என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..
ஆம் பீனிக்ஸ் மாலில் 350க்கு மேற்ப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் 118 குழந்தைகளோடு நானும் மேடையேறினேன்.

பாட்டுக்கும் எனக்கு ஏணி வச்சாலும் எட்டாத தூரம் … பாட்டின் வரியெல்லாவற்றறையும் தப்பு தப்பாக என்பதை விட எனக்கு பிடித்த வரிகளை பொருத்து பாடுவேன்..கடலூரில் ஒற்றைக்கையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்லும் போது எனக்கு பிடித்த பாடல்களை சத்தமாக பாடி செல்வேன்.
சென்னையில் வளசரவாக்கத்தில் இருந்து மோட்சம் தியேட்டருக்கும் தேவிக்கும் , சத்தியம் தியேட்டருக்கும் பல கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து 2000 ஆண்டில் செல்கையில் சத்தமாக பாடி தூரத்தின் மீதும் கால் வலிகளின் மீதும் கவனம் செல்லாமல் காத்தவை பாடல்கள்தான்.

பாடல்கள் எனக்கு அவ்வளவு பிடித்தாலும் யார் எதிரிலும் பாடியது இல்லை… நான் முதல் முதலாக 50 பேர் இருந்த வகுப்பறையில் கல்லூரியில் வேலை செய்த போது வாத்தியார்களுக்கு மத்தியில் பாடிய பாடல் சாதி மல்லி பூச்சரமே..
அதற்கு ரஜினி நடித்த சிவாஜி படத்தின் பாடல் கேசட்டை பரிசாக பெற்றேன். நான் வாங்கிய முதல் பரிசு என்றும் அதனை சொல்லலாம்.
அதற்கு பின் பாடல்களை எங்கள் காரில் பெங்களுர் பயணங்களில் சத்தமாக பாடி செல்வதுண்டு..
அப்போதுதான்…

லீப் என்ற ஆர்கனைசேஷன் மூலம் யாழினிக்கு பாட்டு சொல்லி தருவதாக அவர்கள் பள்ளியில் ஒரு டேமோ கூட்டம் நடத்தினார்கள்.. யாழினிக்கு பாடலில் அதிக இன்ட்ரஸ்ட் என்பதால் அவளையும் சேர்த்து விட உத்தேசித்தோம்
ஆனால் குழந்தை பாட வரும் போது.. பெற்றோர் இருவரும் வந்தாலும் சரி… அல்லது ஒருவர் மட்டுமாவது வந்தால் நலம் என்றார்கள்.. நாங்கள் இருவரும் செல்ல தீர்மாணித்தோம்..

லீடர்ஷிப் என்கேஜ்மென்ட் இன் ஆர்ட்டிஸ்ட்டிக் பார்பாமென்சஸ் என்பதன் சுருக்கம் லீப்.
இவர்களுடைய நோக்கம்… இளைய சமுதாயத்தின் கலச்சார ஒற்றுமை மற்றும் ஆளுமைதன்மை மற்றும் தனிதிறமைகளை இசை மூலம் கண்டுணர்ந்து வளர்ப்பதே அவர்களின் நோக்கம் … இதில் நிறைய உறுப்பினர்கள் இருந்தாலும் இதன் தலைவர் சீனுவாசன்.. இதற்கு பின் புலமாக இசைப்புயல் ஏஆர்ரகுமான் இருக்கின்றார் என்பது சிறப்பு செய்தி.

நான், யாழினி, யாழினி அம்மா மூவரும் இந்த பாட்டு கிளாசில் சேர்த்தோம் .. சீனு சார் மற்றும் சவ்ரவ் இருவரும் பாடல்களை சொல்லி கொடுத்தார்கள்… சரிகமபதனி சொல்லிக்கொடுக்காமல் பிரபல பாடல்களை எப்படி ஏற்ற இறக்கத்தோடு பாடுவது என்று சொல்லிக்கொடுத்தார்கள்… அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது...ஏழு கட்டை எட்டு கட்டை என்று பீதியை கிளப்பாமல் சொல்லிக்கொடுத்தார்கள்.

வாரத்தில் வியாழக்கிழமை இரண்டு மணி நேரம் பாட்டு கிளாஸ்.. உண்மையை சொல்ல வேண்டும் என்றால்… நான் எந்த பயிற்ச்சி வகுப்புக்கும் சென்றது இல்லை.அந்த இரண்டு மணி நேரம் எங்கள் வாழ்க்கையில் பல கவலைகள் மறந்த நேரம் என்று எங்களால் உறுதியாக சொல்லமுடியும்…

யாழினி மட்டும் சென்று இருந்தால் வீட்டில் பாடல் பாடி அவள் மட்டுமே அலட்டுவாள்.. நாங்களும் பாடல் கற்றுக்கொள்வதால்… அவைகளை சத்தமாக வீட்டில் பாடிக்கொண்டு இருப்போம்…
முக்கியமாக வரி வரியாக சொல்லி கொடுத்து அது இசையோடு சேர்ந்து 20 பேர் சிறியவர் பெரியவர் என்று சேர்ந்து பாடும் போது அது கொடுக்கும் உணர்வு அலாதியானது… அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்பேன்..

முதலில் இந்தி பாடல்கள் சொல்லிக்கொடுத்த போது… அர்த்தம் புரியாமல் திரு திரு என முழித்த போது… ஒரு தமிழ் பாடலாவது சொல்லிக்கொடுக்கலாமே என்று எண்ணம் என்னுள் இருந்தாலும் சீனுசார் அதற்கான விடையை இரண்டு மூன்று கிளாஸ்களில் புரிய வைத்தார்..

தமிழ்ல பிரபல பாட்டுக்களை சொல்லிகொடுத்தா உடனே பாடிடுவிங்க.. மத்த மொழிங்க கொஞ்சம் கத்துக்க கஷ்டம் ஆனா அதுதான் உங்களை மத்தவங்ககிட்ட இருந்து வேறுபடுத்திக்காட்டும்.. தினமும் புதுசு புதுசா ஏதாவது கத்துக்கனும் போட்டுக்கிட்ட சட்டையையே திரும்ப திரும்ப போட்டுக்கிட்டா இருப்பிங்க… அதனால இந்த பாட்டை எல்லாம் கொஞ்சம் கஷ்டப்பட்டு கத்துக்கோங்க… பின்னாளில் தமிழ்பாட்டுக்கு வரலாம் என்று என் சந்தேகத்தை புரியவைத்தார்.

சீனு சார் சொன்னது போல இந்த மூன்று மாதத்தில்
பெங்காலி , மராத்தி இந்தி ஆங்கில பாடல்கள் முதலில் கற்றுக்கொடுத்து கடைசியாக தமிழ் பாடல்களை கற்றுக்கொடுத்தார்கள்…. அர்த்தம் அதிகம் தெரியாவிட்டாலும் எல்லா மொழி பாடல்களை ரசித்து பாட ஆரம்பித்தோம்..தமிழ்தான் எனக்கு தெரியும்… ஆங்கிலம் சமாளிக்க தெரியும்… நிறைய பாட்டு கேட்பேன்… ஷேப் ஆப் யூ, குளோசர், செலினா கோம்ஸ், ஜஸ்ட்டின் பீபர் பாடல்களை கேட்டாலும் பாட தெரியாது… எங்க ஆரம்பித்து எதை விடுத்து எதை நிறுத்தி எதை பிடித்து பாடுவது என்பதை சீனு சார்தான் சொல்லிக்கொடுத்தார்.. இப்ப ஆங்கில பாடலான கவுன்ட் ஆன் மீ பாடலை கழுத்து வியர்வையும் படபடப்பும் இல்லாமல் என்னால் பாட முடியும்.

அதே போல
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு ஜூலாயி பாடல் ரொம்ப பிடிக்கும்…

இந்த மூன்று மாதத்தில் எவரையும் ஞாக சூன்யம் என்று திட்டியாதோ எவர் மீதும் எரிந்து விழுந்ததோ இல்லை… கான்சன்ட்ரேட் பண்ணி பாடுங்க என்றுதான் கத்துவார்… சரியாக பாடி விட்டால் சட்டென சிரிப்புக்கு மாறி நல்லா பாடுறிங்க என்று பாராட்டுவார்… அதே நேரத்தில் குழந்தைகளை அதட்ட வேண்டிய நேரத்தில் அதட்டி செய்கைகள் மூலம் கியூ கொடுத்து அவர் சொல்லிக்கொடுக்கும் அழகே அழகு…மூன்று மாத முடிவில் இரண்டு வாரத்துக்கு முன் சீனு சார் கிளாஸ் முடிந்து ஒரு அறிவிப்பை சொன்னார்…

பினிக்ஸ்மாலில் அடையார் பாலவித்தியாமந்தீர் 118 பசங்களோடு இன்றைய தேதியில் நீங்களும் மேடை ஏற போகின்றீர்கள் என்று எங்கள் சீனு சார் சொன்ன போது… முதலில் நாங்க நம்பவில்லை…
ஆனாலும் இன்று அதை சாத்தியப்படுத்தினார்… பத்து பாடல்கள் ஒரு வாரமாக திரும்ப திரும்ப பாடி பயிற்சி பெற்று இன்று மேடை ஏறி பாடினோம்…

நிறைய வரிகள் தெரியாது… சின்ன பசங்களுக்கு முன் சொப்பிவிடுவோம் என்று பயம்.. ஆனாலும் அவர் சொன்னார்.. நீங்கள் அனைவரும் பாடுவீர்கள் என்றார்.. எங்கள் மீது அவர் வைத்த நம்பிக்கைதான் அதிகம்..

ரொம்ப சந்தோஷமாக இருந்தது இவ்வளவு பெரிய மேடை எங்கள் வாழ்க்கையில் நினைத்து பார்தது இல்லை..சாத்திய படுத்திய சீனு சாருக்கும் ஸ்ப்ரவுட்ஸ் பள்ளி தலைமையாசிரியர் ஸ்மித்தாவுக்கும் எங்களின் நன்றி…

வெள்ளை சட்டை ஜீன்ஸ் பேன்ட், கறுப்பு ஷூ கழுத்தில் ஸ்கார்ப் இதுதான் எங்களுக்கான டிரஸ்கோட்..குட்டி பசங்கள் முதலில் மேடையேறினார்கள்… நாங்க கடைசி வரிசையில் நின்றோம்.. முதலில் பிள்ளைகள் எங்களை சங்கீத வீத்வான்கள் என்று நினைத்துக்கொண்டார்கள்.. இல்லை நாங்க ஆசிரியர் அல்ல உங்களை போல பாட வந்து இருக்கின்றோம்.. என்று சொன்னதும் ரொம்பவே சகஜமானார்கள்..

நிறைய பிள்ளைகள் அசத்தினார்கள்… என் மனைவி பக்கத்தில் சூர்யா மற்றும் சஞ்சனா என்று நினைக்கிறேன்.. அந்த பெண் அசத்தலாய் பாடினார்…பாடல்வரிகள் நியாபகம் இல்லை… சீனு சார் சொன்னது போல கோரசாக பாட பாட வார்த்தைகள் சரளமாய் மனதில் வந்து விழ உற்சாகமாய் பாடினோம்..

எனக்கு பக்கத்தில் தனிஷ்கா என்ற பெண் அற்புதமாக பாடினாள்… ஒவ்வோரு பாடல் பாடி முடிந்த உடன் அவளிடம் கேட்பேன்.. அங்கிள் நல்லா பாடினேனா ? பாசா பெயிலா என்று கேட்க… எல்லா பாடலிலும் நான் அவளிடம் பாஸ்மார்க் வாங்கிய என் வாழவில் மறக்க முடியாத தருனம் அது…

சில பசங்க பேசிக்கொண்டே இருந்தார்கள்… சூர்யா அதட்டிக்கொண்டேதான் இருந்தான்… ஆனாலும் அந்த பசங்க பேசுவதை நிறுத்தியபாடில்லை. அதே நேரத்தில் பாடிய பிள்ளைகளின் பெற்றோர்.. என் பிள்ளைகள் முதல் வரிசையில் நிற்க வேண்டும் என்று அடம்பிடித்துக்கொண்டு இருந்தது… வியப்பாக இருந்தது..
எல்லா பிள்ளைகளும் தெரியும் விதத்தில் நிற்க வேண்டி மேடை அமைத்து இருந்தார்கள்.. 20 அடி தள்ளி நின்று பார்த்தால்தான் பிள்ளைகளின் முகம் தெரியும் ஆனால் மேடைக்கு பக்கத்தில் வந்து பிள்ளை முகம் தெரியவில்லை என்று பஞ்சாயத்தை ஆரம்பித்தார்கள்..


118 குழந்தைகள் எல்லாருக்கும் பாட்டு சொல்லிக்கொடுத்து ஒரே தாளகதியில் பிழையில்லாமல் பாட பயிற்சி கொடுத்து அவர்களை சரியான நேரத்தில் அசம்பள் செய்து பிழையில்லாமல் பொதுமக்கள் முன்னிலையில் பாட வைப்பது என்பது லேசுபட்ட காரியம் இல்லை… கொஞ்சம் சொத்ப்பினாலும் பொதுமக்கள் சிரித்து விடுவார்கள்..

குட்டி பசங்களை எல்லாம் நான்கரை மணிக்கு அசம்பள் செய்து… ஒன்றே முக்கா மணிநேரம் இந்த நிகழ்ச்சியில் நின்றுக்கொண்டு ஒரு ராணுவ ஒழுங்கோடு பாடல்களை உற்சாகமாக பாடியது சாதாரணவிஷயம் இல்லை… பிள்ளைகள் யாரும் ஒன்னக்கு ரெண்டுக்கு என்று விரல் உயர்த்தவில்லை

இடைவெளி இல்லாது பத்து பாடல்கள் மாலை ஆறரை மணியில் இருந்து இரவு எட்டேகால் வரை செல்ல…பினிக்ஸ் மாலுக்கு வந்த கூட்டத்தினர் அதிக அளவில் சேர ஆரம்பித்தார்கள்… மழைத்துளி பாடல் முதல் பாடல் சேர் நிரம்பி இருந்தது… மூன்றாவது பாடலுக்கு எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமா சேர ஆரம்பித்தார்கள்…

குழந்தைகள் 118 பேர் ஒரு சேர ஒரு பாடலை தாளகதிக்கு ஏற்ப பாடும் போது பொது மக்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்க அது அவர்களுக்கு சந்தோஷத்தையும் கை தட்டலும் அதிக அளவில் இடம் பெறசெய்தது… மிக முக்கியமாக ஜோதாஅக்பர் படத்தில் ஆசிம்மோஷான்செஹன்ஷா பாடலை பாடியதும்… அதில் வரும் ஆலாபனை தம்தனதனதன பிள்ளைகள் பாடிய போது கைதட்டல் அதிகமானது அந்த கைதட்டல் பாடிய பிள்ளைகளுக்கும் எங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது என்பேன்…

இரண்டு மணி நேரத்தில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால்.. அடுத்த பாடல் அது இது என்று பிதற்றாமல் ஒரு பாடல் முடிய விளக்கு அனைந்து அடுத்த பாடல் எந்த அறிவிப்பும் இல்லாமல் சர்ப்பிரைசாக தொடங்கியதும்.. 2 மணி நேரம் நின்று பாடிய பிள்ளைகள் முதல் பாடியை அதே உற்சாகத்தோடு கடைசி பாடல் நீல மலைச்சாரல் மழைக்குருவி பாடலை பிள்ளைகள் ஊற்சாகமாக ஆடி பட அது பார்வையாளர்களையும் தொற்றிக்கொண்டது எனலாம்.

விழா முடியும் போது பீனிக்ஸ்மால் நிர்வாகத்தினர் பாடிய பிள்ளைகள் அத்துனை பேருக்கும் 500 ரூபாய் மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் வழங்கியது நிர்வாகத்தினரின் பெரிய மனதை எடுத்துக்காட்டியது… இடத்தையும் வழங்கி பரிசுகளையும் வழங்கியது பெரிய விஷயம்.

எனது சங்கீத குரு.. சீனு சார் என்று இனி எங்கெங்கிலும் நான் பெருமையாக சொல்லுவேன்… சொல்லித்தருவதில்தான் எவ்வளவு பொருமை… சொல்லக்கொடுப்பதில் அவ்வளவு நேர்த்தி… ஐ லவ்யூ சீனு சார்…

முதல் பாடல் மழைத்துளி சங்கமம் படத்தின் பாடலை அவ்வளவு பெரிய மேடையில் 1118 குட்டி பசங்களோடு இணைந்து பாடும் போது.. என் இறந்து போன அம்மா ஜெயலட்சுமியை நினைத்துக்கொண்டேன்…

1980களில் பேச்சு வாரமல் இருந்த போது.. அம்மாவும் அப்பாவும் திருச்செந்தூர் முருகனுக்கு எனக்கு பேச்சு வர வேண்டும் என்று வேண்டிகொண்டார்களாம்
அப்பா எனக்காக வாங்கி வந்த பிலிப்ஸ் ரேடியோவில் ஒலிபரப்பாகும் சிவாஜி நடித்த டாக்டர் சிவா படத்தில் இடம் பெற்ற.. மலரே குறிஞ்சி மலரே தலைவன் சூட நீ மலர்ந்தாய் பாடலை ரேடியோவில் அப்போது அடிக்கடி ஒலிபரப்ப.. நான் அதை கேட்டு … மலரே குலுஞ்சி என்று பாட நான் முயற்ச்சிப்பேன் என்று எனது ஏழு கழுதை வயதில் அம்மா சொல்லி சிரித்து இருக்கின்றாள்.

அம்மா உன்னை பீனிக்ஸ் மாலில் கண்டு களித்த 300க்கு மேற்பட்ட மக்களில் உன்னையும் என் கண்கள் தேடிக்கொண்டு இருந்தன என்பதை நீ அறிவாயோ..?

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
10/11/2018


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

1 comment:

  1. அடுத்த அவதாரம் எடுத்து விட்டீர்களா வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner