அப்புடு சார் மிஸ் யூ.






அப்படி ஒரு மனிதனை நீங்கள் சந்தித்து இருக்க முடியாது… மிக மிக இனிமையான மனிதன்… ஆனால் அவர் இன்று இல்லை…
இரண்டு புதன் கிழமைக்கு முன்தான் அவரை நேரில் மனைவியோடு அவரை சந்தித்தேன்… அதுதான் அவரை கடைசியாக பார்த்தது…வீட்டுல வந்து பத்திரிக்கை வைக்க வேண்டியதானே.. சார் மிஸ் ஆயிடும் சார்… அதனால ஆன் தி வேல உங்களுக்கு வச்சிட்டு வீட்டுக்கு ரிலாக்சா வந்து கூப்பிடுறேன் என்று சொன்னேன்.. வீட்டுக்கு போய் அவர் குடும்பத்தோடு அழைக்க நேரம் ஒத்துழைக்கவில்லை… இன்று அவரும் இல்லை.

இதில் கொடுமை என்னவென்றால்… 15 வருடத்துக்கு முன் யார் எனக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தானோ… அவனே எனக்கு போன் செய்து அவர் இறந்து விட்டார் என்று கதறி அழுததையும் அந்த செய்தி கேட்டு நான் வெடித்ததையும் என்னவென்று சொல்வது.

என் மனைவி வெடித்து அழுதார்...

இத்தனைக்கு அவர் கேமரா மெக்கானிக்.. ஆனால் என்னை பற்றி அவருக்கு முழுவதும் தெரியும்.. நான் ஒரு வீடியோகிராபராக சென்னையில் நான் அப்படித்தான் அறிமுகம் ஆனேன் … ஆனால் ஒரு போக்கஸ் லைட்டுக்கு கொடுக்காத மரியாதையை திருமணத்துக்கு வரும் மனிதர்கள்.. ஒரு போட்டோ பிளாஷூக்கு கொடுக்க அன்றே போட்டோகிராபர் அவதாரம் எடுக்க துணிந்தேன்…

எப்எம்10 கேமரா வாங்கி போட்டோகிராபர் அவதாரம் எடுத்தேன்… ஒரு முறை ஷட்டரில் பிரச்சனை.. நண்பர் அசோக்கிடம் சொல்ல… அவன் அழைத்து சென்று அறிமுகப்படுத்தி வைத்த மனிதர்தான் ஜூலிசன் என்கிற அப்புடு…

செம பிரெய்னி… ரிப்பேருக்கு வந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட கேமராக்கள்… பிளாஷ்கள் லென்ஸ்கள் என்று குவிந்து இருக்கும் ஆனாலும் யாருடைய பொருளும் கிஞ்சித்தும் மாறியது இல்லை.

இத்தனைக்கு அடையாளத்துக்கு என்று ஏதும் குறிப்பிட்டதில்லை. அவரின் மேமரி பவரை நான் ரசித்தேன்… ஒரு ஆண் இன்னோரு ஆணை நேசிக்க மிக முக்கிய காரணம்.. ஒத்த அலைவரிசை மற்றும் புத்திசாலிதனம் அதனாலே அந்த மனிதனை நேசித்தேன்…

அப்போது கடை கோடம்பாக்கத்தில் இருந்தது.. அப்போது வாட்ஸ்அப் எல்லாம் வராத காலம் கீரிட்டிங் கார்ட் புழக்கத்தில் இருந்த காலம்..

ஒரு இயேசுநாதர் படம் போட்ட கிரீட்டிங் கார்டை அவருக்கு கிரிஸ்மஸ் வாழ்த்தாக அனுப்பியதோடு அவருடைய மேரிபவரையும் பாராட்டி எழுதினேன்.. அந்த கார்டை அவர் கடையில் நிறைய நாள் வைத்து இருந்தார்…

எப்போது போனாலும் என்னிடம் அதிகம் பேசுவார்… சார் என்று ஆரம்பித்த நட்பு வாயா போயா என்று பேசும் அளவுக்கும் தனிப்பட்ட முறையில் பர்சனலாக பேசி பழகும் அளவுக்கு மாறியது….

நான்கு தங்கைகள் அவர்கள் திருமணத்துக்கு பிறகு நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் அந்த கமிட்மென்ட்டோடு இருந்த காரணத்தால் என்னை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது…

முதல் தங்கை திருமணத்துக்கு போய் பத்திரிக்கை வைத்தேன்.. இரண்டாயிரம் ரூபாய் செலவுக்கு கொடுத்தார்… அன்றைக்கு அது பெரிய தொகை.. அவர் வீட்டில் அனுமதித்து பேசும் நபர்களில் நானும் ஒருவன்.

வீடு கிரகபிரவேசம் என்றேன்… அவரால் அன்று வரமுடியவில்லை.. குடும்பதோடு எங்கள் இல்லம் வந்து வாழ்த்தினார்… அவர் பையன் ஜோஷ்வா சின்ன பையன் அவன் என் மனைவிக்கு அவ்வளவு பிரியம்..

குழந்தையாக இருக்கும் போது அவர் வீட்டுக்கு போகும் போது என் மனைவி அவனுக்கு நிறைய கதைகள் படித்து காட்டுவாள்…. எந்த முடிவு எடுக்க இருந்தாலும் அவரை கலந்தாலோசிப்பேன்… பாலிமரில் வேலையை விட்டு விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று மனைவி சகிதம் அவரை சந்தித்த போது இரவுவிருந்து வழங்கி எனக்கு அட்வைஸ் செய்த தோழன் அவர்.

போன தீபாவளி மழையில் 70/300 லென்ஸ் தண்ணியில் மூழ்கி விட்டதுஅதை நேரம் கிடைக்கும் போது சரிசெய்து கொடுக்கின்றேன் என்று சொன்னார் இன்று அவர் இல்லை…

35 வயதில் நான் திநகரில் டி கிளாஸ் எடுத்து சென்று சின்ன பையன் போல கூச்சம் விட்டு டீ வாங்கி சென்று நானும் அவரும் குடித்து இருக்கின்றோம்... வரதன் இல்லாத சமயங்களில் சாப்பிட கூட போகாமல் இருப்பார் நிறைய முறை சாப்பாடு வாங்கி சென்று சாப்பிட்டு பேசி இருக்கின்றோம்..

அதே போல அந்த பக்கம் போனால் ஒரு எட்டு வைத்து கடைக்கு சென்று செமையாக கலாய்த்து விட்டு செல்வது என் வழக்கம்.

எந்த இடத்தில் தரமான பொருள் கிடைக்கும் என்பது அப்புடுக்கு அத்துப்படி... அவருக்கு உபயோகம் இல்லாத அதே நேரத்தில் அந்த பொருள் எனக்கு உபயோகமாக இருப்பின் அப்படியே கொடுத்து விடுவார்...

ஒரு கட்டத்தில் லென்ஸ் கிளின் செய்தாலோ அல்லது நிறைய விஷய்த்துக்கு காசு வாங்க மாட்டார்.. ரிலாக்சான ஒரு வார இறுதியில் அவர் வீட்டு ஆயிரம் ரூபாய்க்கு வெறும் சாக்லெட் பிஸ்கெட் என்று பிள்ளைகளுக்கு வாங்கி செல்வது என் வாடிக்கை பயங்கரமாக அதற்கு சத்தம் போடுவார்..

ஒரு வருடத்துக்கு முன் பேசிக்கொண்டு இருக்கும் போது என் மனையிடத்தில் சொன்னார்... நான் ஜாக்கியை என்னைக்குமே கஸ்டமரா பார்த்தது இல்லை... கடவுள் மீது அத்தனை பக்தி... ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.

என்ன ஹீரோ ? என்றுதான் என்னை அழைப்பார்… என்டா ஒனக்கு என்ன கவலை ?? ஜாலியா இருக்கே என்று கலாய்ப்பார்… ஆனாலும் நான் எந்த நிலையில் இருந்து இங்கு வந்து இருக்கின்றேன் என்று தெரிந்த மனிதர்.

சின்ன சின்ன ரிப்பேர் எல்லாம் செய்து கொடுத்தாலும் காசு வாங்காத மனிதர்... கஷ்டம் அறிந்து காசு வாங்குபவர்... அதே போல இனி நிறைய போட்டோகிராபார்கள் கஷ்டபடத்தான் போகின்றார்கள்.. இனி அவரின் அருமை எல்லோரும் தெரியும்...

போர் அடித்தால் பிரியா இருந்தா பாரிஸ் பக்கம் போலம்டா என்பார்.. போனால் வயிறு ரொம்ப வாங்கி கொடுப்பார்... அவரோடு ஷாப்பிங் செல்வதே தனி சுகம்.

எனது ஆங்கிலத்தை அவ்வப்போது திருத்துவார்.. நானும் அவரும் சேர்ந்து சுரேஷ் கோபி நடித்த படத்தை பார்த்து இருக்கின்றோம்… மதியம் கடை பக்கம் போனால் சாப்பிடாமல் அனுப்ப மாட்டார்.. வேலை வேலை என்று இருப்பார்.. நான் போனால் எழுந்து வந்து கொஞ்சம் நேரம் பேசி விட்டு திரும்ப வேலை பார்ப்பார்…

தினமும் 12 மணி நேரம் சிக்கலான வேலை… வெளியூரில் இருந்து கேமரா ரிப்பேர் என்று வரும் போட்டோகிராபார்களை அன்று இரவே அனுப்பி வைக்க வேண்டும் என்ற கமிட்மென்ட் அதனால் வேலை வேலை என்று இருந்தவருக்கு தன் உடம்பை கவனித்துக்கொள்ள முடியாமல் போய் விட்டது.

என் மச்சானின் திருமணம் முடிந்து நானும் மனைவியும் பேசிக்கொண்டோம்.. அழைத்த நபர்ககள் எல்லாம் வந்து இருந்தார் ஏன் ஜூலிசன் வரவில்லை.. வீட்டில் அழைக்கவில்லை என்ற வருத்தமோ..? அப்படியான மனிதர் இல்லையே…

போனில் வாட்சப்பில் செக் செய்தால்… கடந்த 20 ஆம் தேதி மிஸ்ட் காலில் அவர் பெயர் இருந்தது.. சரி என்று பாண்டிச்சேரி கிளப்மகேந்திரா ரிசாட்டில் உறவுகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தேன்.. மச்சானிடம் கேமராவை கொடுத்து விட்டு நீச்சல் குளத்தில் குளித்தேன் வெளியே வந்தால் ஷட்டர் எரர் என்று காமிப்பதாக மச்சான் சொன்னான்..

என்ன என்னவோ பண்ணி பார்த்தேன் சரியாகவில்லை… கேமரா வாங்கி பத்து வருஷம் ஆயிடுச்சி… பத்து வருஷத்துக்கு முன்ன அவர்தான் அந்த கேமரா வாங்கி கொடுத்தார்… சரி மணி பார்த்தேன்.. பதின்னொன்ரை.. சரி காலையில் போன் பண்ணி… எதுக்கு 20 ஆம் தேதி கால் பண்ணிங்க? ஏன் ரிசப்ஷனுக்கு வரலை..? இந்த கேமரா ஷட்டர்ரிலிஸ் செய்ய சொல்லுது.. ஆனா எரர் காமிக்குது இந்த கேள்வியை பத்து மணிக்கு மேல் கேட்கவேண்டும் என்று நினைத்து படுத்தேன்… காலை ஒன்பதரை மணிக்கு நண்பன் அசோக்கிடம் இருந்து போன்…

மச்சான் ஜூலிசார் செத்துட்டார்டா… என்று கதறி அழுகை… மச்சான் இனிமே இப்படி ஒரு மனுசனை எப்படி மச்சான் சம்பாதிப்போம் என்று கேவல் நானும் உடைந்தேன்…

அவரிடம் கேட்க நினைத்த கேள்விகள் என்னிடத்தில் மட்டுமே இருக்கின்றன.... பதில் சொல்லத்தான் அவர் இல்லை…

தாய் வீடு போல உரிமையா திநகர் பக்கம் போனா உங்க கடையில ஜாலியா உட்கார்ந்து அரட்டை அடிப்போமே…. இனிமே யார் சார் எனக்கு இருக்கா…???????


ஜாக்கிசேகர்
30/11/2016





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner