நண்பர் சுபாஷும் அசோக்கும்..



சில நண்பர்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது… அவர்களோடு வாழ்ந்த பால்ய காலங்கள் என்றைக்கு நினைவு படுத்தினாலும் சந்தோஷத்தை கொடுக்க கூடியது…

ஆனால் அதற்காக தினமும் பேசிக்கொள்ளும் ரகமும் அல்ல.. அதற்கான சூழலும் இல்லை…
அப்படி எனக்கு எனது நண்பன் சூரி மூலம் அறிமுகமானவன்தான் சுபாஷ்… எல்லாருமே நைன்த் படிக்கும் போது பாக்கெட் நாவல் கிரைம் நாவல் அடிமைகளாக இருந்த காலக்கட்டம்….
அன்று நாங்கள் மூவரும் ஒன்றாய் சுற்றியதும் படித்ததும் இன்றும் என் நினைவு அடுக்குகளில் மிக சுவாரஸ்யமாய்.
பள்ளியிலேயே அட்டை பெட்டியில் கிரைம்நாவல்களை அடுக்கி படிக்காதவர்களுக்கு சுற்று அனுப்பியதும் உண்டு… பாண்டிக்கு போய் படம் பார்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களும் நாங்கள்தான்.. இரண்டு பேருமே ஜாக்கிசான் ரசிகர்கள்..
பத்தாவது பரிட்சை நடக்கும் போதே… கடலூர் கமலத்தில் ஜாக்கிசானின் ஸ்பேனிஷ் கனெக்ஷன் திரைப்படத்தை பார்த்து விட்டுதான் பரிட்சை எழுதினோம்…
என் வாழ்வின் மிக முக்கியமான திருப்பத்துக்கு சொந்தக்காரன் சுபாஷ்… நாங்கள் 2003 ஆம் ஆண்டு துளிர் என்ற குறும்படம் எடுத்தோம்.. அவன்தான் தயாரிப்பாளர். நான்தான் டைரக்டர்… ஒரு கதையை செல்லுலாய்டில் செதுக்கலாம் என்று நம்பிக்கை அளித்தவன்..
அந்த திரைப்படம் தமிழக அளவில் நடந்த குறும்பட போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்தது.
அந்த குறும்படம்தான் எனக்கு கல்லூரியில் வேலை வாங்கி கொடுத்தது…. அந்த கல்லூரிதான் இணையத்தையும் கம்யூட்டரையும் அறிமுகப்படுத்தி தொடர்ந்து வலைப்பூ அறிமுகப்படுத்தி எழுத வைத்தது…
இப்போது சொல்லுங்கள்… என்னுடைய வாழ்க்கை திருப்பத்துக்கு சொந்தக்காரன் அவன்தானே…
ரெண்டு பேருக்குமே சினிமா மீதான ஆர்வம் அதிகம்.. கேளடி கண்மணி, அழகிய தீயே, ஜாக்கிசானின் அனைத்து படங்களும், என்று நிறைய திரைப்படங்கள் பார்த்து இருக்கிறோம்.
கடலூர் சில்வர் பீச்சில் மணிக்கணக்காய் பேசி விவாதித்து பிரிந்த கணங்கள் மகத்தானவை…அவனுக்கு இரண்டு பிள்ளைகள்… பெரியவள் பத்தாம் வகுப்பு சின்னவன் எட்டாம் வகுப்பு.
எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன்… பாண்டிக்கு சென்றால் நான் பீர் சாப்பிடும் போது அவன் சைடிஷ் சாப்பிடும் ரகம் இன்றுவரை அப்படியே
28 வருட பழக்கம் நிறைய விஷயம்… அவனோடு பேசிதான் நிறைய தெளிந்து இருக்கின்றேன்…
அவனுக்கு எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் சினிமாவிலும் விருப்பம்… ஆனாலும் தன் விருப்பங்களை குடும்பத்துக்காக குழி தோண்டி புதைத்தவன். தற்போது அரசாங்க உத்தியோகத்தில் பணி…
என் வாழ்வின் மிக முக்கிய திருப்பத்துக்கு மறைமுக சொந்தக்காரன் இவனே…
பேசி பேசி கரையவேண்டும் என்று நான் நினைக்கும் நட்புகளில் சுபாஷும் மிக முக்கியமானவன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மச்சி… இன்னும் மென் மேலும் சாதனைகள் புரிய எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டிக்கொள்கிறேன்.
புகைப்படங்கள்....
நாங்கள் படித்த புனித வளனார் மேல் நிலைப்பள்ளியிலும் மற்றது நாங்கள் பேசி கரையும் கடலூர் வெள்ளி கடற்கரையிலும்.
ஜாக்கிசேகர்

20/06/2016
========================
ஸ்டில் கேமராவும், வீடியோ கேமராவும் என்க கழுத்தில் ஏறி 21 வருஷம் ஆகுது... எத்தனையோ கல்யாணம் காதுகுத்தின்னு போட்டோவும் வீடியோவும் எடுத்து தள்ளி இருக்கோம்....... ச்சே போதும்... ஒரே வேலை... ஆனால் வித விதமான மனிதர்கள்... அடுத்து என்ன? அடுத்து என்ன? தேடலில் இன்று வரை ஓடிக்கொண்டு இருக்கின்றேன்...
எனக்கு அசோக்கிற்கும் 20 வருட பழக்கம் சென்னையில் ஒரு காலத்தில் ஒன்றாக சுத்தி நிறைய நிகழ்வுகளை கவர் செய்து இருக்கின்றோம்...
பேசி பேசி கலாய்த்துக்கொண்டு வேலை செய்வதில் அவனோடு வேலை செய்வது ஒரு பளுவாகவே இருக்காது...
1998 ஆம் ஆண்டில் தி நகரில் இருக்கும் பைவ் ஸ்டார் ஓட்டலில் ஒரு புத்தாண்டு நள்ளிரவு ஒரு நிகழ்ச்சியை கவர் செய்தோம்..
பேமன்ட் மறுநாள் வாங்கிக்கொள்ள சொன்னார்கள்...
யாரும் சாப்பிட கூட சொல்லவில்லை.. சாப்பிட சொல்லாத அழைப்பு இல்லாத இடத்தில் ஒரு போதும் நாங்கள் சாப்பிடதில்லை,...
இப்போது போல பர்ஸ் பிரித்தால் 500 ரூபாய் தென்படாத காலகட்டம் அது.. ரெண்டு பேர் பர்சிலும் அழுக்கு பத்து ருபாய் மட்டுமே இருந்தது.
வெளியே வந்து சைக்கிளில் சென்ற டீக்கடைக்காரரை அழைத்து டீ சாப்பிட்டது மறக்க முடியாது நிகழ்வு... இன்றும் புத்தாண்டு அன்று போன் செய்து வாழ்த்திக்கொள்ளும் போது அந்த நிகழ்வை பேசி சிரிப்போம்.
எனது திருமணத்துக்கு வந்து போட்டோ எடுத்துக்கொடுத்ததும் அசோக்தான்...
இன்று Ashok Poyyathappan சினிமாவில் ஸ்டில் போட்டோகிராபராக மாறி விட்டான்....
என்றைக்கு இருந்தாலும் இந்த நட்பு துளிர்த்துக்கொண்டே இருக்கும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மச்சி...இன்னும் பல சிறப்புகளை அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்.
Ashok Poyyathappan
ஜாக்கிசேகர்
20/06/2016
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS..
.



0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner