நெடுஞ்சாலை.... கண்மணிகுணசேகரன்.. புத்தக விமர்சனம்.


ஜாக்கி அண்ணே...

நான் சரவணகுமார் பேசறேன்.. ஊருக்கு வந்து இருக்கேன்.. பிரியா இருந்தா மணிஜி ஆபிசுக்கு  வாங்கண்ணே


போனேன்  சரவணகுமாரை சந்தித்தேன்.. நலம் விசாரித்தேன்...
பிறகு பேச்சு அரசியல் பதிவுலகம் என்று  சகல இடத்தையும் ரவுண்ட் கட்டி அடித்துக்கொண்டு இருக்கும் போது மணிஜியோட பேச்சி திசை மாறியது...

அந்த புத்தகம் எனக்காக வாங்கி வைத்து இருப்பதாகவும்.. இந்த பக்கம் போனால்  வந்து  வாங்கி செல்லவும் என்று ஏற்கனவே மணிஜி சொல்லி இருந்தார்.... 

அந்த புத்தகத்தின் பெயர் கண்மணிகுணசேகரன் எழுதிய நெடுஞ்சாலை நாவல்.....

ஏற்கனவே ஒரு முறை வடகரைவேலன் அண்ணாச்சி இந்த புத்தகத்தை நான் அவசியம் படிக்க வேண்டும் என்று அன்பாய் உத்தரவிட்டு இருந்தார்...


அப்படி  உத்தரவிட்ட புத்தகத்தைதான் மணிஜி எனக்காக வாங்கி வைத்து இருந்தார்... ஒரு அரைமணிநேரம் இந்த புத்தகத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்...ஒரு ஆப் காலியாகி போனதால் அப்படி பேசுகின்றாரோ? என்று ஒரு சந்தேகம் லைட்டாக இருந்தாலும் பேச்சில் அந்த புத்தகத்தை பற்றியும் கதை போக்கு பற்றியும் விவரனை பற்றியும் விடாமல் பேசிக்கொண்டு இருந்தார்...


உங்க ஊர் பாஷை.... நீ எழுதறதுல பல இடத்துல இந்த ஸ்டைல் வருவதை நான் பார்த்து இருக்கேன் நீ.. கண்டிப்பா வாசிக்கவேண்டும்.. என்றார்...

நான் புத்தகத்தை வாங்கினேன்... அந்த அட்டை படம் என்னை என் ஊருக்கு பின்நோக்கி தள்ளியது..

எங்கள் ஊரில்  என் அப்பா காலத்தில் ஒரே ஒரு கரி என்ஜின் பொருத்தப்பட்ட பேருந்து மட்டுமே ஓடிக்கொண்டு இருந்ததாம்.. காலையில் ஐந்தரை மணிக்கு முன் பக்கம் ராடு போட்டு சுற்றி  வண்டியை ஸ்டார்ட் பண்ண வேண்டுமாம்... ஆனால் என் சிறு வயதில் இரண்டு தனியார் பேருந்துகளைத்தான் நான் பார்த்து இருக்கின்றேன்.. பயணித்து இருக்கின்றேன்.

ஒரு பேருந்தின் பெயர் எஸ்விஎம்எஸ் என்கின்ற மூன்றாம் நம்பர் மற்றது எஸ்எல்டி என்ற எட்டாம் நம்பர்... இந்த இரண்டு பேருந்துகள்தான் எங்களை  கடலூர் டவுனுக்கு அழைத்து செல்லும் வாகனம்...

முக்கியமாக எஸ்எல்டி என்று அழைக்கப்படும்... பேருந்து  மதியம் ஒன்றரைமணிக்கு வரும் நானும் அம்மாவும் வீட்டு வேலை முடித்து விட்டு,  அந்த பஸ் பிடித்து பாடலி டாக்கிசில் ஏதாவது புது படத்துக்கு போவோம்....

1980க்கு மேல் என்று நினைக்கின்றேன்...வெள்ளை சிவப்பு வண்ணம் அடித்துக்கொண்டு 16 என்ற எண் கொண்ட தந்தை பெரியார் பேருந்து எங்கள் கிராமத்து சாலைகளில் புழுதி கிளப்பி பறக்க ஆரம்பித்தது...

அது பாலூர் வழியாக பண்ரூட்டி செல்லும் பேருந்து...

1984ல் அதே பேருந்து ஜனாகிராம் பேப்பர் ஸ்டோர் வாசலில் ஒரு ஆள் மீது ஏறி  இறங்கி அனாதையாக ரோட்டில் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு நின்றுக்கொண்டு இருந்தது..

 ஒரு நடுத்தர வயதை கடக்க போகும் மனிதன் மண்ணில் கவுந்து வாயில் ரத்தம் வந்து இறந்து கிடந்தான்.. அருகில் அவன் பிடித்து இருந்த பீடி பக்கத்தில் கிடந்தது...குடி குடித்து விட்டு வண்டியில் வந்து விழந்து விட்டான் என்று வேடிக்கை பார்த்தவர்கள்  சொன்னார்கள்...

என்  ஆயாவோடு அந்த ஏழு நாட்கள் திரைப்படம் பாடலி தியேட்டரில் பார்க்க  சென்று இருந்தேன். அது 1984ல் ன் புத்தாண்டு தினம்..நான் பார்த்த முதல் பேருந்து விபத்து  அதுதான்..

அதன் பிறகு பேருந்து இல்லை என்றால் 16ல் ஏறுவோம்...தனியார் பேருந்து போல கவர்சியாக  அந்த பேருந்துகள் இருக்காது.....கிராமத்து பக்கம் செல்வதால் நிறைய மக்களை ஏற்றிக்கொண்டு நிறைமாத கர்பினியாகவே அந்த பேருந்துகள் பயணிக்கும்... அதன்பிறகு பல வழித்தடங்களில்  நிறைய பேருந்துகள் சென்றது.. இப்போது அரசு பேருந்தாக மாறிப்போனது...

பெரியார்.. வந்துட்டானா? பெரியார் பிரேக் பிடிக்காம புளியம்மரத்துல திருமாணிக்குழிக்கிட்ட உட்டுட்டான்... பெரியார்காரன் பிரேக் டவுன் ஆகிட்டான் என்று பெரியாரை மரியாதை இல்லாமல்  மக்கள் அழைத்துக்கொண்டு இருந்தார்கள் ஆனால் இப்போது அப்படி இல்லை.


என் பாட்டி ஒருவருக்கு தெவஷம்..  பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் பேருந்து ஏறி.. பண்ரூட்டி பேருந்து நிலையம் வந்து,16 பிடித்து கடலூர் வந்து, அப்பா வேலை பார்த்த கடையில் துணிகள் வாங்கி கொண்டு,அதே 16ல் திரும்ப ஏறி பண்ரூட்டி வந்து ,தட்டாஞ்சாவடிக்கு வந்து துணிகளை கொடுத்த போது நான் 5ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்.. ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை இல்லையா என்று என்னை என் உறவுகள் தலையில் தட்டி மகிழ்ந்தன...

தனியார் பேருந்துகள் திடிர் என்று எப்சிக்கு போய் இரண்டு நாள் தலையையே ஊர் பக்கம் காட்டாமல் இருக்கும் போது பெரியரே எங்கள் தெய்வமாக இருப்பார்...

அப்படி பட்ட  பெரியார் பேருந்து டெப்போவில் வேலைக்கு சேரும் மூன்று கேஷுவல் லேபர்கள் பற்றிய கதைதான்..நெடுஞ்சாலை நாவல்...

இந்த நாவல் எங்கள் மண்ணின் சொத்து என்பேன்.. சென்னை வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன.. ஆனால் என் மண்ணின் மனம் இந்த நாவலில்  வீசிக்கொண்டு இருக்கின்றது... நடு  நாட்டுகாரர்கள் என்று அழைக்கப்படும் தென்னார்காடு  மாவட்ட மக்களின் பேச்சு வழக்கு இந்த புதினத்தில் பதியப்பட்டு இருக்கின்றது...


இப்படி ஒரு நாவலை எப்படி மிஸ் செய்தோம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றேன்... நான் எல்லாம் பெரிதாய் எழுதி ஒரு மயிறும் புடுங்கவில்லை.. பெரியாரில் வேலை பார்க்கும் ஒரு டெக்னிக்கல் வேலை செய்பவன் எழுதி இருக்கும் இந்த புதினம்.. என் மக்களின்  ரத்தமும் சதையுமான  வாழ்க்கையை எந்த  சமரசமும் இல்லாமல் எழுதி இருக்கின்றார்..கண்மணிகுணசேகரன்...

என் மண்ணில் பேச்சில்  கோவை மற்றும் மதுரைகாரர்களின் மரியாதையை போல பார்க்கவே முடியாது.. யாராக இருந்தாலும் நீ.. வா.. போ என்பதாகவே பேச்சு இருக்கும்.. எங்கள் ஊர்  பேச்சில் மரியாதை கிஞ்சித்தும் இருக்காது,...ஆனால் இப்போது அதே  ஊர் பேச்சை சென்னையில் பேசிக்கொண்டு இருப்பவர்..  எங்கள் பக்கத்துஊர்க்காரர் இயக்குனர் தங்கர் பச்சான் மட்டுமே... அப்படி முழுக்க முழுக்க எங்கள் ஊர் பாஷையை பேசிய படம்..தங்கர்பச்சான் இயக்கிய அழகி,சொல்லமறந்தகதை, சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி போன்ற திரைப்படங்களை சொல்லலாம்..


 எல்லோரும் படுத்து இருக்கும் ஹாலில் பாத்ரூமில் ஒரு கண்டக்டர் குளித்து விட்டு நிர்வாணமாக வந்து தன் அழகை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இருப்பதை குணசேகரன் எழுதி இருந்தார்... அதே போல ஒரு வீடியோகிராபரை எனக்கு தெரியும்...முதல்நாள் பெண் அழைப்பு முடிந்து விட்டு  எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் எல்லோரும் படுத்து இருப்போம்..காலையில் முதலில் அவன்தான் குளிக்க செல்லுவான்... அவன் இதை படிக்கலாம்  என்பதால் பெயர் வேண்டாம்... குளித்துக்கொண்டு இருக்கும் போதே... கதவை  சடார் என்று திறப்பான்..

மலர்ந்து டெம்டாகி இருக்கும் அவன் ஆண்குறியில் சோப்பை பொட்டு தேய்த்துக்கொண்டே..ஓம்மால இத்தனோன்டு இருந்துக்கின, நைட்டு எல்லாம் என்னம்மா தொல்லைகொடுக்குது தெரியுமா? என்று சொல்லி பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் எதிரிலேயே சோப்பை போட்டு இன்னும் வேகமாக உருவிவிடுவான்...எனக்கு அந்த கண்டக்டர் கேரக்டர் பத்தியை படிக்கும் போது அவன் ஞாபகம்தான் வந்தது.கூடவே சோப்பு போட்டு வரட்டு வரட்டு என்று தேய்த்த காட்சியும்தான்..


ஜாக்கி.. நீங்க ஏன் அக்லி வேர்ட்ஸ் யூஸ் செய்யறிங்க...அதை தவிர்த்து விட்டு எழுதினா  இன்னும் நல்லா இருக்கும் என்பது போலான கடிதங்கள் எனக்கு வரும்...ஆனால் என் ஊரில் நாங்கள் என்ன பேசிக்கொள்ளுவோமோ? எப்படி பேசிக்கொள்ளுவோமோ என்பது இந்த நெடுஞ்சாலை  நாவலை படித்தால் புரிந்து போகும்..அப்படி பேசிக்கொள்வதைதான் கண்மணி  எழுதி இருகின்றார்.. அப்படித்தான் நான் எழுதுகின்றேன். 

அதே போலத்தான் நானும் எழுதும் போது அது போல சில வார்த்தைகள் வந்து விடுகின்றது.. இன்னும் சென்னை வந்த பிறகு..ஓத்தா  ஓத்தலப்பா வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது?? நான் என்ன செய்ய..??சட்டியில் என்னவோ அதுவே அகப்பையில் வரும்.....

ஒரு அரசு பேருந்து புறப்பட என்னவெல்லாம் ததிகனத்தோம் போட வேண்டி இருக்கின்றது?  கதைநாயகர்கள்.. ஏழைமுத்து,அய்யானர்,தமிழரசன் போன்றவர்கள் என் மனதில் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
ஏனோ எனக்கு ஏழைமுத்துவின் மனைவியை ரொம்பவே  பிடித்து போய் விட்டது..எங்கள் ஊரில் நிறைய ஏழைமுத்து மனைவி போன்றவர்களை பார்த்து இருக்கின்றேன். அதே போல அய்யானருக்கும் அந்த சித்தாளுக்கும் ஆற்றங்கரையில் நடக்கும் அந்த காமகளியாட்டத்தில் நானும் பங்கு பெற்றது போன்ற ஒரு உணர்வை எழுத்தில் கொண்டு வருவது பெரிய விஷயம்... கண்மணிக்கு கை வந்து இருக்கின்றது...


ஓட்டை உடைசலான  பேருந்தை சென்னைக்கு ஏழைமுத்து ஓட்டி வரும் போது... அந்த  பேருந்து எந்த விபத்தையும் சந்திக்ககூடாது என்று படிக்கும் போது நீங்கள் வேண்டிக்கொள்ளுவீர்கள்.. அதுதான் நெடுஞ்சாலை நாவலின் வெற்றி என்பேன்..

கடலூர் சென்றால் அந்த வெள்ளை சிவப்பு பேருந்தை ஆசை தீர தடவிபார்க்க மனம் ஏங்குகின்றது.


நாவலை வாசியுங்கள்.. எங்கள் மண்ணின் மக்கள் உங்கள் கண்முன் வந்து போவார்கள்...அந்த வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வை சொன்ன  கண்மணிகுணசேகரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நெடுஞ்சாலை  நாவலை வெளியிட்ட தமிழினி பதிப்பகத்தாருக்கு என் நன்றிகள்...

ஆசிரியர் கண்மணி குணசேகரனின் கைபேசி எண்....9790214515..
கண்மணி குணசேகரன் அவர்களிடம் தொலைபேசியில் பேசி நன்றிதெரிவித்தேன்..முடிந்தால் எனது அஞ்சலை நாவலை வாசித்து பாருங்கள்.. என்றார்.. அடுத்து அதைதான் வாசிக்க  எண்ணி இருக்கின்றேன்...

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல நாவலை வாசிக்க உற்சாகப்படுத்திய வடகரைவேலன் அண்ணாச்சி மற்றம் மணிஜிக்கும் நன்றி... எனக்காய்  இந்த புத்தகத்தை பரிசளித்த மணிஜிக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

=====================

நாவல் கிடைக்குமிடம்...
டிஸ்கவரி புக்பேலஸ்
கேகேநகர்.
சென்னை
கைபேசி. 9940446650
=======================================
தமிழினி பதிப்பகம்..
67 பீட்டர்ஸ்  ரோடு
ராயப்பேட்டை... சென்னை 14 ... போன் 9884196552

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.






நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

  1. அருமையான அறிமுகம்.

    பலரும் படிப்பதால் தேவையற்ற அந்த வார்த்தைகளை உங்கள் பதிவுகளிலிருந்து நீக்கிவிட்டு எழுதினால் உங்கள் பதிவுகள் இன்னும் சிறப்பாக இருக்கும். (நாவல் வேறு பதிவு வேறு என்பதால் இந்த கருத்து)

    ReplyDelete
  2. நம்பர் கொடுத்ததற்கு நன்றி .. :)

    ReplyDelete
  3. உங்கள் ஊர்ப் பேச்சுமொழியை வாசித்து உங்களுக்கு உற்சாகம் வந்துவிட்டது, இல்லையா? சந்தோஷம்!

    மருத்துவரய்யா ராமதாசு அவர்கள் தலைமையில், விருத்தாச்சலத்தில் அரங்கேறிய "நெடுஞ்சாலை" வெளியீட்டு விழாவில் என்னையும் பேசவைத்தார்கள். அதன் ஒரு பகுதி இது (ஜாக்கியின் கவனத்துக்கு இது. வெட்டிக் குறைத்து வெளியிட்டுக் கொள்ளலாம்.)

    ReplyDelete
  4. ஓட்டை வண்டி
    ---------------------

    ‘நெடுஞ்சாலை’ ங்கிற இந்த நாவல்ல, ஒரு ஓட்டை வண்டி வருதுங்க. அதாவது ஒரு ஓட்டை பஸ். அதுல, ஒரு திருவிழாக் கூட்டத்தெ ஏத்திக்கிட்டு, கோணாக்குப்பத்துல இருந்து சென்னைக்குப் போயித் திரும்புற பொறுப்பு, டிரைவர் ஏழமுத்து, கண்டக்டர் தமிழரசுங்கிற இரண்டு பேரோட கையில வருதுங்க. ஆனா இந்த ரெண்டு பேரும் சி.எல்லு. அதாவது காசுவல் லேபரர்ஸ். சி.எல்லுங்கிறதுனால, அவங்களும் தட்டிப்பேச முடியாம அந்தப் பொறுப்பெ ஏத்துக்கிறாங்க. தகரத்துல கல்லெறிஞ்சா மாதிரிக் கலகலக்குற ஒரு ஓட்டை வண்டியெ, கரும்புத் தோட்டத்துல ட்ராக்டரும் ட்ரக்கும் ஓட்டிக்கிட்டுத் திரிஞ்ச ஒரு டிரைவரு, ஒரு சிறு வியாபாரிக்கு மகனாப் பொறந்திருந்தாலும் சதா கணக்குல கோட்டை விடுற ஒரு கண்டக்டரையும் சேர்த்துக்கிட்டு, நீ முந்தி நான் முந்தின்னு போக்குவரத்து நெரியுற நெடுஞ்சாலையில, இருட்டுல, மழையில, சென்னை வரைக்கும் போயித் திரும்பணும். முடியுமா?

    இரண்டு பகுதியா எழுதப்பட்டு இருக்கிற இந்த நாவல்ல, இரண்டாம் பகுதி மொத்தமும் இந்த மெட்ராஸ் ட்ரிப் பத்துனதுதாங்க. ஒரு suspence thrillerக்கு உரிய பரபரப்போடும் விறுவிறுப்போடும் இந்தப் பகுதி எழுதப்பட்டு இருக்குதுங்க.

    வாசிக்கிற நமக்கு, கதையால உண்டாகுற பரபரப்புக்கு இடையிலும், சில பல உள்ளர்த்தங்களும் புரியுதுங்க. நான் இப்படிப் புரிஞ்சுக்கிட்டேன்: அரசாங்கம்கிறது ஒரு ஓட்டை வண்டி. பொதுமக்கள், எந்நேரமும் திருவிழாக் கொண்டாட்ட மனநிலையில ஜாலியா இருக்கணும்னு நெனைக்கிறவங்க. அரசியல்ங்கிறது, நீ முந்தி நான் முந்திங்கிற நெரிசல் நெறைஞ்ச நெடுஞ்சாலை. இருட்டுங்கிற தெளிவின்மை, மழைங்கிற வழுக்கல், சென்னைங்கிற தலைநகர் சென்று சேர வேண்டும். அவங்களெக் கரைசேர்க்கிற பொறுப்பு காடுகரையில, சிறுசிறு கடைகள்ல வேலைசெஞ்சு பொழைக்கிற பாட்டாளி மக்களோட கையில வருது. முடியுமா? முடியாதுங்கிறது இல்ல. ஆனா அதுக்கு உரிய மனப்பாங்கு - அதாவது attitude - வேணும்ங்க. அதாவது உள்ளது பத்துன்னா உருவேத்தறது தொண்ணூறுங்கிற attitude.


    இந்த நாவல்ல, ஒரு கதைத் திட்டம் - அதாவது ஒரு plot - இல்லைங்க; தனிப்பட்ட கதாநாயகனோ, நாயகியோ இல்லை. மனிதர்களெப் பத்தியோ இடங்களெப் பத்தியோ பக்கம் பக்கமா வர்ணிக்கிற வர்ணனை இல்லை. ஆனா, அன்றாடம் நம்ம கண்ணு முன்னால நடந்துக்கிட்டு இருக்குற அசலான ஒரு வாழ்க்கை இருக்குங்க. உணர்ச்சிகளும் பாடுகளும் உள்ள மனிதர்களெப் பத்துன சித்திரம் இருக்கு. இக்கட்டான இந்த வாழ்க்கையில ‘நாம செய்ய வேண்டியது என்ன?’ங்கிறதுக்கு நேர்முறையான - அதாவது positiveஆன - ஒரு கருத்தாக்கமும் இருக்கு.

    ReplyDelete
  5. தட்டுப்பாடு
    ------------------

    இந்த நாவல் நெட்டுக்கு வாசிக்கக் கிடைக்கிற ஒரு விசயம்: தட்டுப்பாடு. அதாவது பற்றாக்குறை. தட்டுப்பாடு இல்லாத நிலைமை எங்கேயுமே இல்லைங்க. வீட்டுலயும் இருக்கு; வேலை செய்யிற இடத்துலயும் இருக்கு. டிரைவர், கண்டக்டர், டெக்னீசியன்னு இல்ல, இஞ்ஜினியர், மேனேஜர் கூட தட்டுப்பாடான சூழ்நிலைக்குள்ள இருந்துதான் புழங்கவேண்டி இருக்கு. போக்குவரத்துக் கழகப் பணிமனையோட BM - அதாவது Branch Manager - சொல்றாரு: “ஒரு வேலை நடக்காததுக்கு ஆயிரம் காரணத்தெச் சொல்லக்கூடாது. ஆயிரம் காரணம் எடைஞ்சலா இருந்துச்சு, அதெல்லாம் மீறித்தான் இந்த வேலையெச் செஞ்சு முடிச்சேன்னு சொல்லணும்.” இதுதான் இந்த நாவலோட மையக் கருத்துன்னு படுது. அதாவது உள்ளது 10 ஒப்பேத்த வேண்டியது 90.


    பதினாறாம் அத்தியாயம்

    பதினாறாம் அத்தியாயத்துல சந்திரான்னு ஒரு பொண்ணு வர்றா. அவ ஒரு சித்தாளு. அவளும், முந்தி அவளோட கொத்தனாரா வேலைபார்த்த ஐயனாரும் சந்திச்சுக்கிறாங்க. அய்யனாரு, அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில ஒரு டெக்னிக்கலு. ஆனா சி.எல்லு. யாரோ செய்த தப்புக்கு எங்கோ ஒரு வண்டி break down ஆக, இவனுக்கு வேலை போகுது. அதை வீட்டுலயும் சொல்ல முடியாம, மறுபடியும் கொத்து வேலைக்குப் போறான். கணவனால கைவிடப்பட்ட ஒருத்தியும், வேலை கன்ஃபர்ம் ஆனாத்தான் கல்யாணம்னு இருந்து அந்த வேலையும் பறிபோய் ஒருத்தனும், புதுக் கருக்குக் குழையாத ஈர வாசத்தோடு கூடிய மெல்லிய இருள் பரவிக் கிடக்கிற ஒரு வீட்டுக்குள்ள பூச்சு வேலைக்காகத் தனிமைப் படுறாங்க.

    என்னா எழுத்து போங்க! வாசிக்கிறப்போ, அந்த அய்யனாருக்கும் சந்திராவுக்கும் இடையில எதாவது நடந்தா நல்லா இருக்குமேன்னு நமக்குள்ள ஒரு ஏக்கம் வந்திறுது. தமிழின் தலைசிறந்த நாவல்கள்ல ஒன்னுனு, தி. ஜானகிராமன் எழுதிய ‘மோகமுள்’ இன்னிக்கு வரை சிலரால பேசப்படுது. அந்த ‘மோகமுள்’ மொத்த நாவலுக்கும், உணர்வு அடிப்படையில, இந்த ஒரு அத்தியாயம் நிகர்ன்னு எனக்குச் சொல்லத் தோணுது.


    பார்ப்பன-வெள்ளாளத் தமிழ்
    -------------------------------------

    முந்திக் காலத்துல, தமிழ்ச் சமுதாயத்துல, பலசாதிக் காரங்களும் படிச்சவங்களா இருந்திருக்காங்க. சங்கப் பாக்களை எழுதுன புலவர்களோட குலங்களை ஆராய்ந்தால் இது விளங்கும். ஆனா சமயச் சடங்குகள் ஓங்குன இடைக்காலத்துல, கல்வி பார்ப்பனர்கள், வெள்ளாளர்களுக்கு மட்டுமே என்றாகிப் போயிற்று. ஆங்கிலேயர் வருகையால் அது மாறி, இன்னைக்குப் படிப்பறிவு பெற்றிருக்கிற பலசாதி ஆட்களும், தமிழைப் பொறுத்தமட்டில், பார்ப்பன-வெள்ளாளத் தமிழைப் படித்துத்தான் வளர்ந்து இருக்கிறோம். அதனால இன்னிக்குக் கதை எழுதுற அத்தனை பேருகிட்டயும் கல்கி, ஆனந்தவிகடன்ல வாசிக்கக் கிட்டுற அந்தத் தமிழோட சாயல் இல்லாம இருக்காது. அது தப்புன்னு சொல்ல வரலை. ஆனா தொழிலாளர்கள் அல்லது அடித்தட்டு மக்களைப் பத்திப் பேசுற எழுத்துகள்ல அந்த மொழிநடை ஒட்டாம வெளிறிப்போயி நிற்குமா இல்லையா?.

    அது என்னங்க பார்ப்பன-வெள்ளாளத் தமிழ்? ‘அச்சமா அல்லது நடுக்கமா இருக்குது’ங்கிறதெச் சொல்றதுக்கு, ‘வயித்துல புளியக் கரைக்கிது’ம்பாங்க. புளியெக் கரைச்சுப் புளிக்குழம்போ ரசமோ வெச்சுச் சாபிட்ட பழக்கமுங்க. ஆனா, கருவாட்டெச் சுட்டு அல்லது உப்பு மொளகாயெத் தொட்டுக்கிட்டுக் கூழோ கம்பங்கஞ்சியோ குடிக்கிறவங்களோட பொழப்பப் பத்தி எழுதுறப்போ அது ஒட்டுமாங்க? மொத மொதல்ல புளியெக் கரைச்சாரே அவரெக் குத்தஞ் சொல்றதுக்கு இல்லீங்க. ஆனா கரைச்சுக் கரைச்சு நாராகிப் போனதெ இன்னிக்கும் விடாமக் கரைக்குறாங்க பாருங்க அதுதாங்க கொடுமை!


    கண்மணியின் தமிழ்
    ----------------------------

    படிச்சதுனால வந்து சேர்ற அந்தப் பார்ப்பன-வெள்ளாளத் தமிழ் இல்லாம, கண்மணி குணசேகரனோட எழுத்துல பாட்டாளி மக்களோட வழக்குமொழி வந்திருக்குங்க: இளம்பருவத்தோட தொடக்கத்துல சந்திரா எப்படி இருந்தாள்ன்னு சொல்றப்போ, “எருமுட்டில் முளைத்த செடியாய்த் தளதளப் பருவம்”ங்கிறாரு. வேலையெ விட்டு விலக்குனதுல நொந்துபோயி வந்திருக்கிற அய்யனாருக்கு, சந்திராவோட பேச்சு, “புண்ணுவாயில் படர்கிற தேங்காய் எண்ணெய்யாய் ஒரு குளிர்வு!” அய்யனாரு கரணையில கலவையை எடுத்து வீசுறப்போ அது, “ஒரு ஆட்டின் சுவரொட்டியாய் ஒட்டிக்கொள்கிறது”. மத்த கொத்தனாருங்க வாரி அடிக்கவும் வழித்துக்கொண்டு விழுவதுமாய், “கூழில் விழுந்த ஈயாய் சுக்கிரத்துக்கொண்டு கிடக்கிறார்கள்.” எடுத்துகொண்ட கதைக்களத்துக்குப் பொருத்தமான தமிழுங்கிறது இதுதானுங்க.

    ReplyDelete
  6. மிக அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள் சுந்தராஜன் சார்... மிக்க நன்றி விரிவாய் பகிர்ந்தமைக்கு..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner