I love cinema | சினிமா மீதான காதலும் சினிமா பார்த்தலும்.….


சினிமா மீதான காதலும் சினிமா பார்த்தலும்.….


என்னை பொருத்தவரை நான் என் கவலைகள் மறக்கும் இடம் எது என்றால் அது திரையரங்குகள் என்பேன். காரணம் இரண்டு மணி நேரம் யாரோ ஒருவருடைய காதலையோ காமத்தையோ நட்பையோ இருட்டில் வாழ்ந்து விட்டு வரலாம்.


படிக்கும் போது எங்களை என் அம்மா மறந்தும் சினிமாவுக்கு அழைத்து சென்றதே ,இல்லை… அப்படி அழைத்து செல்லும் படங்கள் சக்தியில்லையேல் சிவம் இல்லை, நாரதன் கலகம் நன்மையில் தானே முடியும்? என்ற வசனங்களோடனான திரைப்படங்கள்தான்
எப்போதாவது வெளியாகும் சாமி படங்கள் மட்டுமே பார்க்க அனுமதி என்ற கட்டுப்பாடே எனக்கு சினிமா மீதான அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது எனலாம்.
ஆனால் பின்னாளில் தொடர்ச்சியாக கடலூர் முத்தையா திரையரங்கில் நிர்வாணங்களை ரசிக்க மலையாள சாமி படங்கள் பார்க்க காரணமாக அமைந்தது. சினிமா பார்த்தால் படிப்பு வராது என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை… அதனால் நோ சினிமா.


எனது தூரத்து உறவினர் இந்திரா என்பவர் அவர்கள் வீட்டில் பிரச்சனை என்று எங்கள் இல்லம் வந்த போது கடலூர் கமலம் தியேட்டரில் 1986 ஆம் ஆண்டு தாய்க்கு ஒரு தாலாட்டு படம் ஓடிக்கொண்டு இருந்தது… செகன்ட் ஷோ திரைப்படத்துக்கு அம்மாவும் அவர்களும் கிளம்பினார்கள்.. எனக்கு மறுநாள் பள்ளி இருந்தகாரணத்தாலும் அந்த திரைப்படம் சாமி திரைப்படம் இல்லை என்ற காரணத்தாலும் என்னை சினிமாவுக்கு அழைத்து செல்ல அம்மா யோசித்தார். ஆனாலும் நான் அடம் பிடித்து அம்மாவோடு சென்று பார்த்த முதல் இரவுக் காட்சி திரைப்படம் அந்த திரைப்படம்தான்,.,. அதில் சிவாஜி கேரக்டர் எங்க அப்பா அவருடைய கடைசி மகன் பாண்டியராஜன் கேரக்டர் நம்ம கேரக்டர் என்று நானாகவே உருவகப்படுத்திக்கொண்டு பார்த்த திரைப்படம் அது.

நான் முதன் முதலாக தனியாக சென்று ஜோப்பியில்இருந்து காசு எடுத்து ஒன்றரை ரூபாய் டிக்கெட் எடுத்து எவர் துணையும் இன்றி பார்த்த முதல் திரைப்படம் ரஜினி சிவாஜி நடித்த விடுதலை திரைப்படம்தான்… அந்த படம் கடலூர் வேல்முருகன் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருந்தது… எட்டாம் வகுப்பு பொதுதேர்வின் கடைசி நாளின் போது படித்து முடிந்து தேர்வு எழுதிய களைப்பு நீங்க அப்பா அம்மாவிடம் பர்மிஷன் கேட்டு போய் பார்த்த முதல் திரைப்படம் அதுதான்.….


அதே போல பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த போது ஜாக்கிசான் திரைப்படங்கள் தமிழகத்தில் கால் ஊன்றிய நேரம்… கடலூர் கமலத்தில் ஜாக்கிசான் நடித்த ஸ்பேனிஷ் கனெக்ஷன் திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தது.. நானும் எனது நண்பன் சுபாஷூம் தினமும் பர்ஸ்ட் ஷோ பார்த்து விட்டு தேர்வு ஏழுதினோம்.


அர்னால்ட் நடித்த கமென்டோ திரைப்படம் பாண்டி ரத்னா தியேட்டரில் வெளியாகி இருந்தது. சுபாஷ் மற்றும் நண்பர்கள் புட்டி நாராயணன் போன்ற நண்பர்கள் படத்துக்கு கிளம்பினார்கள்.. ஆனால் என்னிடம் பணம் இல்லை.. நண்பர்களிடமும் பணம் இல்லை.. அதனால் என்னை விட்டு விட்டு அவர்கள் மட்டும் பாண்டிக்கு சென்றார்கள்.. நான் ஒரு ஹெட் போன் வாங்கி வைத்து இருந்தேன்… அதனை பதினைந்து ரூபாய்க்கு அடகு வைத்து அந்தகாசை எடுத்துக்கொண்டு பாண்டி பஸ் பிடித்து அதன் பின் ஷேர் ஆட்டோவில் பயணித்து, தியேட்டருக்கு போனால் ரஜினி படத்துக்கு நிகராக அர்னால்ட் படத்துக்கு கூட்டம் டிக்கெட்டுக்கு அடித்துக்கொண்டு இருந்தது..


நான் தியேட்டர் கட்டிடத்தின் மேல் ஏறி டிக்கெட் கவுண்டர் அருகே குதித்து ஒன்றரை ரூபாய் டிக்கெட் எடுத்து உள்ளே போய் உட்கார்ந்து நண்பர்களை தேடினேன் ஆனால் அவர்கள் யாரும் இல்லை… அர்னால்ட் ஏரோபிளேனில் இருந்து குதித்த அந்த சமயத்தில் சுபாஷ் மற்றும் நண்பர்கள் உள்ளே நுழைந்து இருக்கை தேடிக்கொண்டு இருந்தார்கள்.,. நான் கடைசி ரோவில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து வெறுத்துபோனார்கள். என்றாவது ஸ்டார் மூவீசில் கமன்டோ திரைப்படம் ஓடும் போது அன்றைக்கு அந்த திரைப்படத்துக்காக எடுத்த ரிஸ்க்குகளை நினைத்துக்கொள்வேன்.. காரணம் சினிமா அவ்வளவு பிடித்த விஷயம் .


கடலூர் கிருஷ்ணாலாயாவில் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளியானது… ரசிகர் ஷோவுக்கு அடுத்த ஷோ பார்த்தாக வேண்டும்.
முதல் நாள் பார்த்தாக வேண்டும்…. புது சட்டை போட்டுக்கொண்டு செல்கின்றேன்.. இரண்டரை ரூபாய் டிக்கெட் கவுண்டரில் அடிதடி இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி மன்னன் படத்தில் ரஜினி கவுண்டமணி போல வியர்வை வழிந்து வெளியே வந்தேன்… சட்டை தெப்பலாக நனைந்து இருந்தது.. சட்டையை பிழிந்து போட்டுக்கொள்ளலாம் என்று சட்டையை அவிழ்த்தால் முதுகு பக்கம் சட்டை கிழிந்து இருந்தது.. செம வருத்தம்… ச்சே அப்படி இன்னா மயிறு சினிமா வேண்டி கிடக்கது.. புது சட்டை அப்பன் கிட்ட எவன் திட்டு வாங்கறது.?

ஆனாலும் ராஜா கைய வச்சசா அது ராங்க போனதில்லை என்று மெக்கானிக் கமல் வந்ததும் சட்டை பற்றிய நியாபகம் மறைந்து கவுதமியை சைட் அடிக்க ஆரம்பித்தவுடன் வேறு உலகத்துக்கு சென்று விட்டேன்… காரணம் சினிமா… எல்லாத்தையும் மறக்க வைக்கும் ஒரு அற்புதம்


ரசிகர் ஷோவுக்கு அடித்துக்கொள்வார்கள்.. நான் அந்த மாதிரி கூட்டத்தில் போய் படம் பார்த்ததில்லை… ஒரு டிக்கெட் 100 ரூபாய் மற்றும் 50 ருபாக்கு விற்பார்கள்..100 ரூபாய் இருந்தால் இரண்டரை ரூபாய் டிக்கெட்டில் எத்தனை படம் பார்க்கலாம் என்று மனக்கணக்கு போடுவதால் ரசிகர் ஷோ என்பது என் வாழ்வில் சாத்தியம் இல்லாமல் போனது.


சின்ன கவுண்டர் திரைப்படம் 1991 ஆம் ஆண்டு கடலூர் பாடலியில் ஒரு பொங்கல் அன்று வெளியானது எதேச்சையாக அந்த பக்கம் போகையில் படம் போட்டு பத்து நிமிடம் ஆன காரணத்தால் 50 ரூபாய் டிக்கெட்டை 15 ரூபாய்க்குவிற்றுக்கொண்டு இருந்தார்கள்… என் வாழ்வில் 15 ரூபாய் கொடுத்து வாங்கி பார்த்த ரசிகர் ஷோ திரைப்படம் சின்னகவுன்டர்தான்..

அம்மா சாக இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கும்…. அம்மா நோயில் கஷ்டப்பட்டு என் கை பிடித்து அழுகின்றார்.. என்னால் எதுவும் செய்யமுடியாத நிலமை.. நோய் முற்றிய நிலை.. எதுவும் செய்ய முடியாது. ஜிப்மரில் இருந்து ஷேர் ஆட்டோ பிடித்து ஜீவா தியேட்டர் வந்து பார்த்த படமே ஆனாலும் காதலன் திரைப்படத்தை மீண்டும் பார்த்து கவனதை இரண்டு மணி நேரம் காதலன் திரைப்பட கதாபாத்திரங்களோடு வாழ்ந்தேன்.

சென்னையில் 2000 மாவது ஆண்டில் தொடர்ந்து ஆறு மாதத்துக்கு இரவு காட்சி பார்த்த ஆள் நானாகத்தான் இருப்பேன். பார்த்த படமோ பார்க்காத படமோ… மொக்கையோ மொக்கை இல்லையோ.. தினமும் ஒரு திரைப்படம் பார்த்தே ஆக வேண்டும்… சிகரேட் பிடிக்கவில்லை என்றால் உதடு நமநம என்று அறிக்குமே அது போல சினிமா சிகரெட் போல ஒரு போதை….ஒரு கட்டத்தில் இரவு காட்சி இல்லாமல் தூங்க முடியாமல் இன்சோமேனியா நோய் வந்து விடுமோ என்று பயந்து இருக்கிறேன்..


நைட் ஷோ பார்ப்பதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்று வேண்டுமானால் மல்ட்டி பிளக்ஸ் எசி தியேட்டர்கள்..சன் லைட் உள்ளே வருவதில்லை ஆனால் அன்று சிங்கிள் ஸ்கிரினில் படம் பார்க்க சென்றால் நல்ல சுவாரஸ்யமான காட்சியின் போது கதவை பப்பரக்கே என்று திறந்து வைத்து விட்டு செல்வார்கள்.. காட்சியில் இருந்து கவனம் அந்த கதவை எந்த புண்ணியவான் எழுந்து போய் சாத்துவான் என்பதில் கவனம் குவியும் அதனாலே எனக்கு பகல் காட்சிகள் சுத்தமாக புடிக்காது.. இரவு காட்சிதான் எப்போதும் பிடித்தமானது… கதவும் திறந்து இருக்கும் இயற்கை காற்று உள்ளே வந்து சொல்லும் சன் லைட் டிஸ்டர்ப் இல்லாமல் திரைப்படத்தை நன்கு ரசிக்கலாம். 2003 2004 நாளில் சென்னையில் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகரில் குடியிருந்தேன்..ஒவ்வோரு வெள்ளிக்கிழமையின் போதும் மோட்சம் தியேட்டருக்கு சைக்கிளில் சென்று படம் பார்ப்பேன்…


இடைவேளையின் போது திரைப்படம் பார்க்கும் போது நட்பான ஒருவர்.. எப்படி ஜி ஆழ்வார் திருநகரில் இருந்து மோட்சம் தியேட்டருக்கு சைக்கிளில் படம் பார்க்க வந்து இருக்கிங்க என்றார்… இது இன்று நேற்று பழக்கம் இல்லை பல வருஷமா அப்படித்தான் என்றேன். இன்று நினைத்து பார்த்தால் டரியலாக இருக்கின்றது.
பைக் வாங்கிய பிறகு சென்னை ராமாபுரத்தில் இருந்து குரோம்பேட் வெற்றிக்கும் மவுன்ட் ரோட் தேவிக்கும் இரவு காட்சிக்கு செல்ல தயங்கியதே இல்லை.
தமிழ் படம்ன்னு ஒரு படம் வந்துச்சி… பெரிய ஸ்டார் படம் எல்லாம் இல்லை மிர்ச்சி சிவா நடித்த திரைப்படம்..நைட் ஷோவுக்கு எந்த தியேட்டரிலும் டிக்கெட் இல்லை..



நள்ளிரவு ஒன்றரை மணிக்கு ஒரு காட்சி மாயாஜாலில் இருப்பதாக தகவல் கிடைக்க கானத்தூரில் இருக்கும் நண்பர் பிரபுவுக்கு போன் செய்து இரண்டு டிக்கெட் எடுக்க சொல்லி… எக்ஸ்ட்ரா சீட் போட சொல்லி.. மிட் நைட் பண்ணிரண்டு மணிக்கு மனைவியை பைக்கில் அழைத்துக்‘கொண்டு போருரில் இருந்து மாயாஜல்லுக்கு சென்று படம் பார்த்து விட்டு விடியற்காலை நாலு மணிக்கு பைக்கில் பயணித்து படத்து இருக்கின்றோம்.. காரணம் சினிமா மீது இருக்கும் ஆர்வம் என்பதை விட எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற வெறி… அதற்கான ரிஸ்க் இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

குட் பிரைடே மூனு நாள் லிவ் மூனாறுக்கு ஆபிஸ் நண்பர்களுடன் செல்வோமா என்றார் என் மனைவி… திடும் என எடுத்த முடிவு காரில் வியாழன் அன்று இரவு பத்துமணிக்கு கிளம்பி வெள்ளிக்கிழமை காலை பதினோரு மணிக்கு மூனாற்றுக்கு அருகே உள்ள சின்னகானலை அடைந்து விட்டோம்..

காலையில ஸ்பெஷங்ல ஷோ தோழா படத்துக்கு எட்டு மணி ஷோ டிக்கெட் எடுத்து வைத்து இருந்தேன்.. அது கேன்சல்… மனம் முழுக்க படம் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தாலும் டயர்டில் நான் தூங்கி விட்டேன். மாலை படம் பார்க்க வேண்டும் என்ன செய்யலாம்….?? நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் இருந்த காட்டேஜில் தங்கி இருந்ததோம்..


தம்பி வெங்கடபதியிடம் மூனாற்றில் படம் ஓடுகின்றாதா என்று விசாரித்தேன்.. இரண்டு தியேட்டர்கள் இருந்ததாகவும் தற்போது அவைகள் ஓட்டல்களாக மாற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவித்தன…



எலிப்பொறியில் மாட்டியகதையா நான் இருந்தேன்.. செல்போனில் சிக்னலே இல்லை ஆனாலும் கிடைத்த சிக்னலில் ஜாக்கி இரண்டு மணியில் இருந்து உங்க ரிவியூவுக்கு வெயிட்டிங் எப்ப விமர்சனம் போடுவிங்க என்று நண்பர்களின் போன் கால்கள் வேறு நெத்தியடி திரைப்படத்தின் ஜனகராஜை போல உசுப்பி விட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆறு மணிக்கு மேல ஜனகராஜூக்கு சரக்கு அடிச்சே ஆகனும்… அதுக்காக அவர் எதுவெனா செய்வார்… அம்மா கம்மலை கூட திருடி குடிப்பார்… அப்படியான நிலையில் நான் இருந்தேன்…


முதன் முறையாக முனாறுக்கு வந்து இருக்கிறேன். அதுவும் ஆல்ட்டோ காரில் ….போடி , போடி மேடு, பூம்பாறை, ஆனையிரங்கல் சின்னக்காணல் என்று ரசித்த வந்தாலும் அந்த மலைசாலைகள் எத்தனை ஆபத்து நிறைந்தவை என்பது இந்த பக்கம் பயணித்து இருப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்… சோ சுத்துப்பட்டில் திரைப்படம் பார்க்க சாத்தியமே இல்லை தியேட்டரும் இல்லை… தோழா படம் பார்க்க வேண்டும் என்றால் ஒரே ஆப்ஷன் போடிக்குதான் செல்ல வேண்டும்


சின்னாகாணலில் காரை எடுத்தால் ஆனையிரங்கல் , பூம்பாறை, போடி மேடு அதன் பின் போடிக்கு வர வேண்டும்.,.. மொத்த கிலோ மீட்டர் 50 ஆனாலும் மலை சாலைகளில் 30 கிலோ மீட்டர் என்று உதாரணத்துக்கு வைத்துக்கொண்டாலும் ஆனால் அதனை கடக்க குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம் ஆகும் நிறைய ஹேர்பின் பெண்டுகள் எதிரில் வரும் வாகனங்கள் முக்கியமாக சேட்டன்களின் ஜெட் வேகம் கொண்ட ஜீப்புகள், இரவு நேரத்தில் சாலையில் திரியும் காட்டு விலங்குகள்… நைட் செக்போஸ்ட்டுகள் என்று நிறைய சவால்கள்.


போடியில் வெற்றி தியேட்டரில் தோழா படம் திரையிட்டு இருப்பதாக தம்பி வெங்கட் சொன்னான். ஒரே ஆப்ஷன் போடி வெற்றி தியேட்டர்தான்… வேறு வழியில்லை ஆனால் ஒரு படத்துக்கு இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா? வழியில் நிறைய ரிஸ்க் இருக்கின்றது… இரவு நேர மலைப்பாதை பயணம்…
ஆனாலும் சினிமா எனும் போது இது போல நிறைய பார்த்தாகி விட்டது. அதனால் போடிக்கு செல்ல வேண்டும் என்று தீர்மாணித்தேன். காரில் நண்பர்கள் இருவர் சிவா சுரேஷோடு மொத்தம் மூவராக கிளம்பினோம். மலை சீமையில் ஏழுமணிக்கே வீட்டில் தஞ்சம் அடைந்துவிடுவார்கள். மூன்று டிக்கெட் எடுத்து வைக்க சொல்லி வெங்கடபதியிடம் சொன்னேன்.. சரியாக எட்டுமணிக்கு கிளம்பினோம்… பூம்பாரை தாண்டினேன்.. கடையை அடைத்துக்கொண்டு இருந்தார்கள். இரைச்சல் பாலம் அருகே வரும் போது ஈ காக்கா இல்லை..


சரி இப்படியே திரும்பி போய் விடுவோமா? என்று நினைத்தேன்.. ஆனாது ஆச்சி போனது போச்சி எதுவா இருந்தாலும் பார்த்து விடுவோம் என்று சின்னகானல் என்ற பள்ளத்தாக்கில் இருந்து 5000 அடி உயர போடி மேட்டுக்கு வந்து விட்டோம்.. அதில் இருந்து போடிநாயக்கனுர் தரையை தொட வேண்டும்… மலை பயணம்… சரக்கு வண்டிகள் எப்போதாவது வந்தும் போய்க்கொண்டும் இருந்தன…



17 ஹேர்பின் பெண்டுகளை கடக்க வேண்டும்… போடி நகரம் சின்ன புள்ளிகளாக தெரிய ஆரம்பித்தன.. அந்த புள்ளிகளை நோக்கிதான் சென்றுதான் சினிமா பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது செம மலைப்பாக இருந்தது… காரணம் முதல் நாள் 600 கிலோ மீட்டர் தூக்கம் இல்லா பயணம்… ஆனாலும் படம் பார்த்தே ஆக வேண்டும்.. தம்பி வெங்கடபதியோடு கொஞ்சம் நேரம் செலவு செய்ய இது ஒரு வாய்ப்பு. சர சர என இறங்க ஆரம்பித்தோம்.. தமிழக நெடுஞ்சாலை துறையை இந்த நேரத்தில் பாராட்டுவது சிறப்பாக இருக்கும். ஆம் ஹேர்பெண்டு பெண்டுகளை சைன் போர்டுகள் தமிழக நெடுஞ்சாலைகளில் அறிவிக்கின்றன.. ஆனால் கேரளா நெடுஞ்சாலைகளில் அப்படி எந்த அறிவிப்பு பலகையும் இல்லை நிறைய ஹேர்பின் பெண்டுகளில் ஒரு குன்சாகத்தான் வண்டி ஓட்ட வேண்டும்….



சின்னா கானலில் இருந்து ஒரு மணி நேரம் 20 நிமிடத்தில் போடிநாயக்கனுர் வந்து விட்டோம்…
தோழா படம் வெற்றி தியேட்டரில் பார்த்து விட்டு போடி பேருந்து நிலையத்தில் ஒரு டீ சாப்பிட்டு விட்டு திரும்ப இரண்டு மணிக்கு போடி மேட்டுக்கு கிளம்பினோம்.. தம்பி வெங்கட் இரவு தங்கி விட்டுதான் செல்ல சொன்னான்.. நான் தான் வீட்டில் தனியாக இருப்பார்கள் மலை சீமை வேறு… நான் போகும் வரை அவர்கள் தூங்க மாட்டார்கள் என்பதால் எப்படியாவது போக வேண்டும் என்றுகிளம்பினோம்..
வழக்கமாக செக் போஸ்ட் செக்கிங்..


போடி மேட்டுக்கு ஏறினோம் எந்த வாகனமும் வராத காரணத்தால் இரு சாலைகளையும் பயண்படுத்தினோம்… நடுவில் 16வது வளைவில் காரை நிறுத்தி கும்மிருட்டில் பத்து நிமிடம் நின்றோம்… சுற்றியும் மலைகாடுகள் .. அமைதி என்றால் அப்படி ஒரு மயான அமைதி… சிலு சிலு என காற்று… நிலா வெளிச்சத்தில் அந்த அடமே சாம்பல் கலரில் இருந்தது.. அதன் பின் பயணித்து போடி மேட்டுக்கு மூன்று மணி,க்கு வந்து சேர்ந்தோம் திரும்ப செக்கிங்க… கேரளா செக்கிங்கள் வண்டியை சல்லடையாக சலித்து தேடினார்கள்.

நாங்கள் திரும்ப பயணித்து பூம்பாறை வந்து அதன் யானையிரங்கல் வர யானைகள் தண்ணீர் குடிக்க வரும் என்பதால் தம்பி வெங்கட் ஏதாவது பெரிய சரக்கு லாரி பேருந்துக்கு பின்னே செல்ல சொன்னான்…


யானையிரங்களை கடந்து பின் சின்னகாணலில் உள்ள முட்டுக்காடு காட்டேஜிக்கு வர மணி நான்கு ஆகி விட்டது…நான் சொன்னது போலவே என்து மனைவி தூங்காமல் விழித்து இருந்து கதவை திறந்தார்... அதன் பின் சாப்பிட்டு விட்டு நாலரைக்கு படுத்தோம்… வாழ்வில் இந்த பயணமும் தோழா திரைப்படமும் மறக்க முடியாதவை..


நிறைய அட்வெஞ்சர்களோடு காரில் பயணித்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு போடி வெற்றி தியேட்டரில் தம்பி வெங்கட்டோ எடுத்தக்கொண்ட செல்பி.

ஒருசினிமாவுக்காக நீண்ட தூர பேருந்து பயணம்.,
சைக்கிள் பயணம், பைக் பயணம் அபத்தான மலை பாதையில் நள்ளிரவு கார் பயணம் என்று பயணித்தாலும் ஆதார சுருதி ஒன்றே ஒன்றுதான் அது…



சினிமா…

ஜாக்கிசேகர்
29/03/2016
Sudha Srinivasan Venkatapathy Krishnamurthy Suba Sh




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

10 comments:

  1. Amazing Jackie..... The amount of risk you have taken to watch one movie.......

    ReplyDelete
  2. நண்பர் ஜாக்கி.. எங்க ஊருக்கு போயி வெற்றி தியேட்டர்ல படம் பார்த்து இருக்கிங்க.. கேட்க சுகமா இருக்கிறது.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. I too like movies. Sometimes I have watched 4 movies in a day. But sorry this is too much Jackie when you have gone outing with family.

    ReplyDelete
  4. I think it is too much for a man who has a wife and a daughter !!

    ReplyDelete
  5. You have impressive passion for movies. Keep it up, Jackie.

    ReplyDelete
  6. I'm admiring your affection towards cinema. Most inspiring

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner