், மறியல், பந்த் போன்றவை நடைபெற்றன.... உயிர் பலிகள் தற்கொலைகள் என்று
பட்டியல்கள் நீண்டன.. ஒரு வழியாக
தெலுங்கான அமைய மத்திய அரசு முடிவு
எடுத்து இருக்கும் இந்த வேளையில் அப்படி பிரிக்க அனுமதிக்க விட மாட்டோம் என்று தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி தூக்கி இருக்கின்றார்கள்... ஆளும் காங்கிரஸ்
அரசில் 14 அமைச்சர்கள் 30 எம்எல்ஏக்கள்
விலகி இருக்கின்றார்கள்.... ஆந்திரா தோங்கரா சட்டினி போல செம காரமாய்
ஸ்தம்பித்து இருக்கின்றது.
====================
புண்ணியமா போவுதுன்னு புடவை கொடுத்தா
வீட்டுக்கு பின்னாடி முழம் போட்டு பார்த்தானா கதை யாருக்கும் பொருந்துமோ இல்லையோ?
சந்திரசேகர் ராவுக்கு பொருந்தும்... தெலுங்கானாவை விட்டு ஆந்திரபிரதேச அரசு
ஊழியர்கள் வெளியேற வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர்
ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்... விட்டா தனி தெலுங்கானவுக்கு தனி ராணுவம்
வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவார் போல..... ஏன் ஆட்டுக்கு தாடியை ஆண்டவன்
அளந்து வச்சான்னு இப்ப புரியுதா?
===============
காங்கிரஸ் ஆளும் அரசுதான்... ஆனாலும்
தெலுங்கான பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கான உருவாக அதரவளித்த
காங்கிரஸ்ஸுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ராஜிவ் சிலையை சூறையாடி இருக்கின்றார்கள்..
ஈராக்கில் சதாம் சிலையை வீழ்த்தியது போல
வீழ்த்தி இருக்கின்றார்கள்.... தோங்கரா காரம் சாப்பிட்டா ரோஷம் எப்படி வருது பார்த்திங்களா?
======================
மிக்சர்..
சென்னையில்
23 நாய்களை அடித்து முகப்பேரில் கொடுரமாக கொன்று இருக்கின்றார்கள்... அதற்கு
எதிர்ப்பு தெரிவித்து பிராணி நல சங்கங்கள்
போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள்...
========================
தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம்
கைது செய்வதும் துன்புறுத்துவதும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது.. ஏன்
என்று கேட்கத்தான் ஆள் இல்லை... தமிழக மீனவர்கள் என்பது இந்திய மீனவர்கள் என்று
எப்போது மாறுகின்றதோ அப்போதுதான் இந்த நிலை
மாறும்... ஒற்றுமையாய் குரல் கொடுத்தால்தான் எல்லாம் சாத்தியம்... போன ஆட்சியில்
கட்டிய கட்டிடத்தையே பாழடைந்த கட்டிட்மாக
போட்டு வைக்கும் காழ்புணர்ச்சி அரசியல் நடக்கும் போது தொடர்ந்து கைது சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்....
==
===============
இந்த வருடத்துக்கான மைதிலிக்கான கல்வி உதவி தொகை போதும் தோள் கொடுத்து உதவிய அத்தனை தோழர்களுக்கு என் நன்றிகள்... அதே போல உதவி செய்ய நிறைய பேர் மெயில் அனுப்பினார்கள்.. அவர்களுக்கு இன்னும் நான் பதில் அளிக்கவில்லை... உங்கள் உதவி வேறு சிலருக்கு தேவைப்படும் அதுவரை பொறுத்து இருக்கவும் நன்றி. விரிவான பதிவுகள் சில வாரங்கள் கழித்து. மிக்க நன்றி.
==================
எனது பேஸ்புக்கில் போனவாரம் பகிர்ந்தவை..
முதுமலையில் முதல்வரை முட்டி தள்ளியது
யானை...#
திங்க கொடுத்தாங்களே அப்படின்னு வாஞ்சையாக
கிட்ட போய் இருக்கு.... செக்யூரிட்டி வழக்கம் போல அதுகிட்ட திமிர , அதுக்கு 5 அறிவு அதுவும் திமிறி
இருக்கு.... இரண்டு வயசுதான் அந்த காவேரி குட்டியானைக்கு ஆவுது.....உடனே வழக்கம்
போல நம்ம ஊடகங்கள் உயிர் தப்பிய ரேஞ்சிக்கு அடிச்சி விட்டுட்டாங்களேப்பா...?
திருவல்லிக்கேணியில் முண்டாசுக்கவிக்கு நடந்துச்சே அதுதான் யானையின்
ரியல் அட்டாக்... இது சும்மா இளங்கன்று பயமறியாது போன்ற விளையாட்டு
கேஸ்தான்...முதல்வர் அம்மா காண்டிராஸ்ட் கலர் அங்கியும் காவேரி செல்லமா விளையாட
ஒரு காரணமா இருந்து இருக்கலாம்
======
காலையில் வீட்டு கேட்டை திறந்து ,கேட்டுலயே சாவியை அதுலேயே விட்டு விட்டு
மறந்துட்டேன்... அரைமணி நேரம் கழிச்சி கதவுக்கிட்ட போறேன்... கேட்டுல பூட்டு சாவி
தொங்குது.
ச்சே எவனாவது இங்கிலிஷ் படத்துல திருடறது போல,
கேட்ல இருக்கற பூட்டு சாவியை இந்த அரைமணி
நேரத்துல எடுத்துக்கிட்டு போய் சோப்புல அச்சி போட்டு ,தெரியாம வந்து வச்சிட்டா?
கோத்தா, நம்மக்கிட்டயேவா?
உடனே சாவியை நான் மொந்து பாத்தேன்... சோப்பு
வாசனை இல்லை... பெரிய ஷெர்லக் ஹோம்ஸ்ன்னு நினைப்பு மயிறு வேற...
என் மனசாட்சி சொல்லிச்சி...
டேய் ஜாக்கி அப்படியே அவன் சாவியை எடுத்து
அச்சி போட்டு நீ இல்லாதப்ப திருட வீட்டுக்கு வந்தா கூட...ஏமாந்து போய் கோவத்தோட
உன் எதிர்க்க வந்து... தொடைச்சி வச்சி இருக்கறதுக்கு உனக்கு எதுக்கு பிரோ?
சாவி ரெடி பண்ணதுக்கு,
போகவர செலவு, எல்லாம் சேர்த்து ஆயிரம் ரூபாய் உன்கிட்ட
கேட்டு டிசன்டா அந்த திருடன் வாங்கிகிட்டு போகமாட்டான்?
உன் மனசாட்சியை தொட்டு சொல்லு... என்றது...
நான் ஆம் என்றேன்...
காலையில் ஷேர்லக்ஹோம் ஆனதுக்கு
வருந்துகின்றேன். சாரி மிஸ்டர் Arthur Conan Doyle உங்களை வேற காலையில அசிங்கபடுத்தி
தொலைச்சிட்டேன்.
நினைப்புதான் பொழப்பை கெடுக்குமாம்.......
================
கடனுக்கு வேலை செய்யறவனை விட,
ரசிச்சி வேலை செய்யறவனை எனக்கு ரொம்பவே
பிடிக்கும்... முந்தா நாள் நைட்டு ஓஎம்ஆர்ல அந்த ஷேர் ஆட்டோவை பார்த்தேன்... ஷேர்
ஆட்டோ எண். TN -07-AM
5758- PIAGGIO டைப் ஷேர் ஆட்டோ... ஆட்டோவுக்கு உள்ளே ரெண்டு
பக்கமும் புக்ஸ்... பேப்பர்... ஒரு பக்கம் வார இதழ்கள் மறு பக்கம் தினசரி
பேப்பர்... அதுமட்டும் அல்ல சின்னதா டிவியில் சிஎன்என் ஐபிஎன் இங்கிலிஷ் நியூஸ்
ஓடிக்கிட்டு இருக்கு.... உட்பக்கம் அசத்தலா செட் பண்ணி இருக்காரு அந்த டிரைவர்....
எனக்கு அதிக வேலை இருந்த காரணத்தால் அந்த டிரைவர் கிட்ட பேச முடியலை... ரசிச்சி
செய்யற அவரின் அந்த தொழில் நேர்த்திக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்... அநேகமா அது அடையார்,
திருவான்மியூர்,
ஓம்ஆர் ரோட்டுலதான் அந்த ஷேர் ஆட்டோ
சுத்திக்கிட்டு இருக்கும்... ஒருவேளை நீங்க யாராவது பார்த்தா அந்த ஷேர் ஆட்டோ
டிரைவருக்கு என் பாராட்டையும் உங்க பாராட்டையும் சேர்த்து தெரிவியுங்கள்.....
நல்லவைகளை வெட்கம் பார்க்காமல் மனப்பூர்வமாய்
பாராட்டினால்தான் இன்னும் நிறைய நல்லது நடக்கும்...
இதை
எழுதிய பிறகு நண்பர்கள் நிறைய
வீடியோக்கள் பகிர்ந்தார்கள்.... டிரைவர் பெயர் அண்ணாதுரை...வீடியோ பார்த்தேன்....
வேண்டும் என்றே ஆங்கில கலப்பை அதிகம் உபயோகித்து பேசினார்...ஒஎம்ஆர் சாலையில் வாகனம் ஓட்டுவதால் வந்த பாதிப்பாக
இருக்கும்.
========================
கடந்த வெள்ளிக்கிழமை( 02/08/2013) வெளியாகி
இருக்கும் விகடனின் டைம்பாஸ் இதழில்,ஹாலிவுட் நீலம்பரிகள் என்ற தலைப்பில் ஒரு
ஆர்ட்டிகள் எழுதி இருக்கின்றேன்... முழுக்க முழுக்க ஹாலிவுட் வில்லிகளின்
அட்டராசிட்டிகளை எனக்கு தெரித்த வரையில் எழுதி இருக்கின்றேன்.. வாசித்து விட்டு கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளவும்.....
அடுத்த வெள்ளி வரை தமன்னா அட்டை படம் போட்ட டைம்பாஸ் இதழ் கடையில் கிடைக்கும்.
==========================
நள்ளிரவு ஒரு மணிக்கு பிள்ளை கொசுக்கடியில்
சினுங்க,வெறியோடு தூக்கம் உதறி...கொசுbatயை எடுத்துக்கொண்டு இன்டு, இடுக்கு, சந்து ,பொந்து ,என்று எல்லா
இடத்திலும் தேடி தேடி கொசுவை கொல்லும் அத்தனை தகப்பன்களும் சீரியல் கில்லர்களே...
=====================
சேரனுக்கு வக்காலத்து வாங்கவில்லை... ஆனால்
ஒரு படைப்பையும் படைப்பாளியையும் எப்போதும் இணைத்து பார்க்க கூடாது என்பது
என் கருத்து....காதல் படம் எடுத்து விட்டு சேரன் ஏன் காதலுக்கு எதிரனவராக இருக்கின்றார்
என்று கேட்கின்றார்கள்...?,அதற்கு என் பதில்
கிழே,.,
நிழல் வாழ்க்கை வேறு... நிஜ வாழ்க்கை வேறு...
என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை... இரண்டையும் முடிச்சி போடுவதே அபத்தத்தின்
உச்சம் என்பேன்....
காதலை ஆதரித்து படம் எடுத்த காரணத்தால் காதலை
எதிர்க்கும் இயக்குனரை வசைபாடுகின்றோம்...அதே இயக்குனர் சீரியல் கில்லர் படம்
எடுத்து விட்டு, படத்தில் காட்டியது போல இரண்டு கொடுரகொலைகளை
அந்த இயக்குனர் செய்து விட்டால் அதை ஏற்றுக்கொள்முடியுமா???
படத்தில் காட்டியது போல இரண்டு கொலை செய்தேன்
நிழலில் செய்தேன் அதை ஏற்றுக்கொண்டீர்கள்.. அதையே நிஜத்திலும் செய்தேன் என்று அந்த
இயக்குனர் சொன்னால் உங்கள் நிலைப்பாடு என்ன??
செருப்பு கடிக்கும் வலி அதை அணிந்தவனுக்கு
மட்டுமே தெரியும், புரியும்...
=====================
ரொம்ப நாள் கழித்து இரும்புக்கை மயாவி
என்கின்ற இங்கிலிஷ் டப்பிங் படம் பார்க்கலாம்ன்னு புரசைவாக்கம் மோட்சம் தியேட்டர்
போனேன். மோட்சம் மோட்ச சரணாகதி ஆயிடுச்சின்னு சொன்னாங்க... டோட்டலா இழுத்து
மூடிட்டாங்களாம்...அங்க ஏதோ அப்பார்ட்மென்ட் வரப்போகின்றது என்று அங்கே இருந்த
செக்யூரிட்டி சொன்னார்... நண்பர்களுக்கு இது பற்றி தகவல் தெரிந்தால் பகிரவும்...
==================
வாசித்தவைகளில் மனதில் நின்றவை...
முகநூலில் சின்ன தாதா என்பவர் எழுதிய இந்த உண்மை சம்பவத்தை
வாசிக்க நேர்ந்தது
படித்து முடித்த போது மிக நெகிழ்ச்சியில்
மணம் உருகினேன்.... நன்றி சின்ன தாதா.
ரம்ஜான் - சாமி கை விடல
அபு தாபியின் அரசு நிறுவனங்களில் ஒன்றான Abu
Dhabi Gas and Oil Corporation (ADGOC) -ல் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆன நிலையில் அன்று இரவு இஃப்தார்
பார்ட்டிக்காக Emirates Palace Hotel சென்றிருந்தேன்.
எங்களுடைய Operation
Head ஷெரிஃப் ஒக்பா, என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
"He is Mansoor
Hameed... New project manger for our onshore building division. He has more
than 12 years of
experience. Andddd....He has done his Bachelor of Mechanical Engineering and he
is a charted engineer" என்று சுருக்கமாக அறிமுகம் செய்த பிறகு என்னை ஏதாவது பேசச் சொன்னார்.
என்னைப் பற்றி அல்லாது,
பொதுவான விஷயம் ஏதாவது ஒன்றைப் பற்றி பேசச்
சொன்னார்.
நானும் ரம்ஜான் நோம்பினைப் பற்றி பேசினேன்.
அதனால் ஏற்படும் நன்மைகளையும், நோம்பு துறக்கும்பொழுது எப்படிப்பட்ட உணவுகளை உண்ணவேண்டும்
என்பது பற்றியும் அறிவியல் ரீதியிலான விளக்கங்களுடன் பேசினேன்.
அதற்குப் பிறகு,
அங்கிருந்தவர்களிடம்
பேசிக்கொண்டிருந்தபொழுது. ஒருவர் NPOC (National
Petrolium and Oil Company)- யில் General Manager ஆக இருப்பதாக சொன்னார்.
இருபது வருடங்களுக்கு முன்பு வாப்பா வேலை
செய்த கம்பனி. அது ஒரு Semi Government Organization. வாப்பா அங்கு staff ஆக வேலைப் பார்த்திருந்தார். உயிரோடு
இருந்திருந்தால் இன்று அவரும் ஒரு General Manager அல்லது அதைவிட பெரிய பதவியில்
இருந்திருப்பார்.
வாப்பாவின் நெருங்கிய தோழர் அய்யனார்
மாமாவைப் பற்றி அவரிடம் விசாரிக்க நினைத்தேன். ஆனால் விசாரிக்கவில்லை
அடுத்த நாள், டிரைவரை அழைத்துக் கொண்டு அந்த கம்பெனிக்கே
சென்றுவிடலாம் என்று முடிவு செய்தேன்.
யார் இந்த அய்யனார் மாமா?
நான் எட்டாவது படிக்கும்பொழுது வாப்பா
ஊருக்கு வந்திருந்தார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஊருக்கு வருவார். என் இரட்டை
தங்கைகளுக்கு அப்பொழுது ஒன்றேகால் வயது. அவர்களை முதன்முதலில் அப்பொழுதுதான்
பார்க்கிறார்.
இரண்டு மாதம் லீவ் முடிந்து திரும்ப போவதற்கு
முதல் நாள் ராத்திரி திடீரென்று அவருக்கு ஏதோ ஞாபகம் வர என்னிடம்,
'நாளைக்கு காலைல முதல் வேலையாப் போய் நாலு
பாக்கெட் திருநீர் வாங்கிட்டு வா' என்றார்.
நானும் வாப்பா எழுவதற்கு முன்னே மாரியம்மன்
கோயில் அருகேயுள்ள கடையில் போய் திருநீர் வாங்கி வந்தேன். அதைப் பார்த்த வாப்பா
சிரித்தார்.
"ஏன் வாப்பா சிரிக்கிறீங்க" என்றேன்
"இந்தப் பேரப் பாத்தியா?"
"அய்யனார் திருநீர்"
"அய்யனார் மாமா திருநீர் வாங்கிட்டு
வரச் சொன்னான். நான் மறந்துருவேன்னேன். அதுக்கு அவன் அய்யனார் சாமி உனக்கு ஞாபகப்
படுத்திருவார் போ என்றான். பாத்தியா, அவன் சாமி அவனை கை விடல"
"சாமி நம்பிக்கை நமக்கு இல்லையே வாப்பா?"
"அல்லானா என்னன்னு தெரியுமா?"
"இறைவன்"
"சாமின்னா"
"ஹ்ம்ம்ம்.. இறைவன்" என்றேன்
வாப்பா என்ன சொல்லவருகிறார் என்று புரிந்துகொண்டு.
அதற்கு மேல் வாப்பா ஒன்றும் சொல்லவில்லை.
*****
டிரைவர் என்னிடம் "சார்,
முஸ்ஸஃபா பிரிட்ஜ் வழியா போலாமா இல்லன்னா
மக்தாப் பிரிட்ஜ் வழியா போலாமா?" என்றார்.
"எனக்கு தெரியாதுப்பா,
எது ஈஸியோ அந்த வழில போ"
*****
நான் பத்தாவது படிக்கும்பொழுது,
வாப்பாவின் வருகைக்காக காத்திருந்த வேளையில்
வாப்பா இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. அவரது உடல் இன்று வரும் நாளை வரும்
என்று ஒரு மாதம் காத்திருந்தோம். கடைசியில் அவரை அங்கேயே அடக்கம்
செய்துவிட்டார்கள் என்று அடுத்த தந்தி வந்தது.
உறவினர்கள் எல்லோரும் சென்று விட்டார்கள்.
உம்மா மட்டும் அழுகையை நிறுத்தவில்லை, எங்களுக்கு சாப்பாடு பக்கத்துவீட்டு ரஹீம்
மாமா வீட்டிலிருந்து ஏதாவது செய்துகொண்டுவந்து கொடுப்பார்கள்.
அன்று உம்மா என்னருகில் வந்து,
"மன்சூர், நம்ம அல்லாட்ட போயிரலாமா" என்றார்.
உம்மா சொல்வதைப் புரிந்து கொண்டு சரி
என்பதுபோல் தலையை ஆட்டினேன்.
உம்மா அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன்,
போஸ்ட் மேன் வீட்டிற்கு வெளியிலிருந்து
அழைப்பது கேட்டது.
ஒரு Airmail கவரில் ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருந்தது. யாரோ
கிருஷ்ணதாஸ் என்பவர் கேரளாவிலிருந்து அனுப்பியிருந்தார்.
பிரித்து சத்தமாக படித்தேன்..
அன்புள்ள தங்கைக்கு,
அண்ணன் அய்யனார் எழுதுவது. குழந்தைகள் எப்படி
இருக்கிறார்கள். மன்சூர் ஸ்கூலுக்கு போகிறானா?.ஹமீது இறந்ததை எண்ணி எப்பொழுதும்
அழுதுகொண்டிருக்காதீர்கள். ஹமீது இறந்த கேஸ் இதுவரை முடியவில்லை. ஆகையால்
இன்சூரன்ஸ் பணம் கிடைக்க இரண்டாண்டுகள் வரை ஆகலாம்.
என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு கடிதம்
அனுப்புங்கள். இத்துடன் ஐயாயிரம் ரூபாய்க்கான டிடி அனுப்பியுள்ளேன்.
இப்படிக்கு,
அன்புடன்
சொ. அய்யனார்
இதைக் கேட்டவுடன் உம்மா,
"அல்லா நாம சாகக் கூடாதுன்னு நெனைக்கறார். நீ
நாளைக்கே ஸ்கூலுக்கு போ" என்றார்.
"வேண்டாம் உம்மா,
நான் அண்ணாச்சி துணிக்கடைல வேலைக்குப்
போறேன்"
"இல்ல, நீ படி. நான் வேலைக்குப் போறேன்"
"முடியாது உம்மா,
அடுத்த வருஷம் தங்கச்சிகளையும் ஸ்கூலில்
சேக்கணும். நீங்க வேலை செஞ்சாப் பத்தாது நான் போறேன்"
ஒருவழியாக அதற்கு உம்மா சம்மதித்தார்.
அடுத்தநாள் உம்மாவை அழைத்துக் கொண்டு
நேரத்திலேயே அண்ணாச்சி வீட்டிற்கு சென்றோம்.
அண்ணாச்சி எல்லாம் கேட்டுவிட்டு,
"ஏலே, ஸ்கூல்ல போய் டீசி வாங்கிட்டு வந்திடுலே.
பின்னால சோலிக்காகும்" என்றார்.
அங்கிருந்து நேராக செயின்ட் ஜோசப் ஸ்கூலிற்கு
சென்றோம். அதன் தாளாளர் ஃபாதர் செபாஸ்டியன் சரியான சிடுமூஞ்சி. ஃபீஸ் அடைக்க
ஒருநாள் லேட் ஆனாக்கூட வீட்டிற்கு அனுப்பிவிடுவார். ஃபீஸ் கட்டாம டீசி தரமாட்டார்
என்று நன்றாக தெரிந்திருந்தும் அவரிடம் சென்றோம்.
உம்மா, அவரிடம் எல்லா விவரங்களையும் சொன்னார்.
எல்லாவற்றையும் கேட்ட பிறகும் அவரது கண்களில் இறக்கம் என்பது துளிகூட வந்ததாக
தெரியவில்லை.
"உன் கிளாஸ் டீச்சர் யார்" என்றார்
"ரெபேக்கா மிஸ்"
ப்யூனை, அவரை அழைத்து வரச்சொன்னார்.
மிஸ் வந்தவுடன் வெளியில் சென்று அவரிடம்
என்னவோ பேசினார்.
பிறகு உம்மாவிடம் "உங்க பையன் பிளஸ் டூ
வரை இங்கயே படிக்கட்டும். ஃபீஸ் ஒன்னும் கட்டவேண்டாம். உங்களுக்கு இங்க ஆயாவா வேலை
தர்றோம். மாசம் ஐநூறு ரூபாய் சம்பளம்" என்றார்.
இதைக்கேட்டவுடன் உம்மாவுக்கு என்ன சொல்வது
என்று தெரியவில்லை. அவர் காலில் விழுந்து அவர் காலைப் பிடித்து கண்ணீர்விட்டார்.
அண்ணாச்சியிடம் விஷயத்தை சொல்ல சென்றோம்.
"தெரியும்லே,
அதான் அவரப் போய் பாக்கச் சொன்னேன்"
என்றார்
அண்ணாச்சி சிரித்துக்கொண்டே
****
ஒருவழியாக NPOC வந்து சேர்ந்தோம்.
டிரைவர், செக்யூரிட்டியிடம் எதோ அரபியில் சொல்ல அவர்
எங்களை உள்ளே அனுமதித்தார். நாங்கள் சென்றபொழுது மணி இரண்டு இருக்கும். ரம்ஜான்
என்பதால் பெரும்பாலானோர் வேலை முடிந்து அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்ததை
பார்க்கமுடிந்தது.
வண்டியை பார்கிங்கில் நிறுத்திவிட்டு
நாங்களும் நடந்தோம்.தமிழில் பேசியபடி நடந்து வந்துகொண்டிருந்த இளைஞர்களை நிறுத்தி
விசாரித்தோம்.
"அய்யனார் என்ற பெயருள்ள staff
யாராவது இங்க இருக்காங்களா?"
"இல்ல சார்,
அப்படி யாரும் இருக்கற மாதிரி
தெரியலியே"
"மேனேஜர்?"
"இல்ல சார்.. அப்படி யாரும்
இல்லியே"
"ஒரு 65 வயசு இருக்கும் அவருக்கு"
"இல்ல சார்.. அப்படி யாரும் இல்ல. இங்க
அறுபது வயசுக்கு மேல விசா ரினியூ பண்ணமாட்டங்க சார்"
அதற்குள் வேறு ஒருவர் அங்கு செல்வதைப்
பார்த்த அதில் ஒருவர், "சார்,
தா போறாரே. மாரிமுத்து சார் அவருக்கு ஒருவேளை
தெரியலாம்" என்றார்.
அவரே, "மாரிமுத்து சார்,
உங்களுக்கு அய்யனார்னு அறுபத்தஞ்சு வயசுள்ள
யாரையாவது தெரியுமா சார்" என்றார் சத்தமாக
திரும்பிப் பார்த்த மாரிமுத்து,
"ஆமா. நம்ம பெருசு" என்றார்.
"சார், இவங்கள கொஞ்சம் அவரு ரூம்ல விட்டுருங்க"
அவருடன் எங்களை வரச் சொல்வதுபோல் சைகை
செய்தார். நான் டிரைவரிடம், "நான் போய்
பாத்துக்கறேன். நீ போய் வண்டில இருந்துக்கோ" என்றேன்.
நான் மாரிமுத்துவுடன் சென்றேன்.
அவர் என்னிடம் எதுவுமே பேசவில்லை.
ஒரு பழைய பில்டிங்கிற்கு அழைத்து சென்றார்.
மாரிமுத்து first floor என்பதால் என்னிடம், "நேராப்
போங்க.G18 அவர் ரூம்" என்றார்.
கதவை தட்டினேன்.
"ஆவ்.. தர்வாஸா குல்லா ஹே" என்று
ஒரு சத்தம் மட்டும் கேட்டது.
கதைவை திறந்தேன். சிறிய அறை. அதில் நான்கு
கட்டில்கள் இரண்டு அடுக்காக (bunk bed) இடப்பட்டிருந்தன. ஒரு கொடிக் கயிறு கட்டப் பட்டிருந்தது,
அதில் அங்குமிங்குமாக அழுக்குத் துணிகள்
கிடந்தன.
கீழே உள்ள கட்டிலில் சுவற்றைப் பார்த்து
படுத்திருந்த அந்த முதியவரை 'அய்யா' என்று அழைத்தேன்.
அவரது லுங்கியை சரி செய்தவாறே என்னை
திரும்பிப் பார்த்தார்.
"யார் சார் நீங்க?"
அவர் முகத்தில் இருந்த பெரிய மீசை,
அது அய்யனார் மாமாவேதான் என்று
உறுதிப்படுத்தியது.
"மாமா, நான் மன்சூர். ஹமீது வாப்பா ..." என்று
சொல்லி முடிப்பதற்குள் கட்டிலிலிருந்து சட்டென்று எழுந்து என்னைக் கட்டிப்
பிடித்துக் கொண்டார்.
கட்டிப்பிடித்தவாறே,
"உங்க அப்பன மாதிரியே நல்ல ஒசரமா
இருக்கியேயா" என்றார்.
நான் ஒன்றும் பேசவில்லை.
என்னை விட்டுவிட்டு என் முகத்தைப் பார்த்து
"அம்மா எப்படி இருக்காக, தங்கச்சிகளுக்கு கல்யாணம் ஆயிருச்சா" என்றார்.
"நல்லா இருக்காங்க. ரெண்டு பேருக்கும்
நிக்காஹ் ஆயி கொழந்தைகள் இருக்கு"
"ஹ்ம்... உங்க அப்பனும் நானும் இதே
ரூம்ல தான் இருந்தோம். அப்ப மூணு அடுக்கு இருக்கும். நாங்க ரெண்டு பேரும் மேலதான்
படுப்போம். எள வயசு. இப்ப மேல ஏற முடியாது"
"ஏன் மாமா வாப்பா staff-ஆ இருக்கேன்னு பொய் சொன்னார்"
"உனக்கும்,
உங்க அம்மாவுக்காவும் தான். நீங்க ரெண்டு
பேரும் வருத்தப்படுவீக. நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு தான்யா அப்படி
சொன்னான்"
அவரே தொடர்ந்தார்,
"சரியா சாப்பிடக்கூட மாட்டன். அப்ப கம்பெனி
மெஸ் இல்ல. வெளில காசு கொடுத்துதான் சாப்பிடணும். டெய்லி குபூஸ் தான்
சாப்பிடுவான். மாசத்துல ஒரு நாள் மட்டும்தான் நல்ல சோறு சாப்பிடுவான்"
அதைக் கேட்டவுடன் அபப்டியே இடிந்து போனேன்.
வாப்பா ஊருக்கு வரும்போதெல்லாம் அது வாங்கிட்டு வாங்க இது வாங்கிட்டு வாங்கன்னு
சொல்லிருக்கேனே.
நான் ஒன்றும் பேசமுடியாமல் கட்டிலில்
அமர்ந்தேன்.
"ரம்ஜான் மாசம் வந்துச்சுனா மட்டும்
டெய்லி காலைலயும் நைட்டும் நல்ல சாப்பாடு பக்கத்துல ஒரு மசூதில இலவசமா கெடைக்கும்.
அப்ப, உங்கப்பன் சொல்லுவான்;
அய்யனாரே அல்லா இந்த ரம்ஜான் மாசம் நம்மள
மாதிரி ஏழைகளுக்காக வெச்சிருக்கார்"
அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு தொண்டை
அடைத்துவிட்டது. அது சரியாக சிறுது நேரம் ஆனது.
"மாமா, நீங்க ஏன் இந்த வயசுலயும் கஷ்டப்படுறீங்க?"
"மூணும் பசங்க. கடைசிப் பையனுக்கு போன
வருஷம்தான் கல்யாணம் பண்ணுனோம். மூணு பேரும் அவங்ககூட வந்து இருக்க சொல்றாங்க.
உங்க அத்தைக்கு ஒரு மாசம் கூட அவங்க யார் வீட்லயும் இருக்க முடியறதில்ல. அவ மேல
தப்பில்ல. அவங்க சிலநேரங்களில் அவங்களை அறியாமல் எங்களைப் பாரமா பாக்கறாங்க.
அதுதான்... கொஞ்சம் கடன் இருக்கு. அதை அடச்சுட்டு. கெடைக்கற செட்டில்மண்ட் பணத்த
வெச்சு சின்னதா ஒரு கட வெச்சு பொழைக்கலாம்னு இருக்கேன்" என்றார்.
"எவ்வளவு கடன்"
"நாலு லட்சம் இருக்கும்யா"
"மாமா இன்னும் ஒரு மாசத்துல நீங்க இங்க
இருந்து இந்தியாவுக்கு போறீங்க. நான் உங்க கடனை அடைக்கறேன். உங்களுக்கு ஒரு
கடையும் வெச்சு தர்றேன்"
"ஐயோ, அதெல்லாம் வேண்டாம்யா. நீ சொன்னதே
பெருசுயா"
"இல்ல மாமா,
நான் ஒத்துக்கமாட்டேன். உங்களாலதான் நாங்க
இன்னைக்கு உயிரோடு இருக்கோம்"
'இல்லயா வேண்டாம். அது சரியில்ல.. நான்
ஒருநாளும் அது வாங்க ,மாட்டேன். உன் அன்பு மட்டுமே போதும்'
'முடியாது மாமா, ஒவ்வொரு வருஷமும் நமக்கு தேவை போக மீதம் உள்ள
பணத்துல 2.5% ஏழைகளுக்கு ஸகாத் (zakat) கொடுக்கணும்னு இஸ்லாம் சொல்லுது. நான் ஒவ்வொரு வருஷமும்
கொடுக்கிறேன். இந்த வருஷம் அதை உங்களுக்கு குடுக்கப் போறேன்"
"உங்க அப்பனும்,
அதை கரெக்ட்டா கணக்குப் போட்டு ஏழைகளுக்கு
குடுப்பான்யா. எனக்கு வேண்டாம்யா"
"இல்ல மாமா,
நீங்க வாங்கித்தான் ஆகணும். பெரிய பணக்காரங்க
திருப்பதி உண்டியல்ல பணம் போடறது இல்லியா. அது மாதிரி நான் அய்யனார் சாமி கோவில்
உண்டியல்ல போடறேன்"
அந்த அறையிலிருந்த ஒரு சின்ன ஷெல்ஃபில்
அய்யனார் சாமி படம் வைத்திருந்தார். அந்தப் படத்தைப் பார்த்தவாறே,
"பாரு ஹமீது உன் பையனும் உன்னைய மாதிரியே
இருக்கான். ஒரு உதவி செஞ்சா பத்து உதவி திரும்ப செய்யற உன் குணம் அப்படியே
இருக்கு" என்றார்.
ஃபிரேம் செஞ்சிருந்த அய்யனார் படத்தை உத்துப்
பார்த்தேன். வாப்பாவின் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ அந்த ஃபிரேமின் ஒரு மூலையில்
சொருகிவைக்கபட்டிருந்தது.
---------
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
ஞாலத்தின் மாணப் பெரிது
==============
சினிமா
செல்வராகவனின் இரண்டாம் உலகம் டிரைலர் உங்கள்
பார்வைக்கு....
===================
நான்வெஜ்
சாரி ஆண்ட்டி,
பாவம் கொடுரன்,
ஐந்தரைக்குள்ள வண்டி,
மாமனாரின் இன்ப வெறி,
கனவில் கில்மா
போன்ற எண்ணற்ற தலைப்புகளை தமிழ்சினிமா ரசிக
கண்மணிகள் கவனித்து இருந்தாலும் கிராமத்து மண்ணின் வாசத்தோடு எந்த தலைப்பையும்
இதுவரை பார்த்தது இருக்க வாய்ப்பு இல்லை.. நேற்று மவுண்ட் ரேட்டில் இந்த போஸ்டர்
பார்த்ததும் உங்களோடு பகிர்ந்து கொள்ள தோன்றியது..
கடலூர் முத்தையாதியேட்டர்,
பாண்டி நவீனாதியேட்டர்,பரங்கிமலை ஜோதி தியேட்டர் முன்னாள் ரசிகர்கள்
சார்பாக இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கின்றேன்.
============================
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteVery Touching Story from 'Chinna Dhadha'. My father use to say "Manushana Manishanaa Paaru. Jaathi, Madham Pakkadhe". I still follow this proudly.
ReplyDeleteசின்ன தாதா -நெஞ்சை நெகிழவைத்தார்...மனிதம் மறிக்கவில்லை...
ReplyDeleteசின்ன தாதா....மனிதம் மறிக்கவில்லை...
ReplyDeleteஇஸ்லாம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஈகைப்பெருநாள் வாழ்த்துக்கள்...
நெஞ்சை தொடுகின்ற உண்மை நிகழ்வு.... நன்றி மறவா உயர்க்குணம் பாராட்டபடவேண்டியது.
ReplyDeleteஅன்புடன் நண்பர் ஜாக்கி சேகர் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteநெஞ்சை தொடுகின்ற உண்மை நிகழ்வு.. .இந்த பதிவை எனது முக நூல் பக்கம் பதிவு செய்திருக்கிறேன்.
சின்ன தாதா
ReplyDeleteபடித்து முடிக்கும் போது என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது..
Sankar
Qatar
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
ReplyDeleteஞாலத்தின் மாணப் பெரிது
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
ReplyDeleteஞாலத்தின் மாணப் பெரிது
மிக்சரில் முதல் இரண்டு செய்திகளுக்கும் உள்ள உள்குத்தை ரசித்தேன்
ReplyDelete-சங்கர் திருநெல்வேலி
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
ReplyDeleteஞாலத்தின் மாணப் பெரிது
Ji with your permission I have posted this incidence in FaceBook.
Thanks.
Pondicherry la naveena theatre ipo pothys godown sir. Theatre close panni 15 varusham aachu jackie sir.......urs visiri
ReplyDeletePondicherry la naveena theatre ipo pothys godown sir. Theatre close panni 15 varusham aachu jackie sir.......urs visiri
ReplyDelete