காலை மயிலை வாங்கிங்



காலை  வாங்கிங் போவது என்பது எனக்கு பிடித்த விஷயம் என்றாலும் சில நேரங்களில் தொடர்ந்து நடக்க  எனக்கு  வாய்க்க பெற்றதில்லை.. ஆனாலும் மயிலையில் இருக்கும் நாகேஷ்வரராவ் பார்க் மற்றும் மெரினாவில் வாங்கிங் போவதில் எனக்கு அதிக உடன்பாடு இல்லை…

 சாலைகளில் எதிர்புறத்தில் நடந்தபடி  காதில்  ஹெட்போன்  மாட்டி சன்னமாக  பிடித்த பாடலை  கேட்டபடி …. மயிலை  மக்கள்  சோம்பல் முறித்து மெல்ல அன்றைய பணிகளுக்கு ஆயுத்தம் ஆகும் அழகை பார்த்த படி நடப்பது எனக்கு பிடித்த விஷயம்.



 அருன்டேல் தெருவில் வேகம் எடுத்து மயிலை கபாலி சன்னதி வழியாக  தெற்கு மாடவீதி  வழியாக குளத்துபக்கம் நடந்து அப்படியே நேராக நடந்து விவேக் அன்கோவை கடந்து திருவள்ளுவர் சிலை மார்க்கெட்டை  கடந்து    முண்டககன்னி அம்மாளை பார்த்து விட்டு அப்படியே மாதவபெருமாளை சந்தித்து வீடு வருவது என்  வழக்கம்..



காலையில் அப்பா கல்லூரிக்கோ.. ஸ்பெஷல் கிளாசுக்கோ பெண்ணை அப்பா பின் பக்கம் உட்கார வைத்து அழைத்து செல்வார்கள்.. அதில் 99 சதவிகித பெண்கள் அப்பா வாகனம் ஓட்ட  பின்னால் உட்கார்ந்துக்கொண்டு மொபைல்களில்  விரல்கள் நடனமாட  சாட் செய்துக்கொண்டு செல்கின்றார்கள்…அப்ப ஒரு பர்சென்ட் பெண்கள் ???  போன் சாட்டில் அடிமையாகி அப்பா அம்மாவால் போன் பிடிங்கி  வீட்டில் வைக்கப்பட்ட பெண்களாக இருப்பார்கள்.


அம்பிகா அப்பளம் அருகே இருக்கும் பில்டர்  காபி கடையில்  காபி சாப்பிடவே  பிறந்தேன் என்பதாய்  ரசித்து குடிக்கும் மாமா….


சன்னதி  வாசலில் பதினைந்து நிமிடத்துக்கு முன் தலை குளித்து முடித்து  முடியை கடைசியில்  ஒரு சின்ன சுருக்கு போட்டு….  அதில் இருந்து நீர் வடிந்து பின் புற படவை  மற்றும் ஜாக்கெட்டை நனைத்து வைத்ததோடு வெறும்  காலோடு…  கபாலியை  தரிசிக்க பரபரப்பாய் நடந்த   மடிசார் கட்டிய மாமி…
தெற்கு வீதியில்  சிரத்தையோடு குப்பை அள்ளி கூடையில் போட்ட பெண்மணி.

 வசந்த பவன் எதிரே செத்துக்கிடக்கும் எலியை புரட்டி புரட்டி டேஸ்ட் பார்க்கும்  காகம்…
நடந்தால்தான் நார்மல் டெலிவரி என்று சொல்லி இருப்பார்கள் போல… ஆடம் தெருவில் மிகப்பெரிய அடிவயிற்றை பிடித்த படி நடக்கும் நிறைமாத கர்பினி பெண்…

காலையில் மயிலை பேருந்து  நிலையம்தான் என் சுவாரஸ்ய களம்.

குமரன் எதிரே இருக்கும் நந்தவனத்தில் பூக்கள் வாங்க தன் அப்பாவோடு மக்களகரமாக அதே நேரத்தில்  சுடிதாரில்  இறங்கும் இரண்டு அழகு பதுமைகள்.

 பக்கத்தில் இருக்கும் டீக்கடையில்  டீ கிளாசை வட்ட வடிவத்துக்கு  ஆட்டி ஆட்டி குடித்துக்கொண்டு இருக்கும் ஆட்டோ டிரைவர்…


12 சீ பேருந்து ஸ்டார்ட் செய்தது இரண்டு அடி முன் நகர்த்த எதிர்திசையில் ஓடி வந்த வயதான பெண்மணிக்காக பிரேக்இட்ட 12 சீ டிரைவர்..
 காய்ந்து போன மயிலை குளம்….

பேருந்து ஸ்டிரைக்  குறித்து  இரண்டு கண்டக்டர்கள் தீவிர அரசியல் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

 மயிலை குளத்ததில் தண்ணியே  இல்லை என்றாலும் இறந்து போனவர்களுக்கு திதி கொடுக்கும் கூட்டம்…  ரொம்ப பரபரப்பாய்  இயங்கிக்கொண்டு இருந்தது.


அம்மா தண்ணி பாட்டில் கடையில் பத்து ரூபாய்  கொடுத்து வாட்டர் பாட்டில்  வாங்கி… அதன் மேல் உள்ள  பேப்பரை கிழித்து  தூர எறிந்து விட்டு பயணிகள் நிழற்குடையில் இருக்கைக்கு தன் பின் பக்கத்தை கொடுத்த இளைஞன்.


கயல் விழி என்று பெயர் வைக்கலாம்  அப்படியான அழகான கண்கள் அந்த பெண்ணுக்கு… அவர் அப்பா அழைத்து வந்து  பேருந்து ஏற்றி விட காத்து  இருக்கின்றார்… அப்பாவும்  பெண்ணும் ரொம்ப அன்னியோன்யம் போல  பேசி சிரித்துக்கொண்டு இருந்தார்கள்…. அந்த பெண் என்னை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு  சிரிப்பின் சத்தத்தை  அதிகபடுத்தினாள்…

 பக்கத்தில்  ஒரு பெண் முகத்தை எல்லாம் மூடி மொபைல் போனில் விரைவாய் செய்தி அனுப்பிக்கொண்டு  சுற்றிலும் 30 செகன்ட்டுக்கு  ஒரு  முறை நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தாள்.


வசந்த் அன்  கோ பக்கம் நியூஸ் பேப்பர் ஏஜென்ட்காரர்கள்  பேப்பர் பையன்களிடம்  பேப்பர்களை வினியோகித்த திருப்தியில் சைக்கிள் டீ காரரிடம் டீ வாங்கி பசிக்கு இரண்டு  பட்டர் பிஸ்கெட் வாங்கி  கடித்து சுவைத்துக்கொண்டு இருந்தார்கள்…

ரிலையன்ஸ் தாண்டும் பொழுது… தெருவில்  நாய்கள் இரண்டு மும்முரமாக உடலுறவில் ஈடுபட….   சம்பந்தம் இல்லாத நாய் ஒன்று அதையே பார்த்துக்கொண்டு அமைதி காத்தது… இன்னா டீல் மயிறா இருக்கும் என்ற கேள்வி என்னில் தோன்ற தவறவில்லை.


அப்படியே அனுமார் கோவில்  பக்கம்  காய்கறி மார்க்கெட்டில்  காய்கறிகளை அடுக்க ஆரம்பித்தார்கள்…   வீணாய் போன எலுமிச்சி பழத்தை தெருவில் உருட்டி விட அதனை காலால் எத்திக்கொண்டு முண்டககண்ணி அம்மன் ஸ்டேஷன் வரை வந்துக்கொண்டு இருக்கும் போது ஓலாகார் அதனை சிதைத்து விட்டு  சென்றது…
 அப்படியே நடக்க அவசரம் அவசரமாக வேலைக்கு எல்லோரும் கிளம்ப ஆயுத்தமாக ஸ்டெஷன் பக்கம் விரைவாக  நடந்து சென்றார்கள்.


 முண்டகண்ணியம்மன் ஆலயத்தை கடக்கும் போது பால்பிஷேகத்துக்கு பால் பாக்கெட்டுகள் பக்தியின் பொருட்டு காலியாகி கொண்டு இருந்தன.. அரோக்கியா ஆவின் பால் எல்லாம் இல்லை…. எல்லாம் லோக்கல்  பிராண்ட்.. சாமிக்கு என்ன பிராண்ட் பால் வாழுது என்பதாக கூட இருக்கலாம்…


 அப்படியே கல்லுக்காரன் தெருவில் நுழைந்து மாதவபெருமாளை பார்த்து ஒரு சலாம் போட்டு…  திரும்ப...

  கண்ணாடி அணிந்து டீஷர்ட்டும் தீரி போர்த்துமாக என்னை லைட்டாக மோத வந்தது  போல   வந்து கட் அடிந்து வேகம் எடுத்தது…
மாதவ பெருமாளிடம் திரும்பி  அவளை பார்த்துக்கோ தலைவா? என்ன வேகம் பாரு  என்று டீல் பேசி வீடு வந்து  ஷு  சாக்சை கழட்டி முற்றிலும் நனைந்து போன டீ ஷர்ட்டினை கழட்டி மெல்ல இளைப்பாறிய போது.. உடம்பும் மனமும் புத்துணர்ச்சியாக இருந்தது.


ஜாக்கிசேகர்
19/05/2017



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
 

2 comments:

  1. கொடுத்து வச்சவன்யா சேகரு -( ஞாபகம் இருக்கா நண்பா என்னை )

    ReplyDelete
  2. Amazing writeup and observations ... WOW.. Jackie

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner