அன்புள்ள அம்மாவுக்கு....(5-09-2013)


இன்று லைட்டரை அழுத்தினால் வீட்டில் 45 நாட்களுக்கு மேல் கேஸ் அடுப்பு  தொடர்ந்து சமையலுக்கு எரிகின்றது..
. நகக் கண் அழுக்கு இல்லாமல் சமைக்க முடிகின்றது....

ஆனால் எருமட்டையை மழை ஈரத்தில் இருந்து நமத்து போகாமல் பாதுகாத்து, சின்ன சாம்பலை மேல் வைத்து அதை மண்ணெண்ணை கொண்டு நனைத்து .... அதை தீக்குச்சியால்  கொளுத்தி...அதன்  மேல்  சவுக்கு சுள்ளிகளை  அடுக்கி, தினமும்  மொத்தம் ஏழு பேருக்கு சமைத்து வயிற்று பசியாற்றியவள் நீ...

மழைகாலங்களில் ஈரவிறகை வைத்துக்கொண்டு உதாங்குழலோடு  நீ  போராடிக்கொண்டு இருக்கும்  போது  அம்மா பசிக்குது பசிக்குது என்று சொல்லி உன்னை நாங்கள் படுத்தி இருப்பதை இப்போது  நினைக்கும்  போதும் எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கின்றது.


அதே போல இப்ப போல ஒரு துளி விம் கருமம் எல்லாம்  அப்ப இல்லை... கறி பிடிச்ச பானை மற்றும் அலுமினிய பாத்திரங்களை துளக்க, சாம்பளும், தேங்காய் சருனையும்தான்... ஆனாலும் பட்டு போல பாத்திரங்கள் பிரசாசிக்கும்,  அது பிரகாசிக்க நீ கொடுக்கும் அழுத்தம்...  என்ன உழைப்பு? என்ன உழை


ஒரு பிள்ளை பெற்று விட்டு அதை வளர்க்க  ததிங்கனத்தோம் பாடிக்கொண்டு இருக்கின்றோம்.. ஆனால் ஐந்து பேரை சலித்துக்கொள்ளாமல்  எப்படி வளர்த்தாய்  நீ....


இன்று உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிட்ட்ம அப்பாயிண்மென்ட் வாங்கி கொண்டு போய் பார்க்கின்றோம்... எங்கள் ஐவரில் யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும்  மறுநாள்  காலையில் மூன்றாம் நம்பர் பஸ் பிடித்து போஸ்ட் ஆபிஸ் பஸ் ஸ்டாப்பில் இறங்கி,  அங்கே இருந்து நடந்தே கடலூர் அரசு பொதுமருத்துவமணையில் ஓபி சீட்டு வாங்க நிற்கும் பெரிய கீயூவில் நின்று ,ஓபி சீட்டு நாலானா கொடுத்து வாங்கி, டாக்டரை பார்க்கும் கியூவில் நின்று, உடம்பை காட்டிக்கொண்டு, ஊசி போடும் மாத்திரை வாங்கும் கியூவில் நின்று வாங்கி  வேலைதவறாமல் மருந்து மாத்திரை கொடுத்து  எங்களை ஆளாக்கியவள் நீயே...


வார இறுதியில்  சேர்த்து வைத்த  நாம் போட்டுக்கொண்ட   அழுக்கு சட்டை துணிகளை துவைத்து போடவே  இடுப்பு வலியும் கை வலியும் பின்னி பெடலெடுக்கின்றது... சலிக்காமல் எப்படி ஏழு பேர் துணியை வாஷிங் மெஷின் இல்லாமல் அந்த காலத்தில் துவைத்து காய வைத்து, மடித்து வைத்தாய் என்பது இன்றும் உன் உழைப்பை பார்த்து மெய்சிலிர்த்து போகின்றேன் அம்மா....


கோபமும் அறந்தவால் தனமும் அதிகம் உள்ள பிள்ளை எப்படி  நான் உருப்பட போகின்றேன் என்று தினமும் கவலை கொண்டவள் நீ... அதனால்  எனக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க படாதபாடு பட்டவள் நீ... 

பத்துல நாலு போச்சின்னா என்று  நீ கேட்க.. நான் திரு திரு என்று   பேக்கு போல  முழிக்கும் போது,  நால மனசுல வச்சிக்கோ...பத்துவிரல் விட்டு ,நாலு விரல் மடக்கு... மிச்சம் என்ன வருது என்று தினமும்  லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் எனக்கு கணக்கு பாடம் நடத்தியவள் நீ...

சாப்பிடும் போது அம்மா ஆய் என்றோ... அல்லது அப்பா ஆய் என்றோ குழந்தை சொல்லும் போது வெறுப்பில் ரெண்டு போடு போடவேண்டும் என்று தோன்றுகின்றது.. எப்படி எங்கள் ஐவரை சமாளித்தாய்  என்று நினைக்கும் போது  எனக்கு வியப்பாக இருக்கின்றது அம்மா...

மூன்றாம் வகுப்பு வரை டவுசரில் ஆய் போய் விட்டு  அலம்பாமல் வீடு வரை அழுதுக்கொண்டே வந்தவன் நான்.. எப்படி பொறுத்துக்கொண்டாய்..???

பாத்திரக்கடையில் வேலை செய்து, கழிச்சல் பிடிங்கி கொண்டு கிழிந்த நாராய் 18  நாட்கள்  நான் பெட் இல்லாமல் பாயிலும் கட்டாந்தரையிலும், கடலூர் அரசு பொது மருத்துவமணையில் நான்  கிடந்த போது ,எனக்கு  சூத்து துடைத்து விட்டவள் நீ...  எனக்கு வெட்கம் பிடிங்கி தின்னும்  ஆனால்  எந்த அறுவறுப்பும் இன்றி எனக்காய் செய்தாயே...? அதை எப்படி எளிதில் என்னால் மறக்க முடியும்...??

வார பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை என்னுள் ஏற்ப்படுத்தியவள் நீதான்... நடமாடும் மொபைல்  நூலகத்தில்  எனக்கு படிக்கும் ஆசையை   என்னிடத்தில் உருவாக்கியவள் நீ...


பேங்குக்கு அழைத்து போய் செலன் எப்படி பில்லப் செய்யவேண்டும் என்பதில் தொடங்கி, தபால் ஆபிசில் சஞ்சய்க்கா திட்டத்தில் எப்படி ஸ்டாம்ப் ஒட்டி சிறு  சேமிப்பில் பணத்தை சேமிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவள் நீயே...


எனக்கு பூ கட்டவும், கோலம் போடவும் கற்றுக்கொடுத்த குரு நீதான்...


 சினிமாவை கதை போல சொல்லி என்னுள் சினிமா  ஆசையை விதைத்தவளும்... அந்த கதை முடிவதற்குள் என்னிடம்  எவ்வளவு முடியுமோ? அவ்வளவு வேலைகளை களைப்பு தெரியாமல் வாங்கியவள்   நீதான்...

 எத்தனை சினிமாக்கள்  சேர்ந்து பார்த்தி இருப்போம்.... முதல்  மரியாதை திரைப்படத்தையும் , சிந்து பைரவி படத்தையும் உன்னுடைய ஆள்டைம் பேவரிட்  என்று சொல்லாம்...

ஏதாவது ஒரு கைத்தொழில்  கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டும் என்று மந்திரம் போல தினமும்  என்னிடத்தில் சொல்லிக்கொண்டு இருந்தவள் நீ...

பருவ வயதில் பெண்கள் மீதான பல  ஆர்வக்கேள்விகளை கேட்ட போதும் பொறுமையாக எனக்கு விளக்கி  புரியவைத்தவள் நீதான்.

மெல்லிதாய் எனக்கு விபரம்  புரிபடுகையில் நீ  இரண்டு முறை கருகலைப்பு செய்ய போன போது உனக்கு துணையாக நான் வந்து இருக்கின்றேன்... இரண்டாம்  முறை ஆண்பிள்ளை என்று சொல்லிக்கொண்டது எனக்கு நினைவில் இருக்கின்றது.

 அப்பா மட்டும் ஆம்பளை ஈகோ தூக்கி கடாசி விட்டு உனக்கு சப்போட்டா இருந்து இருந்தா நீ   அரசு பணியில்  சேர்ந்து  பெரிய பொசிஷனுக்கு வந்து இருக்க முடியும்...

ங்கோத்தா பொட்டச்சி சம்பாரிச்சி அதுல சாப்பிடறது  கேவலம் என்று  பேசிய அப்பா....  கடைசி வரை நீ செய்த எந்த சிறுதொழிலுக்கும்  துணை நின்றதில்லை...

சினிமா தியேட்டரில் நாம் எல்லோரும் இரண்டு  ரூபாய் டிக்கெட்டில்  உட்கார்ந்து இருக்கும் போது  அப்பா ஐந்து ரூபாய் டிக்கெட்டில்  உட்கார்ந்து கொண்டு ஹாயாக படம்   பார்க்கும் போது   அப்போது நீ அடைந்த  வேதனையை  என்னால் உணற முடிகின்றது...


பணம்  ரேடியோ ஸ்டேன்டில் இருக்கு... பிள்ளைங்களை வளர்க்கறது உன் பொறுப்பு என்று   நம்ம அப்பா போல நான் என்றும்  தட்டிக்கழித்தது இல்லை...


மற்ற பெண்கள் போல சாடிஸ்ட் மனம்  கொண்டவள் நீ  அல்ல....  தான் நல்லா இல்லாட்டி யாரும் நல்லா இருக்க கூடாது என்பதைதான்  நிறைய மாமியார்கள் விரும்புவார்கள்..  தனக்கு தன் கணவனிடம் கிடைக்காத சுதந்திரம் தன் மகன் தன் மருமகளுக்கு கொடுக்கும் போது, அதை தாங்கிகொள்ளாமல் இல்லாத்தையும் பொல்லாததையும் சொல்லி குடும்பத்தை  கலைத்த மாமியார்களை  நான் அறிவேன்...

நான் அனுபவிக்கும் எந்த  கஷ்டத்தையும் உனக்கு வரப்பொறவ அனுபவிக்க கூடாது... அதை மட்டும் பார்த்துக்கோ என்று  நீ சொன்னதை என் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன்...


நீ இல்லாட்டியும்...இன்னைக்கு உன் மேல என் பொண்டாட்டிக்கு மருவாதி  ரொம்பவே அதிகம்... காரணம்  அவள்   அனுபவிக்கும் சந்தோஷங்களுக்கு மறைமுக காரணம் நீதான் என்பதை அவள் அறிவாள்...

எல்லா நாளும் உன்   நினைப்பிலே  துடியாய் துடிக்கின்றேன் என்று ஜல்லி எல்லாம் அடிக்க மாட்டேன்.. அதுவும்  என்னை பற்றி உனக்கு  நல்லாவே தெரியும்... 

ஆனால் தாய் பாசத்தை காணும்  இடங்களில் சூழ்நிலைகளில்  உன்னை அடிக்கடி நினைத்துக்கொள்ளுவேன்... இன்னும் கொஞ்சம் நாள் அதுவும் நன்றாக இருக்கும் போது எங்களுடன் நீ இருந்து இருக்கலாம் என்று...


இன்று உனக்கு தெவஷம்..... இன்று இந்த பதிவு எழுதுவது கூட உன் நினைவுகளோடு  பயணித்து ,உன் கைபிடித்து காலாற சிறிது தூரம் நடந்த ஒரு நிறைவை எனக்கு தரும் என்பதால் இதை எழுதுகின்றேன்...

எல்லாத்தையும் தூக்கி கடாசி விட்டு  உன் நினைவுகளோடு சிறிது நேரம்  எழுத்து மூலம்  நடப்பதும் மனது கனப்பதும் சுகமான சுமைதான்...


பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 


23 comments:

  1. அன்னையின் நினைவலைகளில் திளைத்தோம்.

    ReplyDelete
  2. ஜாக்கி அண்ணா
    நான் உங்களை அண்ணா என்று கூப்பிடலாமா ?

    ReplyDelete
  3. ஜாக்கி சார் ,கறந்த பசும்பால் மாதிரி உங்க எழுத்து அதுவும் உங்கள் தாயாரை பற்றி எழுதும்போது ஒருபடி இன்னும் உயரும்

    ReplyDelete
  4. ஜாக்கி சார் கறந்த பசும்பால் மாதிரி உங்கள் எழுத்து அதுவும் தங்கள் தாயாரைப் பற்றி எழுதும்போது ஒருபடி மேலே உயரும்

    ReplyDelete
  5. Dear Sir,
    Your blog about Mom is really nice.
    Reminded me of my Mom's love.
    I also lost my mom 11 years back and I can relate your feelings.
    There is no person in this planet like Mom and no one can replace her.
    Thinking about her brings tears.
    Mom's unconditional love and dedication towards kids - there is no words to explain.
    Simple and straight explanation of the feelings right from the heart.Excellent blog .

    Keep up the good blogging.

    Thanks
    Arul

    ReplyDelete
  6. உங்களுக்கு கிடைத்த அன்னையின் பாசத்தில் ஒரு சதவீதம் எனக்கு ஒருவேளை கிடைத்து இருந்தால்?கிடைத்து இருந்தால்???? உண்மையில் நீங்கள் எழுதியவை உங்கள் அனுபவமாக இருந்தால் நீங்கள் மிக மிக மிக பெரிய தெய்வ பிறவி .உங்கள் அன்னையின் பாதங்களுக்கு என் கோடி நன்றி முத்தங்கள்

    ReplyDelete
  7. அம்மாவின் நினைவுகளை அழகாககத் தொகுத்திருக்கிறீர்கள் அண்ணா...
    அம்மாவின் ஆசி எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்...

    ReplyDelete
  8. Remembering old days of your mother is the best tribute you are paying to your mother than doing thavasam itself. What else to say? Though wish to add more to this comment box, something stops me from doing so. It is nothing but I am crying within my heart.
    Great Post.

    ReplyDelete
  9. Neengal yeluthiyathil yenakku pidithvattrul idhu thaan sirandhathu, thaai aanbu pola...

    ReplyDelete
  10. manam kanakkirathu jokky sir - karunakaran

    ReplyDelete
  11. manam ganakirathu jokky sir - karunakaran

    ReplyDelete
  12. Great Memories & Too good writing...All the best:)

    ReplyDelete
  13. நண்பர்களுக்கு நன்றி... குணசேகர்... இந்த விஷயத்தில் பொய் கலந்து எழுத எனக்கு எந்த அவசியமும் இல்லை.. இரண்டு மாதம் ஆகின்றது என் அம்மாவிடம் நான் முகம் கொடுத்து பேசி... இந்த படிதவை படிச்சிட்டு நான் அழுதுட்டேன்.. நான் இன்னைக்கு அம்மாவை போய் பார்த்து பேசப்போறேன்னு ஆட் ஏஜென்சியில் வேலை பார்க்கும் ராம் என்ற வாசகர் சொன்னாரே அதுவே போதும் எனக்கு.,..

    நன்றி.,

    ReplyDelete
  14. அம்மாவைப் பற்றி தமிழ்பட பாடல்கள் அவ்வளவாக எனக்கு பிடிக்காது. ஆனால் இப்போது" அம்மான்னா சும்மா இல்லடா "என்றபாடல் ஒலிக்கும்போது கரைந்துபோகிறேன் அவரது அண்மையை தேடுகிறது. உங்கள் பதிவின் நிதர்சனம் நிர்மால்ய தரிசனமாய்.......

    ReplyDelete
  15. அருமையான பதிவு !!! உணர வைத்தது!!!

    ReplyDelete
  16. என் அம்மாவைப் போலவே...................ம்................. நன்றி நண் பரே

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner