அன்புள்ள அம்மா. 23/09/2014



23/09/1996....இதே தேதியில் பதினெட்டு வருடங்களுக்கு முன் அந்த காலையை என்னால் மறக்கவே முடியாது....


அழுதே பார்க்காத என் அப்பா உடைந்து அழுததை பார்த்தேன்...


பாண்டி ஜிப்மர் எதிரில் இருக்கும் நெஞ்சக நோய் மருத்துவமனையில் நேற்றுவரை மூன்றாம் நம்பர் பெட்டில் படுத்து வலி பொருத்து என்னோடு வேதனையோடு பேசிய என் தாய் ....


படுத்து இருந்த படுக்கை காலியாய் கிடந்தது...



அம்மா 42 வயதில் எங்களை தவிக்க விட்டு விட்டு போய் விட்டாள்....


அவளுக்கு அப்படி என்ன அவசரம் என்று தெரியவில்லை....


நாலனா கிடைக்கும் என்று ஒரு சேர் பூ முதுகுவலிக்க கட்டிக்கொடுத்து எங்களை வளர்த்தது என்ன சாதாரண உழைப்பா...? இன்று நினைத்து பார்க்க மலைப்பாக இருக்கின்றது....


எட்டனா கிடைக்கும் என்று வெள்ளரி விதைகளை உடைத்து கொடுத்து காசு வாங்கி எங்களை வளர்ந்தது  சின்ன உழைப்பா என்ன??


வாஷிங் மெஷின் இல்லாத காலத்தில் எங்கள் ஐவர் அப்பாவுடையதையும் உன்னுடையதையும் சேர்த்து மொத்தம் எழு பேர் உடைகளை கையால் துவைத்தாயே என்ன சாதாரண வேலையா?


வாஷிங் மெஷின் வந்த உடன் என் ஜட்டியை கசக்கி கட்டியே நாளாகி விட்டது...


ரேஷன் அரிசி வாங்கவும், மண்ணெண்ணை கியுக்களில் கால் கடுக்க நின்ற தினங்களை நினைத்துப்பார்கின்றேன்.

அது என்னடி  வறுமையை மட்டுமே பார்த்து விட்டு இறந்து விட்டாய்..??? சண்டாளி. படுபாவி...


என் உழைப்பில் எழுபத்தி ஐந்து ரூபாய்க்கு நான் முதல் முதலாக வாங்கி கொடுத்த புடவையை கையில் வாங்கி முகம் முழுக்க மகிழ்ச்சி பூத்தாயே... அந்த மகிழ்ச்சியை இனி நான் எங்கனம் காண்பேன்..


வவுத்து புருசன் தலையெடுத்து உழைத்து மானத்தை மறைக்க வாங்கி கொடுத்த புடவை ஆயிற்றே....??? இன்று தினமும் என்னால் உனக்கு 500 ருபாய்க்கு புடவை எடுத்து கொடுக்க முடியுமே ஆத்தா....


அதிக பட்சம் இரண்டரை ரூபாய் டிக்கெட்டில் இருந்து 20 ரூபாய் பால்கனி டிக்கெட் வாங்கி குருதிப்புனலில் இருந்து திருடா திருடா வரை பார்த்து தொலைத்தோம்... அதுதான் நான் உனக்கு செய்த பேறு...

இன்னும் கொஞ்சம் நாள்.......... நீ இருந்து இருக்கலாம் அம்மா...

அம்மாவும் நடிகை சிலுக்கும் இன்றுதான் மண்ணை விட்டு மறைந்தநாள் இது...



==============


என் அம்மாவுக்கு ஒரு பழக்கம் எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களை சாப்பிட வைத்துதான் அவர்களை அனுப்புவார்கள்.

அந்த புண்ணியமோ என்னவோ… இன்றுவரை வேலைக்கு சாப்பிட ஏதாவது கிடைத்து விடும்.

அம்மாவின் முதல் திதிக்கு அப்பாவின் விருப்பத்திற்காக ஐயர் வைத்து திதி கொடுத்தோம் ...அதன் பின் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.. திதிக்கு காலையில் அவத்திகீரை, மற்றும் எள், வெல்லம் பச்சரிசியோடு கலந்து பசு மாட்டுக்கு கொடுத்து விட்டு, அம்மா போட்டோவை வைத்து புடைவை வைத்து படைத்து விட்டு சுற்றம் மற்றும் நண்பர்களை அழைத்து அவர்கள் வயிறார சாப்பிட வைத்து அனுப்புவது எங்கள் வழக்கம்..

ஐயருக்கு கொடுக்கும் காசுக்கு யாராவது வயிறார சாப்பிட்டு போகட்டும் என்பதுதான் அதற்கு காரணம்.

இந்த வருடம் திதிக்கு நான் பெங்களூரில் இருந்த காரணத்தால் நான் ஊருக்கு செல்ல முடியவில்லை…

தங்கைகள் மற்றும் அப்பா மட்டும் திதி கொடுத்தார்கள்... அதனால் இறந்த நினைவு நாளின் போது புடவை வைத்து திதி அன்று செய்வதை ஒரு பிள்ளையாக என் கடமையை இன்று செய்ய முடிவு எடுத்தேன்…

மதியம் என் அம்மா விருப்பட்டது போல.....15 சாப்பாடு பார்சல் ஆந்திரா மேஸ்சில் சொல்லி இருந்தேன்... இரண்டு பேர் வயிறு நிறைய சாப்பிடலாம் அந்த அளவுக்கு சாப்பாடு இருக்கும்....

60 ரூபாய் வீதம் 900 ரூபாய்க்கு சாப்பாட்டை பார்சல் செய்து பெரிய மூட்டையாக கட்டி வண்டியின் டேங்கில் வைத்துக்கொண்டேன்... பள்ளம் மேட்டில் பைக் ஏறி இறங்கும் போது, உள்ளே இருக்கு சம்பார் ,ரசம், மோர் மற்றும் பப்பு வகைகள் உடைத்துக்கொண்டால்... பேன்ட முழுக்க அபிஷேகம் ஆகி விடும் என்ற காரணத்தால் பார்த்து பார்த்து வண்டியை ஓட்டினேன்...

மயிலையின் லஸ் முனையில் வெயிலுக்கு கடை ஓரம் 50 வயது மதிக்கதக்க பெண்மணியும், ஒரு ஆயாவும் உட்கார்ந்து இருந்தார்கள்... அவர்களிடம் சாப்பாடு இருக்கின்றது சாப்பிடுகின்றீர்களா என்றேன்... ம் என்றார்கள்...

இரண்டு பார்சல் கொடுத்து விட்டு மயிலை தெப்பக்குளம் பஸ்ஸ்டான்ட அருகே வந்தால்.... இன்று மகாளி அம்மாவாசை என்பதால் தெப்பக்குளத்தை திறந்து வைத்து இருந்தார்கள்..

உயிரோடு இருப்பவர்கள் முன்னோர்களுக்கு வைத்த பின்டம் மயிலை குளக்கரை படியில் வெயிலில் கேட்பாரற்று காய்ந்து கொண்டு இருந்தது...


உடல் ஊனமுற்றோர் நிறைய பேர் பிச்சை எடுத்தபடி இருந்தார்கள்.. ஆனால் எல்லோரிடமும் வசந்தபவன், ஆனந்தபவன், சங்கீதா போன்ற உயர்தர சைவ சாப்பாடு பொட்டலங்கள் வைத்து இருந்தார்கள்..


சரி என்று.. சாய்பாபா கோவில் பக்கம் போனால் திம்சுக்கட்டை போல உட்கார்ந்துக்கொண்டு உடம்பு நன்றாக இருந்தும் பிச்சை எடுப்பதையே தொழிலாக செய்தவர்கள் மட்டுமே உட்கார்ந்து இருந்தார்கள்....


திரும்ப ஆர் கே மட் ரோடு அருகே சென்றேன்.. ஒரு பாட்டி வெயிலில் நடந்து போய்க்கொண்டு இருந்தார்... சாப்பாடு சாப்பிடுகின்றீர்களா என்று கேட்டேன் .....அவர் மிகுந்த சந்தோஷத்துடன் பெற்றுக்கொண்டார்... இதனை அருகில் இருந்து கவனித்த இருந்த கட்டிட தொழிலாளர்கள் இரண்டு பேர்... என்னையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..


கண்களில் பசி... கேட்பதில் தயக்கம்... கேட்டு இல்லை என்று சொல்லி விட்டால்..?? தயங்கி நின்றனர்.. .1994 இல் நான் இப்படி இதே சென்னைனயில் நின்று இருக்கின்றேன்..


பசிவ என்பது சாதாரண விஷயமா..?? அனுபவித்தவன் நான்...


கண்களில் ஏக்கமும் பசியையும் ஒரு சேர பார்த்தேன்...


அழைத்தேன்... வந்தார்கள் இரண்டு பொட்டலம் கொடுத்தேன்... சார் இன்னும் ரெண்டு பொட்டலம் இருந்தா கொடுங்க சார்...


எங்க பசங்க எதிர்க்க சந்துல ஒன்னுக்கு இருக்க போய் இருக்காங்க என்று கெஞ்சினார்கள்...

கெஞ்சாதிர்கள் பசிக்க சாப்பிடத்தான் பொட்டலம் என்றேன்...

மேலும் இரண்டு பார்சல் பொட்டலங்கள் கொடுத்துவிட்டு திரும்ப விவேகானந்தா கல்லூரி பக்கம் வந்து ஒரு சோட புட்டி தாத்தாவுக்கும், இரண்டு ஆயா அம்மா... மற்றும் தள்ளுவண்டியில் சென்ற முதியவர் , ஒரு குட்டி பையன் என்று பொட்டலங்களை வழங்கி விட்டு அலுவலகத்துக்கு இரண்டு பொட்டலங்களோடு சென்றேன் ஆறு மணி ஷிப்ட்டுக்கு வந்த நண்பர்கள் நான்கு பேர் சாப்பிட்டார்கள்...

சந்தோஷம்...

இதை தான் என் அம்மாவும் விரும்புவார்கள்... என் குடும்பமும் என்னை சார்ந்து இருப்பவர்களும்.... அப்படியே..

ஜாக்கிசேகர்.
23/09/2014

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

12 comments:

  1. yoove; jacki ;veetela 'samaithea' sappatta- potta 'innum' happy ''avakka amma;

    ReplyDelete
  2. Unmaiyileya Kangal Panithathu Idayam Ganathathu

    ReplyDelete
  3. Im one of your regular visitor.. And this is one of your best article. Super na !!! Keep touching the hearts....

    ReplyDelete
  4. நல்லா இரு அண்ணா...

    ReplyDelete
  5. அம்மா நினைவுகள் அருமை... நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா...

    ReplyDelete
  6. அம்மா... மீள்பார்வை...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner