பத்தாவது படித்து
பாஸ் பண்ணி ஸ்கூலுக்கு போய் மார்க் ஷீட்டுல கையெழுத்து போட சொல்லி மார்க்ஷீட்
கொடுப்பாங்க... அதே போல பிளஸ் டூ பாஸ் ஆனதும் அதே போல மார்க்ஷீட்டுல கையெழுத்து போட
சொல்லி மார்க்ஷீட் கொடுப்பாங்க..
இரண்டு கையெழுத்தையும் வித்தியாசத்தை பாருங்க..
நிறைய இருக்கும்.. முக்கியமா இரண்டு வருஷம்தான்... இத்தனைக்கு இரண்டுமே நாம் போட்ட
கையெழுத்துதான்.
1990இல நான் போட்ட
கையெழுத்துக்கும் இன்னைக்கு நான் போடற கையெழுத்துக்கும்
நிறைய வித்தியாசம் இருக்கு.... மனித வாழ்வில் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்று புரிந்துக்கொள்ள வேண்டும்...அது போலத்தான்
விஜய் கோக் விளம்பரத்துல அன்னைக்கு நடிச்சதையும் இன்னைக்கு படத்துல கோக்குக்கு எதிரா பேசுவதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்...
5 வருஷத்துக்கு முன்ன ஆதிமுகவுக்கு ஓட்டு போடுவோம்.. அதன்
பின் அவுங்க சரியில்லைன்னு திமுகவுக்கு நாம
ஓட்டு போட்டதில்லை.. அன்னைக்கு அதிமுகவுக்கு
போட்டியே..?? இன்னைக்கு ஏன் திமுகவுக்கு போட்டே என்று யாராவது நம்மிடத்தில் கேள்வி
கேட்டால் நம் யாரிடமும் பதில் இல்லை என்பதே
உண்மை..
கலைஞன் என்பவன் காசு கொடுத்தால் எல்லா பாத்திரத்தையும் ஏற்று நடிப்பவன்.. ஒரு படத்தில்
குழந்தையை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும்
காட்சியில் நடித்தான் என்பதற்காக அடுத்த படத்தில்
குழந்தையை சீராட்டும் தகப்பனாக நடிப்பதை விமர்சிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லையோ..
அதே போல விஜய் கோக் விளம்பரத்தில் நடித்து
விட்டு இன்று தன் திரைப்படத்தில் கோக் கம்பெனிக்கு
எதிராக பேசுவதை ரொம்ப சீரியாசாக சிலர் பேசுவதை நினைத்தால்
காமெடியாக இருக்கின்றது..
நாளை இன்னும் 50 கோடி விஜய்க்கு கொடுங்கள்.. இன்னும் பத்து வருடத்துக்கு கோக்கு குடித்தால் அறிவு பெருகும் என்று அவரே திரும்பவும்
விளம்பர படுத்துவார்...காரணம் அவர் நடிகர்.... அவரது தொழில் நடிப்பு... ஆனால் திரைக்கு
வெளியே சமுகத்தை மாற்றுகின்றேன்.. அரசியல் சாக்கடையை சுத்தபடுத்துகின்றேன் என்று கிளம்பினால் கண்டிப்பாக
விமர்சனத்துக்குள்ளாகுவார்...
திரைப்படம் அல்லாது பொதுவெளியில் பேசும் கருத்துக்கள் கண்டிப்பாக
விமர்சனத்துக்கு உள்ளாகும்.. அது மட்டுமல்ல.. எம்ஜிஆரை தமிழக மக்கள் பூஜிக்க காரணம்...
சினிமா என்றால் என்ன என்று தெரியாத காலகட்டம்... சினிமாவில் நல்லது மட்டுமே செய்தால் கண்டிப்பாக அவர் நல்லவராக மட்டுமே இருப்பார்
என்ற புரிதல்.. கெட்டவன் நம்பியார் வெளியே போனாலே திட்டி தீர்த்த காலக்கட்டம் அது..
ஆனால் இன்று தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில்
சினிமா என்றால் என்ன என்று தெரிந்து விட்டது... அதனால்தான் ரஜினியை விட அதிக ரசிகர் பட்டாளத்தை
வைத்து இருந்த சிரஞ்சிவி கட்சி ஆரம்பித்து சூடு போட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல்.. கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைத்தார் என்பதையும் நாம்
நினைவுகூற வேண்டும்...அதன் காரணத்தாலே தமிழக சூப்பர் ஸ்டார்...ரஜினி அரசியலில் ஒரு ஸ்திரமான முடிவு முடிவு எடுக்க இன்றுவரை தயங்கி நிற்கிறார் என்பதுதான் நிதர்சனம்..
ரஜினியை யாரும் அரசியலுக்கு அழைக்கவில்லை... விமர்சிக்க வில்லை.. முதல் முறையாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று எப்போது மைக் முன் பொதுவெளியில் பேசினாரோ.. அன்றில் இருந்து விமர்சனமும், அரசியரும் அவரை துரத்த தொடங்கின.
நிற்க...
ஒரு அரசியல்வாதி வாக்கு கொடுக்கின்றான்... ஆனால் செய்யவில்லை
விமர்சிக்க படுகின்றான்... அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுகின்றார்கள்...ஒரு
அரசியல் வாதி கொள்கையை காற்றில் விட்டு பணத்துக்காக
கட்சி மாறுகின்றான்... விமர்சிக்கபடுகின்றான்..
அதே போல கடந்த இருபது வருடத்தில் யார் என்ன பேசினாலும்
அதற்கு வீடியோ பதிவும் இருக்கின்றது... அரநியல் வாதிகளின் முரண்பட்ட கொள்கைகயை எடுத்து போட்டு
அது வேறவாய் இது நாறவாய் என்று அரசியல்வாதிகளை ஓட்டி தள்ளுகின்றார்கள்... ஆனால் நடிகர்கள் கதாபாத்திரங்களாக முரணாக ஏற்று நடித்த பாத்திரங்கள் எத்தனையோ இருந்தாலும் அதையாரும் எடுத்து போட்டு விமர்சிப்பதில்லை என்பதையும் நான் உணர வேண்டும்.
ஆனால் நடிகர்களில்
அரசியலுக்கு வராமல் அரசியலையும் விமர்சிப்பவர்களை
பெரிய
அளவில் ரசிகர்கள் விமர்சிப்பதில்லை.. உதாரணத்துக்கு நடிகர் கமல் ஜீரோடாக்ஸ் அரியர், எயிட்ஸ் விளம்பரம் என்றாலும் தலைகாட்டுவார். வருமானவரி விளம்பரம்
என்றாலும் தலைகாட்டுவார்..
உன்னால் முடியும்
தம்பி, நம்மவர்,மகாநதி போன்ற திரைப்படங்கள் மூலம்
சமுக கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் பரப்பியவர்.. விஸ்வரூபம் திரைப்படத்துக்கு
மத ரீதியான எதிர்ப்பு வந்த போது கூட அவரது
ரசிகர்கள் அல்லாதவர்களும் அவருக்கும் உடன் நின்றார்க்ள் என்பதை நான் உணர வேண்டும்...
விக்ரம் அஞ்சு பைசாவை இரண்டு லட்சம் பேர் கொள்ளை அடிச்சது
தப்பா என்று உணர்ச்சி பொங்க கேட்டு விட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய பிறகு அந்த
தீர்ப்பை எதிர்த்து தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துக்கொண்டார்.. எப்போது அரசியல் பந்தலில் தலை காட்டலாம் என்று விக்ரம் அந்த அரசியல் பந்தலில் உட்கார்ந்தாரோ அப்போதே அவர் நடிப்புங்ம அவர் நடித்த காட்சியும் விமர்சிக்கக்க படுகின்றது...
அரசியல் சார்புக்கு வராமல் என்ன நடித்தாலும் எப்படி பட்ட
காட்சியில் நடித்தாலும், எந்த விளம்பரபடத்தில் நடித்தாலும் விமர்சிக்கபடுவதில்லை..
எப்போது தன் படம் ஓட வேண்டும் என்று அரசியல் சார்ப்பு நிலை ஒரு நடிகனால் எடுக்கப்படுகின்றதோ.. ??அப்போதில் இருந்து அவன் மீதான விமர்சனங்கள்
கட்டவிழ்த்து விடப்படுகின்றன...
விஜய் ஊழலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அண்ணா ஹசாரேவை சந்தித்தார், மோடியை சந்தித்தார்,
அம்மாவை சந்தித்தார், தான் சொல்லி அம்மாவை
அமோகமாக வெற்றிபெற வைத்தமைக்கு நன்றி தெரிவித்தார்...
விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கின்றது....அரசியலுக்கு வந்து விட்டதாலே அவர் விமர்சிக்கப்படுகின்றார்...
இன்று காங்கிரஸ்சின் 2ஜி ஊழலை பற்றி திரையில் பேசியவர்..இதே படத்தில் பிஜேபியின் சவப்பெட்டி ஊழல், ஜெயின் சொத்துக்குவிப்பு டான்சி ஊழல், திமுகவின் விராணம் ஊழல், சர்க்காரியா கமிஷன் போன்றவற்றை பேசி இருக்க வேண்டும்... ஒரு கட்சியின் ஊழலை பற்றி பேசினால் மாற்றுக்கட்சியினர் மழைக்கு வடை சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்களா என்ன???? அதனால் அவர்களும் இனி களத்தில் இறக்குவார்கள்.
ஒரு நடிகன் ஊழலுக்கு
எதிரா திரையில் பேசி.. இன்கம் டாக்ஸ் ரெய்டில் பல கோடி பிடித்தால் கூட சும்மா இருந்து விடுவார்கள்.. ஆனால் திரையை தவிர்ந்து அரசியலுக்கு வந்தோலே.... அல்லது அரசியல் சார்ப்பு எடுத்தலோ... நீ யோக்கியமா?
ஊழலுக்கு எதிரா பேச வந்துட்ட?? என்று பொதுமக்கள் எல்லோரும் கேள்வி கேட்பார்கள் என்பதே நிதர்சன உண்மை.
சென்னைக்கு மிக அருகே
திண்டிவனம் என்று டிவி செலிபிரிட்டிகள் விடாமல் தொலைகாட்சியின் மார்னிங் சிலாட்டில் பொய்யை வண்டி வண்டியாக சொல்லிக்கொண்டு இருந்தாலும்... எப்போதாவது யாராவது ஒரு சிலரால் சும்மா ஜாலிக்காக விமர்சிக்கப்படுவார்கள்..
ஆனால் அதில் யாராவது பொதுமேடையில் அரசியல் கட்சி சார்பாக பேசினால் அவர் விளம்பரத்தில் பேசிய பேச்சுகள் கூட வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை விமர்சிக்கப்படும் என்பதே நிஜம்...
இது இன்றோடு முடிந்து விடும் விஷயம் அல்ல....
என்றைக்கு அரசியலில் விஜய் கால் எடுத்து வைத்தாரோ..??,இனி படத்துக்கு படம் , வரிக்கு வரி விஜய் விமர்சனங்களை சந்திக்க
வேண்டி இருக்கும் என்பதே வருங்காலம் தெரிவிக்கும் நிதர்சன உண்மை...
பிரியங்களுட்ன்
ஜாக்கிசேகர்.
24/10/2014
===
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

சிறப்பான அலசல்! நன்றி!
ReplyDelete