வியட்நாம் பயணகுறிப்புகள் 6..மறக்க முடியாத வியட்நாமின் பத்து நாட்கள்.





 #வியட்நாம் பயணகுறிப்புகள் 6..

மறக்க முடியாத  வியட்நாமின் பத்து நாட்கள்.

முதல்ல இந்த கிராமத்தான் பத்து நாளும் இருந்தது பைவ்  ஸ்டார் ஓட்டல்தான்.
தினமும்  புதிய பேஸ்ட் பிரஷ்  ஷாம்பு  தும்பை பூவுக்கே  டப் கொடுக்கும் டவல்கள் தான் ஒரு வாரத்துக்கு… அந்த  வெண் டவல்கள் என் கருப்பு உடம்புக்கு ஏற்றவையாக இல்லை  என்றாலும் ஆண்டன்  கொடுத்த இந்த பத்து நாட்களை அனுபவிக்க வேண்டும் என்று உறுதி பூண்டேன்.



பத்து நாட்களுக்கும் இரவில் கரண்ட் பில் பயம் இல்லாமல் குளிர வைக்கும் ஏசி.
என் வாழ்க்கையில முதல் முதலா  பாத்டாப்புல குளிச்சதே அங்கதான்..

  மொதல் மூன்று நாட்கள் பாத்டாப்புலதான்  குளித்தேன்.. ஒரே  ஆளு குளிக்கறதுக்காக  தொட்டி தண்ணி  காலியாவுதேன்னு பாத்டாப் இல்லாத ரூமா மாத்திக்கிட்டேன்….

 ஏங்க இப்படின்னு எங்க வீட்டம்மா கேட்டப்ப…வடபழனி ராஜாங்க மத்திய வீதியில் முதல் முதலா சென்னையில் குடித்தனம் வந்தப்போ.. தூக்க கலக்கத்துல 2 மணிக்கு தண்ணி லாரிக்கு பின்னாடி போய் நின்னு பத்து குடம்  புடிச்சி பர்ஸ்ட் புலோர்ல குடித்தனம் நடித்தியது நியாபகம் வந்துச்சி அதான் என்றேன்.

 காலை மதியம் இரவு கழிவறை மற்றும் பாத்ரூம் சுத்தம் செய்து படுக்கையை சரி செய்து விடுவார்கள். பத்து நாட்களும் ஹைஜினிக்கான வாழ்க்கை…
பல் விலக்குவதில் இருந்து  குளிப்பது வரை பத்து நாளும் சுடு நீர்தான்..
காலையில் மல்ட்டி கசின் பிரேக்பாஸ்ட்  காம்ளிமன்ட்ரி.. நல்லா வயிறு முட்ட தின்னுட்டா… அதோட  மாலைதான் பசிக்கும்…நான் வெஜி அயிட்டம்தான் பிரதானம் என்றாலும் அவ்வப்போது பேக்கிரி  ஐட்டத்தை காலையில்  ஒரு பிடி பிடிப்பேன். என்ன காலையில வெங்காயத்தை கடிச்சிக்கிட்டு  பழைய சோத்தை தின்னது ஒரு ஸ்டைல்லன்னா.. ஒரு வாரத்துக்கு முள் கரண்டியில சாப்பிட்டது அது ஒரு வாழ்க்கைதான் போங்க…

அதிகமா ஷூபோட்டுக்கிட்டு  நடந்தது  அங்கதான்…. அதே போல நிறைய நடந்தது அந்த பத்து  நாட்கள்தான்… நடந்து கால் வலிச்சதும் அங்கதான்..

கர்ணனின் கவசகுண்டலம் போல கேமரா பேக் இல்லாம  எங்கேயும் போறது இல்லை. எந்த இடத்துக்கு போனாலும் ஒரு கிளிக்.. இங்க எல்லாம் திரும்ப  வர போறோமோ இல்லையோ அதனால பதிவு செஞ்சிக்கிட்டே இருப்போம்ன்னு ஒவ்வோரு கிளிக்கும் பின்னனி அதுதான்.

அவ்வளவு ஏன்  என் வாழ்க்கையில காரோ பைக்கோ சைக்கிளோ… பத்து நாளைக்கு நான் எதையும் ஓட்டவேயில்லை.. எல்லாத்திலேயும் நான் பயணிதான்.

அதிகமாக  ஆங்கிலம் பேசியதும்  அந்த பத்து நாள்தான்... அதே போல ஆங்கிலம் பேசும் என்னை  பார்த்து மிரண்டு   படபடப்பாய் எழுந்து  தொண்டைக்குழியில் இருந்து ஆங்கில வார்த்தைகளை தேடி திக்கி திக்கி  பதில் சொன்னது அங்கேதான்….

எல்லா  இடத்திலேயும் நம்ம சென்னையையும் நம்ம இந்தியவை மனம்  அப்ப அப்ப ஒப்புமை படுத்தி பார்த்துக்கும்….

சும்மா சொல்லக்கூடாது… ஆங்கிலம் தெரியாம ஊர்ல குல தெய்வமா வழி காட்டியா இருந்தது,  காப்பாற்றியது… கூகுள் மேப்தான்.

போன் இல்லை என்றால்  கண்ணை கட்டி காட்டில்  விட்டது போல இருந்து இருக்கும் காரணம்.. அவர்கள் கேட்கும் பணத்தை நம் ஊர் மதிப்புக்கு கால்குலேட்டரில்  போட்டு கணக்கு பார்த்து கொடுக்க வேண்டும்.

ஹானாய் ஆமை லேக்  அருகே… பத்து நாளில் ஆறு நாட்கள்  திடும் என  முன்னே வந்து உடைந்த  ஆங்கிலத்தில்  இளமையான  பெண்கள் இருக்கின்றார்கள் வேண்டுமா? என்பதோடு மறுத்தாலும் நம்பர்  தந்து விட்டு போனார்கள்.
நம்ம ஊர்  மதிப்புக்கு ஆறு ரூபாயில் இருந்து 330 எம்எல் டின் பீர் கிடைக்க… போகும்  இடம் எல்லாம்  கூல்டிரிங்ஸ் போல  இரண்டு  மணிநேரத்துக்கு ஒரு பீயர் கேன்  காலியானது  அந்த பத்து  நாட்களில்தான்.

பந்தா இல்லாத  அலட்டல் கிஞ்சித்தும் இல்லாத சினேகமான பெண்களையும் ஆண்களையும் பார்த்தது அந்த பத்து நாட்கள்தான்.
குச்சி மற்றும் போர்க் ஸ்புன்களில் சாப்பிட்டதும் அந்த பத்து நாட்களில்தான்.
முதன் முதலாக கப்பலில் பயணித்ததும் அந்த பத்து நாட்களில்தான்…

முதன் முதலாக ஒரு வெளிநாட்டவனாக நான் அறியப்பட்டதும்  அந்த பத்து நாட்கள்தான்.
பன்னி கறியில் இருந்து எல்லா கறியும் சாப்பிட்டதும்  அந்த பத்து நாட்கள்தான்…
 அவுங்க ஊர் பணத்துக்கு  லட்சங்களில்  செலவு  செய்ததும் அங்கேதான்…

நிலம் நீர் ஆகாயம் என பயணித்தது அந்த பத்து நாட்களில்தான்.

 எல்லாத்தையும்  விட  இந்த  40 வருஷத்துல எதை பத்தியும் கவலை இல்லாம எதை பத்தியும் யோசிக்காம   எனக்கே எனக்காக வாழ்ந்தது அந்த பத்து நாட்கள்தான்.

இன்னும் விரிவாய் வியட்நாம் பயணகுறிப்பும்  நேரம் கிடைக்கும் போது நிச்சயம் தொடரும்.

ஜாக்கிசேகர்.
23/04/2017



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. Wow, what an innocent, open, sincere and honest sharing of a first-time foregin and five star experience. Thank you brother Jackie.

    ReplyDelete
  2. ஆஹா..அந்தப் பத்துநாள்கள்!

    ReplyDelete
  3. சூப்பர் அன்னே . .. . . . இதுக்கும் மேல . . . .. இன்னும் எழுதுங்க

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner