Thank u All - நன்றிகள்




கடலூரில் எனக்கு தெரிந்து இனிப்புக்கடை என்று பார்த்தால் அது ரெயில்வே கேட் அருகில் இருந்த பனாரஸ் இனிப்புகடைதான்…

அந்த கடையில் இன்டியன் ஏர்லைன்ஸ் மகாராஜா பொம்மையும் காற்றில் அதன் தலை ஆடுவதையும் இனிப்பை விட நான் சிறு வயதில் பார்த்து ரசித்த விஷயங்கள்…

அதிக பட்சம் என் விருப்ப உணவு பதளை பதளையாக கண்ணாடி சட்டங்களுக்கு உள்ளே சிறைபட்டு இருக்கும் சோன்பப்டிதான் எனக்கு மிகவும் பிடித்த இனிப்புணவு

பேக்கரி ஐட்டம் என்றால் என்ன என்று கடலுர் மக்களை அறிய வைத்த இடம் எதுவென்றால் ஜானகிராம் பேப்பர் ஸ்டோர் எதிரில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த விஸ்டம் பேக்கரியை குறிப்பிட்டு சொல்லலாம்.. அதன் பின் அகர்வால் அது இது என்று கடலூரில் தடுக்கி விழுந்தால் பேக்கரிகள் பெருகி விட்டன.

விஸ்டம் பேக்கரிதான் முதன் முதலில் காலை மாலையில் டிரை சைக்கிளில் பேக்கரி உணவுகளை வீடு தேடி எடுத்து வந்து விற்பனை செய்தது என்றால் அது மிகையில்லை… அது மட்டுமல்ல அதில் வரும் மீன் கேக் எனக்கு பிடித்தமானது.

எனது மற்றும் எனது தங்கை பிறந்தநாளுக்கு அப்பா ஐந்து கூடை கேக் வாங்கி வருவார் விடியலில் பல் விளக்கி குளித்து முடித்து அந்த இரண்டு ரூபாய் கூடைகேக்கிற்கு ஆவலாய் பறந்ததை நினைத்தால் சிரிப்பாக வருகின்றது.. அது மட்டுமல்ல..

முதலில் அதன் மேல் ஒட்டி இருக்கும் சிவப்பு கலர் பிளம்ஸ்களை சாப்ப்பிட்டு விட்டு அதன் பின் கூடை கேக்கை சாப்பிட்டு அந்த பேப்பரை அப்படியே போட்டு விட மனம் இல்லாமல் அதில் ஒட்டி இருக்கும் சிறு துகள்களை நக்கி புக்கி நக்கி வேலை செய்து அந்த பேப்பரில்தான் கூடை கேக் இருந்ததா என்று சந்தேகம் கொள்ளும் கிளினாக நக்கி அதனை தூக்கி போட்டால்தான் அந்த பிறந்த நாள் இனிய நாளாக அமையும்..அப்பா ஐந்து பேர் என்றால் ஐந்துதான் வாங்கி வருவார்.. கூடுதலாக ஒன்று என்று யோசிக்கவே முடியாது.


இப்போது போல அப்போது எல்லாம் நினைத்தால் பரிசுபொருளோ… அல்லது நினைத்தால் டிரிட் கல்சரோ கிடையாது… பிறந்தநாளைக்கு பரிசு பொருள் கொடுப்பது என்னை பொருத்தவரை தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் ஒரு நிகழ்வு என்பதாகவும் அது என் வாழ்க்கையில் சாத்தியம் இல்லை என்று நினைத்து இருந்தேன். என்மனைவியை காதலித்த ஆரம்ப வருடத்தில்… இந்த பொண்ணோடுதான் வாழ வேண்டும் என்று முடிவு எடுத்த அந்த வருடத்தில் எனக்கு பிறந்தநாள் வந்தது… என் காதலிக்கு அன்றே பிறந்தநாள்… இரண்டு பேரும் பேருந்து நிலையத்தில் சந்தித்தோம்.. பர்த்டே பிரசன்ட் என்று ஒரு கேரி பேகை கொடுத்தாள்…


அதில் சிவப்புகலர் டீஷர்ட் இருந்தது.. நான் முதன் முதலாக வாங்கிய பிறந்தநாள் பரிசுபொருள் அதுவே… நானோ கருப்பு… டீசர்ட் சிவப்பு.. அது எனக்கு செட் ஆகாது என்றும் சிவப்பாக இருப்பவர்கள் போட்டால்தான் செட் ஆகும் என்று தெரிந்தும் நான் அந்த டீ ஷர்ட்டினை பல காலம் கறிக்கடை பாய் போல போட்டுக்கொண்டு அலைந்தேன்.


அதன் பின் நிறைய பிறந்தநாள் விழாக்கள் பரிசு பொருட்கள், ஸ்டார் ஓட்டல்களில் டின்னர் என்று வாழ்க்கை மாறினாலும்.. அந்த கூடை கேக் ஏற்படுத்திய பரவசம் சொல்லி மாளாது..


யாழினி பிறந்தநாளுக்கு நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தேன்.. 99 பர்சென்ட் பேர் வந்து யாழினியை வாழ்த்தினார்கள்.. என்னை நேசித்தவர்கள் தங்கள் வீடு போல பாவித்து களத்தில் இறங்கி இரவு உணவை வந்த விருந்தினர்களுக்கு பறிமாறினார்கள்..
50க்கு மேற்பட்டவர்கள் யாழினிக்கு பரிசு பொருட்களை கொடுத்தார்கள்.. பரிசு பொருட்களால் ஹால் நிரம்பி இருந்தது…


யாழினிக்கு எல்லா பரிசு பொருளையும் பிரித்து அதனை உடனே வெளியே எடுத்து கடை பரப்பி விட துடித்துக்கொண்டு இருந்தாள்… இரவு 50க்கு மேற்ப்பட்ட பரிசு பொருட்களையும் பிரித்து அடுத்து என்ன அடுத்து என்ன? என்று பிரித்துக்கொண்டே இருந்தாள்… பாரின் சாக்லேட், கதை புத்தகங்கள், கலர் பென்சில்கள், உடைகள், ஸ்கூல் பேக், லினோவா டேப்லெட், இயந்திர பொம்மைகள், டெட்டிபியர், என்று பிரித்து பார்த்து அடுக்கிக்கொண்டு ஆர்வம் மேலிட அடுத்து அடுத்து என ஆர்வமாய் இருந்தாள்…


ஒவ்வோரு பிறந்தநாளுக்கும் அப்பா என்ன வாங்கி வருவார் என்று ஆர்வம் மேலிட விடியலில் பல் விளக்காமல் ஆர்வத்தோடு போய் பையை திறந்து பார்த்தால்

வருடா வருடம் கூடை கேக்குள் என்னை பார்த்து ஏளனமாக சிரித்துள்ளன…


கடைசி வரை அடுத்து என்ன என்று பிரித்து ஆச்சர்யப்பட அப்பா வேற ஆப்ஷன் எங்களுக்கு கொடுத்ததே இல்லை.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
17/03/2016.


குறிப்பு


நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்திய உறவுகளுக்கும் நண்பர்களுக்கு நன்றி.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

5 comments:

  1. பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழினி அருமையான தாய் தந்தை கிடைத்திருக்கிறார்கள் உன்னை வழி நடத்தி செல்ல வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. Happy Birthday Yazhini .God Bless you dear.

    ReplyDelete
  3. jackey ji you remember your father.... you will come up in life man..

    ReplyDelete
  4. jackey ji you remember your father.... you will come up in life man..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner