புற்றுநோய் எனும் கொல்லும் பயம்… வேண்டாம் பான்பராக் எனும் குட்கா.





19 வருடத்துக்கு முன்….
கடலூர் கூத்தப்பாக்கம்  கான்வென்ட் பஸ் ஸ்டாப்.

நீங்கதான் தனுசுவா…( ஊர்ல என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க.. தனசேகரன் ஷார்ட் பார்ம்.. அப்புறம் ஜாக்கிசேகரா மாறி இப்ப ஜாக்கி….)

ஆமாம்..

நான் பாஸ்கர்…

தெரியும் சுதா சொல்லி இருக்காங்க… அவங்களோட  பெஸ்ட் பிரண்ட் …

சுதா சொன்னாங்க… அவுங்க உங்களை லவ் பண்ணறாங்கன்னு….

நான் சிரித்தேன்….

அவனுக்கு என்னை பார்த்த மாத்திரத்தில்   பிடிக்கவில்லை என்பது எனக்கு  தெரிந்து போனது…

ஆமாம்.. நீங்க   என்ன படிச்சி இருக்கிங்க..?

பத்தாவதுதான்…

சுதா   நல்லா படிப்பாங்க…
தெரியும்…



அவுங்க கொஞ்சம் ஹை பையா இருப்பாங்க….  அந்த அளவுக்கு சம்பாதிக்கனும்…

ஓ அப்படியா? பார்த்தா அப்படி தெரியலையே... இயல்பாதான் என்கிட்ட இருக்காங்க...

அவங்க சரவணபவன் அந்த மாதிரி ஓட்டல்லதான் சாப்பிடுவாங்க… நீங்க அந்த அளவுக்கு சம்பாதிக்கனும்…

ஓ  இதை  அவுங்க சொன்னாங்களா?

இல்லை நான்தான்  சொல்லறேன்…

என்னா? இரண்டு மாசத்து முன்னாடிதான் வீராணம் பைப்புல சாக்கு கட்டி நான் குடும்பம் நடத்தினாலும் என்னோட வாழ சம்மதம்ன்னு என்கிட்ட  சொன்ன  பொண்ணு.. இப்ப இன்னாடான்னா அவ  சார்பா  அவ பிரண்டுன்னு ஒருத்தன்  ஏன்கிட்ட அவ ஹைபை அது இதுன்னு பேசிக்கிட்டு இருக்கான்…

எனக்கு  கோபம் தலைக்கேறியது…  இழுத்து போட்டு நாலு வாங்கு வாங்க கை பரபரத்தது…  சரி  கோவத்தை கண்ட்ரோல்  பண்ணு… மேல என்ன சொல்றான்னு பார்போம்…

 ஒன்னு மில்லை பாஸ்கர் பியுட்சர்லதானே … பார்த்துக்கலாம்..-சம்பாதிச்சிக்கலாம்.. என்னால நீங்க சொன்ன ஹை பை வாழ்க்கை கொடுக்க முடியுமான்னு  தெரியலை.. ஆனா சந்தோஷமா  வச்சி  அவ கூட குடும்பம் நடத்த முடியும்னு நினைக்கறேன்…

  பாஸ்கர் என்னை பொருத்தவரை பணம் காசு ரெண்டாவது விஷயம் ஒத்த அலைவரிசை ரொம்ப முக்கியம்…

என்னை இவ்வளவு கேள்வி கேட்கறிங்க---

பட்  உங்க பிரண்ட்தான்  என்னை லவ் பண்ணறேன்னு  அவுங்கதான் சொன்னாங்க.. இப்ப என்னை  கேட்கற கேள்வியை எல்லாம்  நீங்க உங்க பெஸ்ட் பிரண்ட் கிட்டயே கேட்டுக்கலாம்…

இல்லை அவுங்க என் பெஸ்ட் பிரண்ட்… உங்களை சூஸ்  பண்ணி இருக்கேன்னு சொன்னாங்க.. அதனால நான் உங்ககிட்ட பேசறேன்…நான் சொன்ன அவுங்க   கண்டிப்பா   கேட்பாங்க… அதான் உங்களை பார்த்து பேசிட்டு  என் ஒப்பீனியன் அவுங்க கிட்ட  சொல்லுவேன் என்றான்… அது மட்டுமல்ல.. சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் பெஸ்ட் பிரண்ட்ஸ் அவ டேஸ்ட் அவளுக்கு புடிச்சது புடிக்காதது எல்லாம் எனக்கு தெரியும்…  அவுங்க அப்பாவும் என் அப்பாவும்  பிரண்ட்ஸ்…

செம அமெச்சூர்தனம் அந்த பேச்சில் தெரிந்தது…  காட்டான் போல இருக்கான் இவன் எல்லாம் சுதாவுக்கா..? என்ற  எரிச்சல்  பாஸ்கரின் கண்களில்  தெரிந்தது…

எனக்கு கோபம் தலைக்கேறியது…  கோபம் அதிகமானால்… நான் மாணிக்சந் போடுவேன்… அவன் எதிரில் என் பாக்கெட்டில் துழவி  மாணிக்சந்த் எடுத்து ஸ்டைலாக வாயில் கடித்துக்கொண்டேன்…

கைலியை ஓர் உதறு உதறி ராஜ்கிரண் கணக்கா தொடை தெரிய ஏற்றிக் கட்டிக்கொண்டேன்…

பாஸ்கர் என்ன சொன்னிங்க..?  சுதா உங்க பெஸ்ட் பிரண்ட்.. நீங்க எது  சொன்னாலும் கேட்டுக்குவாங்க..   நீங்க என்னை வேண்டாம்ன்னு சொன்னாலும்  அவங்க அப்படியே ஏத்துக்குவாங்க அப்படித்தானே..

ஆமாம்..

 நான் மாணிக் சந்தை  பிரித்தேன் கையில் கொட்டி பாக்கு மேல் படித்த  பவுடரை ஸ்டைலாக ஊதினேன்…

வாயில் கொட்டிக்கொண்டேன்…
பாஸ்கர்…… நீயில்லை..உங்க அப்பா ஆத்தா தாத்தா பாட்டி யார் சொன்னாலும் சுதா மாறமாட்டா… உன்னால  முடிஞ்சதை பார்த்துக்கோ…

என்று சைக்கிள் எடுத்தேன்…

பாஸ்கர் கேட்டான்…. உங்களுக்கு பாக்கு போடற பழக்கம் கூட இருக்கா…

அவளுக்கு அதுவும் தெரியும்… வேணும்ன்னா இதையும் சொல்லி என்னை வேண்டாம்ன்னு உன்னால முடிஞ்சா சொல்ல  சொல்லு என்று  சொல்லி விட்டு…….. சைக்கிள் எடுத்துக்கொண்டு  சென்று விட்டேன்…

குட்கா எனும்  மாணிக்சந்த் என்னை  வியாபித்து இருந்த காலம்… அது… கோவம் வந்தால் பாக்கினை  வாயில் போட்டு  குதப்பி யோசிக்க நானே போட்டுக்கொண்ட  வலை  அது…
யாருமற்ற எனக்கு அந்த வலை வசதியாய் இருந்தது…..

முதன் முதலில் கடலூர் வைரம் ஜூவல்லரியில் வேலை பார்த்த போது  மாணிக்சந் வாயில் கொட்டி வாந்தி எடுத்து அதை பார்த்தாலே ஒவ்வாமை வந்தது…உடலுக்கு பிடிக்காத விஷயத்தை முதல் முறை எது செய்தாலும் அது ஒத்துக்காது.. மீண்டும் மீண்டும் அதை கொடுத்தால்  வேறு  வழியின்றி அது ஏற்றுக்கொள்ளும்....

1996 ஆம் ஆண்டில் பாலு என்ற நண்பர்  அறிமுகம் அவரோடு  சேர்ந்த போது பான்பராக் என் வாழ்வில்  மீண்டும் எட்டி பார்த்துது.

அப்போது வால் பேப்பர்  வினையில் புளோரிங் வேலை பார்த்த நேரம் நிறைய வால் பேப்பர்  ஒர்க் அதிகம் கிடைக்கும்...  நாளைக்கு காலை அலுவலக திறப்புக்கு இன்றைக்கு சாயங்காலம்  பெயிண்ட் ஈரம் காயாத சுவற்றை கொடுத்து வால்பேப்பர்  ஒட்ட சொல்லுவார்கள்…

நிறைய இரவு நேர பணிகாரணமாக தூக்கம் வராமல் இருக்க  பான்பராக் போட ஆரம்பித்தேன்…

பான்பராக் போட்டாலும் துப்ப ஒதுக்கு புறமான இடம் பார்த்து துப்புவேன்.. சாலையில் துப்பியதில்லை.. முக்கியமாக சினிமா தியேட்டரில் கால் அருகே துப்பி துப்பி  வாந்தி எடுத்தது போல எடுத்து வைத்து இருப்பார்கள்  அது போல ஒரே ஒரு நாளும் செய்தது இல்லை…

ஆறு வருடம் அதிகமாக பான்பாராக்.. ஒரு நாளைக்கு ஒன்று இரண்டு என்று இருந்து  ஆறு பாக்கெட் பத்து பாக்கெட் வரை செல்ல மண்டைக்குள் மணி அடிக்க ஆரம்பித்தது..

என்  காதலி சொன்னாள்… ஒரே நாளில் எல்லாத்தையும் விட்டுன்னு சொல்லலை… கொஞ்சம் கொஞ்சமா விடு என்றாள்.. நானும் ஒரு  நாளைக்கு காலை  மாலை இரவு என்று மூன்று பொட்டலத்துக்கு வந்து நின்றதோடு பான்பராக் ஏற்படுத்திய கப்பு காரணமாக  மாணிக் சந்துக்கு  மாறினேன்..

2005 இல் கல்லூரியில்  சேர காலை மாலை  மதியம் எ‘ல்லாம் வழக்கு  ஓழிந்து மாலை வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போகும் போது… ஒரு பாக்கெட் என்று சுத்தமாக குறைந்து போனது
என்றாலும் முதலில் போடும் போது இருந்த சின்ன  போதை  ஒன்னு மே இல்லாமல் சாதா பாக்கை போட்டு மெல்லுவதாக மாறி போனது… அதனால் வாய் நமநமப்புக்கு வாரத்துக்கு  நாலு பாக்கெட் என்று ஆனாது…

 யாழினி பிறந்த உடன் இன்னும் குறைந்து போனதோடு இரவு நேரத்தில் கார் ஓட்ட   தூக்கம் வராமல் இருக்க… ,இரண்டு பாக்கெட் வாங்கி வைத்துக்கொள்வேன்…

  அவ்வளவுதான்…


அதன் பிறகு பாக்கு என்பது ரொம்ப  ரேர்  அதுக்கு  காரணம் என் மனைவியின் முறைப்பு தான்…  அதுதான் ரொம்பவும் குறைக்க உதவியது.. கொஞ்சம் கொஞ்சமாக  குறைக்க நிறைய  நேரம் கொடுத்து என்னை மாற்றியவள் அவள்தான் …  நான் யார் சொல் பேச்சையும் கேட்கவே மாட்டேன் அதனால் என் சுதந்திரத்தில் யாரும் மூக்கை நுழைத்தது இல்லை… ஆனால்  என் சுதந்திரத்தை மதித்து அதனை கண்ட்ரோல் செய்தவர் அவர்தான்.. அவருக்கு  தெரியாமல் எத்தனை பாக்கு  வேண்டுமானாலும் போட்டு இருக்கலாம்.. ஆனால் அவள்  அனுமதியோடு  போடவேண்டும்  அதுவும் அக்கேஷனாக என்று மாறி.. ஒரு மாதத்தில் ஒன்று என்று வந்து நின்றது…

 அதன் பிறகு  தம்பி  டாக்டர் பாலா குடும்பத்துடன் நான்கு  வருடத்துக்கு முன்   ஏலகிரி சென்றோம்.. வாயின் உட்புறத்தை அவனுக்கு  காண்பித்தேன் உட்புற சுவர் எல்லாம் மாறி தோல் வேறு நிறத்துக்கு மாறி இருப்பதை பார்த்து விட்டு சொன்னான்…
அண்ணா இந்த  நிமிஷம்.. இந்த நொடி இதுக்கு அப்புறம்  மானிக் சந்த் பாக்கு உங்க வாழ்க்கையில இருக்கவே  கூடாது.. உள் பக்கம் வெள்ளையா இருக்கே  அது என்ன?

அது புகையில யூஸ் பண்ணா வரும் சிம்டெம்ஸ்… அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல..இனி பாக்கு  வேண்டாம் என்றான்…

அன்றில் இருந்து இன்றுவரை  மாணிக் சந்தை  நான் தொடவேயில்லை…  இரவு நேரத்தில் கார் ஓட்டுகையில் இன்னைக்கு ஒரே ஒரு வாட்டி தூக்கத்தை விரட்ட போட்டுக்கலாம் என்று  மாணிக்சந்த் வாங்கி கார்  டேஷ் போர்டில் வாங்கி வைத்து விட்டு

  போடலாமா? வேண்டாமா? என்று பட்டி மன்றம் நடத்தி   இந்த கதை  மயிரே வேண்டாம் என்று  யூஸ் பண்ணாமல் ஆறு மாதத்துக்கு அப்புறம்  தூக்கி போட்டு இருக்கேன்…

இரண்டு வருஷம் ஆயிடுச்சி.. நமக்குதான் எதுவும் இல்லை… ரொம்ப நாளா இந்த பாக்கு இங்க இருக்கே போட்டு பார்த்தா என்ன? என்று யோசித்து பிரித்தும் விட்டேன்.. ஆனால் அது கெட்டு போய் இருந்தது.. அதனை அப்படியே கொட்டி விட்டேன்…
 இருந்தாலும் கன்னத்தில்  உட்புறத்தில் வெள்ளையாக இருந்த அந்த  சிம்டெம்ஸ் பல்லால் சதையை கடித்துக்கொண்டதால் உருவானது என்று நினைத்து இருந்தேன்..

ஒரு வேளை புற்றுநோய் அறிகுறியாக இருக்குமோ? என்று  பயம் வேறு  என்னை  படுத்தி எடுக்கும்…
பல்வலிக்காக சென்னை பள்ளிக்கரனை பாலாஜி டென்டல் காலேஜில்  பற்களை  காட்டி விட்டு  அந்த வெள்ளை பகுதியை காண்பித்தேன்….

 அவர்கள் ஒருவாரத்துக்கு முன் அந்த இடத்தை மட்டும்   உட்புற கன்னத்தில்   இரண்டு  ரூபாய் பழைய நாணயம் சைசுக்கு லேசரினால்  கட் பண்ணி எடுத்தார்கள்…. எடுத்த சமாச்சாரத்தை பாயாப்சிக்கு அனுப்பி ஒரு வாரத்துக்கு பிறகு வந்து பார்க்க சொன்னார்கள்..

புற்று நோயோ என்று பயந்து சென்றேன்
 ரிசல்ட் நெகட்டிவ்…

பாக்கு என்பது ஒரு  ஸ்டைலின்  வெளிப்பாடாக பொறிக்கி தனத்தின்  வெளிப்பாடாக ஆண்மையின்  வீரத்தின் அடையாளமாக   மனம் ஒரு காலத்தில்  உருவகப்படுத்தி இருந்தது..

ஆனால் அது மாயை என்று தெரிந்து விட்டு விட்டாலும்  காலம் கடந்து  அந்த பழக்கத்தினை விட்டேன்.. 22 வருட பழக்கம்.. ஒரு நாளைக்கு 50 பாக்கெட்  கேசு எல்லாம் நான் பார்த்து இருக்கேன்.. ஒரு நாளைக்கு பத்து என்பது  அதிகம்.. அதுவே இரண்டு மாதம் நிடித்து  என் மனதை கட்டு படுத்தினேன்..

என் மனதினை என் மீறி யார் ஆளுமை செய்ய முடியாது என்ற இறுமாப்பினை பான்பராக்கும் மாணிக்சந்தும் உடைத்து தூள் தூளாக்கினா..
நான் தான் முகேஷ் போன்ற திரையரங்க வாய்ப்புற்று  விளம்பரங்கள்  பயத்தை ஏற்ப்படுத்திய விளைவு… பாக்கு போடுவதை குறைக்க அந்த விளம்பரங்களும்  காரணம் என்பதை மறுக்க முடியாது.

எல்லா வற்றையும் விட புற்றுநோய் இருக்குமோ என்று  வாய் உள்ளே இருக்கும்  வெள்ளையான அந்த சிறிய படையை  பார்த்து நித்தம் நித்தம் பயந்தது எனக்குதான் தெரியும்…

வாய் முழுக்க பான்பராக் மானிக் சந் என்ற இரண்டு சனியன்கள் என்னை வியாபித்து இருந்தன…  அதில் இருந்து மீண்டு விட்டேன்.. நான் யாருக்கும் அட்வைஸ் செய்தது இல்லை.. எனக்கு யாராவது செய்தாலும் எனக்கு பிடிக்காது..

ஆனால் ஒன்று தொடர்ந்து நான் மாணிக் சந் போட்டுக்கொண்டு இருந்து இருந்தால் இந்த நெகட்டில் ரிசல்ட் வந்து இருக்காது என்பது மட்டும் நிச்சயம்….

அதனால் பான்பராக்  பாக்கெட்டை கிழித்து வாயில் கொட்டும்  முன் யோசியுங்கள்.

பான் மற்றும் மானிக் சந் ரெண்டையும் கொஞ்சம் வருசத்துக்கு முன்ன விட்ட உங்கள்...

ஜாக்கிசேகர்
20/04/2017

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

2 comments:

  1. அருமையான விழிப்புணர்வு கட்டுரை

    பகிர்தலுக்கு நன்றியும் பாராட்டுக்களும்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.. இந்தக் கட்டுரை பலரையும் சென்றடைய சில வார்த்தைகளை மாற்றலாமே..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner