அன்புள்ள அப்பா..2012


2009 ஜூன் ஒன்பதாம் தேதி எழுதிய இந்த பதிவை இன்று வாசிக்கும் போது இன்னமும் எனக்கான வலி குறையல்லை.
. ஆனால் முன்பை விட என் அப்பா நான் ஊருக்கு போகும் போது முன்னை விட என்னை மரியாதையாக பார்க்கின்றார்.... மற்றவரிடத்தில் என்னை பற்றி மிக பெருமையாக பேசுகின்றார்...2009 இல் இந்த பதிவை எழுதிய பிறகு அதற்கு வந்த பின்னுட்டங்களோடு அதனை பிரின்ட் அவுட் எடுத்து என் வீட்டு முகவிரிக்கு அனுப்பி வைதேன்... 


என் அப்பாவுக்கு நான் இப்படி எல்லாம் எழுதுவேன் என்ற அவருக்கு தெரிய தெரியாது... இந்த பையன் என்னம்மா எழுதி இருக்கான் என்று என் தங்கைகளிடம் சொல்லி ஆச்சர்யபட்டதாக சொன்னார்கள்..
வீட்டுக்கு வரும் அத்தனை பேரிடமும் இந்த கடிதத்தை காட்டி பெருமைபட்டுக்கொண்டார் என்று என் தங்கை சொன்னாள்.. தந்தையர் தினமாக இன்று இந்த பதிவை மீள் பிரசுரம் செய்து பழைய நினைவுகளை நினைத்து பார்க்கின்றேன்...


=======================
2009 ஆம் ஆண்டில்.......... எழுதியது,.,.
சில மாதங்களுக்கு முன்பு காபி வித் அனு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவும் ,தயாநிதிமாறனும் கலந்து கொண்டு பல விஷயங்களை கலந்துரையாடினார்கள்.
அப்போது நிகழ்ச்சியின் முடிவில் வைரமுத்துவுக்கு, ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்போது நீங்கள் வைத்திருக்கும் பரிசினை யாருக்கு கொடுப்பி்ர்கள் என்று...?


அதற்க்கு கவிஞர் இப்படி ஆரம்பித்தார்,


அந்த மனிதர் மிக நல்லவர், என் வாழ்க்கையில் நான் இந்தளவுக்கு முன்னேற காரணமானவர். அவரால் தான் நான்.கால ஓட்டத்தில் நான் வளர்ந்துவிட்டேன்.எந்த பொருளாதார சுமையும் எனக்கு இல்லை. சுபிட்சமான வாழ்க்கையை நான் வவாழ்கிறேன். ஆனால் அந்த மனிதருக்கு என் மேல் கோபம், நான் அவரை மதிக்கவில்லை அல்லது அவரோடு முன்பு போல் பேசவில்லை என்ற கோபம் என் மீது. அந்த மனிதருக்கு கடுங்கோபம் என் மீது்..நான் விரும்பி அதனை செய்யவில்லை, காலச்சுழலில் அப்படி ஒரு விஷயம் நடந்து விட்டது ஏது எப்படியோ நான் இந்த தொலைக்காட்டிசி வாயிலாக பல்லாயிரக்கனக்கான மக்கள் முன்னிலையில் நான் மானசீகமாக என் தந்தை ராமசாமி தேவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மனிதன் இறந்து வி்ட்ட பின்பு அவனிடம் கால் மாட்டில் விழுந்து புரண்டு அழுவதை விட வாழும் காலத்திலேயே, அந்த மனிதனின் மானசீகமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்பா நீங்கள் இந்த பேட்டியை இப்போது பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியும். அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். இப்போதுகூட நீங்கள் குலுங்கி குலுங்கி அழுவதை என்னால் உணர முடி்கின்றது. என்று கவிஞர் தன் பேட்டியில் முடிவில் சொல்லி எல்லோரையும் கண்கலங்க வைத்துவிட்டார்.


பேட்டியில் அவர் சொன்ன விஷயங்கள் அப்படியே வராவிட்டாலும் அதன் சாரம்சம் இதுதான்... சரி வைரமுத்து பெரிய கவிஞர், அவர் அவர் அப்பாவிடம் விஜய் டிவி வழியாக மன்னிப்பு கேட்டு விட்டார். அனால் நான் எப்படி கேட்பது...
சரி நான் ஏன்? என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கின்றீர்களா?


உங்கள் அப்பாவை நீங்கள் அடித்துவிட்டால் நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா? மாட்டீர்களா? ஆம் நான் வெட்கப்பட்டு சொல்கிறேன். என் அப்பாவை அடித்து விட்டேன். உலகத்தில் நான் பல தவறு செய்து இருந்தாலும், நான் செய்த இமாலாயதவறு என் அப்பாவை நான் அடித்ததுதான்.


என் அப்பாவை அடித்தற்க்கான காரணம் அது ஒரு பெரிய கதை இருப்பினும் சின்னதாக...


எனக்கு 4 தங்கைகள்,என் அப்பாவுக்கு பெரிய சொத்தோ ,அல்லது பெரிய சொந்தங்களின் பின்புலம் இல்லாதவர் ஆனால் மிக நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பிரியபடுபவர். அகாராதியில் நேர்மை என்று இருக்கும் வார்த்தைக்கு எதி்ரில் கவலைபடாமல் வடமலை என்று எழுதலாம். அவ்வளவு நேர்மை. நல்லவரும் கூட. காபி, டீ, வெத்தலைபாக்கு ஏதும் இந்த வயதுவரை உஹும். அனால் எல்லா விஷயத்தையும் நக்கல் விடும் பழக்கம் என்னால்தான் சாத்தியப்பட்டது என்று வார்த்தை பிரயோகம்... இதுதான் என்தந்தை.


எனக்கு கல்லூரி வேலை கிடைத்ததும் நான் செய்த வேலைகள் எங்கள் வீட்டு்க்கு பக்கத்தில் இன்னோரு வீடு கட்டியதுதான்.எனென்றால் சின்ன வீடாய் இருக்கின்றது என்ற காரணத்தால் என் தங்கையை பெண் பார்க்கும் வரன்கள் தள்ளிபோய் கொண்டு இருந்தன.


என் அம்மா என் அப்பாவிடம்,
“ஏங்க நாலு பொம்பளை பிள்ள பெத்து வச்சு இருக்கோம் காதுல கைல போடறதுக்காகவாவது ஏதாவது செய்ய வேண்டும்”. என்ற போதுவரதட்சனை வாங்காத ஆண்பளை வந்து கல்யாணம் பண்ண போதும் என்று வரட்டு
விதன்டாவாதம் பேசியவர்.
அம்மா இறந்து விட்டார்,என் அப்பாவுக்கு கை கால் துவண்டு விட்டது. அதற்க்கான மருத்துவ செலவு ரூபாய்60,000 ஆயிரம் அதையும் நான்தான் பார்த்தேன். என் முன்றாம் தங்கை அரசு வேலையில் இருந்ததால் அவள் சம்பளத்தை வாங்கி நகை சீ்ட்டு போட்டு கொஞ்சம் நகை சேர்த்து வைத்து இருந்தார். மற்றபடி கடந்த இரண்டு வருடத்தில் என் இரண்டு தங்கை மற்றும் என்திருமணம் நடந்து இருக்கின்றது...ஆறு மாதகாலத்தில் இரண்டு திருமணம் யோசித்து பாருங்கள் இரண்டு பெண்பிள்ளைகள் திருமணம் என்றால், எவ்வளவு அலைச்சல். எந்த உறவுகளின் உதவியும் இல்லாமல்.


உலகத்தில கொடுமையான செயல்வீட்டுக்கு பெரிய பிள்ளையாக பிறப்பதுதான். இப்போது நான் முன்றரை லட்சத்துக்கு கடனாளி கொஞ்சம் கொஞ்சமாக இப்போது அடைத்து வருகிறேன். இப்போது வேலை வேறு எனக்கு இல்லை...


ஊரில் என் அப்பா அப்போது 15க்கு 60வதுக்கு கோமன துணி போல் ஒரு பிளாட் வாங்கி போட்டு இருந்தார். மூன்றாம் தங்கைக்கு திருமணம் செய்யும் போது கொஞ்சம் பணம் கையை கடிக்க அப்போது என் தந்தை அந்த மண்ணை வீற்று திருமணச்செலவுகள் செய்ய சொன்னார்.


நான் இப்போது வேண்டாம் நான் கேட்கும் போது கொடுங்கல் அதுவரை அது உங்களிடம் இருக்கட்டும் என்ற போது ஓகே என்றார். அதன் பிறகு பணம் புரட்டி என் மூன்றாம் தங்கை திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. அனால் என் திருமணத்துக்கு பணம் முடையானது , அந்த மண்ணை விற்க்க பத்திரம் கேட்டேன், என் அப்பா தரமாட்டேன் என்று மறுத்தார்.


துரோகம் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சரி உன் பெண் பிள்ளைகளுக்கு நான் கடன் வாங்கி திருமணம் செய்த வைத்தேனே அந்த பணத்தையாவது அந்த மண்னை விற்று கொடுங்கள் என்ற போது உன் தங்கைகளுக்கு திருமணம் செய்தது உன் கடமை என்று சொல்லிவிட்டார்....


நீதான் லவ் பண்ணற இல்லை எதுக்கு மண்டபத்துல கல்யானம் பண்ணிக்கிற கோயில்ல கல்யாணம் பண்ணிக்கோ என்று எகத்தாளமாக அட்வைஸ் வேறு கொடுத்து விட்டார்.


நாங்கஎல்லாம் அந்த காலத்துல என்று தான் தோல்வி அடைந்த கதையை நீட்டி முழங்குவார். எந்த சொத்தும் இல்லை. உதவிக்கு எடுத்துக்கட்டி செய்ய எந்த உறவுக்கூட்டமும் இல்லை. இவ்வளவு செய்த என்னை,


“ நீ என்ன செய்து கிழித்தாய் ”


என்று கைக்கால் துவண்டு போனவர் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் , கடன்காரர்கள் என் கழுத்தை நெருக்கும் போது எனக்கு என்பிரச்சனையை சொல்லி அழ ஆள் இல்லை, என் காதல் மனைவி தவிர...
எனக்கு என் வாழ்க்கை என்று நான் சுயநலமாக சிந்தித்து இருந்தால் எனக்கு எப்பபோதே திருமணம் ஆகி இருக்கும்.
என் அப்பா மட்டும்அந்த மண்ணை வி்ற்று ஒரு லட்சம் எனக்கு கொடுத்து இருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடன் என் கழுத்தை நெறித்து இருக்காது.


இதில் என் அப்பா இந்த வயசுவரை நான் யார்க்கிட்டயும் கை நீட்டி கடன் வாங்கியதில்லை என்று ஜம்பம் பேசுவார்...


ஒரு நாள் என் ஊர் சென்று நான் மட்டும் கடன் பிரச்சனையில், ஒரு கட்டிங் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போய் படுத்த போது இந்த பிரச்சனை எழுந்தது..
என் அப்பா , பேசும் போது நீ என்ன செய்து கிழித்தாய் ?என்றார் பெட்டில் படுத்துக்கொண்டு இருந்த என் அப்பா மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு சட்டையை பிடித்து உலுக்கி கோபத்தில் கண்ணத்தில் அடித்துவிட்டேன்.


அதன் பிறகு என் திருமணம் நடந்தது, பணம் புரட்ட முடியாமல் ரொம்பவும் சிரம பட்டு, என் திருமணத்தை நடத்திக்கொண்டோம். மனதில் நிறைய வலிகள் இருந்தாலும் என் அப்பாவிடம் நின்று சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம்.


அதன் பிறகு என் வீட்டில் நான் தங்குவதே இல்லை. என் அப்பாவை பார்க்கும் போதே கோபமும் அவர் செய்த நம்பிக்கை துரோகமும்தான் என் நினைவில் வருகின்றது. என் திருமணம் முடிந்து ஊர் திரும்பும் போது நான் அவரிடம் சென்னை வரச்சொன்னேன். வரமாட்டேன் என்று மறுத்துவிட்டார். உடம்புக்கு முடியாத போது உன் பிள்ளை இருக்கறதை மறக்காத என்று சொல்லிவிட்டு சென்னைக்கு கார் ஏறினேன். வேறு என்ன செய்வது பெற்றவர் ஆயிற்றே....
இப்போது கூட அவர் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்க முடியாது ஆனால் அதற்க்காக நான் அவரை அடித்த செயலை நான் நியாயப்படுத்வில்லை. சிங்கம் போன்று வாழ்ந்த மனிதரை சிறு நரியான நான் அந்த தவற்றை செய்து இருக்ககூடாது. இப்போதும் என் இதயத்தின் ஓரத்தில் அந்தவலி அனுதினமும் வந்து வந்து செல்கின்றது.(என் தகப்பனார் வடமலை)
அப்பா நான் உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் செய்த துரோகத்தை என்னால் எந்த ஜென்மத்துக்கு மறக்க முடியாது. ஆனால் அதற்க்காக உங்களிடம் அந்த சிறு கைகலப்பில் கை நீட்டியதற்க்கு மிகவும் வருத்தபடுகின்றேன். அப்பா என்னை மன்னியுங்கள்.
ஒரு மனிதன் இறந்து வி்ட்ட பின்பு அவனிடம் கால் மாட்டில் விழுந்து புரண்டு அழுவதை விட வாழும் காலத்திலேயே, அந்த மனிதனின் மானசீகமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.


இப்போது என் அப்பா “முதல் மரியாதை” கிளைமாக்ஸ் சிவாஜி போல் கடலூரில் தனியாகத்தான் இருக்கின்றார்.


 பழைய பதிவை வாசிக்க.... இங்கே கிளிக்கவும்..


அன்புடன்/ஜாக்கிசேகர்


(குறிப்பு)
இந்த பதிவை பிரின்ட் அவுட் எடுத்து நீங்கள் அளித்த பின்னுட்டதுடன் என் அப்பாவுக்கு போஸ்டலில் இந்த மன்னிப்பு பதிவை அனுப்ப போகிறேன்.
==========
இந்த பதிவை நான் ஒரு போதும் நியாயப்படுத்த விரும்பவில்லை..ஆனால் ஒரு தகப்பனாக இப்படி நான் நடந்து கொண்டு இருக்க மாட்டேன்.. என்ல் முடியவில்லை என்றால் என் மகளிடம் என் நிலை குறித்து நிச்சயம் விலக்கி இருப்பேன்... இந்த பதிவை ஒரு தகப்பன் பார்வையில்  படிக்கும் போது நான் என்ன இனி  செய்யக்ககூடாது என்று பல விஷயங்கள் புரிய  வைத்தது..


=====================

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

11 comments:

 1. என்ன இருந்தாலும் நீங்கள் அப்பாவிடம் கை நீட்டி இருக்க கூடாது..ஒருவித இயலாமை காரணமாக அவரும் ஏதாவது சொல்லி இருக்கலாம்.அதற்காக....இப்படியா நடப்பது...சரி ..அப்பாவிடம் மன்னிப்பு கேட்டீர்கள் தானே..சரி விடுங்க...மறப்போம் ...மன்னிப்போம்...

  ReplyDelete
 2. என்ன இருந்தாலும் நீங்கள் கை நீட்டியது தவறாகத் தான் தோன்றுகிறது எனக்கு ..

  ReplyDelete
 3. மன்னிப்பு கேட்பதற்கு மிகுந்த மன தைரியம் வேண்டும்.

  ReplyDelete
 4. Jackie. An sure rhat your father will forgive you for your mistake (which you feel for). Because after all he is also a human being, like you.....

  ReplyDelete
 5. அன்புள்ள ஜாக்கி,
  நீங்கள் எழுதிய இந்த சம்பவம் என் கணவரது வாழ்க்கையிலும் நடந்து உள்ளது. அப்பாவிற்கு பதில் அம்மா, தங்கைகளுக்கு பதில் தம்பி. கடன் தரும் சுமையை விட, துரோகத்தின் பாரத்தை தாங்க முடியாமல் அவதிப்படுகிறார். அவருக்கு தோள் கொடுப்பது சுகமாய் இருந்தாலும், 30 வருட உறவுகளை மறக்கவும் முடியாமல், மன்னிக்கவும் முடியாமல் அவர் படும் அவஸ்தையை பார்க்க நெஞ்சை அடைக்கிறது. அனுபவப்பட்டவர்கள் மட்டுமே உணரமுடியும் இதை. பெற்றோரும் மனிதர்கள்தானே. தவறுவது இயல்பு. ஆனால் நம்மாலும் மறக்க முடியாது, பாசத்தையும், துரோகத்தையும். ரோஜா மலரும் இடத்தில்தான் முள்ளும் உருவாகிறது. காலம் எல்லாவற்றையும் மாற்றும்.

  ReplyDelete
 6. jackie, this is a post with courage

  ReplyDelete
 7. Whatever has happened was in an inebriated mood and you realized your wrong doing.I sincerely hope that your father will pardon you..even otherwise,by coming out in the open,you have done the right thing.Forget the past..wipe out your guilty feelings and get along..wish you peace at heart..

  ReplyDelete
 8. என்னைப் பொறுத்தவரை உங்கள் அப்பா செய்தது ”நம்பிக்கை” துரோகமே இல்லை....

  நீங்கள் கன்னத்தில் அடித்ததும் நியாயமற்ற செயல். ...

  பையனிடத்தில் அறை வாங்கியதை கடைசி வரை மறக்க மாட்டார்....(மன்னித்தாலும் கூட)

  ReplyDelete
 9. பெற்றோர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமையை சரியான நேரத்தில் செய்யவில்லை என்றால்... அது பிள்ளைகளை மாற்று வழி சிந்த்திக்க தூண்டும். அப்புறம் பிள்ளைகள் தங்களை மதிக்கவில்லை, எங்களை மீறிவிட்டார்கள் என்று புலம்புவார்கள்...............வலியுடன்

  ReplyDelete
 10. சார் என்னதான் பிரச்ச்னையாக இருந்தாலும் அப்பாவெனும்போது அவருக்குறிய அந்தஸ்த்தை நாம் கொடுக்க வேண்டும்.உங்களுக்கு சொர்க்க நரகத்தில் நம்பிக்கையிருந்தால் சொல்கிறேன்....ஒரு மதத்தில் கூறப்பட்டுள்ளது பெற்றோரின் இறுதிகாலத்தில் அவர்களின் மனம் புண்படாதவாறு நடந்துகொள்ளும் பிள்ளைக்கு இறைவன் சொர்க்கத்தை கொடுக்கிறான் என்று....

  அந்தவகையில் நீங்கள் பதிவிடுவதன் மூலம் தந்தைக்கு நீங்கள் செய்த அநியாயத்துக்கும் மன்னிப்பு வழங்கிவிட முடியாது உடனடியாக நீங்கள் அவர் இருக்கும் இடம் தேடிச் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்

  இறைவனுக்கும் அடியாருக்கும் இடையிலான துரோகத்தை இறைவன் மன்னித்து விடுவான் ஆனால் அடியார்களுக்கிடையிலான துரோகத்தை அவர்களாகவே மன்னிக்கும் வரை இறைவன் மன்னிக்க மாட்டான்

  ஆகவே காலம் தாழ்த்தாது உங்கள் தந்தையிடம் சென்று மன்னிப்புக் கேளுங்கள்

  பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்

  ReplyDelete
 11. நண்பர்களே...இது நடந்து இரண்டு வருடம் ஆகி விட்டது.. இங்கே புனிதம் பூஜை என்று இந்த உலகில் எதுவுமே இல்லை.. அப்படி என்றால் தாயோ தகப்பனையோ யாரும் கொன்று இருக்கவே கூடாது.. தவறு இழைக்கப்படுமாயின் தந்தை ஸ்தானத்தை இழந்து விடுகின்றான் அவ்வளவே.. இது குறித்து வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு இப்போது அதை என் தந்தையும் மறந்து விட்டார்.. ஆனால் நான் ஒரு போதும் நான் செய்த தவறை நான் நியாய்ப்டுத்தியேதே இல்லை அப்பவும் இப்பவும்

  நன்றி

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner